Sunday, September 6, 2020

 

மடங்களின் கடமை என்ன?

நம் நாட்டில் மத ஸ்தாபனங்கள் பலவுண்டு. சமணப் பள்ளிகள், பெளத்த மடங்கள், சங்கரர் மடங்கள், சைவ மடங்கள், மடங்கள் முதலியவை குறிப்பிடத் தக்கவை. சைவ மடங்களில் தமிழ் நாட்டில் திருவாவடுதுறை மடம், தருமபுர மடம், திருப்பனந்தாள் மடம் ஆகிய மூன்று மடங்கள் புராதனமானவையும் பிரபலமானவையு மாகும் பொதுவாக, இம் மத ஸ்தாபனங்கள், மக்களின் நல் வாழ்வுக்கு வழிகாட்டி யுதவுவதற்காகவே ஏற்பட்டன. அதிலும், மேற்குறித்த சைவ மடங்கள் மக்களுக்கு நல்லறிவு வூட்டி நல் வாழ்வு வாழ்வதற்கு ஏதுவான சமய அறிவைப் பரப்புவதற்கும், தமிழ் மொழியை வளர்ப்பதற்குமே முக்கியமாக ஏற்பட்டன. ஆனால், அம் மடங்கள் இப்போது இவ்வுயர் கொள்கைகளை நிறைவேற்றும் முறையில் சேவை புரிகின்றனவா? என்றால் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லவேண்டும். சைவ மடங்கள் என்று பெயரளவுக்குத்தான் அவை இருந்து வருகின்றன. இம் மடங்களின் நிர்வாக ஊழல்களின் காரணமாக, அடிக்கடி நீதிமன்றங்களில் விவகாரங்கள் நடந்து வருவதை நாம் பார்த்து வருகிறோமே யொழிய, நல்ல காரியங்கள் செய்வதை நாம் அதிகமாக காணவில்லை. இவற்றையெல்லாம்
பார்க்கும்போது, இம் மடங்கள் இருப்பதைவிட, இல்லாமலிருப்பதே மேல் என்று எண்ணவேண்டி யிருக்கிறது. கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் நாடுகளில் மட்டுமன்றி, வெளி நாடுகளிலும் செய்யும் வேலைகளைப் பார்த்தால் பிரமிக்கத்தக்க விதமாக இருக்கிறது. பாதிரிமார்கள் தங்கள் கிறிஸ்தவ மதக்கொள்கைகளை உலகமெங்கும் பரப்ப வேண்டுமென்று வேலை செய்தாலும், அம்மதப் பிரசார வேலையுடனேயே மக்களுக்கு
நலன் பயப்பதான காரியங்களையும் செய்து வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தி மக்களுக்குக் கல்வி யறிவைப் புகட்டுகிறார்கள். ஆஸ்பத்திரிகள் நிறுவி, நோயால் வாடும் மக்களுக்குத் தகுந்த சிகிச்சை செய்வித்துக் குணப்படுத்துகிறார்கள். நம் மடாதிபதிகள் இவ்வகையான சேவைகள் ஏதாயினும் செய்து வருகிறார்களா என்று நாம் கேட்கிறோம்.
கிறிஸ்தவ மிஷனரிகளைப் பின்பற்றி நம் நாட்டில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் ஆங்காங்கு பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் முதலியவைகளை ஏற்படுத்தி வேலை செய்துகிறது. சமீபத்தில் ஏற்பட்ட ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் கூட ஜன சமூகத்துக்கு நன்மை தரத்தக்கதான வேலையை செய்து வருவதைக் காணும்போது, பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் மடங்கள் தத்தம் கடமையைச் செய்யாமலிருந்து வருகின்றன என்றால், அதை என்னென்பது! 'நாங்கள் சமய நூல்களை வெளியிட்டு வழங்கி வருகிறோம்; தமிழ் மொழி பயிலும் மாணவர்களுக்குப் பலவித பரிசுகள் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம்' என்று திருப்பனந்தாள் மடத்தாரும், திருவாவடுதுறை மடத்தாரும் கூறலாம். அவை போதுமா என்பதுதான் நம் கேள்வி. இம் மடங்களுக்கு உள்ள செல்வத்தைக் கொண்டு எவ்வளவோ செய்யலாமே!

சமீபத்தில் தருமபுரம் மடத்தின் இருபத்து நான்காவது ஆதீன கர்த்தாவாகிய ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய ஸ்வாமிகளின் பத்தாவது ஆண்டு ஆட்சி விழா
நடை பெற்றது. தருமபுரம் சைவசமய சந்தான குரவர்களில் முதல்வராகிய மெய்கண்ட தேவர் பரம்பரையில் உதித்த சைவ சமயாசிரியர் வாழ்ந்த இடம் எனக் கூறப்படுகிறது.
குருஞான சம்பந்தர் என்பவரே இந்தத் தருமபுர மடாலயத்தை ஏற்படுத்தினார், அவர் முதலில் ஒரு சிறு ஆசிரமமாகக் கட்டி ஸ்தாபித்த இத் தருமபுர மடம், அவர் பின் வந்தவர்கள் முயற்சிகளால் படிப்படியாகப் பலப்படுத்தப்பட்டு இப்போதுள்ள செல்வாக்கான நிலையை யடைந்திருக்கிறது. இம் மடத்தின் ஆதிக்கத்தில் இப்போது இருபத்தேழு தேவஸ்தானங்கள் இருக்கின்றன. ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்தபரமாசாரிய சுவாமிகள் தருமபுர மடத்தின் ஆதீன கர்த்தராக வந்த பிறகு பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீ மகா சந்நிதானம் தேவார பாடசாலை யொன்றையும் வேத சிவாகம பாடசாலை யொன்றையும் ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.
பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இருக்க இடமும், உண்ண உணவும் அளிக்கப்பட்டு வருகின்றனவாம். சமய நூல்களை வெளியிடுவதற்கென்று ஞான சம்பந்த அச்சகம் என்று ஒரு பதிப்பகமும், பிரசுர இலாகாவும் இருக்கின்றனவாம். சைவ சமய உண்மைகளைப் பரப்புவதற்காக 'ஞான சம்பந்தம்" என்ற பெயரோடு ஒரு மாதப் பத்திரிகை சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு வெளிவருகிறது. மடத்தின் பிரசுர இலாகா இது வரை இருபத்தெட்டு சமய நூல்களை வெளியிட்டிருக்கின்றதாம். இவை இலவசமாகவும், குறைந்த விலைக்கும் கொடுக்கப்பட்டு வருகின்றனவாம். மகா சந்நிதானம் தாழ்த்தப்பட்ட மக்களின் உபயோகத்துக்காகப் பல கிணறுகளைக் கட்டி உதவி யுள்ளார்களாம். அதுவன்றி, மக்களுக்குப் பயன் தரத்தக்க சகல ஸ்தாபனங்களுக்கும் ஸ்ரீ மகா சந்நிதானம் உதவி புரிந்து வருகிறார்களாம். திருப்பதியில் கீழ்த்திசைப் பல் கலைக்கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற மகா நாட்டுக்குப் பொருளுதவி புரிந்தார்களாம். சென்னைத் தமிழ்ச் சங்கத்துக்கு நன்கொடையளித்திருப்பதுடன், அதன் போஷகராகவும் இருந்து வருகிறார்கள். மற்ற மடாதிபதிகளைப் போலன்றி ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் எளிய வாழ்க்கையையே மேற்கொண்டிருக்கிறார்கள் என்றறிய மகிழ்கிறோம். இவ்விதம், மற்ற மடாதிபதிகளுக்கு வழி காட்டுவதுபோல, பல நல்ல காரியங்களைப் புரிந்து வரும், பண்டார சந்நிதி பட்டத்துக்கு வந்து பத்து ஆண்டு ஆன கொண்டாட்டத்தைக் கொண்டாடியது பொருத்தமானதே. இவ் விழாவை, திருவாங்கூர் திவான் ஸர்.ஸி.பி. இராமசாமி ஐயர் தலைமை வகித்து நடத்தி வைத்தது குறிப்பிடத் தக்கது.

“500 ஆண்டுகளுக்கு முன், தருமபுர மடம் எதற்காக நிறுவப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற, பல துறைகளில் மடத்தின் நிர்வாகம் அபிவிருத்தி யடைந்து வந்திருப்பதைக் குறித்துப் பாராட்டுகிறேன். இந்து மத தர்மத்தையும் சைவ சித்தாந்தத்தையும் பரப்புவதற்காகத்தான் மடங்கள் ஏற்பட்டிருக்கின்றன; ஆதலால், மடாதிபதிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடமையை உணர்ந்து நடக்கவேண்டும். கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தங்கள் மதாபிவிருத்திக்காக எவ்வளவு தீவிரமாகப் பிரசாரஞ் செய்து வருகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து நமது இந்துமதமும் தர்மமும் ஓங்கி வளரத் தீவிர
மாகப் பாடுபட வேண்டும்" என்று அவர் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்.

இரண்டாம் நாள் விழாவிற்கு இந்துமத பரிபாலன சபைத்தலைவர் ஸ்ரீ டி. எம். நாராயணசாமி பிள்ளை தலைமை வகித்தார். அவரும் தமது பிரசங்கத்தில், "காலவர்த்தமானத்துக்குத் தகுந்தபடி மடத்தின் நிர்வாகம் திருத்தியமைக்கப் பட்டு வருவதைக் குறித்துப் பாராட்டுகிறேன். சமூக வாழ்விலுள்ள குறைபாடுகளைப் போக்க முயல வேண்டும். இச் சைவ மடங்களுக்கும் சைவ மக்களுக்கும் சிறிதும் தொடர்பில்
லிருப்பதுபோல் ஒரு எண்ணம் இருந்து வருகிறது. சைவ மக்களும் மடங்களும் இணையவேண்டியது அத்தியாவசியம். மனித சமூகத்தைத் திருத்தியமைக்க நல்ல பயிற்சி
இன்றியமையாத தாதலால், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனைப் போல் மடத்துக்கு வருபவர்களுக்கு ஒரு உயர்தரப் பள்ளிக்கூடம் இருக்கவேண்டியது அவசியம்.
இந்த மடம் நம்முடையது என்ற உணர்ச்சி மக்களுக்கு ஏற்படவேண்டும். மடம் சமுகத்
தொண்டில் ஈடுபடவேண்டியது அவசியம்" என்று அரியயோசனைகள் கூறினார். இவ் விரு பேரறிஞர்களுடைய மொழிகளை மற்ற மடங்களைச் சேர்ந்தவர்களும் கவனிப்பார்களாக.
அப்போது தான் மடங்களின் தலையாய கடமை என்ன? என்பதை அவர்கள் நினைவூட்டிக் கொள்ள முடியும் என்று நாம் கூற விரும்புகிறோம்.

ஆனந்த் அபோதினி – 1943 ௵ - செப்டம்பர் ௴

 



No comments:

Post a Comment