Sunday, September 6, 2020

 

மகளிரைப் பழிப்பது தகுதியல்ல

(க. சிதம்பரம் பிள்ளை.)

ஆனி மாதத்து “ஆனந்தபோதினி"யில் "மகளிரைப் பழிப்பது தகுதியா?" என்ற தலைப்பில், பாரதம் பழம் பொருந்து சருக்கத்தில் திரௌபதி தன் மனக்கிடக்கையை வெளியிடும் “ஐம்புலன்களும் போல்” என்று தொடங்கும் கவியின் சரியான பொருள் என்ன? என்று கேட்டிருக்கிறார் அன்பர்- துரை.

மேற்சொன்ன கவியின் சரியான பொருளைத் தெரிந்து கொள்வது பற்றி வெகு நாட்களாக நானும் முயற்சி செய்திருக்கிறேன்; படித்த பெரியோர்கள் பலரிடம் அதைப் பற்றிக் கேட்டிருக்கிறேன்; ஆனால், சரியான பொருள் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை.

திரௌபதிக்கு பாண்டவர் ஐவர் பதிகளாக இருந்த போதிலும், அவள் கன்னனிடத்திலும் ஆசை வைத்திருந்தாள் என்று சிலர் சொல்வதுண்டு. அப்படி அவள் கர்ணனை விரும்பினதாக வில்லிபுத்தூரார் பாரதத்திற் காணவில்லை. இருந்தால், அது எந்த இடத்தில் என்பதைத் தெரிந்து கொள்ளவும் விரும்புகிறேன்.

இனி, மேற் சொன்ன கவியின் முற்பகுதிக்கு அன்பர்-துரையார் கொண்ட அபிப்பிராயம் பொருந்துமா? 'கற்பில் அருந்ததியை நிகர்த்த துரோபதை ஐம்புலன்களைப் போல் பாண்டவர் ஐவர் தலைவர்களாக இருக்கவும், மற்றும் ஒருவன் எனக்குக் கணவனாக வேண்டு மென்று என் உள்ளம் உருகுமோ?' என்று அவள் சொன்னதாக அவர் அபிப்பிராயப் படுகிறார்.

உன்னுடைய உள்ளத்திற் கிடக்கும் 'மறை' என்ன?' என்று கேட்டால், என்னுடைய உள்ளக் கிடக்கை 'இது தான்' என்று மற்றவர்களைப் போல் அவளும் சொல்லி விட்டுப் போகாமல், 'கற்பிற் சிறந்த என்னுடைய பேரிதயம் இன்னொருவனை விரும்புமா?' என்று எதற்காக அவள் திருப்பிக் கேட்க வேண்டும்? நீ, அப்படி யாரையாவது விரும்புகிறாயா என்று கேட்டாலல்லவோ அவ்வாறு பதில் சொல்ல வேண்டும். கேள்வி அப்படியில்லையே!

துரோபதை ஒரு கற்புடைப் பெண்டிர். அவளுடைய கற்புக்கு மாசு கற்பிக்கும் நோக்கம் பாரதத்தில் எந்த இடத்திலும் வில்லிபுத்தூராருக்கு இருந்ததாகத் தெரியவே இல்லை. அப்படியானால், மேற்படி செய்யுளுக்குப் பொருள் தான் என்ன? நான் நினைக்கிறேன், மேற்படி கவியில் அச்சுப்பிழை ஏதேனும் நேர்ந்திருக்குமோ என்று.

துரோபதைக்கு பாண்டவர் ஐவர் பதிகளாக இருந்த போதிலும், அர்ச்சுனனிடத்தில் அவள் பிரத்தியேக அன்பை வைத்திருந்திருக்கிறாள். ஏன்? அவள் பிறந்ததே அர்ச்சுனனுக்காக. அறிவு வந்த நாள் முதல் அவள் தனது காதற் கொழுநன் அர்ச்சுனன் ஒருவனே என்று, அவனிடத்தில் உண்மைக் காதலைவைத்தே வந்திருக்கிறாள். அர்ச்சுனனை அவள் நேரிற் பார்த்திரா விட்டாலும், அவனுடைய உருவப் படத்தை தோழிகள் காண்பிக்க, அதிலிருந்து அர்ச்சுனனுடைய உருவம் அவள் மனதிற் பதிந்தே இருந்தது.

பாண்டவர் அரக்கு மாளிகையில் இறந்துபட வில்லை என்று சிலர் சொல்லக் கேட்டு, அவர்களை வரவழைக்கும் நோக்கத்தில் துரோபதையின் தந்தையாகிய துருபதன், வில்வளைத்து இலக்கை வீழ்த்துகிறவர்களுக்குத்தான் இனி துரோபதையை விவாகஞ் செய்து கொடுக்கிறது' என்ற ஒரு நிபந்தனையை ஏற்படுத்தி, அதற்காக எல்லா தேசத்து அரசர்களையும் வரவழைக்கிறான். ஏன்? அப்பேர்ப்பட்ட காரியத்தை வில்விசயன் ஒருவனால் தான் செய்யமுடியு மென்றும், விசயன் எங்கிருந்தாலும் அப்பொழுது அங்கு வந்தே தீர்வான் என்றும் அவனுக்கு நம்பிக்கை இருந்ததினால்.

வில் வளைத்து இலக்கை வீழ்த்தக் கூடியவர்களுக்கு தன் மகளை விவாகஞ் செய்து கொடுப்பதாக பாஞ்சால மன்னன் ஏற்பாடு செய்திருந்த போதிலும், துரோபதைக்கு மட்டும் நம்பிக்கை குலைய வில்லை. எப்படியும் தான் ஆதியில் வரித்த, அன்பன் வந்து தன்னை மணப்பான் என்று அவள் உண்மையாக நம்பியே இருந்தாள். ஒருக்கால் அர்ச்சுனன் வராமல் வேறு எவரேனும் வில் வளைத்து இலக்கை வீழ்த்தி விட்டால், தான் உடனே அக்கினியில் வீழ்ந்து உயிரை விட்டு விடுவதாகவும் அவள் மனதுக்குள் தீர்மானித் திருந்தாள்.

துரோபதையை அலங்கரித்து தோழிகள் சுயம்வர மண்டயத்திற்கு அழைத்து வந்து, அங்கு கூடியிருந்த துரியோதனன், கர்ணன் முதலிய அரசர் ஒவ்வொருவருடைய பெயரையும், அவர் தம் பெருமைகளையும் எவ்வளவோ எடுத்தெடுத்து அவளுக்குக் கூறுகிறார்கள். ஆனால், அவள் மட்டும் அவர்களில் எவரையும் ஏறெடுத்தும் பார்க்க வில்லை.

அரசர் ஒருவராலும் வில்வளைக்கக் கூடாமற் போகவே, கடைசியில், அந்தணர் வரிசையில் மாறுவேடத்துடன் இருந்த அர்ச்சுனன் வந்து வில்லை வளைத்து இலக்கை வீழ்த்தி விடுகிறான். அப்பொழுது அவனை யாரென்று துரோபதை தலை நிமிர்ந்து பார்க்கிறாள். அர்ச்சுனன் என்னதான் மாறுவேடம் பூண்டிருந்தாலும் இயற்கை உருவத்தை எப்படி மாற்ற முடியும்? தன் மனக்கோயிலில் குடிவைத்துப் பூசித்துவரும் அந்த உண்மை
உருவம் அப்படியே அவளுக்குக் காட்சியளிக்கிறது. தான் காதலித்த அன்பன் இவனே என்று அவள் உள்ளம் தீர்மானித்து விடுகிறது. உடனே அவள் அர்ச்சுனன் கழுத்தில் மாலையைச்
சூட்டி விடுகிறாள்.

துரோபதை காதலித்த தெல்லாம் அர்ச்சுனன் ஒருவனை மட்டுந்தான். ஆயினும், பாண்டவர் ஐவரையும் அவள் மணந்து கொள்ள வேண்டு மென்றும், அவர் ஒவ்வொருவரிடத்தும் முறையே ஒவ்வொரு வருடம் வீதம் கூடி வாழ்ந்துவர வேண்டுமென்றும் அவள் கட்டாயப் படுத்தப் படுகிறாள். சிலகாலம் கழிந்தபின் துரோபதை தருமனுக்கு மட்டுமே மனைவியாக இருந்து வரவேண்டு மென்றும், மற்றை நால்வரும் அவளை சொந்தத் தாயாக மதித்து வரவேண்டு மென்றும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இவ்வித நிர்ப்பந்தங்களும் ஏற்பாடுகளு மெல்லாம் முக்காலங்களும் உணர்ந்த வியாசர், நாரதர் ஆகிய முனிவரர்களால் தக்க முகாந்திரங்களுடன் கட்டாயப் படுத்தப்படும் பொழுது, அபலையாகிய துரோபதை என்ன செய்வாள்? அவைகளுக் கெல்லாம் உடன் படுவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. பெரியோர் வார்த்தைகளை மறுக்க முடியாமல் அவ்வேற்பாடுகளுக் கெல்லாம் அவள் என்ன தான் இணங்கினபோதிலும், அவள் உள்ளம் மட்டும் அர்ச்சுனன் என்றால் உருகவே செய்தது.

காதல் இலக்கணத்தைத் தெரிவிக்கும் அகப்பொருள் நூல்களிலாவது, பண்டைச் சரித்திரங்களை விவரிக்கும் இதிகாச புராணங்களிலாவது ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆடவரை மணஞ்செய்து கொண்டதாகத் தெரியவில்லை. பாரதம் ஒன்று மட்டுமே அப்படிக் கூறுகிறது.

பாரதம் ஒரு வடநாட்டுச் சரித்திரம். ஆதியில் அதைப் பாடினவர் வியாசர் என்னும் ஆரிய முனிவர். அவர் அதை வடநாட்டு ஆரிய மக்களின் அக்காலத்துப் பழக்க வழக்கங்களைப் பெரிதுந் தழுவியே பாடியிருப்பார் என்பதிற் சந்தேகமில்லை.

ஆரிய மக்களின் பழக்க வழக்கங்களுக்கும், தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களுக்கும் சிற்சில மாறுபாடுகள் அடிப்படையான கொள்கைகளில் உண்டென்பது மெய்யே. ஆனால், கம்பருடைய கவி நயத்தைப் பெரிதுந் தழுவி பாரதத்தை தமிழில் மொழி பெயர்த்த வில்லிபுத்தூரார், அதைப் பெரும்பாலும் தமிழ் நாட்டுப் பழக்க வழக்கங்களுடன் இணைத்தும், 'காதல்' என்ற பொருளுக்கு உலகம் புகழும் தமிழ் நாட்டுக் காதலின் தாத்பரியத்தைக் கொடுத்தும் பாடியிருப்பார் என்றே எண்ணுகிறேன். நிற்க,

காதல் என்பது தெய்வீகம் வாய்ந்தது. அது, மக்கள் இவ்வுலகத்தில் தலைசிறந்த இன்ப மொன்றுண்டு என்பதை அறிந்து அனுபவித்து மகிழ்வதற்காக ஆண்டவனால் ஆண் பெண் இரு பாலாரிடத்திலும் இயற்கையிலேயே அமைத்து வைத்திருக்கும்
அரும் பொருளாகும். அதன் முழு - நலத்தையும் மனமொத்த காதலன், காதலி ஆகிய இருவராலுமே அனுபவித்து மகிழ முடியும். ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆடவரிடத்திருந்தாவது, ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட மகளிரிடத்திருந்தாவது அத்தலை சிறந்த காதல் இன்பத்தை அனுபவித்து மகிழ முடியாது.

காதல் என்ற அரும் பொருளுக்கு கடவுள் கற்பித்திருக்கும் உண்மை நிலை மேற்சொன்ன வகையில் அமைந்திருப்பதால், அதிலிருந்து துரோபதை மட்டும் எப்படி விலகி நிற்க முடியும்? அதனால், காதற்கனியின் உயர்ந்த சுவையை அப்படியே அவள் அனுபவித்து மகிழ்தற்கு அர்ச்சுனன் தலை சிறந்த காதலனாகவே இருந்தான். இருந்து என்ன பயன்? அவன் தான் அவளை சொந்த தாயாகப் பாவிக்கவேண்டியவ னாயிற்றே!

இருந்தாலும், அவள் உள்ளத்தை யாரால் தடுக்க முடியும்? அது அர்ச்சுனனிடத்தில் பிரத்தியேக அன்பை வைக்கத்தான் செய்தது. 'அர்ச்சுனன் ஒருவனே எனது அன்பு அவ்வளவையும் ஒருங்கே சொரிவதற்குரிய பெருங்கொழுநனாக அமைந்திருக்கக் கூடாதா?' என்று அவள் எண்ண மிடுவதுண்டு. அதனால் தான் துரோபதை, தான் உண்டு மகிழ விரும்பிய நெல்லிக்கனியைப் பறித்துத் தரும்படி தனது காதற்கனியாகிய பார்த்தனை வேண்டிக்கொண்டது.

காதலைப் பொறுத்த வரையில் துரோபதைக்கு அர்ச்சுனனிடத்தில் அப்படி யென்றல்லாமல், மற்றெந்த வகைகளிலும் மனிதனுக்குப் பஞ்சப்புலன்கள் எப்படியோ, அப்படியே' திரௌபதிக்குப் பாண்டவர் இன்றியமையாப் பொருள்களாக விளங்கினர்.
துட்டர்களைத் தொலைத்து அறத்தை நிலைநிறுத்துவதற்காக அவதரித்தவர் கிருஷ்ணர். அவர் அதைச் செய்து முடிப்பதற்கு எப்படி பாண்டவர்களைக் கருவியாக உபயோகப்படுத்த எண்ணினாரோ, அதேபோல் அவர்களை கடைசியில் நற்கதியில் சேர்க்கவும் எண்ணியே இருந்தார்.

மனிதன் அவ்வித நற்கதியை அடைய வேண்டுமானால், அவனுடைய உள்ளம் கள்ளங் கபடமற்று மாசு தீர்ந்து, பளிங்குபோற் பிரகாசிக்க வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்கிற மனதுக்கும் நற்கதிக்கும் வெகுதூரம். ஆதலால், பாண்டவர்களின் உள்ளத்தைப் பரிசுத்தம் செய்து வருவதும் கிருஷ்ணரின் நோக்கங்களுள் ஒன்றாக இருந்தது.

பாண்டவர்களும் திரௌபதியும் இயற்கையாகவே நல்ல உள்ளம் படைத்தவர்கள்; என்றாலும், எப்பேர்ப்பட்டவர்களையும் எடுத்து விழுங்கி விடுகிற எல்லாம் வல்ல மாயை பாண்டவர்களை மட்டும் சும்மாவிட்டு விடுமா? அதனால், சிற்சில மாசுகள் அவர்கள்
உள்ளங்களிலும் படிந்தே இருந்தன. அவ்வித கறைகளைத் துடைத்து உள்ளங்களைத் தூய்மை செய்வதற்குப் பாண்டவர்களின் வாழ்நாட்களிற் பல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி யிருக்கிறார் கிருஷ்ணர். அவ்வித சந்தர்ப்பங்களுள் ஒன்று இந்தப் பழம் பொருந்தச் செய்த சந்தர்ப்பமும்.

பாண்டவர் ஐவரையும் பதிகளாக ஏற்றுக்கொண்ட போதிலும், துரோபதைக்கு பார்த்தனிடத்தில் பிரத்தியேக் அன்பு உண்டென்னும் செய்தி துரோபதைக்கும், பரமாத்மா என்ற நிலையில் கிருஷ்ணருக்கும் மட்டுமே தெரியும். பாண்டவர்களில் மற்றை நால்வருக்கும் அவ்வுண்மையை வெளிப்படுத்தாமல் வைத்திருப்பது அவளுக்குப் பதித் துரோகமாய் நேரும் என்பது கிருஷ்ணரின் கருத்து. ஆதலால், அதை வெளிப்படுத்தி அவள் உள்ளத்தை தூய்மை செய்யத்தக்க காலம் அதுதான் என்று தீர்மானித்து விடுகிறார் கிருஷ்ணர். “உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்” என்ற கொள்கையை ஏதுவாகக் கொண்டு திரௌபதியும் பாண்டவர்களுமாகிய அறுவர் உள்ளங்களையும் அது அதைப் பொறுத்த வரையில் சுத்தி செய்து, நெல்லிக்கனியையும் பழையபடியே மரத்திற் போய் பொருந்தும்படி செய்து விடுகிறார் கிருஷ்ணர்.

துரோபதை அர்ச்சுனனிடத்தில் பிரத்தியேக அன்பைக் கொண்டிருப்பது பற்றி நால்வருக்கும் எவ்வித மனக்குறையும இல்லை யென்றாலும், அது காரணத்தால் அவளுக்கு, அந்த அளவுக்கு, கடைசி காலத்தில் அதாவது சொர்க்கஞ் செல்லுங் காலத்தில் அவள் எதிர் பார்த்த எண்ணம் நிறைவேறாமல் போயிற்று.

பாண்டவர், தங்கள் அரசாட்சி காலம் முடிந்து, கூட்டோடு சொர்க்கம் போகப் புறப்படுகிறார்கள். வடதிசையிற் சென்ற அவர்கள் சொர்க்கத்தை அலட்சியமாகக் கொண்டு ஒரே உறுதியாகச் செல்கிறார்கள். கொஞ்ச தூரம் சென்றவுடன் பின்னால் சென்ற துரோபதை கீழே விழுந்து மரிக்கிறாள். இதை யறிந்த வீமன், "கூட்டோடு சொர்க்கம் செல்வதற்குள் இப்படி இடையில் வீழ்ந்து இறப்பதற்கு துரோபதை செய்த பாவமென்ன?" என்று தருமரைக் கேட்கிறான்.

அதற்கு தருமர் “திரௌபதி நம் ஐவரையும் விதிப்படி கணவர்களாக ஏற்றுக் கொண்டிருந்த போதிலும், அர்ச்சுனனிடத்தில் பிரத்தியேக அன்பை வைத்திருந்திருக்கிறாள்; அதுதான் அதற்குக் காரணம்" என்று சொல்கிறார்.

“முன்னவன் பகருவான் மொய்கு ழற்குஉளம்

பன்னுபற் குனன் மிசை அதிகம் பற்றுமால்,

அன்னபான் மையின் அவட்கு அடுத்ததாகும்; நீர்

துன்னுதிர் விரைந்தெனச் சொல்லி முந்தவே."

[பற்குனன் = அர்ச்சுனன்.]

உள்ளக்கிடக்கையை வெளியிடுங் கவியில் பொதுவாகப் பாண்டவர் ஐவரையும் ‘பதிகள்' என்றும், அர்ச்சுனனை 'பெருங்கொழுநன்' என்றும், தெய்வீகக் காதலை வெளியிட 'பேரிதயம்' என்றும், அப்படி அவள் செய்தது கற்புக்கு இழுக்கல்ல என்பதை விளக்க வசிட்டன் நல்லற மனைவியே அனையாள்'' என்றும் சொற்களை வில்லிபுத்தூரார் உபயோகப்படுத்தி யிருக்கும் நயம் கவனிக்கத்தக்கது.

அப்படியானால்; ௸ கவியின் முதலடி.

“ஐம்புலன் களும் போல் ஐவரும் பதிகள்

ஆகவும், அவர்களில் ஒருவன்.''

 

என்றிருத்தல் வேண்டும். அப்படி யல்லாமல், “இன்னம் வேறொருவன்" என்று வில்லிபுத்தூரார் பிரயோகித்திருப்பார் என்பது சந்தேகத்திற் கிடமாகவே இருக்கிறது.

ஏட்டுப்பிரதிகளை அச்சிற் கொணரும்போது பாட பேதங்களும், அச்சுப்பிழைகளும் நேர்வது சகஜம். பாடபேதங்களுக்கு ஓர் உதாரணம்: வில்லிபாரதம் பதின்மூன்றாம் போர்ச்சருக்கம் 184-வது கவியின் மூன்றாவது அடி “மனைவியுயிர் வீய நன் மகன் மனைவி கையால்” என்று காண்கிறது. நல்லாப்பிள்ளை பாரதத்தில் அதே கவியின் அவ்வடி “மனைவியயலான் மருவல் கண்டு மவள் கையால்'' என்றும் இருக்கிறது.

இனி, அச்சுப்பிழைக்கு உதாரணம்; வித்தியாரத்நாகர அச்சுக்கூடத்தில் 1925-ம் ஆண்டில் பதிப்பிக்கப்பெற்ற வில்லி பாரதத்தில் விவாதத்திற் கிடமாய் நிற்கும் “ஐம்புலன்களும், போல்" என்ற அதே கவியின் மூன்றாவதடியுடன் பிற்பகுதியைக் கண்டு
தெளிக.

எனவே, மேற்படி கவியின் திரண்ட பொருள் என்ன என்பதைக் கவனிப்போம். அருந்ததியை நிகர்த்தவளான துரோபதை கிருஷ்ணரைப் பார்த்துச் சொல்கிறாள்: “இறைவனே! ஐம்புலன்களைப்போல் ஐவரும் எனக்குப் பதிகளாக அமைந்திருந்தும், அப்பாண்டவர்களில் ஒருவனும், நான் ஆதியிலிருந்தே எனது கொழுநன் என்று தீர்மானித் திருந்தவனுமான அருச்சுனன் ஒருவனே எனக்கு காதற் கொழுநனாக அமைந்திருக்கக் கூடாதா என்று, கற்பிலக்கணத்தைக் கைக்கொண் டொழுகும் எனது இதயமே உருகுகிறது என்றால், சாதாரண பெண்களைப் பற்றி பேச என்ன இருக்கிறது! உலகத்திற் பெண்ணாகப் பிறந்தவர் எவர்க்கும் அவ்வித மனமொத்த ஆடவரிடத் திருந்தே காதலின் முழுநலமும் சித்திப்பதாகும். அப்படியல்லாமல், மனமொவ்வாக் கணவர்களிடத்தில் பதிபக்தி குறையாமல் அவர்கள் நடந்து கொண்ட போதிலும், காதல் என்ற அரும் பொருளை அவர்களிடத்தில், அப் பெண்கள் சரிவர அனுபவித்து மகிழ்கிறார்கள் என்று நம்புதற்கு இடமுண்டா? இது தான் எனது உள்ளக் கிடக்கை' என்று கூறினாள் என்பதே எனது அபிப்பிராய மாகும்.

மூன்றாவதடியின் பிற்பகுதியை - ஆடவரில் ஆம் ஐ அன்றி- எனப் பிரித்துப் பொருள் கொள்ளலாம். இன் சாரியை.

ஆனந்த போதினி – 1943 ௵ - செப்டம்பர் ௴

 



 

No comments:

Post a Comment