Wednesday, September 2, 2020

 

தெய்வ பலமும் மனித பலமும்

 

கடவுளுடைய வல்லமையை அள விடுதல் எவராலு மியலாது; அவர் சர்வசக்தியுமுடையவர்; உலகங்களை உண்டாக்க நினைக்கும் போது உண்டாக்குவார்; காக்கக் கருணை கொண்ட போது காத்தருளுவார்; மறைக்க நினைந்தால் மறைப்பார்; மீண்டும் தோற்றுவிக்க நினைத்தபோது தோற்றுவிப்பார்; மற்றையரால், நினைக்கவும் செய்யவும் முடியாத அபாரச் செயல்களை யெல்லாம் செய்வார்; அவரால் நடைபெறாதது எதுவுமில்லை. ஆதலின் எல்லா வல்லமையும் கடவுளுக்கே உண்டு. அத்தகைய இணையற்ற வல்லமையே தெய்வபலமென்று சொல்லப்படும்.

 

இத்தகைய கருணாநிதியாகிய கடவுளால் மனிதர்க்கு அவர வரின் கர்மானுசாரமாகச் சில அனுகூலங்கள் அளிக்கப்படுகின்றன. அவர், சிலருக்கு அளவற்ற ஐசுவரியத்தையும், சிலருக்குத் தேகதிடத்தையும் மனோதிடத்தையும் கொடுக்கின்றார். இவற்றால் அரும்பெருஞ் செயல்களையும் செய்யக்கூடிய ஆற்றல் அம்மனிதர்க்கு உண்டாகின்றது. இது கடவுளால் அவர்களுக்கருளப்பட்ட பொருள் தேகதிடம் முதலியவற்றால் ஏற்படக் கூடியதாயிருந்தாலும் அவர்கள் மூலம் நடைபெறுவதால் மனிதபலமென்று பெயர் பெறுகின்றது.

 

இவ்வாறு கடவுளால் அருளப்பட்ட பொருளாலும், தேகக்கட்டாலும் கிடைத்த மனிதபலத்தை அறிஞர் நிலையற்ற தெனநினைந்து நன்னெறிகளிற் செலுத்தித் தர்மகாரியங்களிற் பயன்படுத்தி இம்மையிற் கீர்த்தியையும், மறுமையில் உயர்ந்த பதவிகளையுமடைந் தின்புறுகின்றனர். அறிவற்றார் சிலரோ, அந்தப்பலம் எப்பொழுதும் நிலைத்திருக்குமென் றெண்ணி அதனைத் துர்க்காரியங்களில் உபயோகிக்கிறார்கள். தமக்கு வல்லமையிருக்கிறதென்று செருக்குற்று எந்த அக்கிரமங்களையும் துணிந்து செய்கின்றார்கள். அவ்வகையாருள் பொருளுடைய ஒருவன் ஒரு தீச்செயலைப் புரிந்து விட்டுப் பொருளை அதிகமாகச் செலவிட்டு அதனை வெளிப்படாமல் மறைத்து விடுகிறான்; ஒருசமயம் அது வெளிப்படினும் பொருளை வாரியிறைத்து அதற்குரிய இராஜதண்டனையினின்றும் தப்பிக் கொள்ளுகிறான். கல்வியாளரும், அறிவாளிகளும் கூட அவன் பொருளுடையவனா யிருக்கிறானென்று பயந்தும், அவனால் அனுகூலம் பெற விரும்பியும் அவன் குற்றத்தை மறைப்பதற்கு இணங்குவதோடு அவனைப் பழிக்காமல் புகழ்தலும் செய்கிறார்கள். தேகதிடமுள்ளவனோ "நம்மோடெதிர்ப்பார் எவருமிலர்; எவரேனுமெதிர்த்தால் ஒரேகுத்தில் அவரை நாசப்படுத்தி விடலாம்' என அகங்கரித்து எத்தகைய பாவச் செயல்களையும் அச்சமின்றிச் செய்கிறான். அவ்வாறு செய்யும் போது அவன் போக்கிரியாயிருப்பதால் மற்றையர், அவனோ டெதிர்க்கவோ, அதிகாரிகளிடம் அவன் மீது குற்றஞ் சாட்டவோ அஞ்சுகிறார்கள். பொருள் வன்மையும், உடல் வன்மையுமுடைய சில அறிஞர் தாங்கள் சுயமாக இவர்களை ஒடுக்க நினைந்தாலும் இராஜாங்க சட்டம் அதற்கிடங் கொடுப்பதில்லை; அக்கிரமக் காரர்களையும் இவர்கள் சுயமே தண்டிக்கப் புகுந்தால் இவர்கள் அக்குற்றத்திற்கு அதிகாரிகளால் தண்டனையடைய வேண்டியிருக்கிறது. அதிகாரிகள் மூலம் அவர்களை அடக்கலாமென்று நினைத்தாலோ, அவர்கள் தங்கள் பொருட்பலத்தாலும் தேகபலத்தாலும் அக்குற்றம் அதிகாரிகளுக்கு வெளிப்படாமலிருக்கும் படி செய்து விடுகிறார்கள். சாக்ஷிகளாலும், மற்ற ஹேதுக்களாலும் அவர்களுடைய குற்றங்களை ருசுப்படுத்துவது பெரிய பகீரதப் பிரயத்தனமாய் முடிகிறது.

 

இவ்வகைக் காரணங்களால் அந்த அக்கிரமக்காரர்கள்,'' நம்முடைய பலத்துக்கு மேல் தெய்வபல மொன்றிருக்கிறது; அதற்குமுன் நம்முடைய வன்மை செல்லாது; இப்பொழுதில்லா விட்டாலும் பின்னொரு சமயத்திலேனும் தெய்வ வல்லமையால் நாம் தண்டிக்கப்படுவோம்; உலகத்திலும் நமக்கிணையான வல்லமையுடையவர்களால் ஒரு சமயம் தண்டிக்கப் படுதலும் கூடும்; நம்முடையவன்மை எப்பொழுதும் நிலைத்ததன்று'' என்று சிறிதும் சிந்திக்காமல் ஆணவத்தால் பீடிக்கப்பட்டு, ஆங்காங்கே அடுத்தடுத்து அநேகம் கொடுஞ்செயல்களைச் செய்துகொண்டே போகின்றார்கள். இவர்களால் பல பொதுஜனங்கள் ஹிம்சிக்கப் படுகிறார்கள்; ஏழைகள் கண்கலங்குகின்றனர்; அரிய சகோதரிகளாகிய பெண்மணிகள் கறபழிக்கப்படுகிறார்கள். காருண்ய கவர்ன்மெண்ட் ஒன்றிருக்கும் போது இத்தீமைகள் சிலரால் நடப்பது அறிஞர் மனத்தைப் புண்படுத்தக் கூடியதாயிருக்கின்றது.  கொஞ்சக்காலத்திற்கு முன்கல்கத்தாவில் ஹிராலால் ஹக்ரவாலா என்னும் தனவந்த வியாபாரி யொருவர் இராஜகுமாரி என்னும் ஒரு நேபாளஜாதிப் பெண்ணைப் படாதபாடு படுத்தியதும், அவரை, கட்காபகதூர்சிங் என்பவர் அடக்கியதுமான விஷயம் நம் போதினி 12 வது தொகுதி11 வது பகுதி 513 வது பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. சமீப காலத்திலும் ஒரு கோர சம்பவம் நடந்திருக்கிறது. பயெஸ் ஆலி என்னும் துன்மார்க்கன் ஒருவன் வில்ஹெட்டைச் சேந்த ஒரு கிராமத்தில் இருந்து வந்தான். அவன் திமிர் ஏறிய தேகமுடையவனாதலால், அநேகம் பெண்மணிகளைக் கற்பழித்து துராக்கிருதம் செய்து வந்தான். அவன் கொடுமைக்கு ஆற்றாமல் சிலர் பக்கத்துக் கிராமங்களுக்குப் போய் வசித்து வந்தார்கள்.

