Saturday, September 5, 2020

 

பெஞ்சமின் பிராங்க்லினின் குணாதிசயங்கள்

பெஞ்சமின் பிராங்க்லினின் சரித்திரம் உறங்கிக் கிடக்கும் மனதைத் தட்டியெழுப்பும் தன்மையுடையது; படிக்கப் படிக்கத் தெவிட்டாதபான்மையது; புது ஊக்கத்தையும், புதிய உற்சாகத்தையும் அளிக்க வல்லது. 'முயற்சி திருவினையாக்கும்' என்பதை நன்கு நிரூபிக்க பெஞ்சமினின் சரித்திரம் உபயோகமானது.

 

பெஞ்சமின் 1706 - ம் வருஷம் ஜனவரி 6s ஜோஸியா பிராங்க்லின் என்பவருக்கும், அபியாபால்கர் என்னும் அவரது இரண்டாவது மனைவிக்கும் பத்தாவது குழந்தையாக வட அமெரிக்காவிலுள்ள போஸ்டன் நகரில் பிறந்தார். இவர் தாய் தந்தையர் மிக்க ஏழைகளான படியினால் அவர்கள் பெஞ்சமினைப் பத்து வயதிற்கு மேல் படிக்க வைக்க முடியாதவர்களாயினர். ஆயினும் பெஞ்சமின் தம் விடாமுயற்சியால் கல்வி பயின்று உலகம் மெச்சும் உத்தமராய்த் துலங்கினார். இது நம்தேசத்து மாணவர்கள் கவனித் துணரத்தக்கது.
 

பெஞ்சமின் தம் சிறுவயதிலேயே பொது நலப்பிரியரா யிருந்தா ரென்பதற்கு ஒரு அத்தாக்ஷி காண்கிறது: சேறு நிறைந்த குட்டையிலிறங்கி மீன் பிடித்த அநேகர் அவதிப்பட்டதையறிந்த பெஞ்சமின், தம் தோழரைத் துணை சேர்த்துக்கொண்டு ஒருவர் வீடுகட்டு நிமித்தம் வாங்கிப் போட்டிருந்த கற்களை வாரி அக்குட்டையில் போட்டு மீன் பிடிப்போருக்கு இதம் செய்துமகிழ்ந்தார். இவர், முதலில் வேறொருவருடைய கற்களை வாரிப்போடுவது குற்றமென்றுணரவில்லை. பின்னர் இவரது தந்தை யுணர்த்தியதனால் அறிந்து அவரிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

 

இவருக்குப் படிப்பிலிருந்த பிரியம் இவ்வளவு அவ்வளவு அன்று. தாகமுடையவனுக்குத் தண்ணீரில் எவ்வளவு பிரிய மிருக்குமோ, அவ்வளவு விருப்பம் பெஞ்சமினுக்குப் புத்தகத்தின் மேலிருந்தது. அப்படியிருந்தும் இவர் பத்து வயதிற்கு மேல் பள்ளியில் படித்தல் முடியாமற் போயிற்று. அவ்வாறானது இவரது துரதிர்ஷ்டமென்றே சொல்லவேண்டும். இக்காலத்திலும் தனவந்தருடைய பிள்ளைகள், கல்வியை வேப்பங்காயைப் போலவெறுத்து விருதா கோஷ்டியுடனலைவ்தையும், ஏழை படிக்க அவாவுற்றும் பணமின்றித் தவிப்பதையும் நாம் கண்கூடாகக் காணலாம். இஃதிக் கலிகால வியற்கையேயாம்.
 

பெஞ்சமின் அதிகம் கற்க முடியாமற் போகவே அதன்மேல் கல்விச்சாலை செல்வதை விட்டுத் தம் தமையனின் அச்சியந்திர சாலையில் அச்சுக் கோக்கும் வேலையிலமர்ந்தார். அக்காலத்தில் இவர் பகலெல்லாம் வேலை செய்துவிட்டு இரவில் நெடுநேரம் கண்விழித்து நல்ல புஸ்தகங்களைப் படித்து வந்தார். புத்தகங்களில் சிறிதும் அழுக்கேற விடாமல் அவற்றை விசேஷ சிரத்தையுடன் காப்பாற்றி வந்தார். இஃதொன்றே பெஞ்சமினின் கல்வியாவலைத் தெற்றென விளக்கும்.

பெஞ்சமின் அதன்மேல் எவ்வளவோ கஷ்ட நிஷ்டூரங்களையும், கடவுள் சோதனைகளையும் அனுபவித்துத் தமது 23 - வது வயதில் ஓர் பத்திராதிபராகும் பெருமையினை யடைந்தார். அப்பத்திரிகையின் முதலிதழ் 1729 - ம் வருஷம்அக்டோபர் 2உ வெளிவந்ததெனச் சரித்திரங் கூறுகிறது. அப்பத்திரிகையில், அக்கிரமங்கள் செய்வோர் எத்தகையினராயினும் நடுநிலைமையில் நின்று, அவர்களுடைய துர்நடக்கைகளை இவர் அஞ்சாது வெளியிட்டு வந்தார். ஒருகாலத்தில் பிலடல்வியாவிலிருந்த சில பிரமுகர்களின் நியாய விரோதமான விஷயங்களை, தைரியமாகத் தம் பத்திரிகையில் வெளியிட்டார்.

 

அதைக்குறித்து இவர் நண்பர்களிற் சிலர் இவரிடத்தில், "இது சரியல்ல; பெரியோரின் பகை வயிற்றுப் பிழைப்பிற்கே கேடாக முடியும்'' என்று உரைத்தனர். அதைக் கேட்ட பெஞ்சமின் அவர்களுக்கு யாதொரு பதிலுங்கூறாது, ஒருநாள் அந்நண்பர்களை விருந்துக்கழைத்து, அவர்களுக்கு வாய்க்கு வழங்காத கேழ்வரகு ரொட்டியையும், குடி தண்ணீரையும் கொண்டுவந்து வைத்தார். அவர்கள் அங்கே உயர்ந்த ஆகாரம் கிடைக்குமென்று எதிர் பார்த்திருந்தார்கள்; ஆதலின் அந்தத் தாழ்ந்த ஆகாரத்தைக் கண்டதும் வியப்புற்று, தின்ன முடியாமல் விழித்தனர். பெஞ்சமினோ அவ்வாகாரத்தை அதிக விருப்பத்துடன் உண்டு விட்டு அவர்களை நோக்கி நேயர்களே! இக் கேவல உணவை உட்கொள்ளும் நான் உண்மையுரைத்து உயர்ந்தோரின் பகைவந்தகாலத்தும் எவருடைய ஆதரவின்றியும் பிழைத்துக் கொள்வேன் " என்றார். பெஞ்சமினின் புத்தி சூக்ஷமத்தையும் உத்தமசிந்தையையும் உணர்ந்தீர்களா?

 

இன்னும் பெஞ்சமின், தாம் எவருக்கும் எவ்வகையிலும் இன்னல் விளைப்பதில்லை யென்னும் பிரதிக்ஞை செய்து கொண்டிருந்தாராம். இது எத்தகைய மேலான விஷயம்? இன்னும் இவர் காலத்தைப் பாகுபடுத்தி வீணாக்காமல் உபயோகித்து வந்தார். காலை ஐந்து மணிக்கு எழுந்து ஏழு மணிக்குள்ளாக காலைக்கடன் தீர்த்தல், பகவத் பிரார்த்தனை செய்தல், பகலில் செய்ய வேண்டிய காரியங்களை நிர்ணயித்தல், படித்தல், போஜனம் பண்ணுதல் ஆகியவைகளை முடித்துக் கொள்வதென்றும், எட்டு மணி முதல் பதினொரு மணிவரையில் தொழில் செய்வதென்றும், பனிரண்டு மணி முதல் ஒருமணி வரையில் படித்தல், வரவு செலவு கணக்குப் பார்த்தல், மத்தியான போஜனம் செய்தல் ஆகியவற்றை நிறைவேற்றுவதென்றும், இரண்டு மணி முதல் ஐந்து மணிவரையில் மறுபடியும் தொழில் செய்வதென்றும், ஆறுமணி முதல் இராத்திரி ஒன்பது மணிக்குள்ளாக வஸ்துக்களை அவ்வவற்றிற் குரிய விடங்களில் வைத்தல், இராத்திரி போஜனம் செய்தல், சங்கீதம், வேடிக்கை, விநோதம், அல்லது சம்பாஷணை இவற்றில் பொழுது போக்கல், அன்றைய சம்பந்தமாய் ஆத்மபரீக்ஷை செய்தல் முதலியவற்றை முடித்துக் கொள்வ தென்றும், இரவு பத்து மணியிலிருந்து காலை நான்கு மணிவரையில் நித்திரை செய்வதென்றும் தினசரி வேலைத்திட்டங்களை வகுத்துக் கொண்டு அவ்விதமே நடந்து வந்தாராம். இவ்வழக்கம் எவ்வளவு சிலாக்கியமான விஷயம் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். இவருடைய இப்பழக்கத்தை ய நுசரித்து நாமும் நேரங்களையும் வேலைகளையும் வகுத்துக் கொண்டு அவ்வண்ணமே ஒழுகிவரின் உத்திருஷ்டமான வாழ்க்கையை அடையலாம்.
 

பெஞ்சமின் பிராங்க்லினிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் அவரது சலியா முயற்சியேயாகும். இவர் தம் சிறுபருவத்தில் கல்வி கற்கப் போதிய சாதனம் எதுவுமில்லாதிருந்தும், இவர் கல்வி கற்றவிதம் மிகவும் அதிசயிக்கத்தக்கதே. வறுமையும், கஷ்டமும் தம்மைப் பிணித்தும் மனம் சலிப்புறாமல், ஊக்கத்துடன் கல்வியைக் கற்று மேதாவியென யாரும் புகழத்தக்க மேன்மையுற்ற பெஞ்சமினின் சரித்திரம் மாணவர்க்குக் கர்ணாமிர்தமாம். படிப்பினாலேயே மனிதன் உயர் நிலை பெறலாம் என்பதை பெஞ்சமின் தம் சரித்திரத்தால் நன்கு விளக்கிச் சென்றனர். உழைப்பின்வாரா உறுதிகளுளவோ?


''மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்

 எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
 அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
 கருமமே கண்ணாயி னார்.”                                   (குமரகுருபரர்.)


 T. S. குழந்தை வேலன்,

திருவானைக்கா.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - ஜுலை ௴

 



No comments:

Post a Comment