Sunday, September 6, 2020

 

மகளிரைப் பழிப்பது பற்றி

(வித்துவான். எம். சாம்பசிவம்- இரட்டணை. ஆர். ருக்மணி.)

மகளிரைப் பற்றியும் மகளிர் தன்மையைப் பற்றியும் அன்பர் - துரை, விரிவாகக் கூறியுள்ளா ராதலின், அவற்றை விடுத்து, பாட்டின் உரையையும், காரணத்தையும் நோக்குவாம்.

“ஜம்புலன் களும்போல் ஐவரும்பதிகள் ஆகவும்

இன்னம் வேறொருவன்

எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும்,

இறைவனே! எனது பேரிதயம்;

அம்புவிதனில் பெண் பிறந்தவர் எவர்க்கும்

ஆடவர் இலாமையின் அல்லால்

நம்புதற்கு உளதோ? என்றனள், வசிட்டன்.

நல்லற மனைவியே அனையாள்.",

 

இப் பாடலின் சந்தர்ப்பம் முதலியவை அன்பர் - துரை, முன் இதழில் குறித்துள்ளார்; காண்க.

இப் பாட்டிற்கு உரைகூறப் புகு முன் சிலவற்றைச் சிந்தித்துக்கொள்ள வேண்டி இருக்கின்றன. அவையாவன: இப் பாட்டு, ஆரியரின் கதையில் உள்ளது; பூரியரின் 'கற்பு' முறைக்கும், தமிழர் “கற்பு” முறைக்கும் அதிக வேறுபாடு உண்டு; ஆதலின், ஆரிய நாகரிகத்தோடு பொருத்தி, இப் பாட்டைப் பொருள் கொள்ள வேண்டும்; பெண்களுக்கும் காதலிக்குங் குணம் உண்டு, என்பன போன்றவை.

ஒரு பெண்ணை, வேறு குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் அனைவரும், இல்லாளாக ஏற்று, வாழ்க்கை புரிதல் ஆரியர் வழக்கம்! நாகரிகம்!! ஆரிய நாகரிகத்தையும் மொழியையும், இலக்கணத்தையும் பின் பற்றியுள்ள மலையாளிகளிடத்திலேயும் இன்று அவ் வழக்கத்தைக் கண் கூடாகக் காணலாம்.

கன்னன், பாண்டவரின் சக உதிரன்! அதாவது, உடன் தோன்றல். பாண்டவருடன் கன்னன் வாழ்க்கை நடத்தாத ஒரே காரணத்தைக் கொண்டு, 'அவன், வேறு' என்று பிரிப்பது நியாயமல்ல. ஆதலினால் கன்னன், துரோபதைக்குக் கணவனாக உரியவன்-உரிமை யுடையவன். ஆனால், 'கன்னன், பாண்டவரின் சக உதிரன் என்று, அப்பொழுது யாருக்கும் தெரியாதே' என்பது, நல்ல சமாதானமு மாகாது.

'உண்மைக் காதல்', தெய்விகக் காதல்' முதலிய சொற்றொடர்களை நாம் காணுந்தோறும் நாம், 'காதல் என்பது தெய்விக் சக்தியின் துணையால் ஏற்படுவது போலும்' என்று கருதுகிறோம். எனினும், காதல், பலரிடத்து வைக்குந் தன்மையது அன்று; பலரிடத்தும் வைக்கும் நிலைக்குக் காதல் வருமாயின், அது, காதல் எனப் படாது; காமமே யாம்.

ஒரு பெண் ஒரு ஆடவனைக் காதலிக்கிறாள்; காதலித்தாலும் பல காரணங்களால் சில சமயங்களில் காதலனையே மணந்து கொள்ள முடியாமல் – வேறொருவனுக்கு வாழ்க்கைப்பட் நேர்ந்து விடுதல் உலகியலாகத் தற்போது நாம் கண்டு வருகிறோம். நிர்ப்பந்தத்தின் மேல் சமூக சட்ட திட்டங்களுக்கு அடங்கி, தன் காதல் நிலைமைகளைப் பெண், அகத்திலேயே அடக்கிக்கொள்ள நேரிடுகிறது.

தெய்விகத்தால் ஏற்பட்ட அந்தக் காதல், 'வேறிடத்தில் வாழ்க்கைப்பட்டு விட்டாள்' என்னும் காரணத்திற்காக அழிந்து போவதில்லை; எனினும், இருதயத்தின் ஓர் மூலையில் அது பெட்டிப் பாம்புபோல் அடங்கிக் கிடக்கிறது. தெய்விகம் அழியுமா? அதனால்.

அப்படித்தான் கன்னன் மீது துரோபதைக்குத் தெய்விகமாக ஏற்பட்டு, உள்ளத்திலேயே அடங்கிக் கிடந்தது, காதல். கன்னன் ஒரு சமயம் தேரின்மேல் வரும்போது கண்டு, துரோபதை காதலுற்றாள் என்று நல்லாப்பிள்ளை பாரதம் கூறுகிறது. துரோபதைக்குக் கன்னன், கணவனாகும்-காதலனாகும் உரிமையுடையவன் என்பது தெய்விகத்திற்குத் தெரியும். தெய்விகத்திற்குந் தெரியாதெனின், காதலும் தெய்விகமானதே. அல்ல; உலக நிகழ்ச்சிகளும், தெய்விகமானவை யல்ல என்று தான் சொல்ல வேண்டும்.

கன்னனைக் காதலித்தாள் என்ற காரணத்தினால், துரோபதையைக் 'கற்பிழந்தவள்' என்று கூறுவதற்கில்லை. ஏனெனின், ஒரு வயிற்றிற் பிறந்த சகோகரர்களை ஒருத்தி ஏற்று கற்புடையளாக வாழலாம் என்பது தான் ஆரிய நாகரிக மாயிற்றே! இக் கருத்தை விரிவாகக் காண விரும்புவோர், திரு. மறைமலை யடிகளாரின் 'தமிழர் மதம்' என்னும் நூலிலே காண்க.

ஒருத்தி, தன் காதலன் ஒருவனையே தெய்வமாகக் கொண்டு, கற்பு நெறியோடு வாழ்வது தமிழர் நாகரிகம். இந்தத் தமிழர் நாகரிகமே சிறந்தது என்று கண்ட் ஒரு சிலர், தம் பழைய நாகரிகமாகிய ஒருத்தி பலரை மணப்பது, போன்ற தீய ஒழுக்கங்களை விட்டுத் திருந்தி யுள்ளார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும், தமிழ் நாட்டவனும் நினைந்து, பெருமை கொள்ளக்கூடிய தாகும். ஆகவே, ஆரிய நாகரிகத்தைத் தம் நாகரிகமாகக் கொண்டு, தமிழர் வருந்துவதில்--புழுங்குவதில் பயனில்லை.

மேனாட்டு நாகரிகத்திலே-ஒரு பெண் பலரைக் காதலிக்கலாம் என்று இருந்தால், அதைக் கண்டு பெண்களுக்கு மாசு ஏற்பட்டுப் போயிற்றே என்று சொல்வதற்கில்லை; அது தான் அவர்களின் தாராள தலை சிறந்த நாகரிக மாயிற்றே! அந்த நாகரிகத்
தையும், தமிழர் நாகரிகத்தையும் ஒத்திட்டுப் பார்ப்பது வீண்தானே! எந்த நாகரிகத்தால் எந்தப் பெண் எப்படி கற்பிழந்தாலும், அது தமிழர் பெண்ணுலகை மாசுபடுத்திய தாகாது என்பது எங் கொள்கை,

கன்னனை விரும்பிய இதயத்தைப் பேரி தயம்' என்று, துரோபதை கூறிக்கொண்டது ஓர் காரணம் பற்றியே. ஓர் இதய மலரில் ஒரு காதல் நாய்கனே இருக்க உரியன்; தன் இதயத்தில் அவள் ஐவருக்கு இடந்தர வேண்டிய நிர்ப்பந்தம் ஆரிய நாகரிகத்தால் ஏற்பட்டது. ஏற்பட்டும், கன்னனுக்கும், மேலும், தன் இதயத்தில் விசாலமான இடம் இருப்பதாக அவள் வாக்கு, இன்னம் வேறொருவன் எம்பெருங் கொழுநன் (கணவன்) ஆவதற்கு உருகும்' என்று தெரிவிக்கிறது. ஆகவே அறுவருக்கு ஓர் இதயம், இடங் கொடுக்குமானால், அந்த இதயம், பேரிதயம் என்று கூறப்படாமல், வேறு எப்படித்தான் கூறப் படலாம்?

அதனால் தான் அவள், தன் இதயத்தைப் பேரிதயம் என்று ஒத்துக் கொண்டாள், தானாகவே. அப்பொழுதே, 'கன்னனும் பாண்டவரின் சகோதரனே' என்று அவளுக்குத் தெருந்திருந்தால், ஆரியரின் கொள்கைப்படி துரோபதையின் இதயம், 'அளவான' இதயம் என்று தான் சொல்லியிருப்பாள். கன்னன் தான் அலாதிப் பேர்வழி என்று நினைத்துக் கொண்டிருந்தாளே! அலாதிப் பேர்வழிக்கு இடங் கொடுக்கும் இதயத்தை பேரிதயம் என்று ஒத்துக் கொன்டது, துரோபதையின் உளத் தூய்மையை விளக்குகிற தல்லவா?

இந்த உளத்தூய்மையைத்தான் - ஆரியர் 'கற்பு' என்று கொண்டனரோ! 'அருந்ததி போன் றவள், துரோபதை' என்று கூற என்ன காரணம், வேறு இருக்க முடியும்? அல்லது ஆசிரியர் அப்படிக் கூறியதற்கு ஆரிய நாகரிகக் கற்பு முறைக்குச் சிறிதும் வழுவாமல் கன்னனைச் சேர்த்து ஒரு வயிற்று அறுவரை உளங் கொண்ட-வரம்பு கடவாத தன்மையைத்தான் காரணமாகக் கூறவேண்டும்! இல்லையா?

இக் கொள்கை தவறெனின், ஆரியர். நாகரிகம் தமிழர்களுக்கும் ஓர் வகையில் உடன்பாடு என்றுதான் பொருள்படும்; ஆழ்ந்து நோக்க.

எனவே, இந்த முறையில் மேற்கூறிய செய்யுளுக்குப் பொருள் கூற முற்படின், அன்பர்-துரை கூறிய உரையும், கடற்கரையில் தாம் கண்ட தமிழ்ப்புலவர் கூறிய உரையும் கருத்து மாறானவை என்று புலப்படும். நாங்கள் கூறும் உரை பின் வருமாறு.

'வதிட்ட முனிவனின் நல்ல தரும பத்தினியாகிய அருந்ததியை ஒத்த துரோபதை, 'இறைவனே! (அன்பர் துரை, ஐம் புலன் என்பதற்கு மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஜம்பொறிகளைப் பொருளாக மயங்கிக் கூறியுள்ளார். ஐம்பொறிகளால் அறியக் கிடப்பன ஐம்புலன்கள்.) மக்களுக்குக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று (சுவைகளின் வகை) அறியும் ஐம்புலன்கள்போல், எனக்குப் பாண்டவர் ஐவரும் தலைவர்களாக இருக்கவும் (ஐந்து பொறிகளாலும் ஐந்துவித சுவைகளை. அதாவது புலன்களை அனுபவிப்பதுபோல் இந்த ஐவரிடத்தும் ஐந்து விதமான சுவைகளைக் காண்கிறேன். கண்டாலும் அதோடு திருப்தியடைய முடியவில்லை என்கிறாள், திரோபதை. காரணம், தெய்விகமே அவளுரிமையை அவளுக்குச் சேர்த்துவிட பாடுபடுகிறது போலும்.) மற்றும் ஒருவன் (கன்னன்) - எனக்குக் கணவனாக! வேண்டு மென்று என் பெரிய உள்ளம் நினைந்து உருகுகின்றது. ஏனென்றால், இந்த அழகிய பூமியில் பெண்ணாய்ப் பிறந்தவர் யாருக்கும் காதலன் என்பவன் ஒருவன் உண்டு. ஆதலால், பெண்கள் யாரிடமும் காதல் வையார் என்று நம்புவதற்கு என்ன இருக்கிறது? என்று கூறினாள் என்பதாம்.

[ஆடவன்=ஆண் தன்மையில் சிறந்தவன். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொருவர் தான் ஆண். தன்மையில் சிறந்தவராகக் காணப்படுவர். அங்ஙனம் காணப்படும் போது தான் பெண்கள், காதல் வைக்க முடியும். ஓர் பேடியைக் கண்டு காதலித்ததாக எங்குங் காணோம். ஆடவர்' என்ற சொல்லைத் துரோபதை, ‘காதலர்' என்ற பொருளில் உபயோகித் துள்ளதைக் காண்க. இலாமையின் அல்லால் = இருப்பதால்; வராமல் போகான்=வருவான்' என்பது போலப் பொருள் கொள்க.]

இதனால், மணமான ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு காதலன் இருப்பான் என்பதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் காதலன் யார் என்று அறிந்து அந்தக் காதலனுக்கே மணமுடித்துத் தருவது உசிதம். இந்த உசிதமான கொள்கை தான் பழந்தமிழ
ருடையது. காதலனே கணவனானால் காதலிக்குக் கண் வேறிடஞ் செல்ல நேரிடுமா? அதனால் தான் தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள் தமிழர்கள். இப்பொழுது தான் தூய வாழ்க்கை என்பது அபூர்வமாய்ப் போய்விட்டதே!

இச்செய்யுளுக்கு இப்படிப் பொருள் கொண்டா லொழிய மரத்தில் பழம் பொருந்துவதற்கு நியாயமில்லை. ஏனென்றால், உள்ளத்தில் உள்ளதை, உண்மையாக உரைக்க வேண்டிய விடத்தில் 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல, 'யான்
வேறொருவனை - விரும்புவேனோ?' என்று எதையோ உளறினாளானால் துரோபதை, பழம் மரத்தில் போய் எப்படி ஒட்டிக் கொள்ளும்? ஆகவே உள்ளத்தில் இருந்த 'மறை'யைத் துரோபதை கூறிவிட்டாள்; பழமும் மரத்தில் சென்று ஒட்டிக் கொண்டது.

திருத்தக்க தேவரும், குமரகுருபர சுவாமியும் பெண்களை இழித்துப் பாடியதின் இரகசியம் வேறொன்றும் இல்லை; ஆரிய நூல்களிலும், சம்பிரதாயங்களிலும் அவர்கள் அதிகம் இலயித்துப்போய்க் கிடந்தார்கள்; தமிழ்ப் பெண்களின் ஒழுக்க நெறியை மறந்தார்கள்; அன்பர்- துரை கூறுவதுபோல் மனம் போனபடி, போலிக் கொள்கைகளைத் தம் நூல்களில் விளாசிக் கட்டிவிட்டார்கள். குமரகுருபரர் தான் வடநாட்டிற் சென்று வாழ்ந்து வந்தவராயிற்றே; அந்த ஓதம், அவருக்கு உறையாமல் போய் விடுமோ! ஏன்? இப்போதுள்ள சில பிரபல தமிழ்ப் புலவர்களே-இந்த இருபதாம் நூற்றாண்டில்-ஆரிய மோகம் உடையவர்களா யிருக்கும்போது, ஆரியர் ஆதிக்கம் தமிழ்நாட்டில் மிஞ்சியிருந்த காலத்தில் புலவர், ஆரிய மோகங் கொள்ளாமல் இருந்திருக்க முடியுமா?

தெய்வத் திருவள்ளுவனார் இயற்றிய செழுந்தனித் தமிழ் மறையிலே பரத்தையரைப் பற்றிக் கூறும்போது, 'ஒரு தலைவனுக்குப் பரத்தையாய் அமைந்தவள், மற்றொருவனின் மனைவி!' என்று, எங்கும் குறிப்பாகக் கூடக் கடறினாரில்லை. ஆதலின், பரத்தை என்பவள், “பொதுமகள்', 'விலைமகள்' என்று அறியக் கிடக்கின்றது; எனினும், அந்தப் பொதுமகளிரும், விலைமகளிருங் கூட்த் தமிழ்நாட்டில் ஒருவனையே பெரும்பாலும் அணைந்திருந்தார்கள் என்று பிற தமிழ் நூல்களும், திருக்குறளும் வெளிப் படையாகப் பல விடங்களில் விவரிக்கின்றன. இந்த காரணங்களாளெல்லாம், பிற்காலத்தி லெழுந்த-ஆரிய நாகரிகத்தைக் குறிக்கும் தமிழ்ப்பாடல்களிலுள்ள-பெண்களைத் தாழ்த்தியுரைக்கும் கருத்துக்களைக் கொள்வதற்கில்லை என்று முடிக்கிறோம்.

ஆனந்த போதினி – 1943 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment