Sunday, September 6, 2020

 

மனைவியின் முக்கிய கடமைகள்

 

மனிதர்க்கு, இம்மை, மறுமை என்னும் இரண்டிடங்களிலும் நன்மை பயப்பதாகிய இல்லறத்தை நடத்தும் ஒருவனுடைய மனைவியினிடத்தே, அவ்வறத்திற் கின்றியமையாதனவாய், அமைந்திருக்கத்தக்க குணங்கள் பலவுள். அக்குணங்கள் ஓர் இல்லக் கிழத்தியின்பால் பொருந்தியிருக்குமெனின், அவளை மனைவியாக அடைந்தவனுக்கு எல்லாச் சிறப்புக்களுமுண்டாகும். அவளிடத்தே அக்குணங்கள் இல்லையெனின் எவ்விதச் சிறப்புமின்றாம். அவற்றை,


 "இல்லாதெ னில்லவள் மாண்பானா லுள்ள தென்
 இல்லவள் மாணாக் கடை"


என்னுந் தமிழ்ப் பொதுமறைச் செய்யுள் இனிது விளக்கும். இத்தகைய மனையறம்புரியும் மங்கையர்க்குப் பொருந்துவனவாகிய குணஞ்செயல்கள் இன்னவை யென்பதையும், பொருந்தாதன இன்னவை யென்பதையும் பெரியோரால் இயற்றப்பெற்ற பல நீதி நூல்களாலும், அறிஞரால் வெளியிடப்படும் பத்திரிகைகளாலும் நன்கு தெரிந்து கொள்ளலாம். அவை பலர்க்கும் தெரிந்தவைகளே. அவற்றுள் மங்கையர் தள்ளத்தக்கன தள்ளிக் கொள்ளத்தக்கன பல விருப்பினும் அவற்றுள்ளும் முக்கிய கடமைகள் சிலவுண்டு. அவற்றைப் பெண்மணிகள், தம் கண்ணைப் பேணுவது போலப் பேணிக் கொள்ள வேண்டும். அவைதாம், மனைவி கணவனுக்கு இனிய உணவு சமைப்பதில் கைதேர்ந்தவளா யிருத்தலும், அவன்மீ தன்புடைய வளாயிருத்தலும், கணவன் சொற்கடவாதிருத்தலும், இரவில் கணவனுக்குப் பணிவிடை இயற்றிப் பின் தூங்கி முன்னெழுதலுமாம். இவை, நாயகனுக்கு மிக்க மகிழ்ச்சியையும் புகழ்ச்சியையும் உண்டாக்கக் கூடியனவாயிருத்தலின், அறிஞர், அரிவையர்க்குரிய உயரிய குணங்களில் இவற்றை அரியனவாகப் பாராட்டுகின்றனர். திருவள்ளுவனாரும், தம் மனைக்கிழத்தியார், உயிர் நீங்கிய தருணத்தில், அவர் பிரிவாற்றாமையைக் குறித்து உளமுருகி யுரைத்த செய்யுளில்,


 "அடிசிற் கினியாளே யன்புடை யாளே
 படி சொற் கடவாத பாவாய் - அடிவருடிப்
 பின் றூங்கி முன்னெழூஉம் பேதையே போதியோ
 என் றூங்கு மென்க ணிரா'


என்று இக்குணங்களையே பாராட்டுதல் காண்க. இதனால் மனைக் கிழத்திகளிடத்தில் மற்ற குணங்கள் ஒருசமயம் குறைவுற்றிருப்பினும் இக்குணங்கள் மட்டும் குறைவுறலாகாதென்பது விளங்கும். இவற்றுள் மற்றைய இல்லறவொழுக்கங்களனைத்தும் அடங்கியிருத்தலின் ஒரு பெண்மணியினிடத்து இவை சிறந்து நிற்பின் மற்ற நற்மை குணங்களெல்லாம் தாமே அமையுமாதலின் பெரியோர் இவற்றையே தலை சிறந்தனவாகச் சாற்றியிருக்கின்றனர். இசசீரிய ஒழுக் கங்களைக்கொண்டே முற்காலத்திருந்த கற்பரசிகள், பொன்றாப் புகழை மண்டலத்தில் என்றென்றும் நிலவுமாறு நிலை நிறுத்திச் சென்றிருக்கின்றார்கள். இக்காலத்தவருள்ளும் அரேகம் அறிவிற்சிறந்த அரிவையர் இந்நற்குணங்களைப் பொன்னேபோலப் போற்றிப் புகமுடைந்து வருகின்றனர். அவர்களால் நடத்தப்பெறும் இல்வாழ்க்கைகளும் நல்வாழ்க்கைகளாய் நடைபெற்று வருகின்றன. அவர்களும் இன்புடையாராய்ச் சிறந்திலகுகின்றனர்.

 

எனினும், சிலர் மட்டும் விகற்பபுத்தியினாலோ, பொருந்தாத புறநாட்டு நாகரிக மயக்கத்தாலோ அந்நல்லொழுக்கங்களைக் கைவிட்டுத் துராசாரங்களை மேற்கொண்டொழுகுகின்றனர். தங்கள் கணவர்கள் அரும்பாடுபட்டுப் பொருள் தேடிவந்து தங்களிடம் கொடுப்பினும், தாங்கள் அவர்க்கினிமையான உணவுகளைச் சமைத்து உரிய காலத்தில் உதவுவதில்லை. ஆடவர்கள், காலைப்பத்து மணிக்கு அகப்பட்ட உணவை உட்கொண்டு உத்தியோகத்திற்கோ வேறு தொழிலுக்கோ போய்விட்டபிறகு இப்பெண்டிர்கள் பதறாமலிருந்து ஆகாரம் சாப்பிட்டுவிட்டுக் குடும்பகாரியங்களைச் சிறிதும் கவனியாமல் பகல் முழுதும் படுத்துறங்குகிறார்கள். சாயுங்காலம் ஐந்துமணியானாலும் எழுந்திருப்பதில்லை. அவர்களுக்கு மாமிமார்களிருந்தால் ''என்னடி அம்மா! இன்னும் அடுப்பு வேலையைப் பார்க்காமல் தூங்கு கிறாயே!'' என்று அவர்களை எழுப்பிவிடுகிறார்கள். அதன் மேல் அவர்கள் கொட்டாவி விட்டுக்கொண்டு சமையல் வேலையில் பிரவேசிக்கிறார்கள்; அவ்வாறு மாமிமார்கள் இல்லாவிடிலோ, அவர்கள் ஆறுமணிக்கோ ஏழுமணிக்கோதான் எழுந்து அடுப்பில் நெருப்பை மூட்டுகிறார்கள். அங்ஙனம் மூட்டி உலையில் அரிசியைப் போட்டவுடன் அவர்களுக்கு விளையாட்டு நினைப்பு வந்து விடுகிறது. அதனால் அவர்கள் உடனே அடுப்பைக் கவனியாமல் சில சிறு பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போய் ஓரிடத்தில் உட்கார்ந்து பொம்மைக் கலியாணம் செய்யவோ, தாயம் ஆடவோ, வீண்கதை பேசவோ, கலியாணப்பாட்டுப் பாடவோ ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த விளையாட்டிலேயே நெடுநேரம் வரை புத்தியைச் செலுத்திக் கொண்டிருந்துவிட்டு,'' ஐயையோ! உலையில் அரிசி போட்டு வந்தேனே! அது எப்படியாச்சோ!'' என்று எழுந்தோடி உலையைப் பார்க்கிறார்கள். அரிசியெல்லாம் வெந்து குழைந்து கூழாகிப்போ யிருக்கிறது. அவர்கள் அதிலுள்ள மேல்கஞ்சி நீரை வடித்துவிட்டு, கூழான சோற்றை இறக்கிக் கீழே வைத்துக் குழம்பென்ற பேருக்கு ஒன்றை அடுப்பேற்றி இறக்கி விட்டுப் படுக்கையில் போய்ப் படுத்து மீண்டும் உறங்கி விடுகிறார்கள்.

 

இரவு எட்டுமணிக்குமேல் வேலைக்குச்சென்ற கணவர்கள் பசி யிளைப்போடு திரும்பி வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் எந்த வகையிலும் பெண்களுக்குச் சிரமம் உண்டாக்கக்கூடாது என்னும் நவீன நாகரீகம் கற்றவர்களாதலின் அவர்களை எழுப்புதற்குப் பயந்து, வெளியிற் போவதும் வீட்டிற்குள் வருவதுமாய்க் கொஞ்ச நேரம் உலவித் திரிந்துவிட்டுத் தாங்களும் ஒருபக்கத்தில் படுத்துப் பசியினால் தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டு கிடக்கிறார்கள். பின் பத்து மணிக்கோ, பதினொரு மணிக்கோ அந்தப் பெண்மணிகள் விழித்துப் புரளுகிறார்கள். அந்தச் சமயம் பார்த்து நாகரீக நாயகர்கள், 'என்ன! எழுந்திருக்க வில்லையா?' என்று தங்கள் குரலை மெல்லிதாகக் காட்டுகிறார்கள். அந்த நாகரீக நாரீமணிகள் கை கால்களை உதறிக்கொண்டு எழுந்து கூழாகச் செய்துவைத்திருந்த சோற்றை அந்நாயகருக்கு நேயமாகப் படைக்கிறார்கள். அவர்கள் அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு 'என்ன! சாதத்தை அல்வா வாக்கி வைத்திருக்கிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கிறார்கள். அவர்கள், 'பொம்மைக் கலியாணம் செய்தோம்; அதற்காக அல் வாச் செய்தோம்' என்கிறார்கள். அதைக்கேட்டுப் பூவையர் சொல்வழி நிற்கும் அப்பூமான்கள், 'ஓகோ! அப்படியா!' என்று சொல்லிக்கொண்டு குதூகலத்துடன் குழைந்த சோற்றை விழுங்கிவிட்டு எழுந்திருக்கிறார்கள். பின் அந்தப் பெண்மணிகள் அதைச் சாப்பிட உட்கார்ந்து, அது தங்களால் சமைக்கப்பட்டும், புருஷரால் விழுங்கப்பட்டு மிருப்பினும், தங்களுக்குப் பிடிக்கவில்லையென்று முகத்தைச் சுழிக்கிறார்கள். புருஷர்கள், அவர்களுக்கு அதிருப்தி யுண்டாகாவண்ணம் மிட்டாய்க் கடைக்குச் சென்று பாதம் அல்வா வாங்கிவந்து கொடுக்கிறார்கள். அவர்கள் ஆனந்தத்துடன் அதை விழுங்கிவிட்டுப் புருஷர்கள் படுப்பதற்கு முந்தியே படுத்துறங்கி விடுகிறார்கள். அவர்களுக்குப்பின் கணவர்கள் தூங்குகிறார்கள். மறு நாள் விடிந்தவுடன் அந்த ஆடவர்கள், தங்கள் தொழிலுக்குப் போக வேண்டு மென்று முன்னரே எழுந்துவிடுகிறார்கள். அந்த மாதரசிகளோ காலை ஒன்பது மணி வரையில் எழுந்திருப்பதில்லை. அதன் மேல் எழுந்தாலும் ஆகாரவேலை ஆவதேயில்லை. அதனால் அந்நாயகர்கள் சிலசமயம் சொற்ப ஆகார முண்டும், சிலசமயம் ஒன்று முண்ணாமல் வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொண்டும் வேலைக்குப் போய்விடுகிறார்கள். அப்படிப் போனாலும், இவைகளினாலெல்லாம் அவர்களுக்குத் தங்கள் காதலிகளின் மீது சிறிதும் அதிருப்தி யுண்டாவதில்லை. இந்தப் பழக்கங்கள் அவர்களுடைய இல்வாழ்க்கையில் தினந்தோறும் நடந்து வருவதால் அந்த ஆடவர்களும் சோம்பேறிகளாய், கும்பகர்ணனை நிகர்த்து நாளடைவில் தூக்கத்தில் கீர்த்திபெற்று விடுகிறார்கள். பின்னர் இத்தகையினர் குடும்பங்களில் ஆண்மக்களும் பெண்மக்களும் எந்தநேரத்திலும் தூங்குவதிலேயே தங்கள் வாழ்நாட்களைக் கழிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆடவர்கள் தொழில்களிலும் கவனம் செலுத்தாமல் அந்தப் பெண்களைப் போலவே காலை ஒன்பது மணிவரையிலும் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தப் பெண்களுக்கு மாமிமார்களும், ஆடவர்களுக்குத் தாய்மார்களுமாகிய கிழவிகளிருந்தால், தங்கள் வீட்டில் இவ்வாறு தூக்கமே குடிகொண்டிருப்பதைப் பற்றி வயிற்றெரிச்சல் கொண்டு, காலை ஐந்து மணிக்கே எழுந்து உட்கார்ந்து, "இதென்ன இந்தக் காலம் விபரீதமாயிருக்கிறது; இவர்கள் வீட்டில் இலக்குமியை வரவழைப் பதைவிட்டு மூதேவியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்களே! ஐயோ தெரு பெருக்காமல் கிடக்கிறதே; மாணிக்கம்! ஏனிப்படித் தூங்குகிறாய்? சுந்தரம்! எழுந்திரு; பாக்கியம்! இன்னுந் தூக்கமா?" என்று ஒன்பது மணிவரை கூவிக்கொண்டே யிருக்கிறார்கள். புருஷ ரும், மனைவியரும் இடையிடையில் அந்தக் கிழவிகளின் கூக்குரலால் விழித்துச் சங்கடப்பட்டு, '' ஓ கிழட்டுச் சலமே! பீடையே! பேசாமலிரு " என்று கடிந்து பேசிவிட்டுக் கண்ணை மூடிக்கொள்கிறார்கள். கிழவிகள் அதன்மேல் ஒன்றுஞ்செய்ய முடியாமல் வீட்டு வேலைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இத்தகைய கிழவிகள் இல்லாத வீடுகளிலோ அந்த நாகரீகத் தம்பதிகளின் இஷ்ட மெதுவோ அதுதான் நடக்கும். எல்லோரும் காலை ஒன்பதுமணிக்கு மேலே தான் படுக்கையை விட்டெழுந்திருப்பார்கள். அவர்களுடைய
குடும்பகாரியங்களோ "சிறுவீடுகட்டி யதினடு சோற்றை யுண்டுண்டு
தேக்கு சிறியார்கள்'' செய்யும் இல்லறகாரியங்களைப் போல வெகு விநோதமாக நடந்து வருகின்றன.

