Sunday, September 6, 2020

மணி நீர்ப் பொய்கை

 

மலர் நிறைந்த பொய்கையும் மீன் நிறைந்த வானமும் எஞ்ஞான்றும் கவிஞர் மனத்தைக் கவரும் இயற்கை யழகு வாய்ந்தனவாம். --காலையில் தோன்றும் கதிரவன் ஒளியால் களித்து விரியும் கமல மலரைக் கண்ட கவிஞர் உள்ளமும் கனிந்து மலர்வதாகும். இவ்வாறு இயற்கையழகினை மாந்திக் களித்த கவிஞர் மொழிகளை ஈண்டு ஆராய்வோம். ஒருநாள் காலைப் பொழுதில் நீலத்திரை விரித்த வானத்தே கதிரவன் ஒளி வீசி எழுந்தான். கண்களைக் கவரும் அழகு வாய்ந்த கமல மலர்களில் கள்ளுண்டு களிக்கப் போந்த கார் வண்டு பொய்கையின் மருங்கே சுற்றிச் சுழன்று இன்னிசை முரன்றது. கதிரவன் ஒளியால் கண்போல் மலர்ந்த பொய்கையின் நடுவே இதழ்விரிந்திலங்கிய கமல மலரில் ஓர் வெள்ளை அன்னம் இனி தமர்ந்திருந்தது. காலைப் பொழுதில் வீசிய இளங்காற்றின் இனிமையை நுகர்ந்த அவ்வன்னம் நறுமலர்ப் பள்ளியில் நன்கமைந்து தெள்ளிய திரைகள் தாலாட்ட இனிதுதுயின்றது. இவ்வாறு மெல்லிய சேக்கையில் துயின்ற அன்னத்தின் அழகினை,


"தாய் தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கினெறிய
வாய் பொன் அமளித் துஞ்சும் மணியார் குழவி போல
தோயும் திரைகள் அலைப்பத் தோடார் கமலப்பள்ளி
மேய வகையில் துஞ்சும் வெள்ளையன்னம் காண்மின்''


என்று சிந்தாமணி ஆசிரியர் செஞ்சொற்களாற் கூறி மகிழ்ந்தார். அன்பார்ந்த குழவியை அழகிய மஞ்சத்திலமைத்து அதன் துடையைத் தூயகைகளால் தடவித் துயில்விக்கும் அன்னைபோல், ஈரம் வாய்ந்த பொய்கை அன்னத்தை அலைகளால் துயில்வித்ததென்று கவி அமைத்துள்ள உவமை சால அழகியதாகும். தண்மை வாய்ந்த பொய்கை தலையாய அன்பு வாய்ந்த அன்னையை ஒத்தது. நற்றாமரைக்கயத்தில் நீங்காதுறைந்த நல்லன்னம் தாயினின்றும் பிரியாத சேயை ஒத்தது. இளங்காற்றின் இயக்கத்தால் எழுந்த இனிய திரைகள் அன்பினால் இயங்கும் அன்னையின் மெல்லிய கரங்களை ஒத்தன. அத்திரைகள்-தோய்தலால் அன்னம் அடைந்த இன்பம் அன்னையின் கைதோய்தலால் அருங்குழவி அடையும் இன்பம் போன்றது. இங்ஙனம் அன்னம் துயிலுதற் கமைந்த
நறுமணங் கமழும் நன்மலர்ச் சேக்கை மெல்லிய வெண்பட்டு விரித்த விழுமிய மஞ்சம் போன்றது என்று கவிஞர் எழுதி அமைத்த ஓவியம் கற்போர் மனத்தைக் கவர்வதாகும். மெல்லியல் வாய்ந்த மதலை இனிது துயிலும் வண்ணம் பொன்னாலாய அமளியில், நறு மணம் கமழும் பட்டாடை விரிக்கும் அன்னையே போல், அன்னத்தின் மென்மையை அறிந்த பொய்கை செம்மை மலரில் மெல்லிய இதழ்களை அடுக்கடுக்காய் விரித்து மகரந்தம் தூவி ஓர் அழகிய சேக்கை அமைத்தது. மெல்லிய சேக்கையில் மைந்தனை அமைத்த பின்னரும் அருகே அமர்ந்து அன்போடு தட்டித் துயில்விக்கும் அன்னை போல் அடுக்கடுக்காய் எழுந்து தாமரைப்பள்ளியைத் தட்டியசைத்துச் சென்ற தெள்ளிய திரைகளால் பொய்கை அவ்வன்னத்தைத் துயில்வித்தது. இவ்வாறு,


"மாசறத் தெளிந்த மணி நீர் இலஞ்சிப்
பாசடைப் பரப்பிற் பன்மலரிடை நின்று
ஒருதனி ஓங்கிய விரைமலர்த் தாமரை
அரச அன்னம் ஆங்கினி திருந்த"


அழகிய காட்சியை அருந்தமிழ்க் கவிஞர் ஓர் சிறந்த ஓவியமாக எழுதிப் போந்தார்.

 

இத்தகைய பொய்கையில் நீலத் துகிலுடுத்த ஓர் மங்கை நீராடக் சென்றாள். அப்பூம்பட்டாடையில் குயிற்றிய செம்மைசான்ற மணிகளில் கதிரவன் ஒளி வீசியபொழுது அம்மணிகளின் சுடர்கள் பொய்கையின் நீர்ப்பரப்பில் விழுந்து நெருங்கிப் பூத்த செந்தாமரையை நிகர்த்தன. அச்செஞ்சுடர்களைச் சேய்மையிற் கண்ட ஓர் மட அன்னம் அவற்றைச் செந்தாமரைப்பூ வென்று மயங்கி விரைந்தோடிச் சென்று ஆர்வத்தாற் கவ்விற்று. வண்ண மணிகளின் நிழலாய சுடர்கள் வாயிலகப்படாமை கண்டு தன் மடமையை நினைந்து நாணிய அன்னம் வந்த வழியே விரைந்து சென்றது. இத்தகைய இனிய இயற்கைக் காட்சியை


“நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள்
கோலச் சுடர் விட்டுமிழக் குமரி அன்னம் குறுகி
சால நெருங்கிப் பூத்த தடந் தாமரைப் பூவென்ன
வாலிச் சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின்''


என்று கவிஞர் நயம்பட எழுதிப் போந்தார். நீலத் துகிலின் இடையே இலங்கிய செம்மணி, நீலநிறம் வாய்ந்த இலைகளின் நடுவே விளங்கிய செம்மலர்போல் திகழ்ந்தது. ஒளியிற் சிறந்த அம்மணிகளின் மீது காலைக் கதிர்கள் வீசியபோது அம்மணியின் நிழல்கள் அருகே விழுதல் இயல்பேயாகும். நீராடப்போந்த மங்கையின் நீல வுடையில் மணிகள் நெருக்கமாகப் பதிந்திருந்தமையால் அவற்றின் நிழல்கள் நெருங்கி விழுந்து சால நெருங்கிப் பூத்த செந்தாமரையை நிகர்த்தனவென்று கூறுவது இயற்கைக்கு மிகப் பொருத்தமுடையதாகும். நாள்தோறும் நற்றாமரைக் குளத்கில் வாழ்ந்து செங்
கமல மலர்களைச் செவ்வையாய் அறிந்திருந்த அன்னமே, செம்மணியின் சுடர்களைச் செந்தாமரை என்று மயங்கிற்றென்றால் அம்மணிகளின் செம்மை சான்ற ஒளி சொல்லாமலே விளங்குமன்றோ? அச்சுடர்களைத் தாமரை என்று கருதி அன்னம் விரைந்து சென்று கவ்விய ஆர்வமும், அச்சுடர்கள் வாயிலகப்படாமையால் அழுங்கும் தோற்றமும் நகைக்சுவை பயப்பனவாகும். ஆகவே மங்கை புனைந்திருந்த மணியாடையின் சிறப்பையும், அம்மணிகள் கதிரவன் ஒளியால் சுடர் உமிழ்ந்த செம்மையையும், நீல நிறத்தினடுவே அமைந்த செஞ்சுடர்கள் தாமரை இலைகளின் நடுவே இலங்கும் மலர்போலிருந்த மாண்பையும் சிந்தாமணிக் கவிஞர் செவ்வையாக உணர்த்திப் போந்தார்.

 

இவ்வாறு நன் நீர்ப் பொய்கையில் இறங்கிப் புனலாடிய மங்கை அப்பொய்கையின் அழகையும், நீரின் தன்மையையும், இளங்காற்றின் இனிமையையும் நுகர்ந்து நெடுநேரம் கரையேறாது களித்து நீராடுவாளாயினாள். பொய்கையின் சுகத்தை அறிந்த மங்கை பசியையும் மறந்தாள். தன்னோடு பொய்கைவரையும் போந்து கரையில் காத்திருந்த கிளியையும் மறந்தாள். இவ்வாறு தன்னை மறந்து தாமரைத் தடத்தில் இன்புற்று விளையாடக்கண்ட இளங்கிள்ளை நெடுநேரம் பொறுத்திருந்து பசியின் கொடுமையால் மங்கையைக் கரையேற்றுதற்கு ஓர் சூழ்ச்சி செய்தது. தன்னைக்காதலித்து வளர்த்த தலைவியை நோக்கி " பாம்பு, பாம்பு” என்று பதறிக் குளறிக் கூறிற்று. பாம்பு என்ற சொற்கேட்ட மங்கை மனம் பதைத்துக் காதில் அணிந்த தோடு கழல் விரைந்தோடிக் கரை சேர்ந்தாள் என்று கவி கூறும் நயம் சாலச் சிறந்ததாகும்.


“தீம்பாற் பசியினிருந்த செவ்வாய்ச் சிறு பைங்கிளிதன்
ஒம்புதாய் நீர்குடைய ஒழிக்கும் வண்ணநாடிப்
பாம்பாலென்ன வெருவிப் பைம்பொற்றோடு கழலக்
காம் பேர் தோளி நடுங்கிக் கரை சேர்பவளைக் காண்மின்''


என்பது சிந்தாமணியாகும். பாலூட்டி வளர்த்த பசுங்கிளியின் பசியையும் மறந்து தலைவி நீராடத் தலைப்பட்டாள் என்றமையால் மனத்தை முற்றிலும் கவரும் மாண்பமைந்த பொய்கையின் பெருமை இனிது விளங்குவதாகும். அத்தலைவிபால் நினைந்தூட்டும் தாயாதலால், மதி நலம் வாய்ந்த கிளி அவள் மனத்தைத் துன்புறுத்தாது தன் பசி ஒழிக்க ஓர் வழியை நாடிற்று. மலர் நிறைந்த பொய்கையில் மீன் முதலாய உயிர்களும், அன்னமுதலிய பறவைகளும், நிறைந்திருப்பினும் மங்கைக்கு பாம்பினிடத்துள்ள பயம் மிகப் பெரிதென்றெண்ணிய கிளியின் மதி நலம் மிக்க மாண்புடையதாகும். இவ்வாறு தெரிந்து பேசுதற்குரிய முறையில் பைங்கிளியைப் பயிற்றிய மங்கையின் மதி நலமும் அக்கிளி மொழிகளில் விளங்குகின்றது. ஆகவே புனித நீர் நிறைந்த பொய்கையின் பெருமையும், அந்நீரில் மகிழ்ந்து விளையாடிய மங்கையின் அருளும் அம்மங்கையைப் பிரியாது வந்த கிளியின் மதி நலமும், சிந்தாமணிக்கவிஞரால் சிறப்பாக உணர்த்தப்பட்டன.

 

இவ்வாறு கரையேறிய மங்துகிளோடு தன் மனையை நோக்கி நடந்து சென்றாள். நனைந்த பட்டாடை உடலிற் படிந்த தன்மையால் தன் மேனியின் நிறம் வெளியே தோன்றக் கண்ட மங்கை நாணத்தால் தலைகவிழ்ந்து ஒல்கி ஒதுங்கி நடந்து சென்றாள். அப்பொழுது அம்மங்கையினிடையில் அமைந்த மணிமேகலை தலைவிக்கு நேர்ந்த மானத்தைத் தனக்கு நேர்ந்ததாகக் கருதி தன் மணி ஒலியை அடக்கி இடையைத் தழுவிக்கிடந்ததென்று கவிஞர் கூறும் மொழிகள் இயற்கை நலம் வாய்ந்தனவாம். மங்கையாது மேனியின் நலத்தையும் நிறத்தையும் மறைக்கும் தன்மை வாய்ந்த பூந்துகில், நீரில் நனைந்தபோது உடலிற் படிந்து ஒட்டிக்கொள்வது இயல்பாகும். மணிச் சதங்கையார்ப்ப மங்கையர் இன டையில் விளங்கும் மணிமேகலை நீரில் நனைந்தமையாலும் நனைந்த ஆடையின் மீது கிடந்தமையாலும் ஒலியாத தன்மையை மானத்தால் மௌனமாயிருந்ததாகக் கருதுதல் கவிநயமாகும்.


"நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட்டதற்கு நாணி
மான மகளிர் போல மணிமேகலைகள் பேசாது
ஆனந்தழுவிக் கிடப்பச் செல்வோள் தன்மை காண்மின்''


என்று சிந்தாமணி ஆசிரியர் அருளிய செஞ்சொற்கவி சிறந்த இன்பம் பயப்பதாகும். இவ்வாறு இயற்கைக் காட்சிகளை இழுமென் மொழிகளால் எழுதியமைக்கும் விழுமிய முறை வாலறிவமைந்த மேலோர் துறையாகும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - செப்டம்பர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment