Saturday, September 5, 2020

 பொருளுடைமை

 

'அறம் பொருள் இன்பம் வீடு' என ஆன்றோராற் கூறப்பட்ட உறுதிப் பொருணான்கனுள் அறனும் இன்பமும் எய்துதற்கண் பொருளினது இன்றியமையாமை கருதிப் பொருள் அவ்விரண்டிற்கு நடுவே வைக்கப்பட்டது. இதனுள் இவ்வுலகியற் பொருளினது இன்றியமையாமை அறிவுடையோராற் பேணப்படும். பொருள் பெற்றானொருவன் எனை உலகியற் பொருட்களெல்லாவற்றையும் அப்பொருளினாலே அடையுந் தன்மை நோக்கிச் செல்வப் பொருட்குப் பொருள் என்று பெயர் பொறித்தனர் முன்னையோர். பொருள் அழிவுடைத்தாயினும் அது தங்கியிருக்குங்காறும் புகழையும் உதவியையும் நுகர்ச்சியையும் கொடுத்தலான் அது ஈண்டு மிக்க சிறப்பிற்றாயிற்று. உலகிற் பிறந்தார் பொருளிலராயின் பிறரை எதிர்நோக்கி அவர் கைப்பொருள் கொண்டே வாழவேண்டியிருத்தவான் அவர்க்கு இழிவுடை வாழ்க்கை யெய்துதல் திண்ணம். இரவலர் தாமும் பிறரது பொருள் கொண்டு வாழ்தலினானே இழிவுடையராயினர். அவரும் பொருளுடையராயின் அத்தகைய இழிவு நேராதென்பதும் உலகினர் அவரைப் போற்றுவாரென்பதும் எவராலும் மறுக்கொணாதன. பொருளில்லார் இன்ப நுகர்ச்சி யெய்தாது மிகவும் துன்புற்று வாழ்வதும் பொருளுடையார் இன்ப நுகர்ச்சியெய்தி வாழ்தலும் கண்கூடாய் யாவரானும் அறியப்பட்டன. 'பொருளுடையான் கண்ணதே போகம்.''

 

பொருளில்லார் என்றும் அடிமையாகி வாழ்தலால் இல்வுலகிற் பிறந்தும் பிறந்த பயனெய்தாமையான் பிரவாதாரோ டொத்தலின் 'பொருளில்லார்க்கிவ்வுலகமில்லை'' என்றனர் முதுக்குறையாளர்.


''அருளிலார்க் கவ்வுலகமில்லை பொருளிலார்க்
கிவ்வுலக மில்லா தியாங்கு "


என்னும் குறளால் இவ்வுலகிற் பொருளினது இன்றி யமையாமை எத்துணைத் தென்பது பெறப்படும்.

 

உலகிற் பொருளுடையார் உலகியலின்பம் முற்று மெய்தி இன்பவாழ்க்கையராய்ப் பிறர் மதிக்க வாழ்கின்றனர். அரசனுக்கும் புகழும் அதிகாரமும் கைகூடியது பொருளுடைமையானன்றோ? அரசன் ஓர் கால் ஆண்டியாயின் அவனை இவ்வுலகில் யாரே மதிப்பர்? அவனுக்கு புகழ்சானென்னே? ஆகலாற் பொருளுடையாரே இவ்வுலகிற் பொருளுடையார். இக்கருத்துப்பற்றியன்றோ பெரு நாவலரும்,


"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
 பொருளல்ல தில்லை பொருள்''

என்றருள்வாராயினார். இதனான் கல்வி அறிவு ஒழுக்கங்களால் மதிப்பெய்துதற்குாயரல்லதாகும் பொருளுடைமையால் பிறர் மதிப்பை அடைவர் என்பது பெறப்பட்டது.

 

இன்ப நுகர்ச்சி யடை தற்குரிய நல்வினை செய்துள்ளவர்களே இவ்வுலகிற் பொருள் பெற்று அதனான் வாழ்வாரன்றிப் பிறர் வாழார். பொருளுடையார் மேலும் பொருளுடையராக வேண்டின் தமக்குற்ற பொருள் கொண்டே அறஞ் செய்தல் வேண்டும். அங்ஙனம் அறம்புரியாதார் பின்னர் வறுமையுற்றுத் தாம் பொருளுடையராயிருந்த காலத்துத் தம்மடத்து ஏற்ற இரவலரது அகத்தின் முன்னர்ச் சென்று அவரை நோக்கிக் கை நீட்டி ஏற்கவும் கூடும். அதனான், பொருளுடையார் தமது தற்கால வாழ்க்கையைக் கருதி
இறுமாந்திருத்தல் பெருந்தீதாய் முடியும். பொருள் பெற்றபின் சிலர் தமதுபழைய நட்பு, ஒழுக்கம், இயல்பு முதலியவற்றினின்றும் நீங்கி மிக்க செருக்குற்று வாழத் தொடங்குகின்றனர். பழைய நட்பினரைக் காணினும் அவர் உரையாடார்; காணாதார் போலவே கழிவர். பிறர் அடி பணிந்து எத்துணைதான் கூறினும் தாம் கேளாதாராய் முகத்தைத் திருப்பி இறுமாப்புக்கொள்ளுவர். பிறரை ஏளனம் செய்வர்.


 "சிறியரே மதிக்கு மிந்தச் செல்வம் வந் துற்ற ஞான்றே
 வறியடன் செருக்கு மூடி வாயுள்ளார் மூக ராவர்
 பறியணி செவியு ளாரும் பயிறரு செவிட ராவர்
 குறிபெறு கண்ணு ளாரும் குருடராய் முடிவ ரன்றே"


என்னும் செய்யுள் ஈண்டாராய்க.

 

இத்தகைய இயல்புகளெல்லாம் எழுவதற்குக் காரணம் அவர் தம்பொருளேயன்றிப் பிறிதன்று. பொருள் பெற்ற ஞான்று இத்தகைய செருக்கினைக் கொள்வார் பின்னர் அப்பொருளானே அழிவுறவர் என்பது உணரத்தக்கது. பொருளும் நிலைதலுற வேண்டின் அது நன்னெறியானீட்டப் பெற்றதாயிருத்தல் வேண்டும். இன்றேல் அப்பொருள் தான் சேர்ந்த நெறிகளிலு மேற்பட்ட நெறிகளுடே வெளியேறிவிடும்.

 

பொருள் நன்னெறியாற் சேர்க்கப்பெற்றதாயினும் ஊழ் மாறுகொள்ளுமிடத்து அப்பொருளும் அழியும்.


''வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் தூய்த்த லரிது.”

ஆதலால் பொருளிருக்குங் காலத்தே அறஞ் செய்து மேன்மேலும் அப்பொருளை நுகர்தற் பொருட்டு முயல்வதே அறிவோர் கடனாம். அப்பொருளான் அறனுமின்பமும் தொடர்பாக வெய்திவரவே, அவற்றில் வெறுப்புண்டாய் வீடுபேறு கருதி உழைத்தல் எளிதாய் முடிதலின் அன்னார் பின்னர் வீடுபேற்றையும் அடைவரென்பதாம்.

''அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்"

ஆனந்த போதினி – 1929 ௵ - மார்ச்சு ௴

No comments:

Post a Comment