Saturday, September 5, 2020

 

புறநானூற்றுப் புதையல்கள்

(A. நாகசுந்திரம் ஐயர்.)

பாவலரும் காவலரும்.

“வடவேங்கடந் தென்குமரி ஆயிடைச் செழித்து வளர்ந்தது நம் தமிழ்நாடு. இத் தமிழ்நாட்டைச் சீருடன் செங்கோல் செலுத்தியவர் சோர், சோழர், பாண்டியர் என்ற முடியுடை மன்னர் மூவரு மாவர். இவ்வேந்தர்களுடன் கலா விநோதராய்க் காலங்கழித்தும் அவர்களின் பண்புடை வாழ்க்கையைப் பாராட்டிப் புகழ்ந்து பாடியும் பரிசு
பெற்ற புலவர்கள் பலர். இம் மூவேந்தரே யன்றியும் பல குறுநில மன்னரும் நறுந்தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்து வந்தனர்.

பண்டைப் புலவர்களின் பொது இயல்பு

பறவைகளையும், பண்டைத் தமிழ்ப் புலவர்களையும் ஒருவாறு ஒப்
பிடலாம்.

பழுத்த மரங்களை நாடிச்செல்லும் பறவைகளைப் போலவே, புலவர்களும், கொடைக்குணம் உடையோர் உள்ள இடத்தைத் தேடிச் செல்வார் பாதையின் துன்பத்தையும் தூரத்தையும் கருதமாட்டார்கள். தேடிச் சென்ற வள்ளல்களைப் புகழ்ந்து பாடி அவர்கள் கொள் எனக் கொடுத்ததைப் பெற்று உள்ளம் மகிழ்வார்கள். அதைக்கொண்டே தன் சுற்றத்தாரை உண்பிப்பார்கள். பணிகளைப் போலவே நாளைக்கு வேண்டுமென்ற எண்ணம் கொள்ளாது அள்ளிக் கொடுப்பார்கள்.

''வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி

நெடிய வென்னாது சுரம்பல கடந்து

வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்

பெற்றது மகிழ்ந்து சுற்ற(ம்) அருந்தி

ஓம்பா(து) உண்டு கூம்பாது வீசி”                         (புறம் 47)

 

[வள்ளியோன் = வரையாது கொடுப்பவன்; புள்ளிற் போகி = பறவை போலப் போய்; வடியா நா=திருந்தாத நாவு; வல்லாங்குப் பாடி = தாம்வல்லபடி பாடி;]

என்ற பாடலும் இவ்வுண்மையை வலியுறுத்தும்.

கொடுப்பவர் பெருமையும் கொள்பவர் நிலைமையும்

யாசிப்பவர் எதனைப் பெறினும் கொள்வார்கள். குறைவு என்றும் நிறைவு என்றும் கூறார்கள். ஆனால் கொடைப் பொருளின் ஏற்றத்தாழ்வை அக் கொடையாளனே அறிய வேண்டும்.

என் சிறுமையி(ன்) இழித்து நோக்கான்

தன் பெருமையின்) தசவு நோக்கிக்

குன்றுறழ்ந்த களிறென்கோ

கொய்யுளைய மாவென்கோ

மன்று நிறையு நிரை யென்கோ                          (புறம் 387)

 

[மா = குதிரை; நிரை = பசுக் கூட்டம்; தகவு நோக்கி = மேம்பாட்டையறிந்து.]

என்ற பாட்டு இவ் வுண்மையைத் தெளிவு படுத்துவது காண்க.

முற்காலத்து அரசர்கள் யாசிக்கும் இரவலர்களை இழித்து நோக்காமலும் அவர்களின் எளிய நிலைமைக்கு ஏற்றது ஈயாமலும் தம் பெருமைக்கேற்கவே பசுக்களையும் குதிரைகளையும், யானைகளையும் இன்ன பலவும் கொடுத்து மகிழ்வார்களாம்.

