Sunday, September 6, 2020

 மாணவர் கடமை

 

மாணவர் கடமை என்ற தலைப்பின் கீழ் முதன் முதல் யான்
 "ஆனந்தனில் கட்டுரை எழுதத் துணிந்ததற்குச் சில காரணங்க ளுண்டு. தற்பொழுது மாணவரா யிருப்பவரே பிற்காலத்தில் தேசாபிமானத்தோடு தாய் நாட்டின் அபிவிருத்திக்காக உழைக்கும் கௌரவம் வாய்ந்த குடிகளாய் மாறப்போகின்றவ ராதலால் அவர்களுக்கான கடமைகளை அறிவுறுத்த விரும்பியது ஒன்று. " ஏதேனும் உலகத்திற்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் தாயின், பொது ஜனங்களிடையே போய்த் துன்பப் படாதே! பள்ளி மாணவர்களிடையே தொண்டு செய்! உன் எண்ணம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் " என்று ஜெர்மானிய அறிஞர் ஒருவர் கூறியவாறு, மாணவர்களிடம் இன்றியமையாத சில பொருள்களை வலியுறுத்தி எனது கடனை முடிக்கக் கருதியது மற்றொன்று.


ஒழுக்கமே உயர்வளிக்கும்

 

அடைதற்கரிய மானிடப் பிறவியின் பருவங்கள் சிலவற்றுள் இளமை சிறந்ததென்பது உலகறிந்தது. இளமைப் பருவந்தான் வாழ்வின் உயிர்நாடியா யுள்ளது. வாலிப வயதுதான் வருங் கால வாழ்க்கைக்கு அடியாயிருப்பது. வாழ்க்கை யெனும் மாடியை அடைய இளமைப் பருவ முதற்படியா யிருக்கிறது. இளமையிலேயே சக்தி, வலிமை, வீரம் இவற்றிற்கு இருப்பிடமானது. முடிவாய்க் கூற வேண்டுமாயின் ஒருவனது உயர்வும், தாழ்வும் அவனுடைய வாலிப ஒழுக்கத்தில் வயப்பட்டிருக்கிற தென்னலாம். இத்தகைய இளமைப் பருவம் பெரிதும் பாடசாலையிலேயே கழிக்கப்படுகின்றது. பள்ளிக்கூடமே இளைஞரின் மனதைப் பண்படுத்தும் இடமாயிருக்கின்றது. அங்கு எது விதைக்கப்படுகிறதோ அதுவே நாளடைவில் செழித்து வளருகின்றது. பள்ளிப் பருவத்தில், இளம் வயதில் எத்தகைய அபிப்பிராயங்களும், நோக்கங்களும் வேரூன்றுகின்றனவோ அவற்றிற்குத்தக்கவாறே பிற்கால நடவடிக்கைகளு மிருக்கு மென்பதற் கைய மில்லை. அவற்றிற்குத் தக்கபடிதான் தாய் நாடு நன்மையையோ, தீமையையோ அடையும் என்பதுவும் உண்மை. போருக்குப் புறப்படும் வீரனொருவன் எவ்வாறு முன்னரே தனக்குத் தகுதியான படைகளைத் தயார் செய்து கொள்ள வேண்டுமோ, அங்ஙனமே பிற்கால வாழ்க்கையில் ஈடுபடப்போகும் இளைஞன் மாணவன் நல்லொழுக்கத்தில் கடக்க வேண்டுவது அவசியமேயாகும். கல்வி கற்பது கேவலம் வயிற்றுப் பிழைப்பிற்கென் றெண்ணலாகாது; பெரும் பான்மை ஒழுக்கத்திற்கே என்று உன்ன வேண்டும்,'' தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் " ஆதலின், இளமையிற் பற்றிய ஒழுக்கம் பல்லாண்டிற்குப் பின்னரும் நிகழும். எனவே, மாணவர் நல்லொழுக்கத்தில் பயிலுவதே முதற் கடமை யாகும்; எழுதப் படிக்கக் கற்பதை இரண்டாவதென்னலாம். மொழி அறிவாகிய வெறுங் கல்வி ஒரு பயனையும் அளியாது. கல்வியின் மூலமாக நல்லொழுக்க நன்னெறிகளை யுணர்ந்து அவ்வழி நின்றொழுகலே இன்றியமையாதது. இதனை 'ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை" என்ற முதுமொழி வலியுறுத்துகின்றது. இன்னும் ஒழுக்கத்தின் உயர்வைக் கூற வந்த திருவள்ளுவனார் '' ஒழுக்கம் விழுப்பந் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்'' என்றார். மேலும், உலகத்தை நோக்குமிடத்து ஒருவனிடத்து வெளிப்படையாகக் காணப்படும் ஒழுக்கத்தாலேயே அவன் மதிப்போ, அவமதிப்போ அடைகின்றான். மகாத்மா காந்தியடிகள் உலகம் போற்றும் உத்தமராய் விளங்குவதற்கு அவர்கள் கொண்ட சிறந்த ஒழுக்கங்களன்றோ முக்கிய காரணமாய்த் துலங்குகின்றன? பண்டுநம் மிந்திய நாடு பல் வகையாலும் சிறப்புற்றிருந்த தென்றால் அதற்குக் காரணம், அக்காலத்தில் வதிந்த இளைஞரின் ஒழுக்கம், அறிவு இவைகளேயென் றுரைப்பது மிகையாகாது.


