Wednesday, September 2, 2020

 

துறவு

 

‘துறவு' என்னும் தலைப்பைப் பார்க்கும் பொழுதே, ஏதோ ஒரு வேதாந்தப் பிரசங்கம் என்று நினைத்துவிடாதீர்கள்! யான்" எழுதப் புகுந்தது, அகத்துறவைப் பற்றியா புறத்துறவைப் பற்றியா என்று கேளாதீர்கள்! அவ்விரண்டுமின்றி, மூன்றாவதாக ஒருவகைத் துறவும் நாளில் இருந்து வருவதை நான் நிரூபித்துக் காட்டுவேனாயின், எனக்கு என்ன கைம்மாறு செய்வீர்கள்? பட்டங்களுக்குப் பெரு மதிப்பு இருந்த காலம் மலையேறிவிட்டதாதலால், அவற்றால் என்னை மயக்கிவிட முடியாது. கௌரவப் பைத்தியம் இல்லாதவர்களுக்கு, புகழ் மொழிகள் எட்டிக்காய்ச் சட்டினியாகவே இருக்குமல்லவா? அத்தகை கைய நூதனத் துறவை விளக்கிக் காட்டக்கூடிய தொரு கதை சொல்கிறேன்; இது கற்பனையே யாயினும், இதில் கண்டபடி தற்சமயம் நடந்து வரவில்லை யென்று எவரேனும் நிரூபித்து விடக் கூடுமாயின், அவர்களுக்கு அரசாங்கத்தில் உயந்த உத்தியோகம் வாங்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

 

வெங்கபுரி நடுக் கம்பத்தம் நாராயணப் பிள்ளை, திருமாலை யன்றி தெய்வம் வேறு அறியாத திருக்குலத்தில் பிறந்தவர்; செல்வத்தில் சிறந்தவர்; பொருளின் அருமை தெரிந்தவர். பங்காளிகளிடமிருந்து தமக்கு உரிய பங்கைப் பிரித்துக்கொண்டபோது கிடைத்த முப்பது காணி நிலங்களை, பதினைந்து வருஷங்களுக்குள் தமது இடைவிடாத உழைப்பின் பயனாக முந்நூறு காணி நிலங்களாக பெருக்கியவர். தம் வீட்டுப் போரிலுள்ள வைக்கோலை தமது மாடுகளுக்குப் போடவும் மனங் கொள்ளாமல், அயல் வீடுகளிலிருந்து வைக்கோல் வாங்கிப் போட்டு மாடுகளின் உயிர் போய்விடாதபடி காப்பாற்றி வந்தவர். தமது ஊரிலுள்ள வெற்றிலை பாக்குக் கடைக்காரர்கள் தம்மை எதிர்த்து நிற்கமுடியாது என்னும் துணிவால், காலணா வெற்றிலை வேண்டியிருந்தாலும் காசு கொடுக்காமல்-கடைக்காரனையும் கடைக்காரனையும் கேளாமல் தாராளமாக தாமே எடுத்துக்கொண்டு விடுபவர். அவ்வாறு அவர் காலணா செலவழிக்கவும் மனமின்றி சிக்கனமாக வாழ்ந்து வந்ததனாலல்லவா, பதினைந்து வருஷங்களுக்குள் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் ஐந்நூறு ரூபாய் வருமான வரி செலுத்தக்கூடிய கௌரவம் மிகுந்த இலட்சாதிபதிகளின்
பட்டியில் ஒருவராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்!

 

அத்தகைய அந்த பிரபு பதினைந்து வருடங்களுக்குப் பின் துறவு கொண்டு விட்டார் என்றால், நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவர் துறவியாக மாறியது மட்டும் என்னவோ உண்மைதான். ஆனால், அது எத்தகைய துறவு என்பதை அறிய நீங்கள் பேராவல் கொள்வீர் களல்லவா?

 

அவர் கொண்ட துறவு, அவரை வேதாந்தப் பிரசங்கியாகவாவது – காவி அணிந்து திருவோடேந்தித் திரியும் சாமியாராகவாவது - "உலகம் பொய்; இன்பம் பொய்; நாடு பொய்; வீடு பொய்; உற்றார் பொய்; பெற்றார் பொய்; நான் பொய்; நீ பொய்; எல்லாம் பொய்யே”- என்று உலகத்தையே பொய்மயமாகக் கண்டு விரைவில் விண்ணுலகம் சேர ஆர்வங்கொண்டு நிற்கும் ஞானியாராகவாவது மாற்றிவிடவில்லை. அங்ஙனமிருந்தும், குறிப்பிட்ட வேளைகளில் அவரை தம்மை மறக்கச் செய்து அன்னபானாதிகளை வெறுக்கச் செய்து உறவினரிடமிருந்து ஒதுக்கிவைக்கக்கூடியதாக ஒரு துறவு இருந்தால், அது மிக்க அதிசயிக்கத்தக்க துறவேயாகுமல்லவா?

 

நாராயண பிள்ளை ஒருநாள், இடைவிடாமல் பல வருஷங்கள் உழைத்து வந்த தமது பேருழைப்பின் பயனாகவும், தந்திர சாமர்த்தியங்களினாலும், தினசரி கூலி வேலை செய்து கஞ்சி குடிப்பவர்களைக் காட்டிலும் குறைந்த செல்வில் மிக்க சிக்கனமாக வாழ்வு நடத்தி வந்ததனாலும் தாம் பெற்றுள்ள முந்நூறு காணி நிலங்களையும் வரவு செலவில் கிடக்கும் ஏராளமான பணத்தொகையையுங் குறித்து ஆழ்ந்த ஆலோசனையில் ஆழ்ந்தார். எவ்வளவோ கஷ்டப்பட்டு தாம் சம்பாதித்துள்ள ஏராளமான சொத்தை, தமக்குப் பிற்காலம் தமது புதல்வர்கள் நால்வரும் எவ்வழிகளில் அழித்து விடுவார்களோ என்ற அச்சம் அவரது அகத்தில் தோன்றவே, அவரது மனநிலை மாறத்தொடங்கிய ''வாழ்வாவது மாயம்,
இது மண்னாவது திண்ணம் என்று இளமையில் அவர் கேட்டிருந்த வாக்கியம் அவரது அகத்தில் தோன்றியது. என்றேனும் ஒருநாள் இவ்வளவு பொருள்களையும் விட்டுவிட்டு இவ்வுலகத்தினின்றும் மறைந்து விடவே நேரும் என்பது அவர் உள்ளத்தை உறுத்தியது. எனவே, அவர் ஒருவித தீர்மானத்திற்கு வந்தார். எத்தகைய தீர்மானம் என்று நினைக்கின்றீர்கள்? சொத்துகளில் பெரும் பகுதியையும் தானதருமங்களில் செலவழித்துவிடும் தீர்மானத்திற்கா? இல்லை, இல்லை. தாம் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சேர்த்த பெரும் பொருளை, தமது மனத்தில் பட்டபடி யெல்லாம் தாராளமாக செலவழிக்கும் தீர்மானத்திற்கே! அத்தீர்மானத்தால் பயன் பெற்றவர்கள் வயிற்றுக் கஞ்சிக்கும் வழியின்றி வருந்தித் திரியும் வறிஞர்களும் தேவஸ்தான பரிபாலகர்களுமாக இல்லாதொழிந்தது அவர்களது துரதிருஷ்டமே யன்றி, அத்தீர்மானத்தின் குறையாகுமா?

 

முதன் முதலில், தமது மனம் காட்டிய வழியில் நடப்பது எப்படி என்று நாராயணப் பிள்ளை யோசித்தார். டாம்பீக வழிகளேனும் கௌரவச் செலவுகளேனும் அவருக்கு சிறிதும் பிடிக்கவில்லை. மேலும், அவற்றில் தலைப்பட்டால், தமது மரணகாலம் வரையில் தாம் சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்க முடியாது என்று அச்சம் கொண்டார். அதனால், அவர் சிறிது சிறிதாகவே செலவு செய்ய விரும்பினார். எப்பொழுதும் நாராயணப் பிள்ளைக்கு மற்றவர்கள் எதைப் பழிக்கிறார்களோ அதை இரகசியத்திலேனும் அனுபவித்துப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை அதிகம் உண்டு. அவ்வாசையை தமது வாழ்க்கை முழுவதிலும் அவர் மேற்கொண்டு வாழ்ந்துவந்தார். அதன் பயனாக அவர் செய்த திருவிளையாடல்கள் பல. ஆயினும், கள்ளரக்கன் ஒருவன் மட்டும் அவரை ஆட்கொள்ளாதிருந்து வந்தான். அக்குறை கள்ளரக்கனுடையதா? அல்லது நாராயணப் பிள்ளையினுடையதா என்பதை முடிவு கட்டமுடியாது

.

இவ்வாறு சில காலம் சென்ற பின், ஒருநாள் நாராயணப் பிள்ளையின் மனத்தில் கள்ளரக்கன் தோன்றலாயினன். 'தனவந்தர்களில் பலர், காபிக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கவில்லையா? அவர்களைப் போல், நாளொன்றுக்கு மூன்று வேளைகளில் குடிக்காவிட்டாலும் ஒருவேளை கொஞ்சம் மது வருந்திவிடுவதால், உள்ள பெரும் பொருள் மறைந்துபோய்விடாது”-என்று அறிவுறுத்தினான். அந்த யோசனை நாராயணப் பிள்ளையின் மனத்தில் மதுவின் ருசி பார்க்கும் ஆர்வத்தை வளர்த்து வந்தது. சில தினங்கட்குப் பின், ஒருநாள் அவர் ஒரு துலாம் கள்ளை ரகசியமாக ருசி பார்த்தார். அவ்வொரு
துலாமும் அவருக்குப் புத்தம் புதிய தேன் போன்றே ருசித்தது. தேனையும் கள்ளையும் 'மது' என்ற பெயரால் வழங்கச் செய்த பெரியோரைப் பெரிதும் கொண்டாடலானார். அன்று முதல் ஒரு மாத காலமளவும் நள்ளிரவில் படுக்கப்போகும் போது எவரும் அறியாமல் தினந்தோறும் ஒரு துலாம் கள்ளைக் கள்ளத்தனமாக சாப்பிட்டு வந்தார். ஒரு மாதத்திற்குப் பின் ஒரு துலாமாக இருந்தது இரண்டு துலாமாக ஏறியது. சில மாதங்கட்குப் பின் இரண்டாக இருந்தது மூன்றாக ஏறியது. அவர் வசிக்கும் ஊரில் கள்ளுக்கடை இல்லாமையால் இரண்டு மைலுக்கு அப்புறம் உள்ள ஊரிலிருந்து நாடோறும் கள் வாங்கிவரச் செய்யவேண்டியிருந்தது பற்றி பெரிதும் வருந்தினார்.

 

ஒரு நாள், அவரது படுக்கையில் ஒளித்து வைத்திருந்த கள் நிரம்பிய சீசாவை அவரது கடைசி மகன் கண்டுவிட்டான். ஒரு வருட காலமாக தனது தந்தையின் மனநிலையும் உடல் நிலையும் பெரிதும் மாறுபட்டுவந்திருப்பதன் காரணத்தை கண்டுகொண்டு விட்ட அவன், அடங்காக் கோபத்துடன் தனது தந்தை யென்றும் பாராமல் நாராயணப் பிள்ளையை பலவாறு திட்டினான். தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை தன் மனம்போனபடி செலவழிக்க தனக்கு பூரண சுதந்திரம் இருக்கும்போது ‘நன்றியறிவின்றி தன் மகன் தன்னைத் திட்டினானே' என்று ஆத்திரம் மிகுந்தார் நாராயணப் பிள்ளை. அதற்கு மேல் அங்கிருந்தால், தான் பல வழிகளிலும் அவமானப்படவேண்டி வரும் என்று நினைத்தவராய் - தனது ஆசைக்கு இடை யூறாக இருந்த தனது பிள்ளைகள் மேலும் மனைவிகள் மேலும் கொண்டிருந்த ஆசையை அறவே விட்டொழித்தவராய் - வீட்டு வாழ்வை வெறுத்தவராய் - கள்ளுக்கடை இருந்த கிராமத்திற்கே சென்று குடியேறி விட்டார். பார்த்தீர்களா! எவ்வளவு எளிதில் இவர் மனைவி மக்களைத் துறந்து சென்றார் என்பதை!

 

      சொந்த ஊரை விட்டுவிட்டு வேற்றூருக்கு வந்துவிட்டாலும் --செல்வச்சிறப்பின் பயனாக நாராயணப் பிள்ளைக்கு வேண்டிய சௌகர்யங்களில் என்னவோ ஒரு குறையும் இல்லை. ஏவலாட்கள் பலர் அவர் ஏவிய வேலைகளைச் செய்ய காத்து நின்றனர். குடியின் ஆசை அதிகரிக்க அதிகரிக்க, அவருக்கு இராச் சாப்பாடு பிடிக்கவில்லை. எனவே, இரவுகள் தோறும் ஏழு மணிக்கு மேல் ஒரு புட்டி மதுவை உட்கொண்டு விடுவார்; உடனே, அவரது உடல் மண்ணுக்கத்தில் இருப்பினும் மனம் மட்டும் வேறிடம் சென்றுவிடும். பின், அவர் யோகிகளைப் போலும் தம்மை மறந்த நிலையை அடைந்து விடுவார்.
யோகிகள் துணி அணிவதை விரும்பாததே போல், அவரும் இடையில் துணி உடுப்பதை விரும்பாதவரானார். அவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், பரிகாசத்திற்குப் பயப்பட்ட பணியாட்கள் பலாத்காரமாகவாவது அவரது இடுப்பில் துணியை இறுக்கிக் கட்டி விடுவார்கள். அவ்வாறு அவர் உடையிலும் துறவு கொண்டுவிட்டார்.

 

இரவு எட்டுமணிக்கு அவரை இருபுறமும் இரண்டு ஆட்கள் பிடித்துக் கொண்டு நடத்திச்சென்று படுக்கைக்குக் கொண்டு போய் படுக்க வைத்து விடுவார்கள். பின், கள்ளரக்கனும் நித்திராதேவியும் அவரை மெய்மறந்து கிடக்கச் செய்து விடுவார்கள். தூக்கம் தெளிந்து எழுந்தவுடன், பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் கரைத்த சோற்றுக் கஞ்சியை கண்களை மூடிக்கொண்டு குடித்துவிட்டு பழையபடியே படுத்துக்கொண்டு விடுவார். அவ்வாறு வாழ்ந்து வந்த அவர், மாலைதோறும் மது மயக்கமும் மதி மயக்கமும் உடையவராக இருந்து வந்தார்.

 

அதன் பயனாக - தந்திர சாமர்த்திய வஞ்சக வினைகளில் தேர்ந்திருந்த காலத்தில் அவரால் பெரிதும் துன்புறுத்தப் பட்டவர்களெல்லாம், கள்ளரக்கனுக்கு அடிமைப்பட்ட காலத்தில் அவரை அடுத்து பல வழிகளிலும் அவரை ஏமாற்றி ஏராளமான இலாபம் அடைந்து வரலாயினர். இவ்வண்ணம் கள்ளாசை யொன்றின் பயனாக-பொருளாசை, மனைவி மக்கள் ஆசை, வீட்டாசை, உடையாசை, உணவாசை, புகழாசை முதலிய ஆசைகள் பலவற்றை யும் துறந்தவராக விளங்கலானார் நாராயணப் பிள்ளை.

 

இத்தகைய துறவிகளான கள்ளரக்கனின் தொண்டர்கள் குறையும் காலம் எப்பொழுதோ, அப்பொழுதே தமிழ்த்தாயின் ஆற்றொணாத் துயரம் மறையக் கூடும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment