Sunday, September 6, 2020

 மாட்டின் ஜீவிய சரித்திரம்

(1) கன்றுக் காலம்.              (6) கன்று போடுங்காலம்.

(2) பக்குவ காலம்.              (7) கன்று போடுதல்.

(3) பருவ காலம்.               (8) நோய்கள்.

(4) விருப்ப காலம்.             (9) மாட்டின் உணவு.

(5) கன்று படுக்காலம்.

 

(1) கன்றுக்காலம்: - இக்காலத்தில் சிலர் கன்றுக்குத் தாய்ப் பாலூட்டிவளர்க்கின்றனர். சிலர் கன்று பிறந்தவுடன் தாயைக் காணாது மறைத்துக்கட்டிக் கன்றின் மேலுள்ள பசையைத் தமது கைகளில் துடைத்து, பின்னர்தாய்க்கு நக்கக் கொடுக்க அம்மணத்தால் தாய் பால் சுரக்கும். அக்கன்றுக்குஏற்ற உணவு கொடுப்பார்கள். ஆங்கிலேயர் ரப்பராலாக்கிய முலைகளில் பால்விட்டுக் கன்றைக் குடிக்கச் செய்து வளர்ப்பார்கள்.

 

(2) பக்குவ காலம். - நமது தேசத்து மாடுகள் எறக்குறைய 2 1/2 அல்லது 3 - வருஷங்களிலும், ஆங்கில தேசமாடுகள் 1 - வருஷம் 10 - மாசங்களிலும் பக்குவமடையும். தமிழருடைய மாடுகளை 3 1/4- வருடத்திலும், ஆங்கலேயருடைய மாட்டை 2 1/4 வருடத்திலும் விடுவது ஏற்றது.

 

(3) பருவ காலம்: - 6- வயது தொடங்கி 12 வயது வரையுமுள்ள காலம். வயதை மாட்டின் பற்களால் அறியலாம்.

 

(4) விருப்ப காலம்: - நல்ல உணவு கொடுத்தால் நல்ல கன்று போடும். பக்குவம் அடைந்த பின் நாம்பனைத் தேடும். அழகு உற்சாகம் தோற்றப்படும். அழும். 3 - கிழமைக்கு விடவேண்டும். பால் குறைதலும் விருப்ப காலத்துக்கு அறிகுறியாம்.

 

(5) கன்று படுங்காலம்: - அறிகுறிகள்: சாந்தகுணம் இருத்தல், தேகம் மினுமினுப்பாயிருத்தல், வலப்பக்கத்து வயிறு பெருத்திருத்தல், ஒரு பக்கத்துக்கு சாய்த்திருத்தல், பால் நரம்பு தடித்திருத்தல், மடியிலிருந்து கிழுவம் பால் போல் வடிதல், 6- கிழமைக்குள் மடி இறங்குதல், குழு குழுப்பாயிருத்தல், வயிறு இடிந்து கீழே யிறங்கி இருத்தல், உணவில் விருப்பமின்மை, மெல்ல நடத்தல் முதலியனவாம்.


 

(6) கன்று போடுங்காலம்: - கன்று ஈன 9 மீ 10 - நாட் செல்லும். இதற்கு முன் ஈனின் நாம்பன் கன்றும், பின் ஈனின் நாகு கன்றும் ஈனும். போடும் நேரத்தில் குறி பருத்தகன்று இருக்கும்; அடிக்கடி படுத்தெழும்; ஒருவேதனைப் பார்வை பார்க்கும்; அடிக்கடி சாணமும் சலமும் போடும்; வலப்பக்க வயிற்றை நக்கும்; அமைதியான இடத்தைத் தேடும்; சாணம் கழியத் தொடங்கும்; பொய் நோய் மெய் நோய் உண்டாகும்; பொய் நோய் இரண்டுமூன்று நாட்களுக்கு முன் உடம்பு விரிவதாலுண்டாகிறது. மெய் நோய் தொப்புளிலுள்ள 100- காய்களிலும் அறுபடுவதற் குண்டாகிறது. பன்னீர்க்குடத்து நீரிலே கன்று மிதக்கும்.

