Sunday, September 6, 2020

 

மாணவர்கட்கோர் நல்லுரை

 

மாணவ சகோதரர்களே!

 

இச்சமயம் உங்களில் அனேகர் பரீக்ஷையில் தேறிச் சந்தோஷத்தோடு மேல் வகுப்பிற்குச் செல்ல எதிர் பார்த்துக்கொண் டிருப்பீர்கள், அல்லது சென்றேயிருப்பீர்கள். அனேகர் பரிட்சையில் தவறிப்போய் மிக்க விசனத்திலிருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் மனப்பூர்வமாய் துக்கிக்கிறோம். கஷ்டப்பட்டு வாசித்தவர்களும் புத்திசாலிகளுமானவர்களில் சிலர் தவறிவிட்டிருக்கிறார்கள். நாம் தேறமாட்டோம் என்று கருதியவர்களும் சரியாக வாசிக்காத மந்த மதியினருமாகியவர்களில் சிலர் தேறியிருக்கிறார்கள் என்றும், பரிட்சையில் கொடுத்த விடைகளுக்குப் புள்ளியளிப்போர் ஒரு ஒழுங்காக அளிப்பதில்லை யென்றும், இதோடு அதிகமானவர்கள் தேறிவிடுவதாயின் எல்லாருக்கும் 100 - க்கு 20 அல்லது 25 குறைத்து பரீட்சையதிகாரிகள் கருதும் தொகை மட்டும் தேறும்படி செய்கிறார்கள் என்றும் இரண்டொரு மாணவர்கள் நமக்கு எழுதியிருந்தார்கள்.

 

அவர்கள் கூறுவது பொய்யல்லதான். ஆனால் நாம் கல்விகற்பதென்றால் பரிட்சையில் தேறுவதுதான் என்றும், பரிட்சை கொடுத்துவிட்டு ஒரு உத்தியோகத்தில் அமர்வதுதான் நாம் உலகில் சீவிப்பதற்கு சிறந்தவழி யென்றும் கருதி, அபரிமிதமான பேர் பரிட்சைக்குப் போவதால் அவர்கள் இம்மாதிரி செய்ய நேர்கிறது. ''தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி யென் செய்வாள்?'


சகோதரர்களே!

 

பரிட்சையில் தேறாததற்காக நீங்கள் வீணாய் மனமுடையத் துக்கிக்கலாகாது! தவறுதல் மனிதன் இயற்கை. எப்படிப்பட்ட கெட்டிக்காரனும் தவறிப்போகக்கூடும். அது அகௌரவமுமாகாது. நாம் நமது முயற்சியைச் சரிவரச் செய்தோமாவென்பதைக் கவனிக்க வேண்டும். அதைச் செய்யாதிருந்தால் தான் விசனப்பட வேண்டும். தவறு நமக்கு உரோஷத்தையும், மறுமுறை எப்படியாவது தேறவேண்டும் என்ற வைராக்கியத்தையு மளிக்கும். கட்டாயம் தேறுவோம் என்ற நம்பிக்கையோடும் ஊக்கத்தோடும் முயலல் வேண்டும். ஒரு சுத்த வீரன் போர் முனையில் முன் வைத்தகாலை பின்னுக்கிழுக்காமல் தீரத்தோடு எதிரியிடம் போர்புரிந்து தோல்வியடைந்தால் அதனால் அவனுக்கு அகௌரவமில்லை. சுலபத்தில் அடையும் ஜெயம் ஒருவனுடைய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மங்கச் செய்கிறது. பரிட்சையில் ஒருமுறை யிருமுறை தவறினும் மறுபடி மறுபடி அதிக ஊக்கத்தோடு முயல வேண்டுமேயன்றி தீரங்குன்றி மனமுடைந்து போகிறது கோழைத்தனமாகும்.

 

இப்போது நீங்கள் கல்விகற்கும் முறைமையைப்பற்றி இரண்டொரு விஷயங்களைக் கூறுகிறோம்.

 

1. பாடம் படிக்கும்போது கண்ணால் மட்டும் பார்த்துக்கொண்டு போவதாவது, சத்தமிட்டுப் படிப்பதாவது தகுதியன்று. நாம் வாசிப்பது நமது செவிக்கு மட்டும் கேட்க வேண்டும். அப்போது கண்ணால் பார்த்ததை மறுபடி காதாற் கேட்டதாகவுமாகிறது.