ஒளவை ஒருசமயம் அங்கவை சங்கவை என்னும் பெண்களுக்கு இடையர்களின் வழக்கப்படி சீதனம் கொடுக்கும் பொருட்டு சேரனை ஓர் ஆடு கேட்டனள். அவன் பொன்னால் செய்யப்பட்ட ஆடு ஒன்று கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு ஒளவை,

“சிரப்பான் மணிமவுலிச் சேரமான் தன்னைச்

சுரப்பாடு யான் கேட்கப் பொன் ஆடொன் (று) ஈந்தான்

இரப்பவர்) என்பெறினுங் கொள்வர் கொடுப்பவர்

தாமறிவார் த(ம்) கொடையின் சீர்"

 

[சிரப்பான் = சிரத்தினிடத்திலே; சுரப்பாடு = பால் சுரக்கிற ஆடு;]

எனப் பாடி அருளினர். இவ்வாறு ஈவதும் கொள்வதும் பண்டை காலத்தியற்கை, அன்றி ஓர் வள்ளலைப் பாடிச்சென்ற புலவருக்கு அவ்வள்ளல் ஒன்றுமே கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் அப்புலவன் வருந்துவதில்லை. அவ் வள்ளலைச் சிறிதும் வெறுப்பது இல்லை.

புள்ளும் பொழுதும் பழித்தல்) அல்லதை

உள்ளிச் சென்றோர்ப் பழியலர்                           (புறம் 204)

 

என்ற பாட்டின்படி, 'நாம் நல்ல நேரத்தில் புறப்படவில்லை. நாம் வரும் பொழுது இடையில் சகுனத்தடையாகப் பறவைகள் பறந்தன அன்றே! அதன் பொன் இது' என்று தம்மைச் சமாதானம் செய்து கொள்வார்கள்.

இப்புலவர்களின் உயர் குணத்தைப்பற்றி மேலும் ஆராய்வோம். தன்னைக் காப்பவன் பெருமை சிறுமைகளைத் தன்ன தாகவே கொள்வார்கள். தன்னைக் காப்பவன் தன்னைப் புகழ்தல் ஒன்றே தனக்குப் பெரும் பேறெனப் பூரிப்பார்கள். பிறருக்குக் கெடுதி செய்வதைக் கனவிலும் கருதார்கள். ஆனால் தான் கற்ற கல்வியைக் குறைகூறி இகழ்பவன் எவனாயினும் அவனுடன் வாது புரிந்து தமது கல்வியால் அவன் நாண வென்று மிக்க கருவத்துடன் திரிவார்கள். ஆகையால் செவிக்கினிய அளிக்கும் இக்கவி யாசர்கள் புவிக் கினிய அளிக்கும் புவியரசர்களைப் போலவே போற்றத் தக்கவர்கள் அன்றோ? இவ்வரிய கொள்கைகள் பின் வருஞ் செய்யுளில் சித்திரித் திருத்தல் காண்க.

“வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற்போகி

நெடிய வென்னாது சுரம்பல கடந்து

வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்

பெற்றது மகிழ்ந்து சுற்ற(ம்) அருத்தி

ஓம்பா(து) உண்டு கூம்பாது வீசி"

 

“வரிசைக்கு வருந்து(ம்) இப் பரிசில் வாழ்க்கை

பிறர்க்குத் தீதறிந்தன்றோ! இன்றே திறப்பட

நண்ணார் நாண அண்ணாந் தேகி

ஆங்கினி(து) ஒழுகின் அல்ல(து) ஓங்குபுகழ்

மண்ணால் செல்வ(ம்) எய்திய

நும்மோரன்ன செம்மலு முடைத்தே.”                     (புறம் 47)

 

[நண்ணார் = பகைவர்கள்; அண்ணாந்து = தலை நிமிர்ந்து;]

பண்டைக் காலத்து அரசர்கள்

செங்கோலிற் சிறந்தவர்கள். குடிகள் இன்புறுதலே கோலின் பயன் என்ற குணமுடையவர்கள். கொடையில் சிறந்த வள்ளல்கள் ஆதலால் அவர்களைப் பல புலவர்களும் இரவலர்களும் நாடிவந்து கூடி நிற்பார்கள்.

மலையினிழிந்து மாக்கட (ல்) நோக்கி

நிலவரை யிழிதரும் பல் (ஆறு போலப்

புலவரெல்லா (ம்) நின்னோக்கினரே                (புறம் 42)

 

எவர் வந்து எவ்வமயம் எதைக் கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கும் கொடையாளிகள். இதை விளக்கவே கபிலர் என்ற புலவர் 'நாள் பாராது கெட்ட நாளிலே இராகு காலத்திலே புறப்பட்டு இடையில் காக்கை இடம் போதல் முதலான சகுனத் தடைகளுடன் ஓர் அரசனிடம் ஓர் புலவன் செல்கிறான். அப்படிச் சென்ற அவன் அரசனின் சமயம் அறியாமல் புகுந்து முறையறியாமல் உரையாடுகிறான். அப்பொழுதும் அவ்வரசனால் அவன் குறைகள் நீக்கப்படுகின்றன' என்று அவ்வரசனின் நொடைச் சிறப்பை,

"நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்

பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்

வறிது பெயர்குவர் அல்லர்''                  (புறம் 24)

 

              [புள்ளிடை தட்ப=புள் நிமித்தம் இடையே நின்று தடுக்க;]

என்ற பாடலில் புகழ்ந்து கூறாகிறார்.

      அன்றியும் அவர்கள் புலவர்கள் தங்களைப் புகழ்வதும் அவர்களால் பாடல் கொள்வதுமே பெரும்பேறெனக் கொண்டார்கள். சேற்றின் கண்ணே தாமரை மலருகிறது. அதில் பல இதழ்களோடு கூடிய மலர்கள் புஷ்பிக்கின்றன. அவைகளிற் சிலவே பலருக்கும் பயன்படுகிறது. ஆனால் அவைகளில் பயன்படாது அழிபவை பல. அதுபோலவே சிறந்த குடியில் பிறந்த உயர்ந்த வேந் தருள்ளும் பிறருக்குப் பயன்பட்டுப் புலவரால் புகழப்படுவோர் மிகச் சிலரேயாவர். அப்படிப் புலவரால் பாடப்பாடும் புகழுடையோர் ஆகாயத்தின் கண் பாகனால் செலுத்தப்படாத விமானத்தில் ஊருவார்கள்.

''உரையும் பாட்டும் உடையோர் சிலரே

மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவ(ன்) ஏவா வான ஊர்தி

யெய்தும் வெண்பத(ம்) செய்வினை முடித்தே”             (புறம் 27)

 

[மரையிலை = தாமரை இலை; வலவன் ஏவா = பாகனால் செலுத்தப்படாத;
வான ஊர் தி=ஆகாய விமானம்;]

இவ்வுண்மை கண்ட நம் தொன்மை யரசர்கள் புலவர்களைப் போற்றுவதையே பெரும் பேறெனக் கொண்டார்கள். அவர்களை யே பெருநிதியெனக் கருதித் தங்கள் அவையில் இருத்தி ஆதரித்தும் வந்தார்கள். அவ்வாறு புலவர்கள் பாடாதிருப்பதும் இரவலர்க் கீயாதிருப்பதும் பெருங்குறை என உணர்ந்த ஓர் பாண்டிய வேந்தன் பாடிய பாவின் நயத்தைப் பாருங்கள்.

“ஓங்கிய சிறப்பி(ன்) உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன்) தலைவனாக

உலகமொடு நிலை இய பலர்புகழ் சிறப்பிற்

புலவர் பாடாது வரைகவென் நிலவரை

புறப்போர் புன்கண் கூற

விரப்போர்க் கீயா இன்மையா னுறவே”             (புறம் 72)

 

[இரப்போர்க் கீயா இன்மை = யாசிப்பவர்களுக்கு கொடாத வறுமை.]

இவ்வாறு பாவலர் பாவின் திறமும் காவலர் கோலின் குணமும் கூடி நின்ற காரணங்கொண்டே, நம் தமிழன்னை தலை நிமிர்ந்து நின்றாள். ஒப்பற்ற முச்சங்கங்களில் ஒளியுடன் விளங்கினாள். அவ்வொளியும் உலகெலாம் பரவி உயர் நிலையில் நின்றது. ஆனால் இந்நாளிலோ?

ஆனந்த போதினி – 1937 ௵ - மே ௴

 

No comments:

Post a Comment