Sunday, September 6, 2020

 

மகளிரைப் பழிப்பது தகுதியா?

(துரை.)

‘மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்.’ - பாரதியார்.

 

இப் பரந்த நிலவுலகில் வாழும் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக உள்ள எல்லாவற்றிலும் ஆண், பெண் என இரு வகையான பகுப்பு இருந்து வருகிறது. இவ்விரு பிரிவும் உலகம் நடை பெறுதற்கு இன்றியமையாதன வாகும். ஆணை யின்றிப் பெண் அமையாது; பெண்ணை யின்றி ஆண் அமையாது. ஆண்டவன் முன்னிலையில் ஆண் பெண் இரண்டும் சமமே. ஆண் பெண்களிடையே சில அவயவ வேறுபாடன்றி வேறொரு
வேற்றுமையுமில்லை. அவ் வவயவ வேறுபாடும் முக்கியமாக உலக உற்பத்திக்கும், ஆண் பெண் இருவரும் ஒருவரை யொருவர் விரும்பி அன்பு பூண்டு ஒன்று பட்டு வாழ்தற்கும் அத்தியாவசியமாக வேண்டி யிருக்கிறது. ஆணும் பெண்ணுங் கலந்து இன்புற்று வாழ வேண்டுமென்ற நோக்கத்தோடேயே இறைவன் இவ் வுலகத்தைப் படைத்திருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள், ஆணைப் பெண்ணும், பெண்ணை
ஆணும் சமமாகப் பாவித்து அன்பு பூண்டு ஒருவர் மற்றொருவர்க்கு உதவியாக இருந்து உலக இன்பங்களை யனுபவித்து வந்தனர். அக் காலத்தில், மக்களில் ஆணாகப் பிறந்தவர்களெல்லாம் உயர்ந்தவர்களென்றும், புண்ணியஞ் செய்தவர்களென்றும், பெண்களெல்லாம் இழிதகைமை யுடையவர்களென்றும், பாவப் பிறவிகளென்றும் கருதும் வழக்கமில்லை.

பண்டைக் காலத்துள்ள மக்களில் தன்னல மிக்க ஒரு சாரார் தோன்றிப் பெண்கள் ஆண்மக்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்யும் அடிமைகளென்றும், காமக் கழிவிடங்களென்றும், பிள்ளை பெறும் இயந்திரங்கள் என்றும் எண்ணத் தலைப்பட்டு, அவர்களுக்குச் சமத்துவம் தருவதை யொழித்து, உரிமைகளை யெல்லாம் பறிமுதல் செய்து, அவர்களைத் தங்களுக்கு அடங்கி நடக்கும்படி செய்தற்குரிய கொடிய கட்டுத் திட்டங்களை யெல்லாம் விதித்து அடிமைகளாக நடத்தத் துவங்கிய பின்னரே, மக்களிடையே பெண்களை இழிவாக எண்ணும் எண்ணம் வேரூன்றலாயிற்று. மேலும், அச் சுயநல மிக்க ஆடவர்கள், ஆண் மக்கள் வன்மையான தேகத்தைப் பெற்றிருத்தலால், அவர்கள் வல்லியற்கைக் கேற்றவாறு, வெளியே சென்று நிலத்தைப் பண்படுத்தி உழவு வேலை செய்தலும், அதனா லேற்படும் விளைபொருள்களை விற்றலும், போர் செய்தலும்
முதலானவைகளைச் செய்தும், பெண் மக்கள் மெல்லிய உடம்பை யுடையவர்களா யிருந்தமையால், அம்மெல் லியற்கைக் கியைய வீட்டிலிருந்து, கல்வி கற்றல், நூல் நூற்றல், துணி நெய்தல், சமையல் வேலை செய்தல் முதலானவைகளைச் செய்தும் வந்ததைக் கண்டு, அவர்கள் உடற்கூற்றுக் கேற்றவாறே ஆண்களுக்குத் திடசித்தமும், பெண்களுக்குச் சபல சித்தமும் இருக்கிறதென்று அறிவிலும் பேதத்தைக் கற்பித்து, ஆண்கள் ஒன்றிலேயே உறைத்து நிற்பார்களென்றும், பெண்கள் மனம் கணத்துக்குக் கணம் மாறக் கூடியதென்றும், ஆயிர மனமுடையவர்க ளென்றும், ஆதலால் அவர்களிடத்துக்
கற்பு கிடையா தென்றும் போலிக் கொள்கைகளைப் பரப்பலாயினர்.

இச் சுயநலப் புலிகளது போலிக் கொள்கையை அடிப் படையாகக்
கொண்டே பல நூல்கள் செய்யப்பட்டன. அந் நூல்களை இயற்றியவர்க
ளெல்லாம் பெரும்பாலும் துறவிகளே யாவர். எடுத்துக் காட்டாகச் சில
செய்யுள்களைக் காண்போம்.

'பெண்ணெனப் படுவ கேண்மோ!

பீடில; பிறப்பு நோக்கா;

உண்ணிறை யுடைய அல்ல;

ஓராயிர(ம்) மனத்த வாகும்

எண்ணிப் பத்து அங்கை யிட்டால்

இந்திரன் மகளும் ஆங்கே

வெண்ணெய்க் குன்று எரியுற்றாற்போல்

மெலிந்து பின்னிற்கும் அன்றே.'

 

'அன்பு நூலாக இன்சொல் அலர்தொடுத்து அமைந்த காதல்

இன்பஞ்செய் காமச்சாந்திற் கைபுனைந்து ஏற்றமாலை

நண்பகற் சூட்டிவிள்ளாது ஒழுகினும் நங்கைமார்க்குப்

பின்செலும் பிறர்கண் உள்ளம் பிணையனார்க் கடியதன்றே.'

 

'ஏந்துஎழில் மிக்கான் இளையான் இசைவல்லான்

காந்தையர் கண்கவர் நோக்கத்தான்- வாய்ந்த

நயனுடை இன்சொல்லான் கேள் எனினும் மாதர்க்கு

அயலார்மேல் ஆகும் மனம்.''

 

என்று முறையே திருத்தக்க தேவரும், குமரகுருபர சுவாமிகளும் பாடியிருக்கின்றனர். ஆனால், தமிழ் மறையை அருளிய திருவள்ளுவ நாயனார் போன்ற இயற்பாவலர்கள் பெண்களைத் தெய்வமாகப் போற்றுகிறார்களே யன்றி, இவ்வாறு இழித்து ஓர் இடத்திலேனுங் கூறவில்லை. ஆனால் இப்போலிக் கொள்கையாகிய விஷம் தலைக்கேறப் பெற்ற ஒரு சிலர், திருவள்ளுவர் போன்றவர்கள் பரத்தைகளைப் பற்றிக் கூறும் பாக்களைப் பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் சம்பந்தப்படுத்திப் பொருள் கூறிப் பல மக்களைக் கெடுக்கின்றனர். அந்தோ! அத் தீவினையை என்னென்பது!

சமீபத்தில் ஒரு நாள் மாலை நான் கடற்கரையில் ஒரு தமிழ்ப் புலவருடன் உரையாடிக்கொண் டிருந்தபோது, அவர் பின்வரும் வில்லி பாரதச் செய்யுளைக் கூறி அதற்குப் பொருள் கூறுமாறு கேட்டார்:

'ஐம்புலன் களும் போல் ஐவரும் பதிகளாகவும் இன்னம் வேறொருவன்

எம்பெருங் கொழுந் வைதற்கு உருகும் இறைவனே எனதுபே ரிதயம்;

அம்புவிதனிற் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவரிலாமையின் அல்லால்

நம்புவதற்கு உளதோ என்றனள் வசிட்டன் நல்லற மனைவியே யனையாள்.’

 

இப்பாடல் மகாபாரதம் ஆரணிய பருவம் பழம் பொருந்து சருக்கத்தில் உள்ளது. பாண்டவர்கள் வனத்தில் இருக்கையில் ஒரு நாள் துரோபதையின் வேண்டுகோளின்படி விஜயன், அமித்திரன் என்னும் முனிவன் உண்ணும் நெல்லிக் கனியை மரத்தினின்றும் பறித்து அவளுக்குக் கொடுத்தான். பின்னர், அக்கனி மேற்படி முனிவனுக்கு உணவாக அமைந்தது. என்று தெரிந்த அர்ச்சுனன், விஷயத்தைத் தரும் புத்திரனுக்குச் சொல்லவும், அவர் முனிவன் சாபத்துக்கு ஆளாக நேருமே என அஞ்சிக் கவலையுற் றிருக்குங்கால், நகுலன் யோசனைப்படி ஸ்ரீ கிருஷ்ணபகவானை வரவழைத்து, அதற்குப் பரிகாரம் தேடும்படிப் பாண்டவர்கள் வேண்டினர். அப்போது ஸ்ரீ கிருஷ்ணன், பாண்டவர் ஐவரும், துரோபதையும் தங்கள் உள்ளத்தில் உள்ளதை உண்மையாக உரைத்தால், அப்பழம் மரத்தில் சென்று பொருந்தும் என்று சொன்னான். அவ்விதமே பாண்டவர்கள் தங்கள் மனத்தி னியல்பைக் கூறினர். பின்னர், துரோபதை தன் மன நிலையை விரித்துரைத்
தாள். அச்சமயம் அவள் உரைத்த பாடலே மேற் குறிக்கப்பட்ட செய்யுளாகும்.