தற்கால நிலை

 

இத்தகைய அத்தியாவசியமான ஒழுக்கம் நம் நாட்டுத் தற்கால மாணவரிடம் திருப்தியாக இருக்கவில்லை யென்பதை யான் வருத்தத்தோடு உணர்த்திக் கொள்கின்றேன். ஆன்மார்த்த அழுக்கு மாணவரிடையே தற்காலத்தில் அதிகமாகப் பரவியுள்ளது. இது தொத்து நோய் போல் பரவிஎல்லை இல்லாத தீங்குகளை இயற்றுமே என்று தான் அறிஞர்கள் இதுகாலை இரங்குகின்றனர். மாணவர் தங்களுக்குள் பரவி வரும் சில தீய பழக்கங்களை இனியேனும் விட வேண்டும்; தங்கள் வாய்களைப் புகைப் போக்கிகளாக மாற்றுவதை நிறுத்த வேண்டும். பீடி, சிகரெட் பிடிப்பதால் உடலுக்கு ஊறு உண்டாவதை எண்ணி, அடியோடு அவற்றைத் தொலைக்க வேண்டும். உள்ளத்தையும், உடலையும் பரிசுத்தமாய் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் ஒழுக்கத்தைப் பற்றித் தாங்களே கவலையுற்று ஒழுகாத வரையில் பயனில்லை. " மாணவர்களின் ஒழுக்கத்தை ஆசிரியர் கவலை கொண்டு கடுமையான முறையில் சீர்திருத்த வேண்டும் எனும் கொள்கையை யான் பிற்போக்கான அபிப்பிராயமென்றே உரைப்பேன்." கல்விச் சாலையிலுள்ள மாணவர்களின் ஒழுக்கத்தைச் சீர்படுத்த வேண்டுமானால் அதற்கு அந்த மாணவர்களையே பொறுப்புள்ளவ ராக்குவது தான் மிக உசிதமான வழி'' என்று அனுபவ முறையிற் கண்ட ஆங்கில நிபுணர் ஸ்ரீ. எர்னஸ்டு ஏ. கிராடாக் மொழிகின்றார். எனவே, மாணவர்கள் தங்கள் ஒழுக்கத்திற்குத் தாங்களே ஜவாப்தாரிகள் என்பதை உணர்ந்து சன்மார்க்கத்தில் ஒழுகுமாறு கோருகின்றேன்.


தாய்மொழிப் பற்று

 

மாணவர் மனதில் முதலில் அமைய வேண்டுவது தாய்நாட்டின்பால் அன்பு. நாட்டுப் பற்றுண்டாகத் தாய்மொழிப் பற்று இன்றியமையாது வேண்டற்பாலது. மகாத்மா காந்தியடிகள் " தாய்மொழியின் வழியே பிள்ளைகளுக்குக் கல்வி பயில்வித்தல் மிக முக்கியம். தாய் மொழியை அலட்சியம் செய்வது தேசியத் தற்கொலை யாகும், " என்று கூறுகின்றார். ஆனால், இந் நாளில் நம் நாட்டிற்குரிய இயற்கைக் கல்வி மாணவளிடையே சிதைக்கப்பட்டிருக்கிறது. " ஆங்கிலம் பயில்வதுதான் அறிவுடைமை'' என்று மாணவர் கருதுகின்றனர். இது அறியாமை யாகும். நான் ஆங்கிலம் கற்கலாகாதென்று கூறவில்லை. ஆங்கிலம் உலக மொழியாகப் பரவி வருவதாலும், அரசாங்க பாஷையாக இருப்பதாலும் அதனைப் பயில்வது அவசியமென்றே உரைப்பேன். ஆனால் " ஆங்கிலக் கல்வியில் தான் அறிவுண்டு'" என்பதையும், " தாய்மொழியை அசட்டை செய்து கற்பது தான் கௌரவமும் நாகரிகமுமாகும்'' என்பதையும் நான் ஏற்றுக் கொள்ளேன். தாய்மொழி விடுத்து பிறமொழி படிப்பது " மாதா வயிறெரிய மகேஸ்வரி பூஜை செய்வதை ஒக்கு மென்பதை உணர்த்துகின்றேன். தாய்மொழியை அலட்சியஞ் செய்து அன்னிய மொழியையே சிறந்ததாக எண்ணும் எவரையும் உலகம் கௌரவமாகக் கருதா தென்பதைக் கவனிக்கத் தூண்டுகின்றேன். ஆங்கிலர் முதலிய அன்னிய நாட்டினர் எத்தேயத்தி லிருந்தாலும், பல மொழிகளைப் படித்திருந்தாலும் தங்கள் தாய்மொழியையே பேசும் போதும் எழுதுங்காலும் உபயோகித்து அதனிடத்துத் தனிப்பற்றுக் காட்டுகிறார்களே யன்றி அசட்டை செய்கிறார்களில்லை. மேல் நாட்டாரைச்சாயல் பிடிக்கும் நம்மவர் அவர்பால் காணப்படும் இத்தகைய நற்குணங் களை ஏன் நோக்குவதில்லை என்று கேட்கிறேன்?


தமிழின் பெருமை

 

எவர்க்கும் அவரவர் தாய்மொழிக் கல்விதான் அவசிய மாகும். ஒவ்வொரு நாட்டின் அமைப்புக்குத் தக்கவாறு மொழிகள் அமைந்துள்ளன. நமது நாட்டின் இயல்புக் கேற்றமொழி தமிழ் மொழியேயாகும். மாணவர் தமிழ்மொழி மீது கவலை செலுத்தாது வாழ்வது இயற்கை அன்னையை மறந்து வாழ்வதாகும். தாய்மொழி மீது பற்றில்லாத எந்தாட்டாரும் முன்னேற்ற முற முடியாது. அடிமைச் சங்கிலியில் கட்டுண்டிருந்த அயர்லாந்து, பின் விடுதலை அடைந்ததற்குக் காரணம் மறந்திருந்த நாட்டு மொழியை வளர்த்த தன்றோ?

 

நிற்க, நம் தாய் மொழியாகிய தமிழ்மொழி இதர மொழிகளைப்போன்ற தன்று. பெய ரளவிலேயே இனிமையெனும் பெயரை யுடையது; முற்றுப் பெற்றது; சிறு சொற்களை யுடையது; நோய் கொண்டோர், மூப்புற்றோர், சிறுவர் முதலோர்க்கும் உச்சரித்தற்கு எளிதானது; கன்னடம், மளையாளம் தெலுங்கு முதலிய பல மொழிகளுக்கு முதலானது; " சுருங்கக்கூறல் என்னும் அழகில் விரிந்த பொருட்பொலி வுடையது; உள்ளத்தின்
தோற்றங்களை வெளியிடுவதற்கு நுணுக்கமாகவும், தத்துவ வகையாகவும்அமைந்த சொற்பொலி வுடையது; பிறமொழிச் சொற்களை வேண்டாதுநடைபெறும் பெருமை யுடையது; ஆரியம், கிரீக் முதலிய மொழிகளிலும்கலந்துள்ளது; வடமொழிக்கு முற்பட்டது. மற்றும் இதன் பெருமைகள்எண்ணற்றன. உயிர்க்கு உறுதி பயக்கும் உண்மைகள் நிறைந்த நூல்கள்தமிழ்மொழியில் பலவுண்டு. திருக்குறள் ஒன்றே இதனை உண்மையெனஒப்பச் செய்யும். திருக்குறளில் அடங்கியுள்ள உண்மைகள் இவ்வுலக மழிந்துவேறு உலகம் ஏற்படினும் அவ்வுலகும், ஏற்றுக்கொள்ளும் சிறப்பினையுடையவை. மற்றும் தமிழன்னையின் அணியாகிய சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐம்பெரும் காப்யங்களின் அருமையை என்னென் றுரைப்பது? எம்மொழியினும் இனியமொழியும், தெய்வ மணங்கமழும் சொற்களும் கேட்கவும் ஆன திக்கவும்நிறை சுவை யுடையதுமான தமிழ்மொழியின் மகிமையை எவரே அளவிடற் குரியார்? தமிழ் மொழியை நீங்கள் சிறிது காலம் வரைச் செவ்வையாய்க் கற்றுச் சுவைத்து, அதன் அமுதினை ஒருதரம் பருகி விட்டால் பின்னர் தீஞ்சுவை கொண்டு இறுகக் கட்டிக் கொள்வீர் என்பது திண்ணம். தமிழினிமையில் ஆழ்ந்திருந்த காலஞ்சென்ற தேசீயக் கவி சுப்பிரமணியபாரதியார்'' யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்'' என இசைத்ததை நோக்குங்கள். நமது தாய்மொழியாம் இனிய தமிழ் மொழியை ஆர்வத்தோடு பயிலுங்கள்! அதன் வளர்ச்சிக்குப்பாடு படுங்கள்!


சரித்திர ஆராய்ச்சி

 

இன்னும் இன்றியமையாத இரண்டு, மூன்று பொருள்களைக் குறிப்பிட்டு எனது கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். மாணவர்க்கு அவர்களது முன்னோரைப் பற்றிய அறிவும், நினைவும் அவசியமாகும். ஆகவே, அந்நோக்கினை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றுள்ள சரிதங்களை ஆராய்ச்சி செய்யவேண்டும். தங்கள் நாட்டின் பழமை, நாகரிகம்முதலியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிற நாடுகளின் சரித்திரங்களையும் படித்தறிதல் நலமே யாகும். சரித்திரங்களை ஆராய்வதால்வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்களை உணர்ந்து கொள்ளுதற் கியலும். ஆதலின், சரித்திர ஆராய்ச்சி மாணவர்க்கு அவசியமான தென்று யான் வலியுறுத்துகின்றேன்.

 

மற்றும், அறிவு வளர்ச்சிக்குச் சரித்திரக் கல்வி ஆதாரமாயிருப்பது போல பல ஊர்களின் பழக்கமும் மிக அவசிய மாகும். வெறும் எழுத்துப்பூச்சிகளாக இருப்பதை விட நாட்டு வளப்பத்தையும் அறிதல் நலம். நாட்டின் பல பாகங்களையும் சுற்றி வருகையில் அங்கங்கேயுள்ள மக்களின் நடையுடை பழக்க வழக்கங்கள், இயற்கை செயற்கைக் காட்சிகள் இவை யனைத்தையும் நேரே கண்டு களிக்கவும், மனம் பண்பட்டு அறிவு வளர்ச்சி யடையவும் முடியம். இவ்வுலகத்தைப் பலவித பாடங்களை யுடைய ஒரு சிறந்த புத்தகமென்று கூறலாம். அதைச் சுற்றிப் பார்ப்பது தான் அதனைப் படிப்பதாகும். இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளில் ஊர்சுற்றிப் பார்ப்பதை மாணவர்க்கு ஒரு முக்கிய பாடமாக வைத்திருக்கின்றனார். பள்ளிக்கூட விடுமுறைக் காலத்தில் நாட்டு மாணவர்கள் முடிந்த வரையில் நெடுகலுஞ் சென்று சுற்றிப் பார்த்து வருகின்றனர். நம் நாட்டிலும் மாணவர்கட்கு இவ்வசதி வேண்டும். இது பெற்றோர்கள் கவனித்துச் செய்யவேண்டிய காரிய மாகும். எனினும், மாணவர்கள் ஊர் பார்ப்பதில் ஊக்கங் கொள்வாராக.


செயலில் வேண்டும்

 

கடைசியாக நான் வற்புறுத்தும் விஷய மொன்றே உண்டு. உத்தியோகம் பெறுவது தான் கல்வி பெற்றதன் பயன் என்பது தற்கால மாணவருடைய கொள்கையாக இருக்கிறது. துரைத்தன உத்தியோகந்தான் கௌரவம் என்ற அபிப்பிராயம் பரவி விட்டது. உத்தியோக மென்பது சேவகாவிருத்தி என்றும், அதமத் தொழிலென்றும் அவர்கள் கருதுவதே இல்லை. தவிர, எல்லோரும் உத்தியோகம் பெறும் நோக்கத்தோடிருப்பதாலேயே எங்கும் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாய் விட்டது. மாணவர்கள் ''வர்த்தகம், கைத்தொழில் முதலிய சுயாதீனத் தொழில்களே கண்ணியமும் செல்வமும் அளிக்கத் தக்கவை' என்பதை இனியேனும் உணர வேண்டும்." கோழி மேய்த்தாலும் கும்பேனிக் கோழியாக இருக்கவேண்டும் " என்ற அடிமை எண்ணத்தை ஒழிக்து, " கோழி மேய்த்தாலும் நம் கோழியாக இருக்கவேண்டும்'' என்ற உரிமை உணர்ச்சி பெற வேண்டும்.

 

இதுவரை யான் எழுதிய யாவும் மாணவரது எதிர்கால நலத்திற்கும், தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதவை யென்பதை மறுபடியும் உங்களுக்கு வற்புறுத்துகின்றேன். எதையும் கேட்டதால் பயனில்லை. படித்ததைச் சிந்தித்துச் செயலில் காட்டாத வரையில் அவ்வளவும் வீண்தான். எனவே மாணவர்கள் இனியேனும் விழிப்படைந்து மேலே படித்தவை யனைத்தையும் நினைத்து வேண்டுவன செய்யுமாறு விரும்புகின்றேன். அன்னை பாரத தேவி மாணவர்களை ஆசீர்வதிப்பாளர்க!

 

ஆனந்த போதினி – 1929 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment