Sunday, September 6, 2020

 

மாணவர்களுக்கு எச்சரிக்கை

 

 நமது அன்பார்ந்த மாணவ சகோதரர்களே! சமயோசிதம் போல் இச்சமயத்தில் உங்களுக்கு ஒரு விஷயத்தைப்பற்றி எச்ச ரிக்கை செய்ய விரும்புகிறோம். ஆனால் இப்போது நாம் உங்களுக்கு நீதிகளையேனும், புத்திமதிகளை யேனும் கூறக் கருதவில்லை. மனம் போனபடி யன்னிய ஆசாரங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று பகலவில்லை. காற்சட்டை பூட்ஸ் மாட்டிக்கொண்டு நின்றபடி மேஜைமேல் உள்ள ஆகாரத்தை யருந்த வேண்டாமென் றறையவில்லை. அரைக்கால் மீசை கால்மீசை வைத்துக்கொண்டு அழகு பார்க்க வேண்டாமென்று புத்திகூறவில்லை. பாடசாலைக்குச் செல்லும் போது புத்தகங்களை வாய் திறக்கவொட்டாது கக்கத்தில் இடுக் கிக்கொண்டு நாகரீகமெனமதித்து ரூலர் ஹிகரெட், ஸிஸர்ஸ் விகரெட், அக்பர்பாதுஷா விகரட்டுகளோடு சம்பாஷித்துக் கொண்டு போகவேண்டாமெனப்புத்தி புகட்டவில்லை.

 

ஆனால், நண்பர்களே! நாம் இப்போது உங்களுக்கு எச்சரிக்கை செய்யக் கருதிய விஷயம் உங்களுடையவும், உங்கள் சந்ததியாருடையவும், இகலோக பரலோக நன்மைக்கும், நம் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அத்தியா வசியமான விஷயம். இதைப்பற்றி இனியும் கவனியாது பராமுகமாக விருந்தால் நமது தாய்நாடு இன் னும் க்ஷணத்தையடையும் என்பதில் சற்றும் ஐயமில்லை. அதுமட்டுமல்ல, கொஞ்சக்காலத்திற்குள் ஹிந்துக்கள் என்ற பெயரும் மதமும் நாம் ஒரு ஜாதியாரென்பதும் அடியோடு மறைந்துபோம்.

 

ஆகையால் மாணவ நண்பர்களே! இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் கவனத்தில் வைத்து நடக்கும்படி உங்களை மிகவும் வேண்டிக் கொள்கிறோம். இப்போது இராஜபாஷையாகிய ஆங்கிலபாஷையைக் கற்கிறீர்கள். ஆனால் அதை யெதற்காக, என்ன நோக்கங் கொண்டு கற்கிறோம் என்று உங்கள் மனச்சாக்ஷி யையே கேளுங்கள்.'' ஜீவனம் செய்வதற்காக " என்றே விடைவரும் - ஆம். நீங்கள் எவ்வளவு வாசித்தாலும் ஆங்கிலக்கல்வி யுங்க ளுக்கு வயிற்றுப் படிப்பாக மட்டும் உதவுமே யன்றி வேறில்லை
யென்பது உண்மை.

 

நாம் அரிய இம்மானிடப்பிறவி யெடுத்தது, வயிறு வளர்ப்பதாகிய இந்த ஒரு காரியத்திற்காகத்தானா? அந்தோ! உலகில் மிருகபக்ஷியாதி ஜீவன்களுமன்றோ அத்தொழிலைச் செய்கின்றன?  நாமும் அதை மட்டுமே செய்வதானால், மிருகங்களிலும் நாம் எதனால் உயர்வான ஜன்மமாவோம்? மானிடராகப் பிறந்த நாம் நாமார், இவ்வுலகம் என்ன, இதில் நமக்கென்ன சம்பந்தம், நமக்கும் இத்தேகத்திற்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது, இவற்றில் எது நித்தியம் எது அநித்தியம் என்ற உண்மையையறிந்து நித்தியமான வஸ்துவை யடையு மார்க்கத்தை யுணர்ந்து, ஆன்மார்த்தத் தைப் பெற்றுய்ய வேண்டாமோ?

 

இத்தகைய ஆன்மார்த்தத்தை யளிப்பது நமது தாய்ப்பாஷை யேயன்றி வேறெந்தப் பாஷையுமில்லை யென்பது சாத்தியமன்றோ? மாணவ சகோதரர்களே! இப்போது நீங்கள் உங்கள் தாய்ப்பாஷைக் கல்வியை யெவ்வளவாக மதிக்கிறீர்கள் என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். சிந்தித்துப்பாருங்கள் என்று நாம் கூறுவதைப் பேசாமல் வாசித்துவிட்டு வைத்து விடுவதால் பயனில்லை. இந்த வினாடியே இதன் பின்வரியை வாசிப்பதை நிறுத்திவிட்டுச் சிந்தித் துப்பாருங்கள். அப்போது "தாய்ப்பாஷையை நாம் மதிப்பதே யில்லை; அதன் அருமை பெருமைகள் நமக்கு விளங்கவில்லை'' என்று உங்கள் மனதில் நன்றாய்ப் புலப்படும். " இவ்வாறிருப்பதால் நாம் வேண்டுமாயின் அன்னியபாஷையில் நிபுணனாகலாமே யன்றி, நமது தாய்ப்பாஷையிலுள்ள நமது மதநூல்களை நாம் வாசித்துணரப் போகிறதில்லை. நமது மதக்கொள்கைகளும் சித்தாந்தங்களும் இன்னவையென்று நாம் அறியப்போகிறதில்லை" என்பதும் உங்களுக்கு இப்போதே புலப்படலாகும்.

 

அந்தோ! கேவலம் வயிறு வளர்க்க மட்டும் கல்விகற்று அத னால் பொருள் சம்பாதித்து உண்டுடுத்துக் காலங்கழித்து, முடிவில் நம்மது நமதென்று மயங்கியிருந்த யாவற்றையும் விட்டுத் தென் புலத்தானுக் கிரையாவதா ஹிந்துக்களாகிய நமக்குரிய செய்கை? கேவலம் கல்வியறிவில்லா மூடன் கூட "சே! இதென்ன நிலையில்லாத பொய்யுலகம்; இவ்வாழ்க்கை யனைத்தும் ஒரு பொம்மலாட் டம் போன்றது.'' என்று கூறும் அனுபவமுடைய ஜாதியல்லவோ நாம்! தெய்வீகத் தன்மை பொருந்திய மகான்களின் வழிவந்த நாம் ஆன்மார்த்தத்தை யலட்சியம் செய்தால் நம் முன்னோர்களுக்குத் துரோகம் செய்தவர்களாவோ மல்லவோ?

 

நமது மதாசார விஷயங்களனைத்தும் நமது தாய்ப்பாஷையில் தான் இருக்கின்றன. அத்தகைய பாஷையை நாம் அலட்சியம் செய்துவிட்டால், கொஞ்ச நாளையில் நமது மதமும் நாம் ஒருஜாதி யாரென்பதும் எங்ஙனம் நிலைத்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களாலன்றோ நமது குலமும் மதமும் தாய்நாடும் முன்னேற்ற மடைந்து கௌரவ நிலைமைக்கு வரவேண்டும்? நீங்களன்றோ தாய்நாட்டின் க்ஷேமத்திற் குழைத்துக் கீர்த்தி பெறவேண் டியவர்கள்?

 

தாய்ப்பாஷையில் அபிமானமில்லாத எந்த நாட்டாரேனும் க்ஷேமமடைந்திருக்கிறார்களா வென்று சிந்தித்துப் பாருங்கள். நம் தாய்ப்பாஷையோ மற்றப்பாஷைகளைப் போன்ற தன்று, மிக்க இனிமையானது. பூரணம் பெற்றது. கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் அருள்பெற்றது. அது தெய்வீகத்தன்மையுடைய தென்பது முன்னமே நன்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பாஷை நம் பாடசாலைகளில் கட்டாய பாடமாக வைக்கப் படாமலிருப்பதே உங்களுக்கு அதனிடம் அசிரத்தையுண்டானதற்குக் காரணம்.

 

சமீபகாலத்தில் நம்மவர்களே கல்வியபிவிர்த்தி விஷயத்தைப் பற்றிய நடவடிக்கைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நமது தாய் நாட்டின் க்ஷேமத்திற்கு இன்றியமையாத இத் தகைய விஷயத்தை முன்னே கவனித்துத் தக்கபடி ஏற்பாடு செய்வார்கள் என்று நம்பியிருந்தோம். அந்தோ! இந்த விஷயம் மந்திரிகள் சபையில் பேசப்பட்டபோது நம்மவர்களில் சிலரே தாய்ப் பாஷையாகிய தமிழ் கட்டாய பாடமாக ஏற்படுத்தப்படலாகாதென்று ஆக்ஷேபித்து விட்டார்கள் என்பதையறிய, தாய்ப்பாஷையின் அருமை பெருமையையுணர்ந்த யார் மனந்தான் வேதனை யுறாது. தாய்ப்பாஷைக்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பால் நமது ஜாதி, மதம், தாய்நாடு இவற்றிற்கு நேரிடக்கூடிய தீங்கை யுணர்ந்து நம் நாடு இன்னும் க்ஷண தசை யடைய வேண்டு மென்று கருதியேயப்படிச் செய்தார்களோ? அல்லது அதனால் விளையக்கூடிய பெருந்தீங்கு இன்னதென்பதை யுணராமலே அப்படிச் செய்தார்களோ? கடவுளுக்கே அது வெளிச்சம்.

 

மாணவ நண்பர்களே! நமது கெட்ட காலம் இவ்வாறிருப்பதை யுணர்ந்து, இனி நீங்கள் இதைப்பற்றிச் சிரத்தை யெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமன்றா வென்று சிந்தியுங்கள். ஒரு திருட்டாந்த மட்டும் கூறுகிறோம்: ஜபான் எதனால் இப்போதிருக்கும் உயர் நிலைக்கு வந்தது? மேல் நாட்டுச் சாத்திரக் கல்வியால் என்று கருதுவீர்கள். தாய்ப்பாஷையால் என்று நாம் கூறுகிறோம். மேல் நாட்டுச் சாத்திரங்களை நம்மவர் படிக்கவில்லையா? நாம் என்ன பயனடைந்தோம்? ஜபானியர் அமெரிகா இங்கிலாந்து முதலிய விடங்களுக்குச் சென்று அவசியமான சாத்திரங்களைக் கற்று வந் தார்கள். அவ்வளவோடிருந்தால் அவர்கள் முன்னேற்ற மடைந் திருப்பார்களோ? இல்லை. அச்சாத்திரங்களைத் தமது பாஷையில் மொழிபெயர்த்துத் தங்கள் நாட்டார்க்குக் கற்பித்து அவைகளை யுப யோகத்திற் கொண்டுவந்த படியாலே தான் அவர்கள் இந்த நிலையை யடைந்தார்கள். தாய்ப் பாஷையை யலட்சியம் செய்திருந்தால் எப்படி க்ஷேமமடைந் திருப்பார்கள்?

 

அந்தோ! நமது மாணவரோ தாங்கள் வாசிக்கும் ஆங்கில வாசக புத்தகத்தில் ஒரு வாக்கியத்தைச் சரியாகத் தாய்ப்பாஷையில் மொழி பெயர்க்கவே அசக்தர்களாக விருக்கிறார்கள். ஆனால் இது உங்கள் குற்றமல்ல. போதனா முறையின் ஊழலும், தாய்ப் பாஷை கட்டாயபாட மாக்கப்படாம லிருப்பதுமே இதற்குக் காரணம். இத்தகைய நிலைமையிலிருக்கும் வரையில் இவர்கள் அன்னிய பாஷையிலுள்ள விஷயங்களைச் சரிவரப் பூரணமாக உணரக்கூடியவர்களாக மாட்டார்கள் என்பது உண்மை. இத்தகைய கல்வி கற்றால் அன்னிய பாஷையிலுள்ள சாத்திரங்களை யெப்படியிவர்கள் மொழி பெயர்த்து நமது நாட்டார் கைத்தொழில் வர்த்தகம் முதலியவற்றில் அபிவிர்த்தியடையச் செய்வார்கள்?

 

உண்மையைக் கூறுமிடத்துத் தாய்ப்பாஷையில் கல்வி கற்றால் தான் எத்தகைய கல்வியும் சுலபமாக மனதில் நன்றாய்ப்பதிந்து பயனளிக்கத்தக்கதாகும். திருட்டாந்தமாக, பத்துப் பனிரண்டு வயதில் கற்ற ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நிகண்டு முதலியவை ஐம்பதாவது வயதிலும் நினைவிலிருக்கின்றன. சமீப காலத்தில் கற்ற இரசாயணசாத்திரம், பௌதிகசாத்திரம் முதலியவை நாலைந்து வருடங்கட்குப்பின் புதிதாகத் தோன்றுகின்றன. உலகில் எல்லா நாடுகளிலும் தாய்ப் பாஷையில் தான் எல்லாக் கல்விகளையும் கற்கிறார்கள். அந்தோ, கலிகாலக்கொடுமையோ! நம் தாய் நாடு செய்த பாபமோ நமக்கு அப்புண்ணியம் இன்னும் கிட்டவில்லை. இதே ஒரு பெருங் குறையாயிருக்க, இப்போது தாய்ப்பாஷையே யடியோடு மறைந்து விடும் நிலைமைக்கு வந்திருக்கிறது.

 

நண்பர்களே! இத்தாய்ப்பாஷையை யலட்சியம் செய்வதால் இலெளகீக முன்னேற்றத்திற்கே இடையூறாக விருக்கிறதென்பது இப்போது உங்களுக்கு நன்கு விளங்கும். இது மட்டுமல்ல; ஹிந்துக்களாகிய நமக்கு ஆன்மார்த்தமே உயிரினும் சிறந்த பொக்கிஷம்.

      சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து

தரணியொடு வானாளத் தருவ ரேனும்

மங்குவா ரவர் செல்வ மதிப்போ மல்லோம்

மாதேவன் வார்கழல் கட் கன்ப ரல்லால்.

 

என்று நம் முன்னோராகிய மகான்கள் அருளிப் போந்தனர். நம் தாய்ப்பாஷையிலேயே நமது ஆன்மார்த்த சாத்திரங்கள் இருப்பதால், நாம் தாய்ப்பாஷையை யலட்சியம் செய்தால் மறுமைப் பயனையு மிழப்பதோடு, நமது செய்கையால் நமது மதமும் குன்றி, நாம் ஒரு ஜாதியார் என்பதும் போய், நம் தாய் நாடு மிக்க பரிதாபமான நிலைமையை யெய்திவிடும்; ஆதலின், இனி நீங்களே தாய்ப்பாஷையில் சிரத்தை யெடுத்துக்கொண்டு, ஒவ்வொருவரும் அதில் தேர்ச்சியடையவும், மதக்கல்வியைக்கற்கவும் முயலுங்கள். அப்படிச் செய்வீர்களாயின், உங்களுக்கு ஆன்ம சக்தி யதிகரிப்பதோடு, தெய்வத்தன்மை பொருந்திய மனோவல்லமையுமுண்டாகும். அதனால் நீங்கள் எத்தகைய தடைகளையும் சுலபமாக வென்று மனோவல்லமையா லேயே மகா உன்னத நிலை யடைவீர்கள். நம் தாய் நாடும் பூர்வீகமகிமையை யடையும். இப்போது இவ்விஷயம் உங்களுக்குச் சுலப சாத்தியமானதாகத் தோன்றாவிடினும், நாம் வேண்டிக்கொள்ளும் துறையில் பிரவேசித்து சிரத்தா பக்தியோடு தாய்ப்பாஷையிலும் மதக்கல்வியிலும் பயிற்சியடைய முயல்வீர்களாயின், நாம் மேலே கூறிய மனோ சக்தி முதலியவை எவ்வாறு சித்திக்கு மென்பது உங்களுக்கே பின்னால் விளங்கும்.

 

அன்பார்ந்த மாணவ நண்பர்களே! நமது வேண்டுகோளை யலட்சியம் செய்யாது ஒவ்வொருவரும் தாய்ப்பாஷையிலும் மதக்கல்வியிலும் பயிற்சியடைய ஊக்கங்கொள்வீர்க ளெனப் பன்முறையும் நாம் வேண்டிக்கொள்கிறோம். எல்லாம் வல்ல பரம தயாநிதியாகிய பசுபதி உங்களுக்கு நல்ல ஞான விளக்கமும், உற்சாகமும் தந்து அருள் புரியுமாறு மனதாரப் பிரார்த்திக்கின்றோம்.


ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - மே ௴

 

 

No comments:

Post a Comment