      இப்பாடலுக்கு யான், 'வசிட்ட முனிவனது தரும பத்தினியாகிய அருந்ததியை ஒத்தவளான துரோபதை, 'இறைவனே! மானிடர்களுக்கு மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலன் இருப்பது போல, எனக்குப் பாண்டவர் ஐவரும் தலைவர்களாக இருக்கவும், மற்றும் ஒருவன் எனக்குக் கணவனாக வேண்டுமென்று என் உள்ளம் உருகுமோ? ஒருக்காலும் உருகாது. ஆனால், இப்பூமியில் பெண்ணாய்ப் பிறந்த எத்தகைய கற்பரசியையும், அவளுடைய அழகு கருதி விரும்பாத ஆண்மக்கள் இல்லை யாதலால் சந்தேகத்துக்கு இடந் தருகிறது என்று கூறினாள்' என்று பொருள் கூறி, பேரழகுடைய பெண்ணொருத்தி யிருப்பாளாயின், அவள் பிற ஆடவரை மனத்தாலும் எண்ணாத கற்பரசியாயினும், அவளைப் பார்க்கும் ஆண்மக்கள் அவளை எவ்வாறாயினும் அடைய வேண்டுமென்று விரும்புகின்றனர் என்ற உலக நடையையும் விவரித்து உரைத்தேன்.

      இதைக் கேட்ட அப்புலவர் நகைத்து, 'இப் பாட்டிற்கு நீர் உரைத்தது சரியான பொருளன்று: நீர் இளைஞ ராதலால் பெண்டி ரியல்பை யுணராது இப்பொருள் கொண்டீர்! நான் சொல்லுகிறேன் கேளும்: வசிட்டன் பன்னியாகிய அருந்ததியை ஒத்த கற்புடைய துரோபதை, 'இறைவனே! என் மனம் ஐம்புலன்களைப்போல ஐந்து கணவன்மா ரிருந்தும் இன்னும் வேறொருவன் என் கணவனாவதற்கு உருகுகின்றது. ஏனெனில், இவ்வுலகில் பிறந்த பெண்கள் எவரையும் திருப்தி செய்யக்கூடிய ஆடவர் இல்லையாதலால், அவர்களை நம்புவதற்கில்லை' என்று கூறினாள்' என்று உரைத்தார். மேலும் அவர், “பெண்கள் சபல சித்த முடையவர்கள், இத் துரோபதையும் பாண்டவர்களை யல்லாது கன்னனையும் விரும்பி யிருக்கிறாள்: அவர்கள் சமூகக் கட்டுத் திட்டங்களுக்கு அடங்கி நம் ஆளுகையில் இருக்கிறார்கள்; இல்லையேல் அவர்கள் நம்மை ஏய்த்து விடுவார்கள்' என்று வியாக்கியானங் கூறினார். இதைக் கேட்டுப் பொறாத நான், 'ஆசிரியர் வில்லிப்புத்தூரார் கருத்து தாங்கள் கூறும் பொருளுக்கு ஏற்புடைத்தாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை. அவர் இயற்றியுள்ள அப் பாடலின் போக்கைப் பார்த்தாலே தங்கள் கொள்கைகளுக்கு முரணா யிருக்கிறது. 'ஐம்புலன்களும்போல் ஐவரும் பதிகளாகவும்' என்ற சொல்லமைப்பும், இன்னம் வேறொருவன் எம் பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும்? எனது பேரிதயம்' என்ற சொல்லமைப்பும் துரோபதையின் தூய மனத்தைக் காட்டும் பளிங்காக அமைந்திருக்கிறது. 'பதிகளாகவும்' என்ற சொற்பிரயோகத்தை ஆழ்ந்து நோக்குங்கள். தாங்கள் சொல்லும் வண்ணம் துரோபதையின் மனம் வேறொருவனைக் கணவனாக விரும்புமாயின் அது 'பேரிதய' மாகாது? அவ்வாறு கண்டவர் மீதெல்லாம் மனதைச் செலுத்துபவளாயின், துரோபதையை ஆசிரியர், வசிட்டன் நல்லற மனைவியே யனையாள்' என்று கற்பரசி யெனச் சிறப்பித்துக் கூறுவரோ? ஆதலால் தாங்கள் துரோபதையை இழித்துக் கூறிப் பெண்ணுலகை மாசு படுத்துவது பொருந்தாது?' என்று வாதாடினேன்.

      எனினும், அப்பெரியார் அதை யொப்புக் கொள்ளாது அவர் கொள்கைக்கு அரண் செய்வனவற்றை யெல்லாம் எடுத்து வாயோயாது சோணாமாரிபோல் பொழிந்தார். இதனால் என் மனமும் மருண்டது. அப் பாட்டுக்கு அவர் கூறும் பொருளும் இருக்குமோ என்றும் ஐயுறலானேன். எனவே, நமது, 'ஆனந்தபோதினி' வாயிலாக வெளியிட்டால், உண்மை யுணர்ந்து தெளியலாமென்று இதில் இது பற்றி வரையலானேன். நுண்மாண் நுழைபுலமுடைய பெரியார்கள் இவை யனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து பொருள் இதுவென நாடிப் புகழெய்துமாறு எதிர்விழைக்கிறேன்.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஜுன் ௴

 

 

 

No comments:

Post a Comment