Sunday, September 6, 2020

மனித வாழ்க்கை

 

உலகில் உள்ள ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர் நாலறிவுயிர், ஐயறிஉயிர் என்பவைகளுக் கெல்லாம் மேலாகிய ஆறறிவுடைய மனிதப் பிறப்பே சிரேஷ்டமானது. இம்மனிதப் பிறப்பே இம்மை மறுமை யின்பங்களை யனுபவிக்கும் பெற்றியை யுடையது.

 

ஆனால் அஷ்ட வசுக்கள், இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் முதலிய முப்பத்து முக்கோடி தேவர்களாகவும், இயக்கர், கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர்களாகவும் பிறக்கும் பிறப்பில் இன்பமில்லையோ வென்றால், இன்பம் உண்டு; ஆனால் அவ்வின்பம் மனிதர்கள் அனுபவிக்கும் படியான இன்பத்தைக் காட்டிலும் இலட்சம் மடங்கு மேலானதே. அப்படியிருந்த போதிலும் அத்தேவர்கள் செய்துள்ள புண்ணியங்கள் பூர்த்தியானவுடன் அவ்வின்பங்களு மழிந்து வினைக் கேற்றபடி பலவிதமாகிய பிறப்புக்களை யெடுத்து வருந்த வேண்டியதா யிருக்கும். அன்றியும் நரகங்களையும் அனுபவிக்கும்படி நேரும். இதனால் புண்ணியத்தைச் செய்தவர்கள் தேவர்களாய்ப் பிறந்து தேவ போகத்தை யனுபவிப்பார்க ளெனவும், அப்புண்ணியம் பூர்த்தியானதும், பாவ வினைக்குத் தக்கபடி நாக லோகத்தை யநுபவிப்பார்களெனவும் சாஸ்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன. இரவும் பகலும் மாறிமாறி வந்து கொண்டிருப்பது போல ஆத்துமாக்களின் புண்ணிய பாவங்களினாலே தேவர்களாகவும், நார்களாகவும், பிறந்து தளா வேண்டியதாயிருக்கிறது. ஆகையால் தேவர்களாகப் பிறப்பதில் எள்ளளவும் சுக மென்பதேயில்லை. இதனால் ''போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்'' எனத் தமிழ்மறை யோதுகின்றது. இவ்வாறு நேரிடும் விஷயம் எதனாலென்று ஆலோசித்தால் ஆத்மாக்கள் புரிந்த புண்ணிய பாவமே.

 

இதனாலன்றோ பெரியோர்கள்'' எண்ணிலாத நெடுங்காலம் எண்ணிலாத பல பிறவி யெடுத்தே யிளைத்திங்கவை நீங்கி யிம்மானிடத்தில் வந்து தித்து " என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்கள். இதனால் மானிடப் பிறப்பையே மேலானதென்று கொள்ள வேண்டும். ஏன் மேம்பட்டது என்றால் மறுபடியும் பிறப்பில்லாமல் படிக்குச் செய்து கொள்ளக் கூடியதா யிருப்பதினாலே. அப்படியானால் எல்லா மனிதர்களும் மோட்ச மடைய வேண்டுமே? என் மோட்ச மடையாமல் பிறந்து பிறந்து இறந்து போகின்றார்கள்? என்று நினைக்கக் கூடும். அதை விவரிப்போம்.

 

நாம் தேவர் விலங்கு பறவை தாவரம் முதலாகிய பிறப்புக்களை யெடுத்துத் துன்பத்தை யடையுங் காலங்களி லெல்லாம் ஒரு மானிடச் சரீரம் கொடுத்தால் அது கொண்டு உன் திருவடியையடைவேன் என்று பலமுறை கடவுளை வேண்டிக் கொண்டமையினாலே அவர் இரங்கி இச்சரீரந் தந்தனர். இதை நாம் தாயார் வயிற்றிலிருந்து பிறந்ததும் மாய வாழ்க்கையில் இச்சை கொண்டு கடவுள் திருவடியை மறந்து பிறந்திறந்து பூமியில் தடுமாற்றமடைகின்றோம். ஆகையால் பெரியோர்கள் பூமியில் பிறவாதிருக்க வரம் அளிக்கவேண்டு மென்றும், பிறந்துவிட்டால் இறவாதிருக்க வரம் இருக்கிறதென்றும் பேசி யிருக்கின்றார்கள். அம்மருந்தோ கடவுளின் திருவடித்தாமரைகள் மறவாமலிருத்தலே. அதனால் தெய்வத் தன்மை பொருந்திய திருவள்ளுவ நாயனாரும்.


      "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி கோராதார்.''


என்றபடி கடவுளின் திருவடியைச் சேர்ந்தவர்கள் கடவுளை எந்தக் காலத்திலும் மறவாமல் தியானஞ் செய்து கொண்டிருப்பவர்க ளென்றும் சேராதவர்கள் கடவுளின் திருவடியை மறந்து விட்டவர்க ளென்றும் கொள்ள வேண்டியதா யிருக்கிறது. கடவுளின் அடிச் சேர்தலாவது அவர் திருவடியை மறவாது தியானம் செய்தல் என்று பொருள்.

 

இந்த வகையாக நடவாதவர்கள் வேறு வகையாகவும் பிறப் பிறப்பைக் போக்கிக் கொள்வதற்கு மார்க்கம் உண்டு. அந்தப் படியாகிலும் செய்து பிறப்பிறப்பைப் போக்கிக் கொள்ளலாம். அதை விவரிப்பாம்.

 

ஒருவன் பாவ புண்ணியங்களைச் செய்யும் படியாக நேரிடுங் காலத்தில் யான் எனதென்று நினைத்துச் செய்யாமல் சகலமும் கடவுளுக்கே யுரியன வென்று செய்வோமானால், இவ்விரு வினைகளும் நம்மை வந்து பொருந்தாது. பொருந்தா தாயின், அவ்விரு வினைகளினாலே வரும் இன்ப துன்பங்களும் நமக்கில்லாமற் போம்.

 

அவ்வின்ப துன்பங்கள் நமக்கில்லையாயின் பிறப் பிறப்புமில்லை யென்பது தெள்ளிதின் உணரக் கூடியதா யிருக்கிறது.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஆகஸ்டு ௴

 

No comments:

Post a Comment