 

(7) கன்று போடுதல்: - முதன் முதல் வெளிப்படுவது பன்னீர்க்குடம், பின்னர் முன் கால் தலை உடம்பு முதுகு வெளியே வரும். கன்று நிலத்தில் விழுந்து 24 மணிக்குள் இளங்கொடி விழ வேண்டும். இளங்கொடி விழாத போது இழுத்தல் வேண்டும். கன்று பிறந்தவுடன் மாடு நக்க வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் நன்றாயிருக்கும். கன்று பிறந்த பின்பே மூச்சு விடும். கன்றுகள் கட்டு மிடங்களுக்கு சுண்ணாம்புத் தண்ணீர் தெளிக்க வேண்டும். சாம்பலும் நல்லது. கன்றுக்குக் கடும்புப்பால் நல்லது, உப்புப் பதார்த்தம் கடும்புப்பாலிலதிகம்; வெண்கருப்புப் பதார்த்தம் 16 - வீதமுண்டு. 11 – நாளுக்கு தவிடும் கஞ்சியும் வைக்கோலும் வைத்தல் வேண்டும். 2 - மாதம் வரை பால் பெருகும். 6 - ம் மாதம் பால் குறையும். 5 - ம் மாதம் நாம்பனுக்கு விடவேண்டும். நல்ல மாடாயின் 15 - மாதத்துக்கு ஒரு முறை கன்று போடவேண்டும். பாலில் சுய இடை 1.035 பால் மிக விசேஷ உணவு. பால் வியாதிக் கிருமிக்கு உறைவிடமானது. பால் பாவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பால் அடிக்கடி கறப்பதில் கொழுப்பதிகம். கெதியாயும் கிரமமாயும்கறப்பதாலும், முன்மடி வலக்காம்பையும் பின்மடி இடக்காம்பையும் கறப்பதாலும் பாலதிகம்.

 

(8) நோய்கள்: - முன்னடைப்பன் பின்னடைப்பன், மூச்சு விட இயலாமை, வயிற்றுப் பொருமல், வயிற்றுக் கழிச்சல், வயிற்றுளைவு, மாட்டுப்பேதி, வாய்போய், கால்நோய், கசம், மடிவியாதி, செங்கமாரி முதலியநோய்களாம்.

 

(9) உணவு: - சத்துப் பதார்த்தம் - பச்சைப்புல் உப்புப் பதார்த்தம் - தவிடு விதை கோதுமை பிண்ணாக்கு வகை. மாப்பதார்த்தம் - வைக்கோல்.

 

தசைப்பகுதி: -- பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை, கோதுமைத் தவிடு உழுந்து, பாசிப்பயறு, எள்ளுப் பிண்ணாக்கு என்பனவாம். தாதுபுஷ்டிக்கு உழுந்து. வேலை செய்யும் மாடுகளுக்கு கொள்ளு, தவிடு, பருத்திக் கொட்டை. வருத்தம் உள்ள மாடுகளுக்கு வெந்தயம் சேர்க்க வேண்டும். வயப்பிழையான மாடுகளுக்கு 3- இரு. வேப்பெண்ணெயும் 3- இரு. நெய்யும் சேர்த்துக் கொஞ்சங் கொஞ்சமாய்க் கொடுத்து வைக்கோலும் தண்ணீரும் வைக்க வேண்டும்.

 

இத்துடன் இக்கட்டுரை இவ்வளவில் நிறுத்துகிறேன். மறு கட்டுரையில் பால் மாடு தெரிதலைப் பற்றி ஆராயப்படும்.

ஆனந்த போதினி – 1931 ௵ - அக்டோபர் ௴
 

No comments:

Post a Comment