 

2. அன்னியர் பேசுவது முதலிய சத்தங் கேட்குமிடத்திலாவது, கண்ணைக் கவரும் காட்சிகளிருக்குமிடத்திலாவது வாசிக்கலாகாது. அத்தகைய விடங்களில் வாசித்தால் பாடத்தில் மனம் நிலைத்து நிற்காது சிதறும்.

 

3. ஏகாந்தமான இடமே வாசிப்புக்குத் தகுதியான இடம். வாசிக்கும்போது மனம் வேறு விஷயங்களில் செல்லும்படி விடலாகாது.

 

4. எந்த பாடத்தையும் எவ்விதமாக வாசித்தால் அது சுலபமாய் மனதில் பதிந்து பிறகு சுலபத்தில் மறக்கப்படாதோ அந்த வழியறிந்து வாசிக்க வேண்டும். இதற்கொரு திருட்டாந்தம் கூறு கிறோம்.

 

பூகோளசாத்திரம் வாசிக்கையில் இந்தியாவின் வடக்கு இமயமலையும் திபெத்தும், கிழக்கில் வங்காளகுடாக்கடலும், தெற்கில் இந்துமகா சமுத்திரமும், மேற்கில் அரபிக்கடலும்........... இருக்கின்றன வென்று கால் மணிநேரம் மனப்பாடம் செய்வதைவிட, பூகோளபடத்தைப் பார்த்து சற்றுநேரம் வாசித்தால் பிறகு என்றும் மறவாது. இவ்வாறே மற்ற பாடங் களையும் தக்க வழியாய் வாசித்து மனதிற் றறிக்கச்செய்யவேண்டும்.

 

5. பெரும்பாலான மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதேயில்லை. ஆதலின் "அய்யோ! பள்ளியில் வாசிக்கும் போது மட்டும் பிறகு இம்மாதிரி நடக்கும் என்று கொஞ்சம் தெரிந்திருந்தால் எவ்வளவோ ஜாக்கிரதையோடு நடந்துகொண் டிருப்பேன் " என்று அனேகர் பிற்காலத்தில் வருத்தப்படுகிறார்கள்:

 

மேல் வகுப்புக்களில் வாசிக்கும் மாணவர்களாவது தங்கள் எதிர்கால வாழ்க்கையை அதாவது கல்வி முடிந்தபின் தான் என்ன தொழில் செய்யவேண்டும், எவ்வழியில் ஜீவிப்பது கௌரவம் என்பதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். இல்லறம் நடத்தும் வயது வந்தவர்களுடைய அனு பவங்களைக் கவனிக்க வேண்டும்.

 

6. தேசாபிமானமில்லாதவன் மனிதனாய்க் கருதப்படமாட்டான். ஒரு தேசம் அல்லது ஒரு ஜாதியின் க்ஷேமம் ஒவ்வொரு தனி மனிதனுடைய அல்லது குடும்பத்தின் க்ஷேமத்தைப் பொருத்ததாகும். எல்லார் க்ஷேமத்தின் மொத்தமே தேசக்ஷேமமாகும். அமெரிகா செல்வம் பொருந்திய நாடு என்கிறோம். ஏன்? அங்குள்ள மனிதரிற் பெரும்பாலார் செல்வவந்தர்களாக விருப்பதால் தான்.

 

நம் நாட்டார் ஒவ்வொருவரும் நம் தாய் நாட்டின் க்ஷேமத்திற்கென்று உழைத்தால்தான் நம் தேசம் முன்னேற்றமடையும். மாணவர்களாகிய நீங்கள் கல்வி முடிந்து உலகில் பிரவேசிக்கும் போது, இப்போது தாய் நாட்டின் க்ஷேமத்திற்காக உழைக்கும் சான்றோராகிய ஆன்றோரெல்லாம் ஓய்வுபெறும் நிலைமையிலிருப்பார்கள். அவர்கள் செய்துவந்த தேசத்தொண்டை நீங்களே யேற்றுக்கொள்ள வேண்டியவர்கள். ஆதலின் இப்போதே தேசபக்தியாகிய வேர் உங்கள் இருதயத்தில் ஊன்றி கிளைத்துச் செழித்து வளர வேண்டும்.

 

ஜீவனம் செய்வது, அதாவது ஆகாரம் சம்பாதித்து உண்டு உறங்கி மடிவது, மிருகம் பக்ஷியாதிய சகல சீவராசிகளும் செய்யும் வேலையே. நாமும் அதை மட்டுமே செய்யின் நமக்கும் மிருகங்களுக்கும் வித்தியாச மென்ன?

 

7. மாணவ நண்பர்களே!

 

கல்வி கற்பது அறிவை விசாலிக்கச் செய்ய என்று நீங்கள் கருதவேண்டுமன்றி சேவகாவிர்த்திக்காக என்ற எண்ணமே நீங்கள் கொள்ளலாகாது. நம் நாட்டில் சில மூடத்தனமான பழமொழிகள் எப்படியோ பிற்காலத்தில் முளைத்துவிட்டன. அவற்றில் ஒன்று " கோழி மேய்த்தாலும் கும்பினிக்கோழி மேய்க்க வேண்டும்'' என்பதே. இது'' அதமம் சேவகாவிர்த்தி'' என்ற ஆன்றோர் வாக்குக்கு நேர் விரோதமாக விருக்கிறது. நாம் க்ஷேமமடைய வேண்டுமாயின் நாம் அநுசரிக்க வேண்டிய பழமொழி "கோழி மேய்த்தாலும் அது நம் கோழியாக இருக்க வேண்டும்" என்பதாம்.

 

ஜீவனம் செய்வதில் தாய் நாட்டின் க்ஷேமத்திற்கு அனுகூலமான வழியில் செய்வதே தகுதி. அப்போதுதான் நம் தாய்நாடு க்ஷேமமடையும். கல்விகற்கும் ஒவ்வொருவரும் அடிமைத்தொழில் செய்யவே ஆசைப் பட்டால் தேசம் எப்படி க்ஷேமமடையும்? வயிற்றுப்பிழைப்பு ஒன்றையே கருதி ஆங்கிலத்தையே முக்கிய கல்வியாகக் கருதுவோர், தாய்ப்பாஷையை யலட்சியம் செய்து, அதன் மூலமாய் அடையத்தக்க ஆன்மார்த்த மாதி பெரும்பயன்களை இழந்துவிடுகிறார்கள்.

 

நண்பர்களே! கௌரவத்தோடு செல்வம் பெற்று முன்னேற்றமடைந்துள்ள (அமெரிகா, ஜபான் போன்ற) நாட்டார் எத்தகைய தொழிலைச் செய்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். எத்தகைய தொழில் செய்தால் நம் தேசக்ஷேமத்திற்கு அநுகூலமாக விருக்குமோ, எத்தகைய தொழில் நம் தாய்நாட்டின் முன்னேற்றத்தை யளிக்குமோ, அத்தகைய தொழிலைச் செய்ய உத்தேசித்துக்கொண்டு அதற்கு வேண்டிய கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள்.

 

8. ஒருவன் அன்னியபாஷையைக் கற்பது எதற்காக? அந்தச் சாதியாரோடு பேசவும் அப்பாஷையிலுள்ள சத்தான நூல்களையறிந்து அதைத்தம்மவர் உணர்ந்து பயனடையுமாறு செய்வதற்குமே. ஆங்கிலர், ஜர்மானியர் முதலிய பலர் நம் நாட்டிற்கு வந்து இங்குள்ள பாஷைகளைக் கற்றுப் பிறகு குறள், திருவாசகம், பாரதம், இராமாயணம், வேதம் முதலிய பல அரிய நூல்களைத் தங்கள் பாஷைகளில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

நம்மவர் ஆங்கிலம் கற்று வயிற்றுப் பிழைப்போடு அதை விட்டு விடு கிறார்கள். இவர்கள் கற்கும் இரசாயன சாத்திரம், பௌதிக சாத்திரம் முதலிய யாவும் பரிட்சையில் புள்ளி வாங்குவதற்கே. அவற்றைப்பற்றிய கல்வியைப் பரிட்சை மண்டபத்திலேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். ஆங்கிலத்திலுள்ள பயனளிக்கத்தக்க சாத்திரங்களை நம் பாஷைகளில் மொழிபெயர்த்து நம்மவர் கற்கும்படி செய்தாலன்றோ நம் நாடு க்ஷேமமடையும். மாணவர்களாகிய உங்களுக்கு இவ்விஷயங்களில் சிரத்தையுண்டானாலன்றி நமது நாடு க்ஷேமமடையாது. நாம் எண்ணம் வைத்து ஊக்கத்தோடு முயன்றால் கருணாநிதியாகிய ஆண்டவன் அருள்புரிவார்.


 சீடன்.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment