பொறுமை
வேண்டும்
க. சிதம்பரம்
பிள்ளை.
“சும்மா இருச்சச் சுகம் பெறலாமே” என்றார் ஒரு பெரியார்.
அங்ஙனம் அவர் சொன்னது உலகப் பொருள்களின் மேல் சென்று கொண்டிருக்கும் ஜம்புலன்களையும்
அவ்வாறு செல்ல வொட்டாமல் ஒரு வழி கிறுத்துவதைப் பற்றியாகும். அவ்வாறு புலன்களை ஒரு
வழிப்படுத்தும்போது ஏற்படும் இன்பத்துக்கும், இறைவனுடன் இரண்டறக் கலந்து திளைப்பதாகிய
பேரின்பத்துக்கும் நெருங்கிய உறவு உண்டென்பது அப் பெரியார் கருத்து.
உலகப் பொருள்களின் மேல் சென்று கொண்டிருக்கும் புலன்களை
ஒரு வழி நிறுத்துவ தென்பது, இவ் வுலக இன்பங்களை வெறுத்து நீக்கின துறவிகளுக்கு மட்டும்
ஆதல் காரியமாம். உலக நிலையில் நிற்கும் இல்லறத் தானுக்கு அது எளிதல்ல.
அவனுடைய கண்ணையும், காதையும், வாயையும், நாசியையும் உடலையம் வசீகரித்து இழுக்கக்கூடிய
அனேக பொருள்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு நிற்கின்றன!
இந்த நிலையில் இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் ஒருவன்,
அவ் வில் வாழ்க்கையை சீர்பெற நடத்தி வருவதென்பது சாமானியமல்ல; அதற்குரிய அனேக ஒழுக்க
முறைகளைக் கடைப்பிடித்துவர அவன் பெரிதும் கடமைப்பட் டிருக்கிறான். அவற்றுள் தலை சிறந்தது
பொறுமை.
ஏதேனும் காரணத்தை முன்னிட்டோ தெரியாத் தனமாகவோ பிறனொருவன்
நமது மனம் வருந்தும்படியான குற்றத்தைச் செய்யுங்காலத்து, நாமும் அதற்குப் பதிலாக அவனிடத்து
திருப்பிச் செய்யாமல், அதனைப் பொறுத்துக் கொள்வதே பொறுமையாம்.
மக்களுடைய குணங்க ளெல்லாம் ஒன்று போல் இல்லை. ஒருவன்
அறிவாளி, இன்னொருவன் மூடன்; ஒருவன் சாத்வீகி, இன்னொருவன் பொறுமையற்றவன்; இப்படி பலதிறப்பட்ட
மக்களைக் கொண்டதாகவே உலகம் இருக்கிறது.
மனிதர்களுக்கு இருக்க வேண்டிய அறிவு, சாந்தம் முதலிய
நல்ல குணங்கள் பணக்காரர்களிடத்துத் தான் இருக்கு மென்றும், அறிவின்மை, பொறுமை இழந்து
பேசல் முதலிய தீக்குணங்கள் ஏழைகளிடத்துத்தான் காணப் படுமென்றும் சொல்லி விடக் கூடாது.
குணங்களுக்கும், செல்லீகம் ஏழ்மை இவற்றுக்கும் சம்பந்தமில்லை. நல்ல குணம் உள்ளவர்களும்
தீய குணம் உள்ளவர்களும் பணக்காரர்களினும் ஏழைகளிலும் உண்டு.
பணக்காரர்களாக இருந்தபோதிலும் ஏழையாக இருச்சு போதிலும்
அவர்கள் நல்ல குணமட்டும் இல்லாதவர்கள் என்பதை தெரிந்து கொண்டால், அவர்களிடத்து அறிவாளிகள்
நடந்து கொள்ளும் விதம் எப்படி?
வேறொன்றுமில்லை; அவர்கள் சொல்லும் தீய வார்த்தைகளை
யெல்வாம் பேசாமல் கேட்டுப் பொறுத்துக் கொண்டு சும்மா இருந்து விடுவது தான்!
அப்படியல்லாமல் ஒரு வேளை ஏதேனும் எதிர்த்துப் பேசி
விட்டாலோ, 'உனக்கு அவ்வளவு கருவமா?' என்று வாயில் வந்தபடி யெல்வாம் பணக்காரன் அகங்கரித்துப்
பேசுவதும் தவிர, செய்கையிலும் எதையேனும் செய்து விடுவான்! பண சவுகரியமில்லாதவனாக இருந்தால்,
கண்டுங் காணாமலும் வரம்பு மீறிப் பேசுவான். ஆதலால் கூடின மட்டும் அத்தகையோர்களுடைய
தொடர்பிலிருந்து நீங்கிக் கொள்வதே நலமாம்.
"கோதை அருவிக் குளிர்வரை நன்னாட!
பேதையோடு யாதும் உரையற்க – பேதை
உரைப்பிற் சிதைக் துரைக்கும், ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று"
['கோதை அருவிக் குளிர்வரை நன்னாட' என்பது முன்னிலை. அதாவது ஆணை முன்னிலைப்படுத்திக்
கூறுவது; இங்கு பாண்டி மன்னனை முன்னிலைப்படுத்தி யிருக்கிறார் கவி. 'மாலை போல் விழுகின்ற
நீர் அருவிகளையுடைய குளிர்ந்த மலைகளை யுடைய சிறந்த நாட்டைக் கொண்ட அரசனே' என்பது பொருள்.
பேதையோடு - அறிவில்லாதவனுடன். சிதைந்துரைக்கும்- வரம்பு மீறிப் பேசுவான். ஒல்லும் வகையால்
வழுக்கி-கடின மட்டும் தப்பித்து.]
அப்படி யென்றால் பொறுமை வேண்டுவது தான். ஆனால், அது
நமக்கு சரிசமானமானவர்களாவது, உயர்ந்தவர்களாவது அப்படி ஏதேனும் சொல்லி
விட்டால் வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளலாம்; நம்மைவிட பணத்திலும் பதவியிலும் தாழ்ந்தவர்கள்
சொல்லுந் தகாத வார்த்தைகளையும் எப்படிப் பொறுத்துக் கொண்டிருப்பது? என்கலாம்.
அது சரியன்று. 'மேன் மக்கள்' என்ற நற்பெயர் வாங்க
வேண்டும் என்ற எண்ணமிருந்தால், நல்லொழுக்க மில்லாதவர் சொல்லும் எந்த வார்த்தைகளையும்
பொறுத்துக்கொண்டு பேசாமல் இருந்து விட வேண்டியதுதான்.
அப்படிப் பொறுத்துக் கொள்ளும் குணம் வாய்ந்த ஒருவனை,
கடல் புடை சூழ்ந்த நிலவுலகத்திலுள்ள அறிவாளிகள் யாவரும் புகழ்ந்து கொண்டாடுவர்.
“நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால், மற்றது
தாரித்திருத்தல் தகுதி, மற்-றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்''
[நேர் அல்லார்-நமக்கு சமமல்லாதவர்-அதாவது கீழோர். நீரல்ல- தகுதியல்லாத
சொற்களை. தாரித்திருத்தல்-பொறுத்துக் கொள்ளுதல்-சமழ்மை-பழிப்பு. மற்றோரும் என்பதில்
'ஒரும்' அசைச் சொல்.]
"மனிதன் இந்த உலகத்தில் உயிருடன் இருக்கும் வரையும்
இன்பத்துடனேயே இருக்கலாமா?"
"ஓ, இருக்கலாம்."
"ஆமாம்; அவரவர் செய்த நல்வினை தீவினைகளுக்கு
ஏற்றவாறு மனிதப் பிறவி வாய்க்கிறபடியால் இன்பமும் துன்பமும் கலந்தேயல்லவா வரும்? அப்படி
யிருக்க, ஒருவன் வாழ்நாள் முழுதும் இன்பமாகவே இருந்து வருவதென்பது எப்படி?"
"அது மெய்யே; துன்பம் என்பது மனிதனுக்கு வேதனையைச்
செய்யக் கூடிய ஒன்று தான்; ஆனால், அவன் துன்பத்தை தின்பமாகப் பாவியாமல் இன்பமாகக் கொண்டு
விடுவானேயானால், அப்பொழுது அத் துன்பம் அவனை அவ்வளவாகத் துயர் செய்யாது"
"இடுக்கண் வருங்கால் நகுக" என்பது நாயனார் பொன்மொழி.
முதலில், துன்பத்தை இன்பமாகப் பாவிப்பது எப்படி? என்பது
போன்ற அனேக செய்திகளை மனிதன் அறியவேண்டும்; மனதை பொறுமைக் குணத்தில் நிறுத்த வேண்டும்;
பழி பாவம் முதலியன அஞ்சத்தகும் காரியங்களுக்கு அஞ்சவேண்டும்; தாம் செய்யும் எந்தச்
செயல்களும் உலகத்தார் மகிழும்படியாக இருத்தல் வேண்டும். இப்படி யெல்லாம் ஒருவன் செய்து
வருவானேயானால் அவற்றிலிருந்து அவனுக்குக் கிடைப்பன இன்பத்தைத் தரும் பயன்களாகவே இருக்கும்.
அத்தகைய ஒருவனை துன்பம் ஏதும் செய்யா தெக்றே சொல்லலாம். *
* மனிதன்
தன் ஆயுள் உள்ளவரையும் இன்பத்துடனேயே இருந்து வர வேண்டு மென்றால் அதற்கு அவன் என்னென்ன
முறைகளை அறிய வேண்டும், ஏதேது செயல்களைச் செய்ய வேண்டும்? என்பனவற்றை விரிவாக 'மனிதனும்
கடமைகளும்' என்னும் நூலில் காணலாம். கிடைக்குமிடம்: - "ஆனந்த போதினி ஆபீஸ்,''
சென்னை.
"அறிவ தறிந்தடங்கி, அஞ்சுவ தஞ்சி,
உறுவது உலகுவப்பச் செய்து, பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.''
[உறுவது-தாம் செய்யுங் காரியங்கள்.)
பொறுமை வேண்டு மென்று இதுவரையும் சொல்லி வந்த தெல்லாம்
பொதுவாகத் தானே! நம்மோடு நெருங்கிப் பழகிய நண்பனொருவன் நமக்குத் துன்பந்தரும் செயல்களைச்
செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் செய்ய வேண்டியதென்ன?
நாம் ஒருவனை சினேகம் செய்து கொள்வதென்றால், அப்படி
செய்து கொள்ளும் அப்பொழுதே அவனுடைய குணம் செயல் முதலியவற்றை நன்றாய்த் தெரிந்து தான்
செய்து கொள்ள வேண்டும்.
அதை யெல்லாம் கவனியாமல் ஒருவனை முதலில் சினேகம் செய்து
கொள்கிறது. பின் அவன் ஏதேனும் அறிவீனமான ஒன்றைச் செய்யும் போது மனம் அழன்று அவன் நட்பை
கை விட்டு விடுவது! இச் செய்கை அறிவுடைமைக்கு அழகன்றாம். 'அந்தரங்க நண்பனாக இருந்த
இவனே நமக்கு தகாததை செய்யும்படி ஆய் விட்டதே! இதுவும்
நமது சாபக்கேடு தான் என்று நம்மையே நொந்துகொண்டு, அவன் செய்த துன்பச் செயல்களும் இன்பமாகவே
வரக் கடவ என்று மன அமைதி கொள்வதே அறிவுடைமைக்கு அழகாம்.
அப்படியல்லாமல் அவனுடைய நட்பை அறவே ஒழித்துக் கொள்ளுதல்
சிறப்புடையதன்று. ஏன்? சினேகம் செய்து கொண்ட பின் பிரிவதென்பது பகுத்தறிவில்லாத மிருகங்களுக்குக்
கூட அருமை. அதனால்,
''இன்னா செயினும் இனிய ஒழிகஎன்று
தன்னையே தான் நோவின் அல்லது – துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல், கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது"
[இன்னா - இனிமையல்லாதது. விலங்கு - மிருகம், விள்ளல் - பிரிதல்.]
இந்தப் பொறுமை பிறன் விஷயத்தில் மட்டுமல்ல; நம் விஷயத்திலும்
உபயோகப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு.
நமக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுங் காலத்து, அதை விலக்கிக்
கொள்வதற்காக இன்னொருவனை ஆபத்தில் அகப்படுத்தக் கூடாது. அதை நாமே பொறுத்துக் கொள்ளுதல்
நல்லது.
வறுமை வாட்டுகிறது, பசியால் உடல் மெலிகிறது! என்றாலும்
அவனவன் நிலைமை கெட்டு வயிறு வளர்க்க வேண்டு மென்பதில்லை. அதை விட அவ் வறுமையையும் பசிப்பிணியையும்
பொறுமையுடன் பொறுத்து, அவற்றிற்கு இலக்காகிக் கொள்வதே சிறந்ததாம்.
“இக் காரியத்தில் மட்டும் நீ ஒரு பொய்ச் சாட்சி சொல்;
உடன் வறுமை நீங்கும்படியான அவ்வளவு திரவியம் தருகிறேன்'' என்கிறான் ஒரு தனவந்தன். அதைக்
கேட்ட நல்லொழுக்க முள்ள ஒருவன் அத்தனவந்தனுக்குச் சொல்ல வேண்டியதென்ன?
"என்ன தான் தரித்திரம் இருந்த போதிலும் அதை நான்
பொறுத்துக் கொள்வேன்; ஆனால், ஆகாயத்தால் கவியப்பட்ட இந்த பூமி முழுதையும் எனக்கு தானமாக
கொடுத்த போதிலும், பொய் மட்டும் சொல்ல மாட்டேன்" என்று சொல்லிவிட வேண்டியது தான்!
“தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க; தன் உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க- வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.”
ஆனந்த
போதினி – 1942 ௵ - ஜுலை ௴
No comments:
Post a Comment