Saturday, September 5, 2020

 

பொய்யாமொழிப் புலவரும் கூத்தாளும்

 

 பண்டைக்காலத்தில் பரதகண்டத்தின் தென்பாகமாகிய, 'குண கடல் குமரி குடகம் வேங்கடம்,' எனும் நான் கெல்லைக் குட்பட்ட தமிழ் நாட்டை யலங்கரிக்கக் கவிமாரி பொழிந்த புலவர்கள் பலருள் பொய்யா மொழிப் புலவரென்பாரு மொருவர். அவர் தொண்டைநாட்டிற் பிறந்த வர். தம் மொழியாற் பயிரை யழித்த காளிங்கராயன் குதிரை யிறக்கவும் மீண்டுயிர் பெற்றெழவும் செய்தமையின் பெய்யாமொழிப் புலவரெனக் காரணத் திருநாமம் பெற்றவர். பெற்றோராலிடப்பட்ட பெயர் இன்ன தெனத் தெரியவில்லை. அவர் கல்விக் களஞ்சியமாயும், கற்பனை பிறப்பிடமாயும் விளங்கினார்.

 

அத்தகைய புலவர் பெருமானுக்குப் பழையபடியே மதுரையிற் றமிழ்ச்சங்கமொன்று நிறுவவேண்டுமென்னு மவா மேலிட்டது. அதனால், அவர் அக்காலத்து மதுரையிலரசாட்சி புரிந்து வந்த பாண்டியனிடஞ் சென்றாலோசித்துத் தக்கது புரிவோமெனக் கருதி மதுரையை நோக்கிப் பிரயாணமாயினார். வண்டி வாகனங்களின்றித் தனித்துக் கால்நடையா கச் செல்லும் புலவர், ஒருநாள் கதிரவன் குடகடல் குளிக்குமெல்லை, காளையார் கோவில் என்னு மூரையடைந்து அங்குத் தங்குவானுன்னி, ஓர் வீட்டின் வாயிற்றிண்ணையி லமர்ந்தனர்.

 

அவ்வீடு ஓர் தாசியினுடையது. அவள் பெயர் கூத்தாள் என்பது. மிகுந்த அழகு வாய்ந்தவள். அவளது காளமேகம் போன்ற கரிய கூந்த லும், உண்டோ இல்லையோவென் றையுறுமாறு கொடி போல் நுடங்கும் துடியிடையும், அன்னத்தைப் பழிக்கும் அணி நடையும் முனிவர் மனத்தையும் கொள்ளையிடாமற் போகா. ஆயினுமென்ன? எல்லா அவயங்களினுஞ் சிறந்த கண்கள் மாத்திரமில்லை. விதி வலிதன்றோ

 

அருந்தமிழ்வாணர் ஆண்டடைந்த சிறிது நேரங்கழிந்து, கூத்தாள் தட்டித் தடுமாறிக் கொண்டு வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் புல வர், "அம்மா! பசிப்பிணி வாட்டுகின்றது. சிறிது ஆகாரம் தருவீரேல் மெத்தப் புண்ணியமுண்டாகும்,'' என்றார். அதற்கு அவள்,'' ஐயா! தாங்கள் யார்? தங்கள் பெயரென்ன'வெனப் புலவர், தம் பெயர் முதலிய வற்றைக் கூறினார். அவற்றைக் கேட்ட வளவில் முன்னமே தானே அவ ரைப்பற்றிய வரலாறனைத்தையும் பலர் கூறக் கேட்டிருந்தனளாகலின், அவ்வேசை திடீரென்று அவர் பாதங்களில் விழுந்து பணிந்து, "சுவாமி! நானோ பிறவிக் குருடி. உலகம் இவ்வாறிருக்குமென் றறியேன். விலைமாதே யெனினும் கண்ணிலாக் காரணத்தால் வருவா யின்மையின், வயிற் றுச் சோற்றிற்கும் வழியற்று வாடுகின்றேன். எம்பெருமானே! எளியா ளுக்குக் கண்தெரியும் படியாகத் திருவுளம்பற்றியருள வேண்டும்'' எனக் கூவி யரற்றினாள்.

 

பெரியவர் தம்நோய்போற் பிறர் நோய் கண்டுள்ளம்
எரியி னிழுதாவ ரென்ப - தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிறவுறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.

 

என்பது பெரியோரிலக்கண மாதலின், அம்மா தின், துன்பத்தைக் கண்டு மனஞ் சகியாத மாண்புடைக் கவிஞர், " கூத்தாள் விழிகளிரு கூர் வேலாம்'' எனக் கூறியருளினார். உடனே அவள் விழிகள் வேல்போல் ஒளிவிட்டு விளங்கின. அவளடைந்த ஆனந்தத்தை ஆரே அளவிட்டறிய வல்லார்! கூத்தாடினாள், புலவரடிகளில் மறுபடியும் விழுந்தாள், எழுந் தாள், புகழ்ந்தாள், என் குலதெய்வமே என்றாள். கண்ணைக் கொடுத்த கடவுளே என்றாள். "அய்யனே! அடியாள் உய்ந்தேன் உய்ந்தேன் உமதருளால். ஆயினும் என் தமக்கை யொருத்தியிருக்கிறாள். அவளும் என்னைப்போலப் பிறவிக்குருடி. அவளையும் நின் கருணையாற் காக்க வேண்டும்," என்று வேண்டினாள். அவரும், "கூத்தாள்தன், மூத்தாள் விழிகள் மூழநீலம்" என்றிசைத்தனர். அவ்வளவில் மூலை வீட்டில் முக்காடிட்டுப் படுத்திருந்த அம்மூத்தாள் கண்தெரியப் பெற்றவளாய், வியப்படைந்து வீதியிலோடி வந்தாள், உண்மையுணர்ந்தாள். பாவலர்ப் பாதங்களிற் பணிந்து,'' பர துக்கஞ் சகியாத பரமபுருஷா! தங்கள் தண்ணருளால் அடியாள் கண் ணொளி பெற்றுக் கடைத்தேறினேன். இதற்குச் செய்யுங் கைம்மாறியாது? எனினும், யான் பார்வை யடைந்தது பெரிதல்ல. என் தாயும் நேத்திரமில்லாதவள். அவளுக்கும் கிருபை செய்யவேண்டும் என் தெய்வமே!'' எனப் பணிவுடன் கெஞ்சினாள். அதைக் கேட்ட புலவர் பெருமான் அதி சயித்தவராய், "ழத்தாள்தன் ஆத்தாள் விழிகளரவிந்தம்'' என்றனர். புறக் கடையிற் புலம்பிக்கொண்டிருந்த அவளும் 'நளினாக்ஷி' யென்னும்படி நயனம் பெற்றாள். களிப்புடன் ஓடி வந்தாள். விஷயமறிந்தாள் விழுந்தாள் கழல்களில். எழுந்து நின்று கைகூப்பி,'சுவாமி! தீனபந்துவே! என் ஆத்தாள் வயதில் மூத்தாள். நேத்திரமில்லாள். தாய் முகம் நோக்காத் தரித்திரி. அவளையும் எங்களைப் போலாக்கி யருளல் வேண்டு மென்றாள். பார்த்தார் பொய்யாமொழியார்.'' இதேது குருட்டுக் குடும்பத்தில் வந் தகப்பட்டுக் கொண்டோமே. நல்லது, பார்ப்போம்'' என்றுன்னி, ''ஆத்தாள்தன், ஆத்தாள் விழிகளிரண்டம்பு' எனப் பகர்ந்தனர். அக்கணமே தாய்க்கிழவி குருடு நீங்கிக் குதூகலத்துடன் குமரிபோற் கும்மாளமிட்டு விழுந்தடித்துக் கொண்டோடி வந்தாள். எல்லாருமாகக் கூடிப் புலவரைப் போற்றி யுபசரித்தார்கள். இனி யொருவருமில்லை யென்றறிந்து அவ்வாக்கியங்களை யியைத்து


 கூத்தாள் விழிகளிரு கூர்வேலாம் கூத்தாள் தன்
 மூத்தாள் விழிகள் முழுநீலம் - மூத்தாள் தன்
 ஆத்தாள் விழிகளரவிந்தம் ஆத்தாள் தன்
 ஆத்தாள் விழிகளிரண்டம்பு


என வெண்பாவாக முடித்தருளினார்.

 

இரவு கழிந்தது. மறுநாள் அவ்வூர்க் கணிகையரும் பிறரும் சேதி தெரிந்து பல்லாயிரம் பொன்னிறைந்த பொற்கிழியொன்றைப் புலவருக் குக் காணிக்கையாகக் கொடுத்து வணங்கி, ஆசிபெற்றுச் சென்றனர். அப்பொற்கிழியைப் பொதுமகள் பாலீந்து தாம் மதுரைக்குச் செல்வதாயும் திரும்பி வருங்கால் பெற்றுக்கொள்வதாயுங் கூறிச் சென்றனர், பொய்யா மொழிப் புலவர்.

 

பன்னாட் சென்றபின் பாவலர் பாண்டியனது நகரைவிட்டுத் திரும்பி வருகையில் காளையார்கோயில் வந்து தாசி வீட்டிற்குச் சென்றார். அவ்வீடு முன்போலில்லாமல் அழகிய சிறு ராஜ மாளிகை போலிருந்தது மன்றி வாயிலில் காவல்னொருவனு மிருக்கக் கண்டார். கண்டு களிகொண்டு காவலனை நோக்கிக் கூத்தாளிடம் தன் வரவை யறிவிக்கும்படி சொன்னார். அவன் உள்ளே சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்து, " ஐயா! இப்போது பார்க்க அவகாசப்படாதாம். போகச்சொன்னார்கள்'' என்றான். அதேசமயம் வாயிற்கதவு சாத்தித் தாளிடப்பட்டது. கண்டார் இன்னி சைக்கவிஞர். கடுங்கோபங்கொண்டு, "பழைய குருடி கதவைத்திற," வென்று கதவைத் தட்டினர். அக்கணமே அத்தாசிகள் நால்வரும் பழைய படியே குருடிகளாகி எமது காருண்யக்கடலே யாங்கள் பேதைமையா லிழைத்த பெரும்பிழையைப் பொருட்படுத்தாது காத்தருள வேண்டும் காத்தருள வேண்டுமெனக் கதறிக்கொண்டோடி வந்து கதவைத் திறந்து பார்த்தார்கள். நாவாலுலகை நடாத்தும் நாவலரைக் கண்டாரில்லை. ஆட் களை யேவித் தேடுவித்தனர். பயனில்லை. என்ன செய்வார்கள். " குண மென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி, கணமேனும் காத்தலரிதன்றோ?'' '' குந்தினையோ குரங்கே சந்தடியடங்க,'' என்பது போல், முன்போலவே மூலையிலுட்கார்ந்துவிட்டார்கள். 'பழைய குருடி கதவைத் திறவடி," என்னும் பழமொழி அதுமுதலே யாண்டும் வழங்கலாயிற்று.


''வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.''

 

பூ. ஸ்ரீநிவாசன், தமிழ்ப்பண்டிதர்,

இராணிப்பேட்டை.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment