Saturday, September 5, 2020

 

புலால் மறுத்தல்

 

  "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
 எல்லா வுயிரும் தொழும் "
                            (குறள்)

 

சகோதர சகோதரிகளே! கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நாலுவகை யோநி எழுவகைப் பிறப்பிலடங்கிய எண்பத்து நான்கு லக்ஷம் ஜீவராசிகளுக்குள் ஆற்றிவோடு கூடிய மானிடப் பிறவியே சாலச் சிறந்தது. இம்மானிடப் பிறவிகளுக்குத்தான் நன்மை இன்னது, பாவம் இன்னது இவைகளைச் செய்யலாம் இவைகளைச் செய்யக்கூடாது என்று செய்யுமுன் ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து கொள்ளும் பகுத்தறிவு ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களுக்குப் பகுத்தறிவு இல்லையேல் அவர்களை ஐயறிவோடு கூடிய மிருகவர்க்கத்திற்கு ஒப்படைக்க வேண்டுமென்று பெரியார் கூறுவர்;


 "தக்கவின்ன தகாதன இன்னவென்
 றொக்க வுன்னல ராயி னுயர்ந்துள்
 மக்களும் விலங் கேமனு வின்நெறி
 புக்க வேலவ் விலங்கும்புத் தேளிரே.''
                        (இராமாவதாரம்)

 

சாத்வீக குணமற்ற மனிதர்கள் மனமிரக்கமின்றி அநேகமான ஆடுகளையும், கோழிகளையும், பன்றிகளையும் பிடித்துக் கொன்று தின்று வயிறு வளர்ப்பார்கள். ஐயோ பாவம்! இவர்களும் மனிதர்கள் தாமோ? இவர்களுக்கும் உயர்வு தாழ்வு வேண்டுமோர் என்னே அந்தம்! சிறு மாமிசம் தின்பவர்கள் சிறியவர்களாம். பெரிய மாமிசம் தின்பவர்கள் பெரியவர்களாம். என்னே இவர்களின் கூற்று. கடவுள் எங்கும் நிறைந்துள்ளார். அவரில்லாத இடமேயில்லை. அவர் பாலில் நெய்போலும், பழத்தில் இரசத்தைப் போலும், எள்ளில் எண்ணெய் போலும் எல்லாவித ஜீவராசிகளின் ஹிருதயங்களிலும் கலந்துள்ளார் என்று இவர்கள் தெரிந்து கொள்ளாததுதான் என்னே!

 

''எவ்வுலகும் பராபரன் சந்நிதியதாகு

மிலங்குமுயிருடலனைத்தும் ஈசன் கோயில்

எவ்வுயிரும் எம்முயிர்போ லென்று நோக்கி

யிரங்காது கொன்றருந்தும் இழிவினோரை........''            என்றும், (சிவஞான தீபம்)

 

''............ உயிருடம்பைக் கடித்துண்ணுங் கருத்தனேலெங் குருவாணையெமது சிவக்கொழுந்தாணை ஞானியெனக்கூறொணாதே "   என்றும் (அருட்பா)


 ''பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
 எல்லாரும் காண வியமன்றன் றூதுவர்
 செல்லாகப் பற்றித் தீவாய் நரகிடை
 மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே " -
                    (திருமந்திரம்)

என்றும் பெரியார் கூறுகின்றனர்.

 

அறிவிற் சிறந்த நண்பர்காள்! ஒருவன் மற்றொருவனைச் சுறுக்கென்று ஊசியினால் குத்தினால் அவன் சும்மா விருப்பானா? உடனே அவன் தன்னைக் குத்தினவன் கன்னத்தில் பளீரென்று அறைய வருவான் அல்லவா? இந்த ஆடு, மாடு, கோழி, பன்றி இவைகளை ஹிம்சை செய்தால் அவைகள் யாரிடம் போய் முறையிடும். ஒரு காலத்தில் மாண்டவிய முனிவர் சிறு பிள்ளையா யிருந்தபோது விளையாட்டாக ஒரு தட்டானை (பூச்சி) ப் பிடித்து ஒரு முள்ளினால் குத்திப் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்தார். அவரைப் பிற்காலத்தில் அப்பாபம் விடாது தொடர அவர் தட்டானைப் போல் கழுமரத்தில் மிகவும் கஷ்டப்பட்டனரென்றால் இத்தனை ஆடு, மாடு, கோழி, பன்றி தின்பவர்களின் கதி என்னாமோ அறியோம்! கீழ்வரும் கவிகளையும் நோக்குக.


 ''அம்மா என அலற ஆருயிரைக் கொன்றருந்தி
 இம்மானிடரெல்லாம் இன்புற்றிருக்கின்றார்
 அம்மா எனும் சத்தம் கேட்டகன்ற மாதவர்க்கும்
 பொய்ம்மா நிரையமென்றால் புசித்தவர்க்கு என் சொல்வதே''
    (வள்ளலார்)

 
 ''பறையரைப் பறையரென்று பறைந்திடு மனிதர்கேளீர்
 பறையர்தம் மலத்தைத் தின்ற பன்றியைப் புசிப்பதென்னோ
 கறையதே யாகுமந்தக் கறிதனைக் கலத்தி லிட்டு
 மறையவே வைத்துத் தின்ற மனிதரே பறையர்கண்டீர்'
          (தனிப்பாடல்)

சகோதர சகோதரிகளே! இச்சத்விஷயங்களைப் பன்முறையுமிடித் திடித்துரைப்பினும் நன்மை பயக்குமன்றோ! ஒருகாலத்தில் சிபிச்சக்கிர வர்த்தி ஒரு புறாவுக்காகத் தன் உடல் முழுவதையும் கொடுத்தார். ஒரு பசுவின் கன்றைக் கொன்ற புதல்வனென்று மனுச்சோழன் தன் மகனைத் தேர்க்காலிற் கிடத்தினன். தருமராஜர் வைகுந்தம் செல்லும் போது தன்னோடு வந்த ஒரு புழுத்த நாயைத் தூக்கித் தன் மார்போடு தாங்கி எடுத்துச் சென்றார். '' புலையும் கொலையும் களவும் தவிர்'', ''நோன்பு என்பது கொன்று தின்னாமை" என்ற அரிய திருவாக்கைச் சிறிது கவனியுங்கள். நாம் எவ்வுயிர்களையும் நமது சகோதரமாகப் பாவித்து அவைகளை வருத்த மின்றிக் காப்பாற்றவேண்டும். எல்லாம் வல்ல பரம்பொருள் முன்னின்று ரக்ஷிப்பாராக!

 

S. V. பழனியப்ப பிள்ளை,

 சாலியாபாளையம், கரூர்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment