Saturday, September 5, 2020

 

பொறாமை

 

பொறமையாவது பிறாது கல்வி, செல்வம் முதலியவற்றைக் கண்டு, பொறாமைப் படுத்தலாம். பொறாமை யுடையோன் தனக்குத் தானே துன்பத்தைத் தேடிக் கொள்ளுகிறான். தீயிடைப்பட்ட பதர் எரியுமாபோற் பொறாமையுடையோனுள்ளம், எஞ்ஞான்றும் எரிந்த வண்ணமேயிருக்கும். ஆதலினாலே, அழுக்காறுடையவனுக்குத் தீமை விளைத்தற்கு வேறு பகைவர் வேண்டா; அவ்வழுக்காறே அமைந்த பகையாகும். அழுக்காறுடையான் உள்ளத்தில், இன்பம் எஞ்ஞான்றும் உதிப்பதில்லை.

 

அழுக்காறு எனுந் தீயகுணம் மாந்தருள்ளத்து இயல்பாய் உளதெனினும், அதனைக் கிளரவொட்டாது அறிவாற் றடுத்தல் வேண்டும். அஃதெங்ஙனமெனிற் கூறுதும்: பிறனொருவனது கல்வியைக் குறித்து நம் முள்ளத்தில் அழுக்காறு செனிக்குமாயின், நாம், நமது மனத்தை விளித்து, ''ஏ, பேதை மனமே, நீ ஏன் பிறன் கல்வி மீது அழுக்காறுறுகின்றனை? அக்கல்வியை அவன் பெறுதற்கு எத்துணைச் சிரமமெடுத்தான் என்பதை யறிவையோ? அவன் தனக்குரிய ஏனைய கருமங்களை விடுத்து, காலமும் இடமும் வாலிதின் நோக்கி, நல்லாசிரியரை யடைந்து, வழிபட்டு, அவரேவிய தொண்டு செய்து, அவர் குறிப்பின் வழிச்சார்ந்து, இருவெனவிருந்து, சொல்லெனச் சொல்லி, பருகுவனன்ன வார்வத்தனாகிச் சித்திரப் பாவையினத்தகவடங்கிச் செவிவாயாக நெஞ்சுகளனாக, கேட்டவை கேட்டவை விடாதுளத்தமைத்து, மிக்க வேதனம் தக்கவாறுதவி, அக்கல்வியை அரிதிற் பெற்றனனன்றோ! நீயும் அங்ஙனம் முயல்வையேல் அக்கல்வியைச் சம்பாதித்தல் கூடுமே; அங்ஙனம் முயறலை யொழித்து, ஏன் அழுக்காற்றின் பாற்படுகின்றனை,'' என்று கூறி உள்ளத்தை அழுக்காற்றின் வழிச் செல்லவொட்டாது தடுத்தல் வேண்டும்.

 

இனி நமது உள்ளம் ஒருவனது செல்வத்தைக் குறித்துப் பொறாமையுறுமெனின், அப்பொழுதும் நம்முள்ளத்தை நோக்கி, ''ஏ, அழுக்காற்றிலொழுகும் இழுக்குடை யுள்ளமே, இத்துன்மதியை விடுதி; தன் மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது, பசிநோக்காது, எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளாது, செவ்வி அருமையும் பாராது, அவமதிப்புங் கேளாது தன் கருமமே கண்ணாக நின்றமையானன்றோ அவன் அத்துணைச் செல்வத்தை ஈட்டலாயினான். நீயும் அங்ஙனம் ஈட்டலில் முயலு; எதற்காகப் பிறன் செல்வத்தைக் கண்டு கொன்னே பொறாமை கொள்கின்றனை" என்று நம்முள்ளத்தைநாமே பொறாமை நெறியின்கட் செல்லவிடாது தடுத்தல் வேண்டும். இங்கனஞ் செய்யவல்லேமாயின் பொறாமையென்னுந் தீயகுணம் நமதகத்துப்பிறவாது. அழுக்காறுடையார் முகத்தை விட்டுச் சீதேவி நீங்க, மூதேவி குடி கொள்வள்.

 

நமது நாட்டின் கண்ணே செல்வர்களும், கல்விமான்களும், உறையின் அஃது நமக்கும் பெருமையன்றோ! யாம் அந்நிய தேயத்தின் கட் புக்கவிடத்து, அங்குள்ளார் யாரேனும் நமது நாட்டைக் குறித்து நம்மை வினவுங்கால், "எமது நாட்டின் கண்ணே பல வித்வான்களுளர்; பல தனவந்தர்கள்ளுளர்'' என்று பெருமிதத்துடன் அவருக்கு விடையிருக்கலாமே. இங்ஙனமிருப்ப நாம் பிறர் கல்வி செல்வத்தைக் கண்டு, அழுக்காறுறுதல் இழுக்காமன்றோ?

 

சிலர் அழுக்காறெனும் கொடும்பாவியால் உந்தப்பெற்றுப் பிறர்க்குத்தீமை விளைப்பான்புக்குத் தாமே பெருந்தீமைக் காளாகின்றனர். இதற்கு ஓர் திருஷ்டாந்தம் இங்குத் தருகின்றாம்:

 

ஒரூரிலே ஒரு வணிகன் தன் மனோரதம் நிறைவேறும் பொருட்டு ஒருதடாகக்கரையி லிருந்து கொண்டு காளிகாதேவியைக் குறித்துத் தவம் புரிந்தான். அதனை அறிந்த அவன் பகைவனான வேறோர் வணிகன், 'இவன் மிக்க திரவியத்தை வேண்டித் தவம் முயல்கின்றான்; இவன் செல்வமுறயான் வாளா விருக்கலாமா? இவனைக் காட்டிலும் இருமடங்கு செல்வத்தைத் தேவியை நோக்கித் தவமியற்றி யான் பெறுவேன், " எனச் சிந்தித்து அத்தடாகத்தின் மற்றக்கரையில் ஓரிடத்திலிருந்து தவம் முயன்றான். அங்ஙனமாக, காளி தேவி முந்திய வணிகன்பால் வந்து அவனுக்கு வேண்டியவரம் யாதென வினவினன். தன் பகைவன் தன்மீது கொண்ட அழுக்காறுகாரணமாகத் தவஞ்செய்தலை ஒருவாறுணர்ந்த அவ்வணிகன், " அம்மே, என்னிரு கண்களில் ஒன்று குருடாதல் வேண்டும்" என்றான். காளி தேவி புன்முறுவல் பூத்து அங்ஙனம் அவனுக்குதவி மற்றவனிடஞ் சென்று, "உனக்குயாது வரம் வேண்டும் இயம்புதி" என்றாள். அவன், "அம்மே! என் மாற்றான் பெற்ற வரத்தைக்காட்டிலும் இருமடங்கு வரம் எனக்குத் தால் வேண்டும்" என்றிரந்தான்.

 

அதற்குத் தேவி, "அவன், தன்னொருகண் கெடல் வேண்டு மென்று கேட்டான், ஈந்தேன். நீ அவனுக்கு உதவிய வரத்தைப் போல் இரு மடங்குவேண்டி நின்றாய், ஆதலின் உன்னிரு கண்களும் கெடக்கடவை'' எனக்கூறி மறைந்தனள். அவ்வணிகன் குருடனாகி," அந்தோ! பொறாமையினால் மாற்றானைக் கெடுக்க நினைந்து ஈற்றில் யானே பெரிதுங் கெட்டேன், எனக்கிது தகும்!'' எனக்கூறிப் பச்சாத்தாபமுற்று வருந்தினன்.

 

ஆதலால் உலகத்திலுள்ள மானிடப்பிறவியெடுத்த ஆற்றிவுயிராம் மக்கள் யாபேரும், தங்கள் தங்கள் மனத்தைப் பொறாமை நெறியின் கட் செல்லவிடாது அறிவாற் றடுத்தல் வேண்டும்; அங்ஙனந் தடுக்காதோர் நரகத்தையடைவர். இதுபற்றியன்றோ தெய்வப்புலமைச் செந்நாப்போதாரும்,


''அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்"   
            என்று கூறினார்.


 நா. சி. சதாசிவம் பிள்ளை; வேலணை.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - மே ௴

No comments:

Post a Comment