Sunday, September 6, 2020

 

மனோ ராஜ்ஜியம்

 

மனிதர், இராஜரீகம் போன்ற பெரிய பெரிய பதவிகளை யெல் லாம் அனுபவிப்பது போன்ற, அனுப்விக்கப் போவது போன்ற, பெருங் காரியங்களை முடிப்பது போன்ற, முடிக்கப் போவதுபோன்ற பல வீண் எண்ணங்களை மனதில் எழுப்பிவிட்டுப் பெருக்கிப் பெருக்கித் திருப்தியடையும் பயனற்ற தன்மையே மனோராஜ்ஜிய மென்பதாம். இது பெரும்பான்மையான மனிதர்களிடத்தில் பிறப்பிலேயே அமைந்துள்ளது.

 

மனிதருடைய வாழ்வோ, வானிடு வில்லைப்போலவும், மேகத்திற்றோன்றும் மின்னலைப் போலவும், நீரில்தோன்றும் குமிழிபோலவும் தோன்றி மறையும் இயற்கையுடையது; அங்ஙனம் மறைதலும், 'மனிதர் நூற்றிருபது வயது வரைதானிருப்பர்' என்ற ஓர் வரை யறைக்குட்பட்டதுமன்று. சிலர், கருவில் உதித்தவுடனே இறப்பபர்; சிலர், சில தினங்கள் சென்று மரிப்பர்; சிலர், கருப்பையிலிருந்து வெளிப்பட்டவுடன் மாய்வர்; பலர், குழந்தைப்பருவத்தில் உயிர் துறப்பர்; பலர் காளைப்பருவத்தில் மாள்வர்; சிலர், முதுமையில் மரணமடைவர். இங்ஙனம் வரும் மரணமும் இன்ன சமயத்தில் தான் வருமென்பது மனிதரால் உணரமுடியாததா யிருக்கிறது. ''இன்றைக்கிருப்பரை நாளைக்கிருப்பரென்றெண்ணவோ திடமில்லையே'' என்ற தாயுமானார் உண்மை யுரைப்படி எவருடைய வாழ்வுக்கும் எல்லை இன்ன துதானென்பதும் நிச்சயிக்க முடியாததாயிருக்கிறது. இந்நிலையில் மனிதர்களிருக்கும் போது அவர்கள்,


 "ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதும்
 கோடியு மல்ல பல''


என்பதற் கிணங்க, கோடிக்கு மேற்பட்ட பற்பல வீண் எண்ணங்களை மனதில் விருத்தி செய்து வீண்காலம் போக்கி எதையும் முடிவுக்குக் கொண்டுவராமல், மானிடப் பிறவியெடுத்ததனாலடைய வேண்டிய இம்மை மறுமைப்பயன்களை யிழந்து விடுகின்றனர். இவர்கள் என்னென்ன விதங்களாக மனோராஜ்ஜியம் செய்கின்றார்களெனில், சிலர், தங்களிடம் கொஞ்சம் பூஸ்திதியிருந்தால், "நம்மிடம் நிறைந்த செல்வமிருக்கிறது; நாம் இஷ்டபோகங்களை யெல்லாம் அனுபவிக்கிறோம்; நமக்குமிஞ்சிச் சுகமனுபவிப்பவர்கள் எவர்களுமிருக்கமாட்டார்கள்; நம்மோடு எவரேனும் எதிர்ப்பார்களானால் அவர்களை நாம் ஒரே நசுக்கில் நசுக்கிவிடலாம்" என்று நினைக்கிறார்கள். பொருளில்லாத சிலர், கையில் ஒன்றுமில்லாமலிருக்கும் போதே 'நமக்குப் பத்து ரூபாய் கிடைத்தால் நாம் அதற்கு ஏதேனும் சரக்கு வாங்கி விற்று ஒரே நாளில் அதை இருபது ரூபா யாக்கிவிடலாம்; பின் நாற்பதாக்கலாம், எண்பதாக்கலாம், நூறாக் கலாம், இருநூறாக்கலாம், ஐந்நூறாக்கலாம், ஆயிரமாக்கலாம், இலட்சமாக்கலாம், பத்துலட்சமாக்கலாம்; பின் கிராமங்கள் வாங்கலாம், மாளிகை கட்டலாம், அழகிய பெண்ணை மணம் புரியலாம், வேலைக்காரர்களை வைத்து அவர்களிடம் வேலை வாங்கலாம், ஒரு ஜமீன்தாரராய் விடலாம், அப்போது நம்முடைய வாழ்க்கை அளவற்ற ஆனந்தமுள்ளதா யிருக்கும்'' என்று பல வீண் முடிவுகள் செய்து வேலையற்று மனப்பால் குடித்துக் கொண்டிருப்பர்; இன்னும் சிலர், "நாம் இந்த உலகத்தை யெல்லாம் அடக்கியாளும் அரசனாயிருந்தால், நமக்கு விரோதிகளையெல்லாம் இரண்டு துண்டாக்கிவிடலாம், நேயர்களை யெல்லாம் நிறைந்த சம்பத்துள்ளவர்களாக்கி விடலாம், நினைத்தவற்றை யெல்லாம் நினைத்த பொழுதே அனுபவிக்கலாம், நம் நோக்கத்திற்கு இணங்காதவர்களை யெல்லாம் இணங்கும்படி செய்யலாம், நாம் நூதனம் நூதனமாக அநேகம் சட்ட திட்டங்களை யேற்படுத்தி அவற்றை எல்லோரும் நம் மனநோக்கப் படி அனுசரிக்கச் செய்யலாம்,'' என்று மனத்திற்குள்ளேயே நினைத்து நினைத்து அவற்றை யடைந்தார் போலவே மகிழ்கின்றனர்; இன்னும் பலர், குதிரைப் பந்தயத்திலாவது லாட்டரியிலாவது பணம் கட்டினால் இலட்சக் கணக்கான ரூபாய் கிடைத்துவிடு மென்று சிந்தித்து வேறு வேலைகளையெல்லாம் விடுத்துப் பந்தயம் அல்லது லாட்டரி போடும் வேலையிலேயே திரிகின்றார்கள். இன்னும் சிலர், தாங்கள் தேகக்கட்டுடையவர்களா யிருந்தால் ''நமக் கெவரும் நிகரில்லை; எவர் நம்மோடெதிர்த்தாலும் நாம் அவர்களை அடித்து நொறுக்கி விடலாம்; எவரும் நமக்கஞ்சுவார்கள்'' என்று மனோராஜ்ஜியம் செய்வர். இன்னும் சிலர், சிறிது கல்வியறிவுடை
வர்களாய் யிருந்தால்; நம்மோடு தர்க்கம் செய்து எவரும் வெற்றி கொள்ளுதல் முடியாது; நமக்கிணையான கல்வியுடையார் உலகத்தில் எவரு மிரார்; நம்மைப்போன்று நூலியற்றும் ஆற்றல் எவருக்கு மிராது'' என்று மனத்தில் தற்பெருமைகொண்டு அதனாலேயே ஆனந்த மடைகின்றனர். இன்னும் எத்தனையோ பேர் எத்தனையோவிதமான மனோராஜ்ஜியங்களைச் செய்து வருகின்றனர்.

