Saturday, September 5, 2020

 

பொய்

 ஆம், அது தான் உன் பெயர்! அப்பெயர்தா னுனக்குச் சரி! உன் பெயரே பொய்யாக விருக்கும் பொழுது நீ எதைத் தான் பொய் " என்று சொல்ல வருவாய்! சில விஷயங்களை நீ "பொய்" என்று சொல்லுவதெல்லாம் பொய்யாகி விடுகிறதினாலேயே உனக்கு அப்பெயர் இடப்பட்டது போலும்! ஆம், உன் உடல், உயிர், பெயர் யாவும் பொய்! ஆ! உன் வல்லமை மிகப் பெரிது! உன் வல்லமையை அளவிட்டுக் கூறுவது முடியாத காரியம். ''இச்சை" என்பவன் உனக்கு முன்பிறந்தவனாயினும் நீ அவனை விட அதிகமான வல்லமையுள்ளவன்! உன்னுடைய சமயோசித யுக்தியும், சூக்ஷம அறிவும் யாவராலும் அதிசயிக்கத்தக்கன. சமயத்தில் "சத்திய" னெனப் பெயரெடுப்பவன் நீயே! ஆ? உன்னால் ஜயிக்கப்படாத மானிடன், இவ்வுலகில் நூற்றுக்கு ஒருவன் உண்டு என்பது பத்தில் ஒன்பது பங்குக்கும் நிக்ஷயமில்லை. உன் மூத்த தமயனே இச்சை; அவனிலும் இளையவன் நீ, உனக்குப் பின் பிறந்தவன் பயம், அவனிலும் இளையவன் துக்கம், அவனிலும் இளையவன் சோம்பல், அவனிலும் இளையவன் வறுமை, அவனிலும் இளையவன் அவதூறு, அவனிலும் இளையவன் அரும்பிணி, அவனிலும் இளையவன் நரகம். ஆ! எவ்வளவு சந்தோஷகரமான நாமதேயங்கள்! சத்தியத்தைக் கைக்கொண்ட மனிதனொருவன், உங்களின் பெயர்களைச் செவியுற்ற அதே நிமிஷம் இடியோசை கேட்ட நாகம் போல நடுநடுங்குவான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சுகத்தையடைய விரும்புகிறவன் உன் அண்ணனை விரும்புகிறான், உடனே உன் அண்ணன் உன்னை விரும்புகிறான்; நீ உன் அண்ணனை விரும்பியவனை விரும்பி, சிறிது சந்தோஷத்துடன் அலக்கழித்து, படிப்படியாய் உன் தம்பிகளையும் விசா ரிக்கச் செய்து, எல்லாரிலும் இளையவனிடம் ஒப்புவித்துவிடுகிறாய் மனித சரீரம் பெற்ற பலரிடத்தில் இல்லாத இச்சகோதர ஒற்றுமை, மாயா சரீரம் பெற்ற உங்களிடத்தில் அமைந்திருப்பது பின்னும் அதிசயிக்கத்தக்கது! உங்களில் ஒருவருடைய சரித்திரத்தையும் எழுதுவ தென்றால் தனித்தனி ஒவ்வொரு பாரதமாகுமென்றால், எல்லாரிலும் மிகுந்த அற்புதச் செயல்களைச் செய்து வருகிற உன்னுடைய வல்லமைகள் முழுமையும், இவ்வானந்த போதினியின் மூலமாக வெளியிட முடியாதாயினும் சில விஷயங்களை மட்டும் சுருக்கமாகச் சொல்லுகிறோம். "இரகசியங்கள் வெளியாகின்றன" என்று வருத்தமடையாமல், "நமது பராக்கிரமங்கள் கூறப்படுகின்றன'' என்று சந்தோஷப் படுவாயாக! ஆ! எத்தனை குடும்பங்கள் உன்னால் சிதறி யழிக்கப்பட்டன! எத்தனை மனிதர்கள் உன்னால் துக்கப் பட்டனர்!

 

பொய்யே! பொய்யே! பொருந்து! நின் மாட்சி

புகலவு முனைவிட்டகலவு மெளிதோ?

மானிடர் தம்மை மாநரகாழ்த்தப்

பூதலத்துதித்துப் புகழோங்கி வாழும் – பொய்யே

 

ஆ! எத்தனை வித்துவான்களிடத்திற் குடி கொண்டு, உலோபியைக் "கர்ண'' னென்றும், குரூபியை ''மன்மத" னென்றும், கூரை வீட்டை "மாளிகை'' என்றும், யானையையே பார்த்திராத ஒரு செல்வ வந்தனை "யானை கட்டி வாழ்கின்ற மன்னன்'' என்றும் சொல்லி வருகிறாய்!

ஆ! B.A. B.L. M.A. B.L. என்ற பட்டங்களை உடையவர்களும். மிகுந்த யோக்கியதா பத்திரம் பெற்றவர்களுமான எத்தனை வக்கீல்களின் * வில் நடனஞ்செய்து, ஏன்? அப்படி இருந்திருக்கப்படாதோ? ஏன்? இப்படி இருந்திருக்கப்படாதோ? என்று கொலையாளியை நிரபராதி யெனவும், யோக்கியனைக் கள்ளனெனவும் ருசுப்படுத்த வாதித்து, எத்தனை நீதவான்களின் சித்தத்தைக் கலங்கவைத்து விடுகிறாய்!

 

ஆ! எத்தனை அச்சாபீசுகளின் மானேஜரிடத்தில் சிநேகஞ் செய்து (வந்து அலைகிறவர்களுடைய நஷ்டத்தை மானேஜர் அறிந்து சிறிது வருத் தப்படினும்) அவருடைய சிநேகனாகிய நீ எவ்வளவு கெம்பீரமாய்'நாளை சாயந்திரம் அவசியம் தந்து விடுகிறேன்'' என்று சொல்லியனுப்பி விடுகிறாய்!

 

ஆ! எத்தனை ஜட்கா வண்டிக்காரர்களிடத்திலும், ரிக்ஷா வண்டிக்காரர்களிடத்திலும் குடிகொண்டு, வண்டியிலேறும் ஜனங்களை குறிப் பிட்ட விடத்தில் இறக்கி "என்ன ஐயா! இரண்டணாவைக் குறைத்துக் கொடுக்கிறீர்'' என்று நடுரோட்டில் பலத்த சப்தம் போடச் செய்து, மரியாதைக் கஞ்சி அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொடுத்து வருகிறாய்!

 

ஆ! எத்தனை பிராமணர்கள் மந்திரஞ் சொல்லிக்கொண்டிருக்குஞ் சமயத்தில் ஏதாவது சிறிது மறந்திருந்தால், இல்லாததும் பொல்லாததுமான உன்னை அவ்விடத்தில் சிறிது வைத்து மொண மொணோச் சாரணம் செய்து விடுகின்றனர்! தக்க சமயத்தில் அவர்களைக் காப்பாற்றும் சக்தி உன்னிடத்தி லமைந்திருப்பது பெரிதும் வியக்கத் தக்கது!

 

ஆ! மேல் மூடியிட்டு, முத்திரை வைத்த எத்தனை மருந்துப் புட்டிகளுக்குள் நுழைந்து கொண்டு, எத்தனை நாள்களாகினும் ஜீவித்திருந்து விலை கொடுத்து வாங்கிய வியாதியஸ்தரின் கஷ்டங்களை அதிகமாகச் செய்து ஆனந்தக் கூத்தாடுகிறாய்! –

 

ஆ! எத்தனை விளம்பரங்களில் புறாக்களைப் பிடிக்கும் வலை போன்று வியாபித்து, பார்ப்பவர் கண்களுக்குத் தென்படாமல் மறைந்து கொண்டிருந்து பாமரரை யேமாற்றுகிறாய்! ஆ! எத்தனை ஆசாரிப் பட்டரைகளை வாசஸ்தலமாகக் கொண்டு, நகை செய்யக் கொடுத்துப் பல தடவை நடந்து நடந்து, சலித்துப்போன மனிதர்களைப் பின்னும், "இன்றுவா" "நாளைவா" "காலைவா' மாலைவா'' என்று ஆச்சாரி மார்களின் வாய்கள் கூடச் சலித்துப்போகாமல் சொல்லச் செய்கிறாய்!

 

ஆ! வியாபாரிகளுக்கெல்லாம் ராஜ வியாபாரிகளான எத்தனை ஜவுளிக் கடைக்காரர்களிடத்திற் குடிகொண்டு, எத்தனை பட்டியல்களாக மாறி விளங்கிக் கொண்டிருக்கிறாய்! ஆம்; ஒரே ஒரு வேஷ்டியைக் கொடுத்து "அது கோடிவேஷ்டி'' என்று சொல்லியனுப்பும் வழக்கத்தையும் கற்றுக் கொடுத்தாயல்லவா!

ஆ எத்தனை பெண்களில் ஐக்கியமாகி ஆடவர்களை ஆட்டாமலாட்டி அலக்கழித்து, துன்புறுத்துகிறாய். ஆம்; இதைவிட இரு பெண்டு ஆட்டிகளுடைய ஆடவர்களாயின், உன் சக்தோஷத்துக்கு அளவே யில்லை யன்றோ!

 

ஆ! எத்தனை சோம்பேறிகளை வயிற்றுப் பிழைப்புக்காகச் சாமியா வேடந்தரிக்கச் செய்து, உலகில் உலவ விடுத்து, உண்மையான சன்னியாசிகளையும் சந்தேகிக்கச் செய்து மாந்தர்களின் புத்தியை சபலப் படுத்தி விடுகிறாய்! ஆ! எத்தனை கிழவிகளிடத்திற் குடி கொண்டு " ஆயிரந் தடவை பொய்யைச் சொல்லி ஒரு கலியாணத்தை முடியுங்கள்'' என்று சொல்ல வைத்து, அவ்விதமே சில கலியாணங்களும் நடத்தி வைத்து, " சுபகாரியங்களும் நான் இல்லாமல் நடவாது'' என்று நினைத்துப் பேரானந்த மடைகிறாய்!

 

ஆ! எத்தனை கிறிஸ்தவர்களை அன்போடு மேசித்து, " கிறிஸ்து மதமல்லாத மற்ற மதங்களெல்லாம் பொய். கிறிஸ்துவை விசுவாசியாத பாமரர்கள் பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றும், "இரண்டாந்தடவை இவ்வுலகத்துக்கு ஏசுராஜா வந்து இரண்டாயிர வருட காலமாக மரித்து மண்ணுக்கிரையாகிப் போன ஈம் இருபத்தோராவது பாட்டன் முதல் எல்லோரையும் எழுப்பி நியாயந்தீர்க்குஞ் சமயத்தில் கிறிஸ்துவை விசுவாசியாத மனிதர்கள் நரகத்தில் தள்ளப் படுவார்கள்'' என்று அவர்கள் கூறுவது போதாமல், இம்மாதத்தில் சேர்ந்தால் உனக்கு உயர்பதவிகிடைக்கும், கௌரவம் கிடைக்கும், துரைமார் உனக்குச் சமமரியாதை யளிப்பார்கள், நீ சீமானாவாய் என்று பொய்யாசைகளைக் காட்டி வாய்ப்பறையடிக்கச் செய்து, மார்க்க விஷயங்களிலும் நீ பிரவேசித்திருப்பதாக நினைத்து, உனக்கு நிகர் ஒருவருமில்லை யென்று மமதையடைகிறாய் !

 

ஆ! உன்னை ஏற்றுக் கொள்ளாத அரிச்சந்திரனிடத்தில் நீ வசிக்கப் பிரியங் கொண்டு, விஸ்வாமித்திர மஹரிஷியிடம் 'அஹங்காரம்" என்னும் நண்பனை விடுத்துத் தூண்டுதல் செய்தாய். அவர் உனக்காகப் பரிந்து பிரயாசைப்பட்டதி னிமித்தம், தமது ஒப்புயர்வற்ற தபோபலத்திலரைப் பங்கு இழந்து விடச் செய்தாய். ஆ! இறந்தான் அஸ்வத்தாமா'' என்று தருமர் சொல்லாமலுன்னைச் சொன்னதற்காக உன் கடைசி சதோதரனைத் தரிசிக்கச் செய்தாய். உன்னையே நம்பி, நீயே கதி யென்று சதா காலமும் உழன்று, மதி மோசம் போன மானிடர்களுக்கு உன் இளைய சகோதரனால், என்ன துன்பம் நேரிடுமோ என்று பெரிதும் யோசிக்க வேண்டியதாயிருக்கிறது.

 

ஆ! ''பொய்'' என்னும் புண்ணியனே! இவை யாவும் நீ செய்ய வேண்டிய வேலைகளா? என்று சிந்திக்கும் பக்ஷத்தில், நீ உன் செய்கைகளில் சிறிதேனும் வெறுப்படையாதிருப்பதும், தைரியமான அட்டகாசத்துடன் உலகத்தின் பல விடங்களில் சஞ்சரித்து வரும் அற்புதச் செய்கையும், துணிகரமான வீரச்செயல்களும் "வேலையல்ல விளையாட்டு" என்று கூறுவது போலிருக்கிறது. ஆம்; உலகில் நீ விளையாட்டாக விளையாடித் திடச்சித்த மற்ற பலரை, உன் மயக்கத்தால் மயக்கி உன் சகோதரனிடத்தில் ஒப்புவிக்கிறாயே! திடசித்தத்தோடு உன் பெயரைக் கேட்டதே உன்னை வெறுக்கும் மனிதனும், தன் உள்ளத்திலேயே கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை மறவாத உத்தமனும் உன்னைச் சட்டை செய்யார்கள். அவர்களிடம் உன் சபம் ஓங்காது. ஆகையால் சகோதர சகோதரிகளே " நாமனைவரும் அவ்வாறே யொழுக வேண்டும், சாத்தியமே நேசிக்கப்பட வேண்டும், பொய்வெறுக்கப்பட வேண்டும். நன்மை விளைய வேண்டும். தீமையழிய வேண்டும். மிகச் சொற்பமான இடங்களில் மட்டும் அரசு செலுத்தி வருகிற திருப்தி, உண்மை, மகிழ்ச்சி, சுகம், ஊக்கம், செல்வம், புகழ், ஆரோக்கியம், மோக்ஷம் என்ற சகோதரர்கள் இவ்வுலக முழுதும் ஆள வேண்டும்." என்று எங்கும் நிறைந்த பரம்பொருளைப் பிரார்த்திப்போமாக.

கதையை யல்ல கருத்தை உணருங்கள்.
குற்றத்தை யல்ல குணத்தைக் கொள்ளுங்கள்.

 

தான் கெடினுந் தக்கார்க்கே டெண்ணற்கத் தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க

பொய்யோ டிடைமிடைந்த சொல்.


K. A. P. விஸ்வ நாதன்,
நெ. 33, தஞ்சாவூர் றோட்,

திருச்சிராப்பள்ளி

 

ஆனந்த போதினி – 1920 ௵ - செப்டம்பர் ௴

 

 

   

 

No comments:

Post a Comment