Wednesday, September 2, 2020

 துளஸியின் மஹிமை

 

1. துளஸி என்பது ஒரு வகைச் செடி. நமது நாட்டில் இது எங்கும் பயிராகும். துளஸியில் இரண்டு வகை யுண்டு. ஒன்றின் இலை பச்சைப்பசே ரென்றிருக்கும், இதற்கு நற்றுளசி என்று பெயர். மற்றொரு வகையோ கருமை கலந்த பசுமை நிறமானது. இதைக் கருந்துளசி என்பார்கள். மேற்சொன்ன துளசியை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருத்துளாய் என்று பெயரிட்டிருக்கிற மகிமையைப் பற்றி நண்பர்கள் புராண மூலமாய் அறிந்து கொள்ளலாம். அதற்கிருக்கும் மகிமையை ஒரு ஸிவில் ஸர்ஜன் பரிக்ஷித்துப் பார்த்த விபரத்தைப் பற்றிச் சிறிது கூறுகிறேன். சில காலத்திற்கு முன் துளசிக் காட்டுக் கிடையில் ஒரு பிரேதம் கிடந்தது. அதைப் போலீஸார் கண்டெடுத்து மெடிகல் பரிசோதனைக்காக அனுப்பினர். ஸர்ஜன் அவர்கள் அந்தப் பிணம் சில தினங்களுக்கு முன்றான் அக்காட்டில் விழுந்திருக்க வேண்டு மென்று அபிப்பிராயப்பட்டார். ஆனால் சாட்சிகள் மூலமாய் வெகு நாட்களுக்கு முன்னரே கொலையுண்டதாகத் தெரிய வந்தது. அதைக்கண்டு ஆச்சரியமடைந்து பிணம் அழுகி மண்ணாகாமல் அத்தனை காலமிருப்பதற்கென்னகாரணமென்றாலோசித்துத் துளசிச் செடிக்கு அவ்வித சக்தி இருக்க வேண்டுமென்று யூகித்தார். உடனே ஒரு பெட்டைக் கோழியைக் கொன்று அச்செடிகளுக் கிடையிற் போட்டுச் சில தினங்கள் கழித்துப் போய்ப் பார்க்கையில் அது நாறாமலும் அழியாமலுமிருந்தது. உடனே பிரேதத்தை யழுகவொட்டாமற் காப்பாற்றும் சக்தி, துளசிக்கு உண்டென்று தெளிந்தனர். மேலும் இந்தச் செடியின் வாசனை படும் இடங்களில் கொசுகு அண்டாது. துளசியின் மணம் காற்றைச் சுத்தம் செய்யும். ஆதலால் இந்தச் செடி வளரும் இடங்களில் விஷ ஜுரம் பரவாது. துளசியின் சாறு மருந்தாக உதவுகிறது. ஆகையால் இது ஒரு சிறந்த மூலிகை ஆகும்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - மார்ச்சு ௴

 

 

 

 

No comments:

Post a Comment