Sunday, September 6, 2020

 

மாணவர்களின் ஒழுக்கமும், தற்கால நிகழ்ச்சியும்

 

கல்விகற்பதும் கற்பிப்பதும் பெரும்பான்மை ஒழுக்கத்திற்கும் சிறுபான்மை இலௌகீக காரியங்களுக்குமே என்பது பிரசித்தம்.'' விளையும் பயிர் முளையிலே தெரியும்,'' என்பதற் கேற்கவும், தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்,'' என்பதற்கிணங்கவும் யாவருடைய ஒழுக்கமும் பாலப் பருவத்தை யனுசரித்ததாகவே பல்லாண்டிற்குப் பிறகும் நிகழுமாதலாலும், நாம் மேற்கொண்ட உபாத்திமைத் தொழிலில் நம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட பாலர்களை நல்லொழுக்கத்தில் பயிற்றுவதே முதற் கடமையும், எழுதப் படிக்கக் கற்பிப்பது இரண்டாவது கடமையுமாகும். ஆதலின், நமது முதற் கடமையை நிறைவேற்றுங்கால் இன்னின்ன வழி களால் முறையைக் கடைப்பிடித்தல் வேண்டுமென்று நமது நல்லாசிரிய னும் பல பெரியோர்களும் அறிவித்துக் கொண்டு வருகிறார்களெனினும், நாமும் அவ்வொழுக்கத்தைப் பின்பற்றி'' நூலைப்போல் சேலை'' " தாயைப் போல் பிள்ளை'' என்பவைகளுக்கு இணங்க நல்லொழுக்கமாகவே நடந்து, இந்நடக்கையை நமது மாணவர்கட்கு மாதிரியாகக் காட்டியும் போதித்தும் அவர்களை முன்னுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண் டுவதோடு, மாணவர்களும் தங்கள் தங்கள் சுயபுத்தியாலும் நன்மை தீமைகளை அறிந்து நடக்கும்படி செய்ய, நமது மன்னர்பிரான் ஐந்தாவது ஜார்ஜ் சக்கிரவர்த்தியவர்களின் (சமீபத்தில் கிடைத்த) ஸ்ரீமுகத்தை யனுசரித்து தற்கால நிகழ்ச்சிக் கிணங்க நடந்து வரும் ஓர் விரும்பத்தக்க விஷயத்தைப் பற்றி'' பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் விவராஜ்ஜியம் " என்னும் தலைப்பின் கீழ் " சுதேசமித்திரன்'' 7 - 2 - 1920 பிரசுரத்தில் வெளியிட்டிருக்கும் விஷய அமுதத்தை அப்படியே இதன் கீழ் எழுதுகிறேன். இம்முறையின் மேன்மையை உணரும் சகோதர உபாத்திமார்கள் தத்தம் பாட சாலைகளில் அதை அனுஷ்டித்துத் தமது முதற் கடமையை நிறைவேற்றுவார்களென்று எல்லாம் வல்ல இறைவனை ஏத்துகின்றேன்: -

 

"பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் ஒழுக்கத்தைக் கடுமையான சிக்ஷையைக் கொண்டே சீர்திருத்த வேண்டுமென்ற பிற்போக்கான அபிப் பிராயமுள்ள உபாத்திமார்கள் பின் வரும் விஷயத்தைச் சற்று ஊன்றிக் கவனிப்பார்களாக. பின்வரும் விஷயம் " டெயிலி நியூஸ்'' பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. லண்டன் நகரில் ஹாலோவே யென்று ஒரு ஸ்தலமுண்டு. அதில் ஒரு கலாசாலையுண்டு. அந்தக் கலாசாலையில் மிஸ்டர். எர்னஸ்டு ஏ. கிரா டாக் என்பவர் ஒரு உபாத்தியாயர். அவர் கல்விச்சாலைகளிலுள்ள மாணவர்களின் ஒழுக்கத்தைச் சீர்படுத்த வேண்டுமானால் அதற்கு அந்த மாணவர்களையே ஜவாப்தாரிகளாக்குவது தான் மிக்க உசிதமான வழியென்று தமது அனுபவமுறையில் கண்டதைக்கொண்டு நிரூபித்திருக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு:

 

