Sunday, September 6, 2020

 

மகப்பேறு

 

உடன் பிறந்தாரே!

 

1. மக்களைப் பெறுவதில் பெண்பாலர் அநேக கடமைகளை அறிந்திருக்க வேண்டும். ஒருதாய் விரும்பினால் அழகுள்ள மகவையும், அங்கக் குறைவான மகவையும், அறிவுள்ள மகவையும், முழுமூடப் பிள்ளையையும், நல்லொழுக்கமுள்ள சான்றோனையும், தீயவொழுக்கமுள்ள வம்பனையும் விருப்பம் போல் பெறலாம். இன்னும் விளங்கக் கூறினால் ஒருதாய், தான் எண்ணிய எண்ணம் போல் நல்லவனையோ தீயவனையோ பெறலாம் என்பதே. தாய்மார்களே தங்கள் பிள்ளைகளின் ஒழுக்கத்திற்கு மூலமாயிருக்கிறார்கள். தாய், தான் சூல்கொண் டிருக்கும்போது எண்ணும் எண்ணங்களும், செய்யும் வேலைகளும் அக்குழந்தையின் ஒழுக்கத்திற்கு ஒரு முளையாக அமைகிறது. இது நோக்கியே ''நூலைப் போல சீலை தாயைப் போல பிள்ளை'' என்றும், தாயைத் தண்ணீர்க்கரையில் பார்த்தால் மகளை வீட்டிலா பார்க்கவேண்டும்' என்றும் பழமொழிகள் வழங்குகின்றன. இதை விளக்கப் பழையகதைகள் இரண்டொன்று சொல்லுகிறேன்.

 

2. இரணியாக்ஷன் என்ற அரக்கன் தவஞ் செய்து அநேகவரம் பெற்றுப் பிறகு தானே கடவுள் என்றும், தன்னையே யாவரும் கும்பிட வேண்டுமென்றும் தேவர்கள் முதல் யாவரையும் கட்டாயப் படுத்தினான். அவன் தம்பி செய்த குறும்புக்காக அவனைத் திருமால் கொன்று விட்டார். அத்திருமாலைக் கொல்லும் பொருட்டு இரணியாக்ஷன் தவஞ் செய்யப் போனான். அப்பொழுது அவன் மனைவி சூல் கொண்டிருந்தாள். அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையும் தங்களை வருத்துமென்று கருதி தேவேந்திரன் அவளைச் சிறையிலடைத்த வைக்க எண்ணி அவளைப் பிடித்துக்கொண்டு போனான். அப்பொழுது நாரதர் அவளைக் காப்பாற்ற நினைத்து இந்திரனிடம் வந்து அவளை என்ன செய்யப்போகிறாய், என்று கேட்டார். அவன் நாரதரை வணங்கி இவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளை எங்கள் மத்தியில் வளர்ந்தால் நல்லவனாக இருக்குமென்று, இவளை என் வீட்டில் பேறுகாலம் கழியும் வரை வைத்திருக்கப்போகிறேன் என்றான். உடனே நாரதர் அவனைத்தேற்றி அனுப்பிவிட்டுத் தான் அழைத்துக் கொண்டு சென்றார். அவள் இந்திரன் துன்புறுத்தாதிருக்க தன் நாதன் வரும்வரை சூல் வளராதிருக்க வரங்கேட்டாள். அப்பொழுது நாரதர் திருமால் மந்திரத்தைச் சொல்லிக்கொண்டிரு என்று அதன பெருமையைக் கூறிச் சென்றார். அவள் வேறு நினைவு இல்லாமல் சொல்லிவந்ததால் பின்னால் அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளை தன் தகப்பனையும் மீறி கடவுள் ஒருவர் உண்டு என்று நம்பி நலலொழுக்கத்தில் நின்று திருமாலை வணங்கிற்று. இரணியன் தன் பிள்ளை என்றும் பாராமல் மலையிலிருந்து உருட்டியும் நஞ்சூட்டியும் நெருப்பில் போட்டும் பல துன்பங்கள் செய்தும் திருமாலையே அது வணங்கிற்று. பின் தூணில் தோன்றும் படியாகவும் செய்தது. அக்குழந்தையின் பெயர் பிரகலாதன். பிரகலாதன் தாய் தான் சூல் கொண்டிருக்கும்போது எண்ணித் தொழுத திருமால் மந்திரம் அக்குழந்தையைக் கடவுள் வழிபாட்டிற்குத் திருப்பியது.

 

3. இன்னும் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப பிள்ளையின் மகளை திருவெண்காட்டு அச்சுதன் என்பவர் மணந்தார். அதன் பிறகு இவர்கள் பிள்ளை இல்லாமல் நெடுநாள் வருந்தினர். அதற்காக அவர்கள் ஆலயங்கள் தோறும் சென்று சிவனைப் போற்றி வந்தார்கள். அதனால் சிவனது அருளால் ஓர் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குச் சுவேதவனப் பெருமான் என்று பெயரிட்டார்கள். அக்குழந்தை 2- வது வயதிலேயே சிவஞானம் பெற்றும், சகல ஆகமபண்டிதரையும் வென்று தனக்கு மாணாக்கன் ஆக்கி விளங்கிற்று. அக்குழந்தைப் பருவத்திலேயே உண்மையறிவைப் பலர்க்கும் விளக்கி வந்தமையால் மெய்கண்டதேவ ரென்று பெயர்பெற்றுச் சிவஞானபோதம் என்ற நூலைச்செய்து அவர் சிறப்புற்றார். மெய்கண்ட தேவரின் தாயார் நெடுநாள் மகவில்லாமல் கடவுளன்பு கொண்டு விளங்கினமையால் குழந்தையையும் ஞானக்குழந்தையாகப் பெற்றாள். ஒருமாது தான் சூல் கொண்ட ஐந்தாம் மாதம் பாம்பு கடிக்க அதை நினைத்துக் கொண்டிருந்து, பாம்பைப் பெற்றாள். இது மூன்று ஆண்டுகளுக்கு முன் விக்கிரமசிங்கபுரம் என்றவூரில் நடந்தது. ஒருத்தி, தான் சூல்கொண்டிருக்கும் காலத்து நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தாள். அவள் நகம் சொத்தையாயிருக்கும் குழந்தையைப் பெற்றாள். இப்படிப்பட்ட பல செய்திகள் நாள் தோறும் நடக்கின்றன.

 

4. ஆகவே சூல் கொண்டிருக்கும் பெண்கள் தாங்கள் செய்யும் வேலைகளும் எண்ணும் எண்ணங்களும் தங்கள் குழந்தைகளைப் பீடிக்கிறது என்று அறிந்து ஒழுக வேண்டும். சூல் கொண்டிருக்கும் போது நல்லொழுக்கமும் நல்லெண்ணமும் கொள்ளாத் தாயார் நல் மகவைப்பெறல் முடியாது. ஒரு செல்வந்தேடும் மகவு விரும்பியதாய் செல்வம் சேர்க்கும் பல வழிகளைக் கூறும் நூல்களையும், அதை நல்வழியில் சேர்த்த பெரியோர் கதையினையும் சூல் கொண்டிருக்கும் காலத்துப் படிக்கக்கடவர். இன்னும் சூலிகள் அச்சம் என்பதைக் கொஞ்சமும் அடையக்கூடாது. அச்சம் குழந்தைகள் அழகைக் கெடுத்து மலினம் அடையச்செய்கிறது. அழகான மகவு வேண்டு மென்ற தாயார் அழகு என்றுதான் நினைக்கும் பெரியோரைப் பற்றி நினைத்தாலும், அவர் கதையினைக் கேட்டலும், உடல் அமைப்பைப் பற்றிப் பேசலும் செய்துவர வேண்டும்.

 

5. சூலிகள் அதிக உரத்துப் பேசக்கூடாது; பயம் கொள்ளக்கூடாது; சோம்பலா யிருக்கக்கூடாது; தூய்மையற்று அசிங்கமா யிருக்கலாகாது. எவ்வுயிர்களிடத்தும் அன்பு கொள்ள வேண்டும்.

 

6. ஒவ்வொருநாளும் தான் நினைத்த மகவைத் தனக் குதவிடுமாறு இரவில் படுக்கும் போது "இறைவனே! நான் ஒரு குற்றமும் இன்று செய்ய வில்லை; என் வயிற்றில் வளரும் குழந்தை கடவுள் ஞானம் பெற்று நல்ல தாய்த் தூய்மன துடையதாய் யார்க்கும் நலஞ்செய்வதா யிருக்க வேண்டும்" என்று சொல்லித் தூக்கம் கொள்ள வேண்டும். மேற்கண்ட நல்லொழுக்கங்கள் சிறு வயது முதலே நாள்தோறும் பழகி வந்தால் அன்றி, நம்மிடம் சிலைகொள்ளாது. ஆதலால் சிறுபருவ முதல் நல்லொழுக்கமில்லாத் தாய்மார் பல கெட்ட மக்களைப் பெற்றுத் துன்புறுவர். அவர்கள் கெட்ட மக்களைப் பெறுவது தமது செய்கை என்பதை மறந்து அக்குழந்தைகளிடம் கோபம் கொள்வது என்ன மடமையாகும். ஆகையால் அன்னையரே நமதுவிடா நல்லெண்ணெத்தினால் நாம் நன்மக்களைப் பெற்று நலமும் முத்தியும் அடைவதோடு, தீய எண்ணத்தால் தீயமக்களைப் பெற்றுத் துன்பமும் நரகமும் அடையலாம் என்ற கருத்தை விளக்கவே

"எழுபிறப்புந் தீயவை தீண்டா பழியிறங்காப்
      பண்புடை மக்கட் பெறின்''

 

என்று அறிவுறுத்தினர் திருவள்ளுவர். அதாவது குற்றமில்லா நல்லமக்களைப் பெற்றவர்களை எழுபிறப்புக்களிலும் பாவம் அல்லது தீவினை தொடாதென்று தெளிவாய்க் கூறியிருக்கிறார்.

 

நல்லவழியில் ஒழுகி நல்ல மக்களைப் பெற நமக்கு இறைவன் துணை செய்ய அவனடி பணிந்து போற்றுவாம்.


ஓர் பெண்பால்,

சைவப்பிரகாச வித்யாசாலை,

உடன்குடி, கிரிஸ்டியன் நகர் போஸ்டு.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஏப்பிரல் ௴

 

 

 

No comments:

Post a Comment