Saturday, September 5, 2020

 

புறங்கூறாமை

 

 உலகில் மரனிடராகப் பிறந்த நாம் நற்குண நற்செய்கைகளைக் கைக்கொண்டு வாழவேண்டுவது அவசியம். அந்நற்குண நற்செய்கைகளுள், புறங்கூறாமை என்பது ஓர் முக்கியமான இலக்ஷணம். புறங்கூறாமை என்றால், காணாத இடத்தே பிறரை இகழ்ந்து பேசாமல் இருத்தல் என்று பொருள் படும்; இதையறியாத சிலா புறங்கூறி, பெருமையை இழந்து, தாழ்ந்த நிலைமையை அடைகின்றனரன்றோ?

 

ஆண்டவன் அளித்த அற்பாயுளில், மாந்தர் புறங்கூறுதலைக் கைக் கொண்டாரேயானால், இவர்கள் என்ன பலனை அடைவார்கள்? சில மனிதர்கள், இதையே ஆபரணமாக அணிந்துகொண்டிருக்கிறார்கள்.

 

ஒருவன் உலகத்தில், தானதருமத்தைச் செய்யாவிடினும், புறங்கூறாதிருத்தலே மேன்மையாம்; இதைக் கருதியே வள்ளுவனார். –

 

"அறங்கூறா னல்ல செயினு மொருவன்

புறங்கூறா னென்ற லினிது'                 என்று சொல்லியிருக்கிறார்.

 

பின்னும் சிலர், மனிதர்களைக் கண்டவிடத்து, அவர்களைப் புகழ்ந்து பேசுவதும், பிறகு, மற்றொருவனிடத்தில், அவர்களைப்பற்றியே கோள் சொல்வதுமாய்த திரிகின்றனர். ஒருவனைத் திருப்திபண்ணுவதற்காக, மற்றொருவனைப் பற்றி புறங்கூறினால், அது பழி பாவங்களைச் செய்ததற்கு ஒப்பாகும். இவ்வாறே சிலா ஜீவனஞ் செய்து வருகின்றனர். இப்போப்பட்டவர்கள், கடைசியில், இடுக்கியிற பட்ட எலிகள் போலவும், அக்கினியில் விழுந்த பறவைகளைப் போலவும் வருந்துவார்கள் என்பதற்கோர் ஐயமும் இல்லை.

 

''அரசன் அன்று கேட்டால், தெய்வம் நன்று கேட்கும்"  

 

என்று ஆன்றோர் சொல்லிய வண்ணம், எல்லாம் வல்ல ஈசன் இறுதியில் இவாகளுக்கு, இடுக்கண்களையே உண்டு பண்ணுவார் என்பதறகோர் தடையுமில்லை. இவாகள இவ்வாறு வாழ்வதைவிட, இறந்து போவதே நலம், இதையே வள்ளுவர்

 

"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறங்கூறு மாக்கம் தரும்"        
என்றருளியுளர்.

 

பிறர் குற்றத்தைச் சொல்லுவோன் பழிக்கும் அஞ்சான், ஆகா. இப் பேர்ப்பட்டவர்கள் உலகிலிருந்தால், நம் தாய்நாடு சிறப்படைவ தெங்ஙனம்? பின்னும், மாணவாகளிடத்தில் இப்பெரும் பிழை இருக்கிறது. இவர்கள் இளமையிலேயே இதைக்கைக்கொண்டால், பின்பு உலகில வாழ்வது எங்ஙனம்? "இளமையிற் கல்" என்று சொல்லிய வண்ணம், புறங்கூறாமை எனற நீதியை இளமையிலேயே கற்றுக் கைக்கொள்ள வேண்டும். இளமையிலேயே, புறங்கூறுதலை விட்டு விட்டால் தான் பிறகு முதிர்ந்த காலத்தில் சுகமாகவாழலாம். அன்றேல், இதை வளரவிட்டு' விட்டால், துன்பக்கடலில் ஆழ்வோம் என்பதற்கோர் ஐயமும் இல்லை.

 

பிறர் மனையில் வாழ்ந்து வருகிறவர்கள், தம் நிலைமையையும் கருதாமல், எஜமானர்களைப் பற்றிப் புறனுரைப்பின், அவர்களுக்கு ஈசன் எக்கதி கொடுப்பார்'என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். இதைப் பற்றி, பின்வரும் பழமொழிப் பாடலால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

           
      "பண்டின்ன ரென்று தமரையுந் தம்மையும்

      கொண்ட வகையாற் குறைதீர நோக்கியக்கால்

விண்டவரோ டொன்றிப் புறனுரைப்பின் அஃதன்றோ

உண்டவிற் றீயிடு மாறு''                                     (பழமொழி)

 

ஆகவே, மேற்சொன்னபடி, நாம் புறங்கூறாம லிருந்தால், இகபரமிரண்டிலும் சுகத்தைப் பெறலாம். புறங்கூறினால், கொஞ்சக்காலம் வரைக்கும், அதாவது, எப்படி அணையப்போகிற விளக்கு பிரகாசமாக எரி யுமோ, அப்படி மிகவும் கொஞ்சக்காலம் வரையில் சுகத்தைப் பெறலாம். பிறகு, கடைசியாக, சூரியனைக்கண்ட பனிபோல், இந்த இன்பங்களை விட்டு விட்டுத் துன்பங்களைக் கைக்கொள்ள வேண்டியதாயிருக்கும்; பலரும் இகழ்வார்கள்; மானமும் போய்விடும். "மானமழிந்தபின வாழாமை முன்னினிதே" என்று ஆன்றோர் சொல்லியவண்ணம் உலகில் உயிரை வைத்துக்கொண்டு வாழவும் வேண்டுமா?

 

ஆகவே, சகோதர, சகோதரிகாள்! ஆண்டவன் அளித்த அற்பாயுளில், நம் வாழ்நாட்களைப் புறங்கூறுவதில் செலுத்தாமல், மறுமைக்கு வேண்டியதான தருமங்களைச் செய்து, எல்லாம் வல்ல பரம்பொருளை அனுதினமும் ஆராதிப்போமாக.

 

K. கிருஷ்ணன்,

சிவன் கோயில் தெருவு, இளசை.

 

குறிப்பு: - ஒருவரைப்பற்றிக் கூறும் போது அவர்களுடைய நல்லவிஷயங்களைப் பற்றி மட்டுமே கூறவேண்டு மன்றி அவர்களிடத்துள்ள கெட்டவிஷயங்களைப் பற்றிக் கூறக்கூடாதென்பது ஆன்றோர் கொள்கை. ஆனால், உலகில் அனேகர் அதற்கு முற்றும் மாறாக நடக்கிறார்கள். ஒருவரைப் பற்றிப் பேச நேர்ந்த போது அவர்களிடத்தில் புகழ்ச்சிக்குரிய நடககைகள் நூறிருப்பினும் அவற்றில் ஒன்றையேனும் கூறாது, அவர்களிடம் அற்பமான சிறு குற்றங்கள் இரண்டொன் றிருந்தாலும் அவற்றையே முன்னே கூறுகிறார்கள். க என்பவனிடம் ம என்பவனைப்பற்றிப் பேசும் போது ம என்பவனுடைய குற்றங்களைக் கூறுவதும், பிறகு, அவ்வாறே ம என்பவனிடம் க என்பவனுடைய குற்றங்களை மட்டுமே கூறுவதும் சிலர்க்கு இயற்கையாக விருக்கின்றன. ஆனால் க, ம இருவரும் கலந்து பேசிக்கொண்டால் நம்மை மிக்க இழிவாகக் கருதுவார்களே யென்பதை அத்தகைய அறிவீனர்கள் கருதுவதில்லை. இத்தகையோர் பிறர் நம்மைப்பற்றி எவ்வளவாகக் கருதுகிறார்க ளென்பதைச் சற்றும் சிந்திப்பதில்லை. இத்தகைய நடக்கை அதை யுடையோனுக்கு மிக்க இழிவையுண்டாக்குவதால் அறிவாளிகள் அதற்குச் சற்றும் இடந்தரலாகாது.

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - மே ௴

 

   

 

No comments:

Post a Comment