மேற்படி பள்ளிக்கூடத்தில், 4 - 5 - வகுப்பு மாணவர்கள் தங்களுக்குள்ளேயே க்ரிகட்டு' முதலிய சரீரப்பயிற்சி விளையாட்டுகளை ஒழுங்காக நடத்துவதற்காக ஒரு பஞ்சாயத்துக்கமிட்டி ஏற்படுத்திக் கொண்டு வெகுநன்றாகவும் சிறப்பாகவும் அது விஷயத்தை நடத்தி வந்தார்கள். 12, 14 வயதுக்கு மேற்படாத மைனர்களாகிய இந்தப்பிள்ளைகள் இவ்வளவு ஒழுங்காகத் தங்களுக்குள்ளேயே ஒருவித ஒற்றுமையுடன் கட்டுப்பாட்டால் காரியங்களை நடத்திவருவதைப் பார்த்து வந்த மேற்கூறிய சரியான உபாத்தியாயராகிய மிஸ்டர் எர்னஸ்டு ஏ. கிராடாக்குக்கு ஒரு யோசனை உதித்தது. அதாவது,'' கிரிகட்டு " கமிட்டியை ஒழுங்காக நடத்த ஆற்றலுள்ள பையன்கள் வசமே அவர்களின் ஒழுக்க முறையைப் பற்றிய பொறுப்பையும் ஒப்படைத்து விட்டால் சீக்கிரத்தில் மிகச் சிறப்பான பலன் கிடைக்குமென்பது தான். அவர் எண்ணிய காரியத்தைத் துணிந்து செய்ய ஆரம்பித்து, தம் வகுப்பு மாணவர்களை யழைத்து அவர்களைத் தங்கள் வகுப்பிலுள்ளோரின் ஒழுக்கமுறையைப் பரிபாலிப்பதற்காகத் தங்கள் பிரதிநிதிகளைக் கொண்டே ஒரு பஞ்சாயத்துக் கமிட்டி யேற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்லி அந்தப்

(1) பஞ்சாயத்தானது, மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்குள்ளும் வெளியிலும் தங்கள் ஒழுக்கநெறி பிறழாமல் பார்த்துக் கொள்ளவும்;

 

(2) ஒழுங்கு தவறி நடக்கும் மாணவர்களை அவர்களே விசாரித்து சிக்ஷிக்கவும்;

 

(3) மிக நேர்மையாகவும் திறம்பட்ட ஒழுங்கோடும் நடப்பவர்களுக்கு அவர்களே தகுந்த சன்மானங்கள் அளிக்கவும்;

 

(4) வீட்டில் ஒழிவு நேரங்களில் செய்து வருவதற்காக மாணவர்களுக்கு வகுப்பு உபாத்தியாயர்களால் விதிக்கப்படும் வேலைகளை மாணவர்கள் சரிவர நடத்தி வருகிறார்களாவென்று கவனிக்கவும் வேண்டு மென்று தெரிவித்தார்.

 

