Sunday, September 6, 2020

 

மாணவர் நடவடிக்கை

 

மானிட ஜன்மமெடுத்த ஒவ்வொருவர்க்கும் கல்வி இன்றியமை யாத தாகுமென்பது யாவரும் அறிந்த விஷயமே. ஏனெனில், இஜ்ஜன்மத்தில் தான் ஆன்மா இருமைப் பயன்களையும் அடையக் கூடியது. முக்கியமாய்ப் பிறப் பிறப்பாகிய துக்கசாகரத்தினின்றும் பேரின்ப முத்தியாங் கரைசேர வேண்டியது இஜ்ஜன்மத்தில்தான்.

 

இத்தகைய கல்வியை நம்மக்கள் பெறுவதற்காக அவர்களைப் பாடசாலைகளுக் கனுப்புகிறோம். பாஷாஞானமாகிய வெறுங்கல்வி மட்டும் ஒரு பயனையு மளிக்காது. கல்வியின் மூலமாக நல்லொழுக்கம் நன்னெறிகளை யுணர்ந்து அவ்வழி நின்றொழுகி, அதன்பின் பரமான்மாவையடையும் மார்க்கத்தையுணரக் கல்வி ஓர் சாதனமாக விருக்கின்றது. இதனானே,

 

''ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை''     என்று கூறப்பட்டது.

 

அனுபவமாகப் பார்க்கு மிடத்து ஒருவனிடத்து வெளிப்படையாகக் காணப்படும் ஒழுக்கம் நடைகளினாலேயே அவன் உலகில் மரியாதையோ அவமரியாதையோ, கௌரவமோ அகௌரவமோ, மதிப்போ அவமதிப்போ பெறுகிறான். இவ்வாற்றால் நம் மக்கள் கல்விகற்பது ஒரு பக்க மிருந்தாலும், முக்கியமாக அவர்கள் நல்லொழுக்கம் நன்னடக்கைகளை யடைய வேண்டுவது அத்தியா வசியமென்று நாம் உணரவேண்டும். கல்வியோடு கூடவே ஒழுக் கம் நடைகளும் கற்பிக்கப்படுவதே ஒழுங்காகும். இதற்காகவே ஆசானிலக்கணம் கூறவந்த ஆன்றோர்கள், ஆசிரியன் நற்குலத்திற் பிறந்தவனாகவும், ஜீவகாருண்யம், ஈசுரபக்தி, பலநூ லாராய்ச்சி, போதனாசக்தி, நல்லொழுக்கம், நன்னடக்கை, உலக அனுபவம், பாரபக்ஷமின்மை முதலியவைகளையுடையவனாகவும் இருக்க வேண்டு மென்று கூறி யிருக்கின்றனர்.

 

நமது ஆசார ஒழுக்கங்கள் சாத்திர சம்மத மானவை. மற்ற நாடுகளின் ஆசார ஒழுக்கங்களுக்கும், நம் நாட்டு ஆசார ஒழுக்கங் களுக்கும் மிக்க வித்தியாசமுண்டு. திருட்டாந்தமாக, மேல் நாட் டாருக்குள் வாலிபர்களுக்குக் கொஞ்சம் வயதுவந்து விட்டால் சாதாரணமாய் மூத்தோர் முன்பே சுருட்டுப் பிடிப்பது, குடிப்பது முதலிய எல்லாக் காரியங்களையும் செய்கிறார்கள். நம் நாட்டாரில் ஒருவனுக்கு எவ்வளவு வயதாயினும், தன்னைவிட மூத்தவர்கள் முன் மூக்குத் தூள் போடவும் அஞ்சுவான். எல்லா வயதினரும் தம்மி னும் மூத்தோர்முன் மரியாதையாகவே நடந்து கொள்வார்கள்.

 

சிறுவயதிலேயே, மனம் வெள்ளைச் சீலை போல் களங்கமற்றிருக்கும் போதே, கல்வியோடு கூடவே ஆசார ஒழுக்கங்களின் போதனையும் பழக்கமும் பெறும் பொருட்டே நம் நாட்டில் குரு குலவாசம் ஏற்படுத்தப்பட் டிருந்தது. இத்தகைய அத்தியாவசிய மான ஆசார ஒழுக்கங்கள் நம் நாட்டுத் தற்கால மாணவர்களிடம் எவ்வாறிருக்கிறது என்பதைப்பற்றியே யிப்போது நாம் கவனிக்க வேண்டி யிருக்கிறது. நம் தாய்நாட்டின் எதிர்கால க்ஷேமநிலைமை நம்மக்களைப் பொறுத்ததே யாகையால் இவ்விஷயத்தைப் பற்றிக் கவனிப்பது அவசியமேயாகும்.

 

இப்போதிருக்கும் நம் நாட்டுமாணவர்களின் ஆசார ஒழுக்கங்கள் திருப்தியாக விருக்கவில்லை யென்பது விசனிக்கத்தக்கது. அந்தோ! அதோடு நிற்காமல் முற்றும் நேர்மாறான வழியில் இருப்பதாயின் அதனாற் பெருந்தீங்கு விளையுமென்று சொல்லவும் வேண்டுமோ?

 

சுமார் முப்பது வருடங்களுக்கு முன் மாணவர்கள் - இருபது வயதானவர்கள் கூட - மூக்குத்தூள் போடவும் அஞ்சுவார்கள். எவனேனும் ஒருவன் கெட்ட சகவாசத்தால் அப்பழக்க முடையவனாகிவிட்டால், இரவில் கடைவீதிக்குச் சென்று பொடிக்கடையில் தன்னை யறிந்தவர்கள் ஒருவருமில்லா திருக்கும் சமயம் பார்த்துப் பொடி வாங்கி வந்து மிக்க பத்திரமாக அதை மறைத்து வைத்துக் கொண்டு, யாருமில்லாத இடத்தில் மறைவில் சென்று போட்டுக் கொள்வான். ஆ! இப்போதோ பெரும்பாலான மாணவர்களின் நடையுடைகளே நம் ஆசாரத்திற்கு முற்றும் மாறாக மாற்றப்பட்டிருக்கின்றன. தகாத மேல் நாட்டு ஆசாரங்களெல்லாம் பழக்கத்தில் வந்திருக்கின்றன. அதிலும் இச்சென்னை மாநகரில் எட்டு வயதுச் சிறுவன் கூட வீதியில் பீடி - ஸிகரரெட் பிடித்துக் கொண்டு சற்றும் இலச்சையின்றிச் செல்வதைக் காணலாம். மாணவர்கள் கக்கத்தில் பாடபுத்தகங்களை யிடுக்கிவைத்துக் கொண்டு ஸிகாரெட் பிடித்துக் கொண்டே வீதிவழியே பாடசாலை வாயிற்படிவரை செல்வதைச் சாதாரணமாகக் காணலாம். இது ஆசாரவீனம் என்ப தொரு பக்க மிருக்க, அந்தோ! அதனால் அவர்கள் தேகத்திற்கே பெருந்தீங்கை யுண்டாக்கிக் கொள்கிறார்கள்.

 

இவற்றிற் கெல்லாம் காரணம் இப்போதிருக்கும் கல்விமுறை யின் சீர்கேடே யென்பதில் சற்றும் ஐயமில்லை.

 

சுமார் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்புவரை யில், நம் நாட்டுச்சிறுவர்களுக்கு ஐந்து வயது முடிந்ததே, வித்தியா ரம்பம் செய்யப்படுவது ஒரு சடங்குபோல் செய்யப்பட்டு வந்தது. செல்வவந்தர் மக்களாயினும் சரி, ஏழைகள் மக்களாயினும் சரி முதலில் தெருப்பள்ளிக்கூடம்'என்ற தாய்ப் பாஷை கற்பிக்கப் படும் பாடசாலைக்கே அனுப்பப்படுவார்கள்.'' ஹரி ஓம் நமசிவாய சித்தன்னம'' என்பதே முதலில் கற்பிக்கப்படும். அந்த உபாத்தியாயர்க ளெல்லாம் உலக அனுபவமுடைய முதியோர்களாகவே யிருப்பார்கள். காலையில் பிள்ளைகள் பாடசாலைக்கு வந்தவுடனே யாவரும் எழுந்து சரஸ்வதி தோத்திரம், விநாயகர் தோத்திரம் முதலியவைகளைக் கூறவேண்டும். மாலை பாடசாலையை விட்டு வீட்டிற்குச் செல்லும் போதும் தோத்திரம் செய்ய வேண்டும். பிள்ளைகளில் யாரேனும் நெற்றியில் விபூதி, திருநாமம் முதலிய மதக்குறியொன்று மணியாது வந்தால் அவன் தண்டிக்கப்படுவான். அவன் நெற்றியில் சாணப்பொட்டு வைக்கப்படும். வீட்டில் பிள்ளைகள் விநாயகர் பூஜை செய்யவில்லை யென்றாவது, பெற்றோர்க்கு அடங்கி நடக்கவில்லை யென்றாவது, ஏதேனும் துஷ்டகாரியம் செய்ததாகவாவது பெற்றோர் உபாத்தியாயரிடம் கூறினால், அத்தகைய பிள்ளைகள் உபாத்தியாயரால் கண்டித்துத் தண்டிக்கப் படுவார்கள்.

 

அப்பாடசாலைகளில் சிறுவர்களுக்கு நமது மதாசார சம்பந்தமான பாடங்களும், நீதிகளையும், புத்திமதிகளையும் போதிக்கும் சதகங்கள் முதலியவைகளும், கணக்கும் கற்பிக்கப்படும். இதனால் சிறுவர்கள் அன்னியபாஷை கற்பிக்கப்படும் பாடசாலைக்குச் செல்லு முன்பே தாய்ப்பாஷையின் பெருமையைச் சுமாராக வறிந்து, அதில் அபிமான முடையவர்க ளாவதோடு, நமது மதசம்பந்தமான விஷயங்களையும் சற்று உணர்ந்தவர்களாகிறார்கள். இதனால் பின்னால் அவர்களுக்குத் தாய்ப்பாஷையிலும் சுயமதக்கல்வியிலும் விருப்பம் விர்த்தி யடைகிறதேயன்றி, அவற்றில் அவமதிப்புண்டாக வழியில்லை.

 

அந்தோ! இப்போதோ நமது மாணவர்களுக்குத் தாய்ப்பாஷையில் அலட்சியமே யுண்டாய் விடுகிறது. மதக்கல்வியே யடியோடில்லை. ஆரம்பத்திலேயே அன்னிய பாஷையைக் கற்கத்தொடங்குவதால் அப்பாஷா சம்பந்தமான ஆசார ஒழுக்கங்களே இவர்கள் மனதிற் படிகின்றன. இப்போது அவர்கள் வாசிக்கும் புஸ்தகங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களனைத்தும் பெரும்பாலும் அன்னிய நாட்டில் நடக்கும் விஷயங்களும், அன்னிய மதாசார ஒழுக்கங்களின் சம்பந்தமுடைய விஷயங்களுமேயாகும். இதனால் நமது மாணவர்களுக்கு நமதுமதாசார ஒழுக்கங்களைப் பற்றிய போதனையே யில்லாமற் போவதோடு, அன்னிய ஆசார ஒழுக்கங்கள் அவர்கள் மனதிற்பதிந்து இத்தகைய சீர்கேட்டை யுண்டாக்கி விடுகின்றன.

 

அந்தோ! தாய்ப்பாஷை கட்டாய பாடமாக்கப்படாவிட்டால் நமது தாய்நாடு கூடிய சீக்கிரத்தில் என்ன கதியடையு மென்பதைத் தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள். நமது மதாசார ஒழுக் கங்கள் முதலிய யாவும், நமது ஆன்மார்த்த போதனைகளும், நம் தாய்ப்பாஷையில் தான் இருக்கின்றன. அத்தகைய தாய்ப்பாஷை க்ஷண தசையடைந்தால் வேறு பாஷையில் நம்மக்கள் எத்தகைய உயர்தரக்கல்வி கற்றாலும் என்ன பயன்? இவ்வுலக போகங்களை மட்டுமே யனுபவிக்கலாம். இவ்வாறே யின்னும் நடக்கவிடின், சீக்கிரத்தில் நம் நாட்டில் உலோகாயதம் நிலைத்தோங்கிவிடும். பிறகு என்னாகு மென்பதை யெழுத நம்மனம் நடுக்குறுகிறது. கடவுளே! இன்னமும் நம்மவர் இதைக் கவனியாதிருத்தல் நீதியாகுமோ!

 

இப்போது கல்வி யபிவிர்த்தியைப் பற்றிய விவகாரம் நம்மவர் வசத்தில் விடப்பட்டிருக்கிறது. இவர்கள் கூடிய சீக்கிரம் நம்மக்களுடைய கல்வியில் தாய்ப்பாஷையைக் கட்டாய பாடமாக்கி, நமது ஆசார ஒழுக்கங்களையும், பிற்காலத்தில் நமது மக்களின் உலக அனுபவத்திற்கு உதவியாயிருக்கக்கூடிய நம் நாட்டு விவகாரங்களையும், தேசபக்தியை வளர்க்கும் விஷயங்களையும் போதிக்கும் பாடபுத்தகங்களை யவர்கள் கற்கும்படி ஏற்பாடு செய்யா விட்டால், நம் தாய்நாடு மிக்க பரிதாபமான நிலைமைக்கு வந்துவிடுமென்பதில் சற்றும் ஐயமில்லை.

 

பெற்றோர்களிலும் அனேகர் தம் பிள்ளைகள் படித்து பாஸ்செய்து விட்டால் போதும் என்று கண்மூடித்தனமாகக் கருதுகிறார்களே யன்றி," நம் மக்களுக்கு முதலில் தாய்ப்பாஷையையும் நமது மதாசார ஒழுக்கங்களையும் கற்பித்துப் பிறகுதான் அவசியமான அன்னியபாஷையை (வயிற்றுப் படிப்பை) க்கற்பிக்க வேண்டும். இன்றேல், நம் தாய்நாட்டிற்குப் பெருங்கேடு விளையும் " என்பதை யுணர்கிறார்க ளில்லை.

ஒரு மனிதன் தேகத்தில் கண்களுக்குப் புலப்படாத அணுவினும் சிறிய ஓர் விஷக்கிருமி பிரவேசிக்கும் போதும், அது தேக த்திலேயே விர்த்தியடையும் போதும் அவன் அதை யுணர்வதில்லை. அது கடைசியில் ஒரு வியாதியை யுண்டாக்கித் திடீரென்று சிலமணி நேரங்களில் கொல்லும் போதுதான் தெரிகிறது. ஆனால் அப்போததற்குத் தப்பமுடியாது. மேற்கண்டகுறை இக்கிருமி போன்றதே. இப்போதே அதனாலுண்டாகக்கூடிய தீமை நமக்குப் புலப்படாததால், நம்மவர் அதைக் கவனிக்கா திருக்கிறார்கள். அந்தோ! பின்னால் அதனால் நேரிடும் பெருங்கேட்டைத் தடுக்கமுடியுமோ?

 

நம்மவர் இவ்விஷயத்தைக் கவனித்துத் தக்க ஏற்பாட்டைச் செய்யாதிருந்தால், காருண்ய துரைத்தனத்தார் நமக்கு எத்தனை சீர்திருத்தங்களையளித்தால் தான் என்ன பயன்? நடந்து சென்றால் கால் நோகுமென்று ஒரு குதிரையை ஒருவனுக் களிக்கிறார்கள். அவன் அக்குதிரைமேல் வால் புறம் திரும்பி உட்கார்ந்து கொண்டு அதையோட்ட முயன்றால் குதிரையால் என்ன பயனடைவான்?

 

கல்வியிலாகாவில் சம்பந்தப்பட்ட நம்மவர்களாகிய கனவாள்களும், ஏனையோரும் இனியேனும் இது விஷயத்தில் கவனத்தைச் செலுத்தி, நமது மக்கள் நல்ல ஆசார ஒழுக்கங்களை யுடையவர்கள்ளாய் க்ஷேமாபி விர்த்தியடையவும், நம் தாய்நாடு பெருங்கேட்டிற் காளாகாமல் தப்பி முன்னேற்ற மடையவும் செய்ய வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறோம்.


     ஓ! கருணாநிதியாகிய சச்சிதானந்தப் பரம்பொருளே! எப்போதும் தெய்வீகத்தன்மை நீங்காதிருக்கும் இப்புண்ணிய பூமியில் மெய்ஞ்ஞானச்சுடர் மங்காவண்ணம் பாதுகாக்க உம்மையன்றித் துணை வேறில்லை யன்றோ! இப்புண்ணிய பூமியையிந்த ஆபத்தினின்றும் தப்பவைத்து இது க்ஷேமமுற உம்மையே சரணாகதியாகவடைகின்றோம்.

 

ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஏப்பிரல் ௴

 

   

 

No comments:

Post a Comment