Saturday, September 5, 2020

 

பெண் கல்வி

 

எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
      கண்ணென்ப வாழு முயிர்க்கு'


என்ற தமிழ் மறையின்கண் உயிர்க்கு எனப் பொதுப்படக் கூறப்பட்டமையானும், நாலடியாரில் மஞ்சளழகும் அழகல்ல'எனப் பெண்களுக்கே சிறப் பாகவுடைய மஞ்சள் குறிப்பிடப் பட்டமையானும், ஆண்மக்களுக்குக் கல்வி யெப்படி அவசியமோ அப்படியே பெண்மக்களுக்குங் கல்வி யின்றி யமையாததென நன்கு விளங்குகிறது. பெண்களுக்குக் கல்வி கட்டாயம் வேண்டுமென்று கூறுவதுடன் நில்லாது, அன்னோர் கல்வியை யபிவிருத்தி செய்யப் பல பள்ளிக்கூடங்களை நிறுவியும், பெண்களைப் பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களைத் தூண்டியும் வராநிற்கின்றனர் ஒரு சாரார். அதனினும் எண்ணிக்கையிற் குறையாத மற்றொரு சாரார், 'அடுப்பூதும் பெண்டிர்க்குப் படிப்பேன்'கற்பை யிழப்பதற்குக் கல்வியே காரணம்' என்று பலவாறு பேசி, பெண்களுக்குக் கல்வி ஒழுக்கத்தைக் குறைத்து அடங்காத் தனத்தை யபிவிருத்தி செய்யுமென்று பெண்களைப் பள்ளிக்கு அனுப்பலாகாதெனக் கூறி வருகின்றனர். இருதிறத்தாருடைய கூற்றும் எம்மட்டில் உண்மை யென்பதை அளவிலா வாநந்தத்தை யுண்டாக்கும் நமது ஆனந்தனைப் படிப்போரே அறியலாம். இருவர் கொள்கையிலும் சிறிது உண்மையிருந்தே தீரவேண்டு மென்பது என்னுடைய சித்தாந்தம். பெண்களுக்குக் கல்வி யின்றியமையாத தென்பதைப் பல மேற்கோள்களுடன் பல கற்றோர் நமது ஆனந்தனிலேயே நிரூபித்தாராதலின் அதையே யானும் எழுதத் துணிந்தேனல்லேன். ஆனால் பெண்களுக்குக் கல்வி நன்மை பயக்கின்றதா அல்லது தீமை யுண்டாக்குகிறதா என்னும் விடயத்தை மட்டுமே ஆராயப்புக்கேன். ஆராய்ச்சியின் கண் காணப்படும் பல குற்றங்களை நீக்கிக் குணத்தைக் கொள்ளுமாறு பிரார்த்திக்கின்றனன்.

 

கல்வியால் பெண்கள் கற்பை யிழக்கின்றனர் என்னுங் கூற்றில் ஒருவாறு உண்மையும் ஒருவாறு பொய்ம்மையு முள்ளதெனவே கூறலாம். படித்த பெண்களெல்லாம் தங்கள் கணவரை விட்டு ஒழுக்கமற்றிருப்பதாகக் காண்கிலோம். அதற்கு மாறாகப் படியாத பெண்களில் எத்தனையோ பேர் தங்கள் கணவனை விட்டும், கணவனோடிருந்தே கற்பைக் கனவிலும் நினையாது சற்றும் ஒழுக்கமற்றவராகவு மிருக்கக் காண்கிறோம். ஆகையால் மேற்கூறிய கொள்கை முழுதும் உண்மையெனக் கூற இயலவில்லை; முழுதும் பொய்யெனவும் கூற இயலவில்லை. ஏனெனில், படித்த பெண்களில் பலர், தங்கள் கணவர் வெளியில் சென்று, தங்களின் பொருட்டு வேர்வை சிந்த வெயிலில் கஷ்டப்பட்டு வீட்டிற்குத் திரும்பி வருங்கால், அவர்களுக்கு வேண்டிய உபசரணை செய்யாது அவர்களுக்கு மனவருத்த முண்டாகும்படியாகச் சாய்வு நாற்காலியிற் படுத்து நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கின்றனர். வெயிலில் களைத்து வந்த புருஷன், கால் கழுவு தற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுக்கலாகாதாவென்று கேட்டுவிட்டாலோ, போ, நிரம்ப சிரமப்பட்டு வந்துவிட்டாயோ, நான் இவ்வளவு நேரம் அடுப் பண்டைக் கஷ்டப்பட்டது ஈசுவரனுக்கே தெரியும்; உன்னை விவாகம் செய்து கொண்ட நாளே எனக்குப் பிடித்தது சனியன்; என் படிப்பெல்லாம் போச்சுது. எங்கள் தாயார் வீட்டில் எனக்கு ஏதாவது வேலை யுண்டா. சுகமாகப் படித்து வந்தேன். இங்கு வந்தது முதல் புத்தகம் எடுத்தால் உங்கள் கண்ணில் கொள்ளி வைத்தது போலாகிறது. இஷ்டமிருந்தால் சொல்லும். இல்லாவிட்டால் நான் எங்கேயாவது இப்பொழுதே ஒழிந்து போகிறேன்' என்று ஆரவாரம் செய்கின்றனர். கணவனே தெய்வமாகக் கொண்டு, கூப்பிட்டவுடன் பாதிக் கிணற்றிலேயே பாத்திரத்தை விட்டோடி வந்த பதிவிரதையாம் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் மனைவி வாசுகியின் சரித்திரம் படித்திருப்பின் இவ்வாறு கூறுவரா. ஆனால் மேற்கூறிய பெண்கள் படித்ததெனன. நாட்டு எலியும் நகரத்து எலியும்' என்ற கதையும், 'நடுவேனிறகாலம்' என்னும் ஷேக்ஸ்பியர் ஆங்கில நூலின் மொழி பெயர்ப்பும், வீட்டிற்கு வந்தவுடன் சந்திரகாந்தா'என்னும் நாவலுமே. இவைகளை யெல்லாம யான் படிக்க வேண்டாமென்று கூறவந்தேனல்ல. ஆனால் இப்படிப்பு எம்மட்டில் அவர்களுக்குப் பயனைத் தந்தது என்பதுதான. இம்மட்டுமா! எத்தனையோ படித்த பெண்கள் நாகரீகம்' 'நாகரீகம்' என்று கூறிக்கொண்டு மேல் நாட்டுப் பெண்களைப்போல் தாங்களும் நடக்க வேண்டுமென்று, குடும்ப வேலைகளை விட்டு, கூட்டங்கள் கூடுவதிலும், சுய ஆட்சி கேட்பதிலுங் காலத்தைக் கழிக்கின்றனர். சிலர் அந்தோ! தம் கணவருடைய பணம் சம்பாதிக்கும் கஷ்டத்தை அறியாதாராகி, அவரிடமிருந்து பகற் கொள்ளைக்காரர்கள் போல் பறித்து, வீட்டில் யாசகத்திற்கு வந்தால் ஒரு பிடி அமுதுங்கொடுக்க மனமில்லாதவர், பட்டுச் சேலை வாங்குவதிலும், நாடகங்கள், அசை காட்சிகள் பார்ப்பதிலும் பணத்தைச் செலவு செய்கின்றனர். பட்டுப் புடவைகள் கட்டலாகா தென்றும், நாடகங்கள் பார்க்கலாகாதென்றும் யான் கூறவந்தேனல்ல. பணம்மிகுதியு முடையவர் தாராளமாகச் செய்யலாம். இவ்வாறு சில தனவந்த ஸ்திரீகள் செய்வதைப் பார்த்து, 'புலியைப் பார்த்து பூனை சூடுண்டது போல்' ஏழை மாதுகளுந் தாங்களும் அவ்வாறிருப்பதே தற்கால நாகரீகமென்று கணவர்களுக்குப் பல தொந்தரைகளை உண்டாக்குகின்றனர். இவ்வாறான போலிக் கல்வி கற்ற மனைவிமார்களுக்குப் பயந்து எத்தனையோ பெயர் மனம் சலித்து இல்லறவாசை விட்டுச் சந்நியாசியாகிவிடுகின்றனர் என்றால் அவர்களை விடக் கூற்றுவர் வேறுண்டோ.

 

இதுதானா நாகரீகம்! இதற்காகத்தானா நாம் பெண்மக்களைப் படிப்பிப்பது! ஆனால் இதையே காரணமாகக் கொண்டு பெண்மக்களுக்குக் கல்வியே கூடாதெனக் கூறிவிடலாமா? பெண் மக்களுக்குக் கல்வி அவசியம் வேண்டியது தான். அன்னாருக்குக் கட்டாயப் படிப்புக்கூட விருக்க வேண்டு மென்பதே எனது கொள்கை. ஆனால் தற்காலத்திய கல்வி கூடாதென்பதே. தற்காலப் பெண் கல்வியில் பல சீர்திருத்தங்கள் செய்யப்படுதல் வேண்டும், மேல் நாட்டு முறைகளில் போதிக்கப்படுங் கல்வி நம் நாட்டுப் பெண்களுக்குக் கூடாது. மேல் நாட்டு முறைகளே மேற்கூறிய இடைஞ்சல்களை யுண்டாக்குகின்றன.

 

தற்காலத்தில் பெண்கள் பள்ளிக்கூடத்தில் அரைகுறையாகப் படித்து அதோடு வீட்டில் நின்று விடுகின்றனர். அவர்களுடைய பள்ளிக்கூடங்களில் தம் கணவனிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், தெய்வபக்தி. நம்முடைய மதக் கோட்பாடுகள், குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய முறைகள் முதலியவை கற்றுக்கொடுக்கப் படுவதில்லை. ஆனால் அதற்கு மாறாக அன்னியமத நூலாகிய பைபிலும், மேல் நாட்டுப் பெணகளின் சில சரித்திரங்களும், போலி நாகரீகமுங் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இவ்வாறான அரைகுறைக் கல்வியும், போலிப் படிப்பும் கற்ற பிறகு தங்கள் வாழ்நாட்களில் புகுகின்றனர். அச்சமயத்திலேயோ இவர்களுக்கென தற்காலப் புலவர்களால் வரையப்பட்ட நாவல்களைப் படிக்க வாரம்பிக்கின்றனர். அந்நாவல்கள் கடைசி பக்கங்களில் ஏதோ சில புத்திமதிகளை போதிப்பதாகத் தோன்றினாலும், ஒழுக்கமற்ற செயல்கள் பலர் செய்ததாகப் பல விடங்களில் எழுதப்படுவதால் அவைகளே அவர்களுக்குச் சீக்கிரம் பிடிபடுகின்றன. அதனால் தாங்களும் ஒழுக்கம் தவறி நடக்க ஆரம்பிக்கின்றனர். அதில் வரைந்துள்ள போலி நாகரீகத்தையே நாகரீகமெனக் கொள்ளுகின்றனர். மேல்நாட்டு வழக்கங்களாகிய சித்திரம் எழுதுதல், பூ போடுதல் முதலியவை மாத்திரம் கற்றுக்கொடுக்கப்படுவதால் தங்கள் வீட்டில் நாற்காலியி லுட்கார்ந்து கொண்டு விலையுயர்ந்த வாடைகளையும் நூல்களையும் வாங்கிச் சித்திரம் போட்டுக்கொண்டிருக்க வேண்டுமே தவிர குடித்தனத்திற்கு அவசியமாகிய இலைதைத்தல் குழந்தைகளின் உடைதைத்தல் முதலியன தங்கள் அந்தஸ்துக்குக் குறைந்ததென நினைக்கின்றனர். நம் நாட்டுக்கேற்றவாறு நம் நாட்டுப்பெண்களுக்கு வேண்டிய சீர்திருத்தங்களோடு கல்விக்கற்றுக் கொடுத்தல் வேண்டும். அதாவது, பெண் பள்ளிக்கூடங்களில் நம் நாட்டு ஸ்திரீகளே உபாத்தினிகளாக விருத்தல் வேண்டும் தினந்தோறும் குறைந்தது ஒருமணி நேரமாவது நம் மதத்தையும் பூர்வகால இந்து மாது சிரோமணிகளின் சரிதையையும் கற்பித்தல் வேண்டும். பெண்கள் முதலில் பெற்றோரிடமும், பிறகு கணவரிடமும் நடந்து கொள்ள வேண்டிய முறைகளும், குடும்பவாழ்க்கைக்கு அவசியமான குழந்தைகளைப் பாதுகாத்தல், சில வைத்திய முறைகள், சிறு உடைகளைத் தைத்தல் இவைகளைப்பற்றிப் போதித்தல் வேண்டும். அவர்கள் பள்ளிக் கூடத்தினின்றும் நிறுத்தப்பட்டவுடன் கடவுள் பக்தியைத் தரும்படியான தேவாரம், திருவாசகம் முதலிய புத்தகங்களையே படிக்க விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் மேற்படி பெண்கள் நல்ல அறிவாளிகளாகவிருத்தலோடு இல்வாழ்க்கைக் கோர் பேருதவியாகவும், கற்பிற் சிறந்த கண் மணிகளாகவும் பக்தி நிறைந்த சிரோமணிகளாகவும் விளங்குவர்.


கா. முனுசாமி,

காஞ்சீபுரம்.

 

குறிப்பு: - நமது நண்பர் கூறுமாறு கல்வியால் பெண்களுக்குக் கெடுதியும் உண்டாகிறது என்பது உண்மையாயினும் இயற்கையில் துர்க்குண முடைய பெண்களே தங்கள் கல்வியால் அகங்காரமடைந்து தாங்கள் கற்ற கல்வியைத் தங்கள் துர்க்கிருத்தியங்களுக்கு உதவியாக்கிக் கொள்கிறார்கள். ஆயினும் இயற்கையாகவே துர்நடக்சைகளில் விருப்பமுடைய பெண்கள் பத்துப்பேர் கல்விகற்றால் அவர்களில் சிலரேனும் அப்பிரியத்தை யொழித்து நல்வழியிற் றிரும்புவார்கள் என்பதில் ஐயமில்லை.

 

ஆனால் நமது பெண்களுக்கு எத்தகைய கல்வி கற்பிக்க வேண்டு மென்பதையே கவனிக்க வேண்டும். நமது தேசாசார மதாசார போதனைகளும், கற்பிலக்கணமும், நம் நாட்டுக் கற்பரசிகளின் சரித்திரம், கணவன் முதலியோரிடம் நடந்து கொள்ளும் முறைமை, மக்களை வளர்க்கும் நெறி, ஈசுரபக்தி முதலிய விஷயங்களையும் பற்றிய நூல்களையேயவர்களுக்குக் கற்பிக்கும் பட்சத்தில் கல்வியால் பெண்களுடைய நடக்கை கெடும் என்று கருதக் காரணமேயிராது. நமது மத உபாத்திமார்களைக் கொண்டே நம் பெண் மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டியது அத்தியாவசிய மாகும்.

 

அப்படிக்கின்றி அன்னியதேச அன்னிய மதாசாரங்களைப் பற்றிய நூல்களைப் போதிப்பதும், அன்னியமத உபாத்தியாயர்களைக் கொண்டு கல்வி கற்பிப்பதும் நம் பெண்மணிகளுக்கு நாமே பெருந்தீங்கை விளைவிப்பதாகும். அவ்வழியாய் நம் தாய்நாட்டிற்கே கேடிழைத்தவர்களாவோம்.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஏப்பிரல் ௴

 

 

 

No comments:

Post a Comment