இதனுடன் பள்ளி மாணவர்களின் தேகப்பயிற்சி விஷயத்தைக் கவனிக்க வேண்டியதும், அந்தப் பஞ்சாயத்தின் வேலையாக ஏற்படுத்தினார். பிறகு உபாத்தியாயர் மாணவர்களுக்கு அன்றாடம் பாடம் சொல்லி வைக்க வேண்டிய ஒரு பொறுப்பை மாத்திரம் தாம் வகிப்பதாகவும், மற்ற மேற்கண்ட விஷயங்களை மாணவர்களே மேற்கூறிய பஞ்சாயத்து மூலமாய் திருப்திகரமாகவும், ஒழுங்காகவும் நடத்திவர ஜவாப் தாரியாக வேண்டுமென்றும் விதித்து விட்டார். அதுமுதல் இந்தப் புதிய முறையான கலாசாலைத் துரைத்தனம் ஆச்சரியமான ஒழுங்குடனும், சிறப்புடனும் நடந்து வருகிறது. சுருங்கச் சொல்லுமிடத்தில், இந்தப் பள்ளி உபாத்தியாயர் ஜவாப்தாரியான பொறுப்பு வாய்ந்த சட்டவரம்புக்குக் கட்டுப்பட்ட ஒரு அரசனாகவும், அதன் மாணவர்கள் சில சட்ட வரம்புகளுக்குட்பட்டுத் தெரிந்தெடுக்கப்பட்ட தங்கள் பிரதி நிதிகளின் பஞ்சாயத்தாரால் ஆளப்படும் சுதந்திர முள்ள குடிகளாகவும் பாவிக்கப்படல் வேண்டும். இந்த மாணவர்களின் பஞ்சாயத்தானது சில நிபந்தனைகளுக்கு மாத்திரம் ஈடுபட்டு, மாணவர்கள்ளுக்கு வீட்டில் ஒழிவுநேர வேலையாக என்ன ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதைக்கூட நிர்ணயிக்கலாம். இந்தப் பஞ்சாயத்தில் மிகவும் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், அதற்கு ஏற்படுத்திக் கொடுக் கப்பட்டிருக்கும் விசாரணை முறையும், சிக்ஷை விதிக்கும் பத்ததியும் தான். இது சம்பந்தமாகப் பின்வரும் விஷயம் மிக்க ஆச்சரியமான ஒரு சம்பவத்தைத் தெரிவிக்கிறது. ஒருநாள் இந்தப் பஞ்சாயத்தானது வீட்டு வேலைக்காக பிரெஞ்சு இலக்கண சம்பந்தமான ஒரு பாகத்தைப் பாடமாக ஏற்படுத்தியது. இந்தப் பாடமானது இதுவரையில் கொடுத்து வந்ததைவிட மிகக் கஷ்டமானதென்று "கிராடாக்" துரையே சொல்லுகிறார். மறுநாட்காலையில் மாணவர்கள் பாடம் ஆரம்பித்ததும், இந்தப் பஞ்சாயத்தாரின் நிர்வாக அங்கத்தினர் அந்த இலக்கணப்பாட விஷயமாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். அதில் இரண்டு பையன்கள் தவறிவிட்டார்கள். உடனே அந்தப் பஞ்சாயத்தில் நிர்வாகக் கமிட்டியின் அக்கிராசனர், தவறிய பிள்ளைகள் தவறிய விஷயத்தை ஒவ்வொன்றையும் 5 முறை எழுதி அடுத்த நாட் காலையில் கொண்டுவந்து தம்மிடம் காட்ட வேண்டுமென்று சிக்ஷை விதித்தார். தவறிய இரண்டு மாணவர்களும் இந்த உத்தரவை எதிர்த்து அதற்குக் கீழ்ப் படியவில்லை. பஞ்சாயத்தார் மறுபடியும் அந்த இரண்டு மாணவர்களும் அந்தப் பாடத்தை நான்கு முறை எழுதிக் காட்ட வேண்டுமென்று உத்தரவிட்டார்கள். அந்த முரட்டுத்தனமான இரண்டு மாணவர்களும் மறுபடியும் பஞ்சாயத்தாரின் உத்தரவை நிராகரித்து விட்டார்கள். மேலே என்ன நடந்தது தெரியுமோ? அதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். (அகம் பிடித்துத் திரியும் அநாகரீகமான அடக்கு முறைகளைப் பள்ளியில் கூட வெட்கமில்லாமல் கையாடும் போலி உபாத்திமார்களும், தன்னடக்கமும் தன் மதிப்புமில்லாமல் தியிர் பிடித்து அடங்காப் பிடாரியாகத் திரியும் மாணவர்களும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் இதுவே). பள்ளியில் ஒவ்வொருவரும், புறக்கணிக்கப்பட்ட தங்கள் அதிகாரத்தையும், பாத்தியதையையும் இந்தக் கமிட்டியார் எப்படி ஸ்தாபித்துக் கொள்ளப் போகிறார்களென்று மிக்க ஆவலுடன் எதிர்பார்த் துக்கொண்டிருந்தார்கள். பஞ்சாயத்தார்கள் என்ன செய்தார்கள் தெரியுமோ! உடனே பஞ்சாயத்தார் சட்டத்துக்குக் கட்டுப்படாத மேற்படி இரண்டு மாணவர்களையும் முறையே விசாரித்து சிக்கிப்பதற்காக மாணவர்களின் பிரதி நிகிகளாக 12 நபர்களை ஜூரர்களாகத் தெரிந்தெடுக்க ஒரு விளம்பரம் விடுத்தார்கள். ஜூரர்களும் வந்து சேர்ந்தார்கள். பஞ்சாயத்து அக்கிராசனர் நியாயாதிபதியாக வீற்றிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மாணவர்களைக் காக்க சர்க்கார் தரப்புத் தலைவராக ஒரு மாணவர் ஏற்பட்டார். இரண்டு குற்றவாளிகளும் சட்டமீறி நடந்ததாகவும், அவர்களுக்குப் பஞ்சாயத்தாராலிடப்பட்ட வேலைகளை அவர்கள் செய்தே தீரவேண்டு மென்றம் தீர்ப்புச் சொல்லப்பட்டது.

 

இப்படியாய் குடியரசு ஸ்வராஜ்ஜியம் மாணவர்களுக்குள் நடந்தேறுகிறது. இது இப்பொழுது மிகவும் கௌரவமாக வளர்ந்து ஆரம்பத்தில் செய்த வேலைகளை விட மிகப் பொறுப்புவாய்ந்த காரியங்களையும் நன்றாக நடத்திவருகிறது. (இந்தியக் கலாசாலை மாணவர்கள் இதைக் கவனித்துப் பின்பற்றுவார்களா?'' என்பதே.

 

இதில் நாம் நம் மாணவர்க்குப் போதிக்க வேண்டிய சிவிக்ஸ் பாடம் நடந்தேறுவதும் கவனிக்கத்தக்கது. தற்போதும் நமது பாடசாலைகளிலும் நடத்தப்படினும் அவைகள் இதர கதைகள் போன்றதே. ஆதலால் மாணவர்களின் ஒழுக்க சம்பந்தமாகவே நடத்துதல் மிக்க விசேஷமாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

P, பரிமணப்பல்லவராயர்,

ஹெட்மாஸ்டர், போர்ட் ஸ்கூல், உத்தமச்சேரி,

திருவளர் சோலை போஸ்டு, திருச்சி ஜில்லா.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment