Saturday, September 5, 2020

 புலவர்களை பற்றிய பொய்ம்மைகள்

 

ஆதியில் மனிதன் உண்ண உணவின்றியும் உடுக்க உடையின்றியும், இருக்க இடமின்றியும் காடுகளில் அலைந்து திரிந்தான். கொட்டை பழங்களைக் கொண்ட மட்டுந் தின்றான். விலங்குகளை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தைத் தின்று வெகு நாளைக் கடத்தினான். நீண்டகாலம் நிர்வாண நிலையிலிருந்த மனிதன் விலங்குகளின் தோலை யணிய ஆரம்பித்தான். விலங்குகளைக் கொல்லும் வேடர் நிலையிலிருந்து ஆடுமாடுகளைப் பழக்கி இடையர் நிலையை யடைந்தான். பிறகு தன் மனக் கருத்தை வெளிபாஷையை யுண்டாக்கினான். இவ்வாறே நாளுக்குநாள் மனிதன்உயர்ந்து, தற்காலம் ஆயிரக் கணக்கான மைல்களுக் கப்பாலுள்ளாரிடம் நேரில் பேசுவது போல் பேசவும், ஆகாயத்தில் பறந்து செல்லவும், இன்னும் பலவித இயலாக் காரியங்களை யெல்லாம் இயற்றவும் வல்லவனாய்த் திகழ்கிறான்

 

மக்கள், அறிவிலும், வழக்க வொழுக்கங்களிலும், நாகரிகப் போக்கிலும் நாளுக்கு நாள் முன்னேறி வந்திருக்கிறார்களென்பது மேற் கூறியவற்றால்இனிது விளங்கும். இதற்குத் தேச சரித்திரங்களே போதிய சான்று. இன்றுள்ள இந்நிலையில் பழைய காலச் செய்திகளில் பல அறிவுக்குப் பொருந்தாதனவாகவும், அதிசயத்தை விளைவிப்பனவாகவும் இருப்பது இயல்பே. அவைதோன்றிய காலத்தின் தன்மை யெனக் கொண்டு அவற்றின் சிக்கல்களை அறுத்துச் சீர்படுத்திக் கொள்வது அறிஞர் செய்கை. இன்றைய செய்திகள் இன்னும் இரு நூறாண்டுகட்குப் பின்னர் எவ்வாறு கருதப்படுமோ, கொள்ளப்படுமோ எவரே கூறவல்லர்? இது கொண்டே சென்ற ஆனி மாத சஞ்சிகையில் கம்பர் - ஔவையார் இடையிற் பேசப்படும் சில பொருந்தாச் செய்திகளை அறிவிற் பொருத்தி அலசிப் பார்த்து எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை எழுதி வெளியிட்டேன். இப்பொழுது ஒட்டக் கூத்தர் – புகழேந்தி இவர்களைப் பற்றிய ஒட்டாச் செய்திகளை உரைக்கின்றேன்.

 

ஒட்டக்கூத்தரும் - புகழேந்தியும்: - உறையூரிலிருந்து அரசு செலுத்திய இராஜேந்திர சோழன் காலத்திலும், அவன் மகன் குலோத்துங்க சோழன் காலத்திலும் ஒட்டக் கூத்தப் புலவர் அரண்மனை வித்துவானாயிருந்தார். அதே காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையில் செங்கோல் செலுத்திய வரகுண பாண்டியன் அவையில் புகழேந்திப் புலவர் வித்துவானாயிருந்தார்.

 

வரகுண பாண்டியன் மகள் குலோதுங்க சோழனுக்கு மணஞ் செய்விக்கப் பட்டாள். பாண்டியன் மகளை அனுப்பும் பொழுது புகழேந்திப் புலவரையும் சீதனமாக அவளுடன் சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தான். புக்ழேந்திப் புலவர் சோழனிடத்திலிருக்கும் பொழுது ஒட்டக்கூத்தர் சோழனைப் புகழ்ந்து ஒரு பாட்டுப் பாடினார். அது கேட்ட புகழேந்தி பாண்டியனைப் புகழ்ந்து ஒரு செய்யுள் பாடி கூத்தர் பாடலைக் கண்டித்தார். அது முதல் கூத்தருக்குப் புகழேந்தி பால் அழுக்காறெழுந்தது.

 

ஒருநாள் சோழராஜன் அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு தெருவில் உலாவப் போனான். அப்பொழுது ஒளவையார் இரண்டு காலையும் நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சோழனைக் கண்டவுடன் அவர் ஒரு காலை முடக்கினார். பிறகு புகழேந்திப் புலவரைக் கண்டு மற்றொரு காலையும் முடக்கினார். ஒட்டக் கூத்தரைக் கண்டு இரண்டு காலையும் 'நீட்டிக்கொண்டார். அதைக் கண்ணுற்ற ஒட்டக்கூத்தர் மனந்திடுக்கிட்டு “ஓ! அம்மையே! நீவிர் இவ்வாறு செய்த காரணம் யாது?'' என, அதற்கு அந்தம்மையார், ''கூத்தா! சோழன் முடியரசனாகலின் ஒரு காலையும், புகழேந்தியார் கல்விமானாகையால் மற்றொரு காலையும் முடக்கினேன். நீயோ முழு மூடனாதலால் இரண்டு காலையும் நீட்டினேன். நீயு இந்தப் புகழேந்தியைப் போல் வல்லமையுள்ளவனானால் சோழனையும், சோழ நாட்டையும் விஷயமாகக் கொண்டு சந்திரன் மும்முறைவர ஒரு பாடல் சொல்லுவாய்' என, ஒட்டக்கூத்தர் அதற்குச் சம்மதித்து,


 "வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறி
 துள்ளி முகிலைக் கிழித்து மழைத் துளியோ டிறங்குஞ் சோணாடா!
 கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா வண்டர் கோபாலா!
 பிள்ளை மதியா லென்மாது பேதை மதியு மிழந்தனளே.''


என்று பாடினார். அது கேட்டு ஒளவையார் நகைத்து'' ஒட்டா! ஒருமதிகெட்டாய்!" என்று இழிவாய்ப் பேசி "புகழேந்தியாரே நீர் பாடும்!" என்றார். அவர் உடனே,


 "பங்கப் பழனத் துழுமுழவர் பலவின் கனியைப் பறித்ததென்று
 சங்கிட் டெறியக் குரங்கிளநீர் தனைவிட் டெறியுந் தமிழ்நாடா!
 கொங்கற் கமரா பதியளித்த கோவே யமரர் குல தீபா!
 வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்த பிறைக்கும் விழி வேலே."


என்று பாடினார். அதைக் கேட்டு ஒளவையார் வியந்தனர். ஒட்டக்கூத்தர் புகழேந்தியிடம் முன்னிலும் அதிகமாகப் பகைமை கொண்டார். இதே காரணத்தால் கூத்தர், சோழன் தன்னிடம் வைத்துள்ள செல்வாக்கைக் கொண்டு ஏதோ காரணங் காட்டிப் புகழேந்தியைச் சிறைப்படுத்தினார்.

 

ஒரு நாளிரவில் குலோத்துங்க சோழன், ஆண்டுக் கொருமுறை அனைவருடனும் யானை மீதேறி, குடை பிடித்துக் கொண்டு ஊர்வலம் வரும் வழக்கத்தின்படி வீதியில் உலாவவந்தான். அதைச் சிறைச்சாலையிலிருந்த புகழேந்திப் புலவர் சாளரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அப்பவனியைக் கண்ட பலரும் "அற்பர் அர்த்தராத்திரியிற் குடை பிடிப்பர்" என்ற பழமொழியைச் சொல்லி, அரசனையும் ஒட்டக்கூத்தரையும் தத்தமக்குள் இழிவாகப் பேசினர். இது சோழன் செவியிற்பட, ஒட்டக்கூத்தரை நோக்கி, "இரவிற் குடை நிழலிற் செல்லல் தேவருக்கன்றி நமக்குத் தகுமா'' என, அதற்குக் கூத்தர் விடை பகரவியலாது விழித்தார்! அப்பொழுது அருகில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த புகழேந்திப் புலவர் அரசனை நோக்கி,

 

''அண்டர்மீ துலவிவாழும் அருந்ததிக் கற்பாளுன்னைக்
 கண்டதா லுவகை யெய்திக் கற்பழிந்திடுவ ளென்றே
 எண்டிசை புரக்கும் வேர்தே இரவினில் கவிகை நீழல்
 கொண்டுமா நடாத்துமாறு குலோத்துங்கா நீதிதானே.''


என்ற செய்யுளைச் சொல்லினர். அதுகேட்ட சோழன் மகிழ்ந்து புலவரைச் சிறையினின்றும் விடுவித்து யானையின் மீது ஒட்டக்கூத்தப் புலவரோடு சேர்த்து வைத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்றனன்.

 

நிகழ்ந்தவற்றைக் கேட்ட அரசன் மனைவியாகிய பாண்டியன் மகள், தன் ஆசிரியராகிய புகழேந்தியைச் சிறையிலடைத்திருந்ததற்கு மிக வருந்தி, நாயகனது நீதிவழுவால் இப்பிழை நேர்ந்ததென் றெண்ணிச் சினங்கொண்டு தன் அரண்மனை வாயிற் கதவைச் சார்த்தித் தாழிட்டுக் கொண்டிருந்தாள். அரசன் புகழேந்தியை அநீதியாய்ச் சிறையிலடைத்திருந்தமை கருதி மனம் நொந்து அவ்விரு புலவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு தன்மனைவியின் அந்தப்புர வாயிலுக்குச் சென்றான். அங்கு கதவு சாத்தியிருப்பது கண்டுதன் மனைவியின் சினம் நீங்க ஒரு பாட்டுப் பாடுங்களென்று ஒட்டக்கூத்தரை விளிக்க, அவர்,


 "இழையொன் றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை யேந்து வள்ளைக்
 குழையொன் றிரண்டு விழியணங் கேகொண்ட கோபந்தணி
 மழையொன் றிரண்டுகை மானா பரணனின் வாயில்வந்தாற்
 பிழையொன் றிரண்டு பொறுப்பதன் றோகடன் பேதையர்க்கே.”


என்ற செய்யுளைச் சொல்லலும், பாண்டியன் மகள் பின்னுஞ் சினந்தவளாய்
''ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்'' என்று கூறிப் படக்கென இரண்டாவது தாழுமிட்டனள். அதுகண்ட அரசன் புகழேந்தியைப் பாடும்படி சொன்னான். அவர்,


 “நானே யினியுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்
 தேனே கபாடந் திறந்திடு வாய்திற வாவிடிலோ
 வானே றனைய இரவி குலாதிபன் வாயில் வந்தால்
 தானே திறக்குநின் கைத்தலமாகிய தாமரையே.''


என்ற செய்யுளைப் பாடினர். உடனே பாண்டியன் மகள் கோபந் தணிந்துகதவைத் திறந்தாள்.

 

பின்னர், புகழேந்திப் புலவர், ஒட்டக்கூத்தர் தம்மிடம் கொண்டு பற்பல துன்பம் விளைவித்து வருகிறார் என்பதனால் அவரைக் கொன்றுவிட வேண்டுமென எண்ணினார். ஆதலால் அவர் ஒரு பெருங் கல்லைஎடுத்துக் கொண்டு ஒட்டக்கூத்தர் வீட்டுக்குச் சென்று அவர் தலையில் கல்லைப்போட்டுக் கொல்லுவதற்காக ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒட்டக்கூத்தர் ஏதோ மன வருத்தத்தால் சாப்பிடாமல் கூட சயனித்திருந்தார். அவர் மனைவி உண்ணும்படி உபசரித்தாள். அவள் எவ்வளவு வேண்டியும் பயனில்லாதது கண்டு “பாலாவது கொண்டுவரட்டுமா?'' என்று பகைமை -பரிவுடன் வினவினாள். ஒட்டக்கூத்தர் வேண்டாமென்றார். அவர் மனைவிபின்னும் விடாது " பாலில் சர்க்கரையாவது போட்டுக் காய்ச்சிக் கொண்டுவரவா?'' என்று இன்னுங் கனிவாகக் கேட்டாள். ஒட்டக்கூத்தர் மிகச் சலிப்புடன் " சருக்கரை கலந்து கொண்டு வந்தாலும் வேண்டாம்; புகழேந்தி வெண்பாவின் சுவையைப் பிழிந்து கொண்டு வந்தாலும் வேண்டாம்'' என்றார். இதை மறைவிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த புகழேந்திப் புலவர் ஓடோடியும் வந்து ஒட்டக்கூத்தரைக் கட்டிக்கொண்டு, தாம் செய்யவிருந்த கொடுஞ் செயலைக்கூறி, அன்று முதல் இருவரும் தோழமை கொண்டு வாழ்ந்தனர். இது வரலாறு. இச்செய்திகள் கர்ணபரம்பரைக் கதைகள் என்று எழுதிய ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இன்னும் இதில் பற்பல மாறுபாடுகளும் பாட பேதங்களு முண்டு. இனி இவற்றை ஆராய்வோம்.

 

இவ்வரலாற்றின் ஆரம்பத்தில் புலவரிருவருக்கும் பகைமையையுண்டாக்கி, முடிவில் அவ்விருவரும் தோழமை கொண்டார்களெனக் கூறியுள்ளது அறிந்து சிந்திக்கத்தக்கது. இது சாலவும் வியக்கத்தக்கதே! கம்பர் -ஒளவையார் கதையிலும் இங்ஙனயே முதலில் சண்டையும் முடிவில் சமாதானமும் கொண்டுள்ள தென்பது ஈண்டு நினைவுக்கு வரும். பகைமை கொண்டு நின்ற புலவரிருவர் பின்னர் மனமொத்த நேயராயினரென்னுங் கதை கேட்போருக்கு மிகவும் இன்பம் விளைவிக்கும். எனினும் இடையில் பெய்துள்ள சில செய்திகள் உணர்ச்சியுள்ள எவர் உள்ளத்தையும் வருத்தாதிரா.

 

இன்னொன்று - எந்த உண்மைச் செய்தியும் ஒருவகையான வரலாற்றைக் கொண்டே விளங்கும். இந்த உண்மைச் செய்தியிலேயே கால வியற்கையில்சி றிது திரிந்து புது உருவம் பெறுவது முண்டு. ஆயினும் அடியோடு மாறிவிடாது. அந்த வகையில் இப்புலவர்கள் வரலாறு எத்தனையோ விதத்தில் மாறுபட்டுத் திகழ்கின்றன. இவற்றுள் உண்மையெனக் கொள்வது எதையென்பதற்கு அவற்றை ஆக்கிய ஆசிரியர்களே வரவேண்டும்.

 

புகழேந்தி - ஒட்டக்கூத்தருக்கு ஆதியில் பகையுண்டானது மேற்கூறிய ஒருவகையிருக்க, அல்லாத மற்றொரு அழகிய வகையும் அறியத்தக்கது. ஒட்டக்கூத்தப் புலவர் சோழனைப் புகழவேண்டி,


 “வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்
 என்று முதுகுக் கிடான் கவசம் - துன்றும்.''


 எனக் கூறிச் சற்று ஆலோசித்தனர். இதற்குள் புகழேந்திப் புலவர், -


''வெறியார் தொடைகமழு மீனவர்கோன் கைவேல்
 எறியான் புறங்கொடுக்கி னென்று.”

 

எனக் கூறினர். இது எத்துணைச் சுவைநலங் கொண்டிலங்குகிறது! இவ்விருவகையில் எதனைக் கொள்வதோ, எதனைத் தள்ளுவதோ அறிஞர் ஆராய்க.

 

சோழன் புலவர்களுடன் தெருவில் உலாவச் சென்றான்! இது எங்ஙனம் பொருந்துமோ! அக்கால வரசர்கள் இரவில் நகரிசோதனைக்காக வெளியில் புறப்படுவதென அறிவோம். அங்ஙனமின்றி இவ்வாறு அரசன் கண்ட கண்ட இடங்களில் நினைத்தபோதெல்லாம் செல்லுவதென்றால். அப்புறம் அவ்வரசர்களுக்கு மதிப்பேது, மரியாதை யேது? இவர்கள் செல்லும் பொழுது ஒளவையார் நீட்டிக் கொண்டிருந்த காலை மடக்கி, ஒட்டக்கூத்தரைக் கண்டதும் நீட்டினாள்! இது கவி யாசியாகிய ஔவையின் மேன்மைத் தன்மையைக் குறைக்காதா? அவர்தான் அவசரத்தில் செய்துவிட்டா ரென்றால், பெருந்தன்மை வகிக்கும் புலவர் திலகராகிய ஒட்டக்கூத்தர் இதை மதித்துக் கேட்கலாமா? கேட்பாரா? சரி கேட்டார். அதற்கு ஒளவையார் கூறிய மறுமொழி எவ்வளவு ஒழுங்குத் தப்பிதமானது! அம்மொழிகளைக் கேட்டுக்கொண்டு அரசனால் பெருமை பெறும் ஒட்டக் கூத்தர் ஒளவைக் கிழவியை அவமானஞ் செய்யாமல் வாளாவிருந்தது விந்தையே! அதன் பிறகு புலவரிருவரின் புத்தி வன்மையைக் கண்டு பிடிக்க ஔவையாரால் பரீட்சை செய்யப்படுகிறது! ஒட்டக்கூத்தர் இதில் தவறி விடுவதால் " ஒட்டா ஒருமதி கெட்டாய்'' என்ற பட்டம் பெறுகிறார்! இத் தொடர்மொழி எதுகை நயங்கொண்டு இன்பந்தருகின்றது! புகழேந்தியார் ஒளவையின் கட்டளைப்படி, பாடிப் பரிசில் பெறுகிறார். என்ன விந்தை! ஒரு புலவரால் - அதுவும் நினைத்த பொழுது கவி இயற்றும் வல்லமையுடைய ஒரு புலவரால் - ஒரு அடியில் மூன்றிடங்களில் மதியென்ற சொல்வைத்துப் பாட முடியாமற் போனது வியப்பினும் வியப்பே! வேறொரு வரலாறு புத்தகத்தில்,


 “பிள்ளை மதிக்கெம் மதியுமென்றன் பேதை யிழக்கும் பெருமதியே"

 

என்ற ஈற்றடி மூன்று மதியுடன் முற்றுப் பெற்றுள்ளதே! இதற்கு என் சொல்வரோ! இதைக் கொண்டு சிந்தித்தால் ஒளவையார் ஒட்டக்கூத்தரை இகழவோ, புகழேந்தியைப் புகழவோ முடியாது போகும். ஔவையார் முதலில் ஒட்டக்கூத்தரை அவமதித்துக் காலை நீட்டியதும் மடமை யென்பதை அவர் உணர்ந்திருப்பார். ஔவையார் பேரில் இந்தி மடமையை ஏற்றுவது மாண்பாகுமா? இதை எப் புலவரேனும் ஏற்பரா? சிந்திக்க.

 

இனி, தன் மனைவியுடன் சீதனமாய் வந்த புகழேந்தியை ஒட்டக்கூத்தர் சிறையி லடைக்க அதைச் சோழன் கவனியா திருந்தது அவன் நீதி அரசாட்சியை நிலை குலைத்ததாகும். அதற்கு எவ்வகையிலும் அரசன் இடந்தந்திருக்கமாட்டானென்பதே பொருந்துவது. நிற்க, அரசன் ஒட்டக்கூத்தருடன் உலாவி வரும்பொழுது புகழேந்தி சிறையிலிருந்த இடத்தருகே வந்து “தான்இரவில் குடை பிடித்து உலாப்போவது சரியா'வெனக் கேட்டது படிக்கும் எவருக்கும் அதிசயத்தை விளைவிக்காது போகாது. இச்சமயம் புகழேந்தியார் சிறையின் மேன்மாடத்தில் நின்றுகொண்டு உலாக்காட்சியை உவப்புடன் பார்த்துக் கொண் டிருந்தாரென்றும், சில பெண்களின் உதவியால் கைவிலங்குடன் வெளிப்பட்டுக் கூட்டத்தில் கலந்து கொண் டிருந்தாரென்றும் மாறுபட்ட வரலாறுகளுண்டு. 'இவற்றைத் திரட்டிப் புடைத்துப் பதர் நீக்கி மணி கொள்வது எளிதன்று'' என்றார் ஓராசியர்.

அரசன் கேட்ட கேள்விக்கு ஒட்டக்கூத்தர் பதில் சொல்ல வழி தெரியாது விழித்தார். உடனே புகழேந்தியார் சிறையிலிருந்தோ, சிறையின்மேன்மாடத்திலிருந்தோ, கூட்டத்திலிருந்தோ'' அண்டர்மீ துலவி வாழும்'' என்ற பொருள் நயஞ் சிறந்த பாட்டைப் பாடினார். விந்தை! விந்தை!! சமயத்தில் பாடத் தெரியாத, அல்லது பதில் சொல்லத் தெரியாத ஒட்டக்கூத்தரை எது கொண்டு தான் அரசன் ஆதரித்தானோ தெரியவில்லை! அவன் அறிவையே தாழ்வுபடுத்துவதாகு மன்றோ? ஒட்டக்கூத்தருக்குக் ''கோவையுலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தான்" என்ற சிறப்புதான் ஏனோ?

 

பின்னர், சோழன் மனைவியைச் சமாதானஞ் செய்ய புலவரிருவரும் பாடல்கள் பாடுகின்றனர். இவற்றுள் முன்னது புகழேந்தியதென்றும், பின்னது ஒட்டக்கூத்தரதென்றும் தகராறிருக்கிறது. எது எவருடையதோ அதை அதனதன் ஆசிரியரே கூறவல்லர். இந்நிலையில் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழிட்டவள் சோழன் மனைவி தானோ, வேறு எவரோ விளங்கவில்லை! சோழன் மனைவி 'சமன் செய்து சீர் தூக்குங்கோல் போன்ற மனத்தளேயாயின் ஒட்டக்கூத்தன் பாட்டைத் தூற்றியும், புகழேந்தி பாட்டைப்போற்றியுங் கொள்ள வேண்டியதில்லை. செய்யுட் சுவையறிந்த அவ்வணங்கு “இழையொன்றிரண்டு" என்ற பாடலால் அகமகிழ்ந்து அப்பொழுதே கதவைத் திறந்து வெளிவந்திருப்பா ளென்பதில் என்ன தடை? 'பேதையர்க்கே, என்றதால் அப் பேதைக்குச் சின மூண்டதெனின், 'பேதமை யென்பது மாதர்க் கணிகலம்' என்ற விதியுளதே! அது கொண்டு ஒட்டக்கூத்தர் பாடினாரென்பதில் இழுக்கொன்று மில்லையே! இவற்றைப் புத்திசாலிகள் ஆராய்ந்து உண்மை காண்க.

 

அதன்பின், இரு புலவரையும் சேர்த்து வைக்கும் இன்பக்கதை! புகழேந்தியார் ஒட்டக்கூத்தரைக் கொல்லக் கையில் கல்லொன்று கொண்டு சென்றார். புகழேந்தியார் கல்லேந்தியதுங் கனவியப்பே! கனவியப்பே! இச்செயல் அவர்பு கழையும் பெருமையையும் அடியோடு நசுக்குவதாகும். எனினும் புலவரிருவரும் பகைமை யொழிந்து அன்புடன் தழுவி, ககொண்டனரென்ற முடிவு உள்ளத்திற்கு உவகையை ஊட்டுகின்றது! இம்முடிவைக் காட்டிய ஆசிரியரை வாழ்த்தாதிருக்க என் மனம் இடந்தர வில்லை.

 

இன்னும் இடையில் பல செய்திகளுண்டு. அவற்றையெல்லாம் ஈண்இரைப்பது இழுக்காமென விடப்பட்டன.

 

புகழேந்தியார், சிறையிலிருக்குங்கால் அல்லியரசாணி மாலை, பவளக் கொடி மாலை என்ற நூல்களை இயற்றினாரென்று கூறுவர். இது சரியன்றென்பதே தேர்ந்த புலவர் பலர் கருத்து. திவான்பகதூர் வி. கிருஷ்ணமாச்சாரியாரவர்கள் தாமெழுதிய'பன்னிரு புலவர் சரித்திரத்தில் ‘புகழேந்தியார் இயற்றியதாகக் கதை பொருத்திக் கூறப்படும் அல்லியாசாணி மாலை முதலிய நூல் .....' எனக் கூறியுள்ளார். பொதுவாக நளவெண்பாவையும் இந்நூல்களையும் ஒருங்குவைத்து நோக்குவார்க்கு இவ்வுண்மை புலப்படாது போகாது.

 

இதுகாறுங் கூறியவற்றால், புலவர்கள் கதை யாவும் பொய்யென்ற கொள்கையை நிலை நிறுத்தவே இக் கட்டுரை எழுதப்பட்டதென எவரும் நினையாதிருக்க வேண்டுகிறேன். எதிலும் உண்மை காணவேண்டு மென்பதே எனது நோக்கம், மாறுபட்ட செய்திகளாலும் பொருந்தாக் கூற்றுக்களாலும் புலவர்களுக்கு இழுக்கே ஏற்படுகிறது. இதைக் களைய வேண்டுமென்பது என் பேரவா. இதற்கு அறிஞரே வல்லராவர். அன்னோர் எழுக! பொய்க்கூற்றுக்களை யோட்டி மெய்ச் செய்திகளை நிலைநாட்டுக! புலவர்களைப் பிடித்துள்ள பிணிகளை யொழித்து நலமுறச் செய்து நன்மையே பெறுக! இதுவே என் வேண்டுகோள். இறைவன் முன்னிற்க இனிது.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - ஆகஸ்ட்டு ௴

 



 

No comments:

Post a Comment