Saturday, September 5, 2020

 

பொறுமை முதலியவற்றின் பயன்

 

கோபம் குடி கெடுக்கும். அதையுடையவன் அழிவான். அவனுக்குத் தான் செய்வது எப்படிப்பட்டது என்று தெரியாது. தீமையை உண்டு பண்ணும் ஒருவகை வெறியே கோபம். கோபத்தில் ஒன்றைப் பேசிவிட்டுப் பின் வருந்துவோர் பலர். தரையி லடிப்பவன் கை தப்பாது தரையிற்பட்டு அந்தக் கைக்கே துன்பங் கொடுப்பது போல கோபமும் தன்னை யுடையவனைத் துன்புறுத்திக் கெடுத்தேவிடும். அவனைச் சேர்ந்தவர்களும் கெடுவர். ஆதலால் ஒருவன் தனக்குப் பழிபாவம் வேண்டாம் என்று தன்னைக் காத்துக்கொள்ள வேண்டுமாயின் கோபத்தை யடக்கி அகற்றிவிட வேண்டும். கோபிக்கிறவனிடம் மகிழ்ச்சியும் சிரிப்பும் காணல் முடியாது. ஒருவன், தன்னிலும் மேலான செல்வம், பலம் உடையவர்களிடம் கோபம் காட்டினால் அதன் தீயபயனை உடனே அவர்களின் பகைமையினால் அடைந்துவிடுவான். கீழானவர்களிடம் கோபித்தால் பழியும் பாவமும் அடைந்து தெய்வத்தால் தீமை அடைவது ஒருதலை. ஆகையால் பிறர் நமக்குத் தீமை செய்தாலும் நாம் கோபப்படாமல் பொறுத்துக்கொண்டிருந்தால், கடவுள் அத்தீமை செய்தாரைத் தண்டித்து நம்மைக் காப்பாற்றுவார்; நாம் பகை அடையமாட்டோம்; நம் காரியத்துக்கு ஒரு இடையூறும் ஏற்படாது; மேலும் மேலும் நாம் விருத்திக்கு வருவோம்.

 

'பொறுத்தார் பூமியாள்வர்'என்பது பழமொழி. யார் என்ன சொன்னாலும், எத்தீமை செய்தாலும் நாம் பொறுத்துக்கொண்டு நம் காரியத்தில் கண்ணுங் கருத்துமாக இருப்பது நல்லது. பொறுமை உள்ளவனுக்குப் பகைமையும் தீங்கும் கிடையா. யாவரும் நல்லவன் என்று அவனைப் புகழ்வர். பிறர் அடையும் உயர்வைக் கண்டு நாம் மனமெரியக்கூடாது. அங்ஙனம் பொறாமைப்படுகிறவன் குடியுடன் கெடுவான். குறுகிய அறிவுள்ள மூடன் தான் பிறர்வாழ்வு கண்டு பொறாது வருந்துவான். யாருடைய பொருளுக்கும் நாம் ஆசைப்படக்கூடாது. ஆயிரம் வருவதாக இருந்தாலும் பிறர் பொருள் நமக்கு வேண்டியதில்லை. நம்முடைய காசு ஒன்றுக்குப் பிறனுடைய காசு ஆயிரமும் ஈடாகாது. ஆசைதான் மனிதர் வாழ்வைக் கெடுத்து அவர்களைத் தீயவழியில் செலுத்துகிறது.

 

ஒருவன் எல்லோரிடத்தும் அன்பாக இருந்தால் அவன் செய்வதும் சொல்வதும் குற்றமாகத் தோன்றா. இன்பமும் அறமும் அன்பினால் அடையலாம். பிறர் துன்பங் கண்டவிடத்துப் பார்த்திராது தன் துயரம் போல் நினைத்து அகற்றும் அருளுடைமை அவ்வன்பின் முதிர்ச்சியால் உண்டாகும்.

 
 ஆதிநாதன்

 

ஆனந்த போதினி – 1927 ௵ - பிப்ரவரி ௴

 

No comments:

Post a Comment