Saturday, September 5, 2020

 

புருஷர்கள் அறிய வேண்டிய சில விஷயங்கள்

 

1. மாதா பிதா பாட்டன் பாட்டி முதலானவர்கள் இளமையிற் செய்த நன்றியை மறந்து தன் பெண்சாதியே பெரிதென நினைத்து அவர்களைக் கண்ணெடுத்துப் பாராமல் இருப்பது கூடாது.

 

2. மனைவிக்குப் பாவமிதுவென்றும், புண்ணியமிதுவென்றும், அவற்றினாற் பெறும்பயன் இதுவென்றும் போதித்தல் வேண்டும்.

 

3. குதர்க்கம் பேசுதல், நிந்தித்தல், சோம்பல், காமம், அகங்காரம், வீண்பெருமை முதலிய துர்ச்செய்கைகள் கூடா.

 

4. மனைவியிடம் தோற்றும் சிறிய சிறிய குற்றங்களை அப்போதைக்கப்போது எடுத்துக்காட்டி நீக்க வேண்டும்.

 

5. ஒரு நல்ல காரியத்தை நிறைவேற்ற முயலும்போதும், மற்றக் காலங்களிலும் நேரிடும் இடையூறு, துன்பம் முதலியவற்றிற்கு அஞ்சாதிருத்தல் வேண்டும்.

 

6. சிறுவரைக் கண்டிக்கும்போதும், பயப்படுத்தும் போதும் இழிவான வார்த்தைகளை உபயோகிப்பது கூடாது.

 

7. செல்வம் வந்த காலத்தில் செருக்கடையாம லிருப்பதும், பிறருக்கு அவமானம் வராது பேசுவதுமாகிய இவைகளை மனதில் வைத்தல் வேண்டும்.

 

8. வறுமையால் எவ்வளவு சிறுமைப்பட் டிருந்தாலும் தன்னால் இயன்றமட்டும் பிறர்க்கு உதவி புரிதலோடு அகௌரவ காரியங்களைச் செய்யலாகாது.

 

9. யாவரிடத்திலும் அன்பாயிருப்பவனை ஏதோ காசுபணம் வாங்கத்தானிப்படி நடிக்கிறானென்றும், அதிகமாய்ப் பேசினால் வாயாடியென்றும் இழித்துக் கூறக் கூடாது.

 

10. நல்லவரெனத் தெரிந்து ஒருவரை நட்புசெய்து கொண்டால் மறுபடி எப்போதும் அந்த நட்பைக் கைவிடுதல் கூடாது.

 

11. மறைக்கவேண்டிய விஷயங்களுள்ள வேலையில் பிரவேசித்தலும், மறைக்கவேண்டிய விஷயங்களுள்ள வார்த்தைகளை யொருவரிடம் சொல்வதும் கூடாது.

 

12. எப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர்களையும், கற்றோரையும், பெரியோரையும், துஷ்டரையும் பகைத்துக் கொள்ளுதலும், அலட்சியமாகப் பேசுவதும் கூடாது.

13. அடைக்கலம் புகுந்தவரை அன்போடு ஆதரிக்கவேண்டும். ஒருவருடைய குற்றங்குறைகளைப் பற்றி பேசக் கூடாது.

 

14. யாராவது ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்குமுன் வலிய உன் மனதிலுள்ள அபிப்பிராயங்களை வெளிவிடுதல் கூடாது.

 

15. ஒருவனை நேரில் கண்டபெழுது முகமலர்ச்சியுடன் பேசிவிட்டு அவன் போனபின்பு அவனையே இழிவாகப் பேசுதல் இழிகுலத்தான் செய்கையாகும்.

 

16. எந்தக் காரியம் செய்வதா யிருந்தாலும் தனக்குப் பாபமாவது அகௌரவமாவது, தனக்காவது பிறர்க்காவது தீங்கேனும் நேரிடாவண்ணம் தனக்குள் சிந்தித்துத் தன் தீர்மானப்படியே செய்ய வேண்டும்.

 

17. ஏழைகளிடத்திலும், நமக்குக் கீழ் ஜாதியாரிடத்திலும் அன்பும், இரக்கமும் முகமலர்ச்சியுங் காட்டிப் பேசுதல் வேண்டும்.

 

18. நமது தொழிலைச் சேர்ந்த விஷயத்திலும், குடும்ப விஷயமல்லாத வேறு விஷயங்களிலும் ஸ்திரீயின் அபிப்பிராயங் கேட்பதாலும், அவற்றைப்பற்றி ஸ்திரீயிடம் பேசுவதாலும் காரிய பங்கமும் அவமான முமே சித்திக்கும் என்பதை மறக்கலாகாது

 

19. தன் மனைவி எந்த விஷயத்திலும் தன் கட்டளையை மறுக்காமல் நடக்கும் வண்ணம் பழக்கிவைக்காதவன் அவளுக்கும் தனக்கும் பாபத்தையுண்டாக்கிக் கொள்கிறான்.

 

20. தாய் தந்தையர்களின் மனம் வேதனைப் படும்படி நடந்துகொள்பவனுடைய க்ஷேமம் நீடித்திராது. அவர்கள் மனம் சந்தோஷப்படும் வண்ணம் நடந்து கொள்பவன் கடவுள் அருளைப்பெறுவான்.

 

S. ரங்கப்ப னாயகர்,

வளியாம்பாளையம்

 

ஆனந்தம் போதினி – 1920 ௵ - ஜுலை ௴

 

   

 

No comments:

Post a Comment