 

இந்த அனாசாரங்கள் இவர்களிடம் தங்குவதால் இவர்களுள் ஆடவர்கள் தங்கள் தொழில்களைக் கவனியாமல் விட்டுவிடுகிறார்கள். பெண்களும் தங்கள் குடும்பகாரியங்களைக் கவனியாதவர்களாகின்றார்கள். பெரியோர்கள் தேடிவைத்த பூஸ்திதிகளிருந்தால் தங்கள் ஜீவனத்தின் பொருட்டு அவற்றைத் தொலைத்து விடுகிறார்கள். அதன்மேல் அவர்கள் வீட்டில் மூதேவி குடியேறுகிறாள்; எங்கும் குப்பைகள் மலிந்து கிடக்கின்றன; இரவில் விளக்கெரிவ தில்லை. ஸ்திரீகளுக்குரிய முக்கிய கடமைகளும், ஆடவர்க்குரிய ஒழுக்கங்களும் அடியோடு தொலைந்து போகின்றன; எந்நாளும் இவர்கள் வறுமைத் துன்பத்திலாழ்ந்து வருந்துகிறார்கள். பெண்கள், மதியின்மையால் தங்கள் முக்கிய கடமைகளைக் கைநழுவ விடினும் ஆடவர் அறிவுடையவர்களாயிருந்தால் அவர்களைத் திருத்திக் கொள்ளலாம்; அவர்களும் புதுப்போக்குடையவர்களாதலின், தாங்களும் அப்பேதைப் பெண்கள் போன்றவர்களாகி இல்லறத்தைப் புல்லறமாக்கி விடுகின்றனர். இத்தகைய விநோதகுடும்பங்களை நாம் பிரத்தியக்ஷமாகப் பார்த்து வருகின்றோம்.

 

பல புத்திமான்கள் பெண்களுக்குச் சுயேச்சை கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை எங்கும் பரப்பிப் பல நன்மைகளை உண்டாக்கி வருகின்றார்கள். ஸ்திரீ சுதந்தரமாவது, அரிவையரை அடிமைத்தனத்தினின்றும் நீக்கி, கல்வியில் விருத்தியடையச் செய்து, குடும்பகாரியங்களிலும், மற்ற தொழில்களிலும் தங்கள் ஒழுக்கங்குன்றாது சுயேச்சை பெற்றிருக்குமாறு செய்வதேயாம்.

 

இக்கருத்தினை மந்தமதியினர் வேறுவழியிற்றிருப்பி அவர்களை இவ்வாறு தீய ஒழுக்கங்களிற் புகவிட்டுத் தாங்களும் கெட்டொழிகின்றனர். இத்தகையினர் எவ்விடத்தும் சுகம்பெறார். ஆதலின், அறிஞர், சில குடும்பங்களிலுள்ள இத்தகைய ஒழுக்கக் கேடு களைநீக்கிப் பெண்மக்கள் நெறியறிந்தொழுகுமாறு செய்வார்களாக.


 ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

 

No comments:

Post a Comment