 

இவர்களின் எண்ணங்களைப்போல் எதுவும் நடைபெறாது. நல்ல அனுபவங்களோ, தீய அனுபவங்களோ மனிதர்களுக்கு அவரவர்களின் பழவினைக்குத் தக்கவாறு நேரும். இவர்கள் இத்தகைய வீண் எண்ணங்களில் காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கும் போதே இவர்கட்கு மரணம் சம்பவித்துவிடும்; பொருளுள்ளார்க்குப் பொருள் போய்விடும்; தேகபலமுள்ளவர்க்கு அது தொலைந்து போகும். மேலும் கைப்பொருளில்லாதவர்கள், வேறு தொழில் செய்யாமல் வீண் மனோராஜ்ஜியம் செய்துகொண்டிருப்பதால் வறுமைக்குட்பட்டு மரணத்தின் வாயிலும் சிக்குவர். வீண் எண்ணம் படைத்தவர்களுடைய கதி இங்ஙனமாவதால் அவர்கள் இம்மையில் நிலை நிற்பதாகிய புகழையும், மறுமையில் அடைய வேண்டியு நற்கதியையும் இழந்துவிடுவார்கள். மனோராஜ்ஜியத்தால் கிடைப்பன இவைகளே.

 

ஆதலின், இம்மை மறுமைப் பயன்களை மனிதர் அடைய வேண்டுமானால், இந்த வீண் எண்ணங்களுக்கு மனத்தில் இடங்கொடுக்காமல், பயனுடைய கல்விகளைக் கற்றல் வேண்டும்; பொருள் தேடுதற்குச் செய்யத்தக்க நன் முயற்சிகளை ஊக்கத்துடன் செய்து நன்மார்க்கத்தில் பொருள் தேடி அறநெறிகளிற் செலவிடவேண் டும்; தம்முடைய தொழில் முயற்சியிலோ அனுபவங்களிலோ துன்பங்கள் நேரினும் அவை பழவினைப் பயனென்று அவற்றைச் சகித்துக் கொண்டு தமக்குரிய நற்செயல்களில் தளர்வுறாதிருக்க வேண்டும்; தெய்வபக்தியிற் சிந்தை செலுத்த வேண்டும்; பெரியாரைத் துணைக் கொள்ளுதல் வேண்டும்; தேசசேவை செய்தல் வேண்டும். மனிதர் வாழ்வு நிலையற்றதாதலின், அவர், இவற்றை உயிருடனிருக்கும்போதே விரைந்து செய்தல் வேண்டும். அங்ஙனம் செய்வாரே இவ்வுலகப் பயனையும் மேலுலகத் தின்பத்தையும் அடைந்து ஆனந்த முறுவார்கள்.

ஓம் தத் ஸத்.

ஆனந்த போதினி – 1927 ௵ - மார்ச்சு ௴

No comments:

Post a Comment