 

அவன் இருந்து வந்த கிராமத்தார்கள் மிகவும் பயந்த சுபாவமுடையவர்களானதால், அவன் நீண்டகாலமாகத் தன் தீச்செயலைத் தீவிரமாக நடத்தி வந்தான். கடைசியாக அவன் ஒரு எளிய மனிதனின், மனைவியாகிய 16 வயதுள்ள பவித்ரா என்னும் பெண்ணைக் கற்பழிக்க விரும்பி, அவள் தன் நோக்கத்திற்கிசைந்தால் அநேகம் விலையுயர்ந்த வெகுமானங்களை அவளுக்குக் கொடுப்பதாக ஒரு ஸ்திரீயிடம் சொல்லி, அச்சமாசாரத்தை அவளிடம் தெரிவிக்கும்படி அப்பெண்ணை யனுப்பினான். அவ்வாறே அவள் பவித்ராவிடம் அதைத் தெரிவித்தாள். 'பவித்ரா' என்பது பரிசுத்தமுடையவள்' என்னும் பொருளுடையதாதலால் அப்பெயரைக் கொண்ட அவள் அதற்கேற்ப மகாபரிசுத்தமுள்ள பதிவிரதையாகவே யிருந்தாள். ஆதலின், அவ்வெகுமதியை மிகவும் வெறுத்து அத்துஷ்டனுடைய நோக்கத்திற்கிசையாதிருந்தனள். பயெஸ் ஆலி அதோடு விடாமல், ஒருநாள் அவள் தன் தாயோடு வசித்து வந்த வீட்டிற்குள் புகுந்து, அவன் நோக்கத்திற் கிணங்குமாறு அவளை வற்புறுத்தினான். அவள் திடசித்தத்துடன் அதனை மறுத்து விட்டாள். அதன்மேல் அவன் 'நீங்கள் என் எண்ணத்திற்கிணங்காவிடில் நான்பலவந்தமாக உங்களைக் கற்பழிப்பேன்," என்று அவளையும், அவளுடைய தாயையும் பயமுறுத்திச் சென்றான். அவர்கள் அச்சமுற்றார்கள். அப்போது அவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்த 'ஸவமோஹன்' என்னும் 18 வயதுள்ள வாலிபனொருவன் அங்கு நடந்ததையுணர்ந்து, அவர்களைக் காப்பாற்றுவதாக அவர்களுக்கு உறுதி மொழி கூறினான். அதன்மேல், பயெஸ் ஆலி, தான் கூறிய படியே ஒருநாள் சாயுங்காலம் அகங்காரத்துடன், அவ்வீட்டிற்குள் வலிய நுழைந்து, பவித்ரா என்பவளைக் கற்பழிக்க ஆரம்பித்தான். அப்போது ஸவவிமோஹன் மூன்று தோழர்களுடன் அங்கு வந்து, அத்துன்மார்க்கனைத் தடுத்தான். அவன் அடங்கவில்லை. அதனால் ஸஸிமோஹன் அவனைக் கத்தியால் குத்தினான். அதனால் அத்தூர்த்தன் இறந்தான். ஸஸிமோஹன்மீது அக்கொலைக் குற்றம் ஏற்பட்டு விட்டது. அக்கேவின் விசாரணை முடிவுகாலத்தில் அக்குற்றத்தைப்பற்றி அபிப்பிராயங் கூறுதற்கு ஐந்து ஹிந்துக்களும், இரண்டு முஸல்மான்களும் ஜூரர்களாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் எல்லோரும் ஒரே மனதாய், '' ஸஹிமோஹன் குற்றவாளி அல்லன் " என்று கூறினார்கள். அதன்மேல் நியாயாதிபதி அவனை விடுதலை செய்து விட்டார். பெருந்தன்மையும் தைரியமும் பொருந்திய இவ்வாலிபன் யாதொரு தண்டனையின்றி நியாயப்படி விடு தலையடைந்ததைப்பற்றி நாம் சந்தோஷிக்கிறோம்.

 

இங்கு உதாரணமாக எடுத்துக் காட்டிய இவ்விருவருள் முன்னவன் பொருள் வலியால் அக்கிரமஞ் செய்தவன்; பின்னவன் உடல் வலியால் தீமை புரிந்தவன். இவர்கள் தங்களுக்கு மிஞ்சினவ ரெவருமில்லை என்று அகங்கரித்து அநீதிச் செயல் புரிந்து வந்தும் இவர்களைப் போன்ற வேறு வல்லமையுடையவர்களால் ஒடுக்கப்பட்டார்கள். இவர்களை ஒடுக்கியவர்களுக்குத் தெய்வந் துணை புரிந்தது. இத்துஷ்டர்கள் மனிதரால் அடக்கப்படாவிடினும், இராஜங்கத்தாராலேனும் தண்டிக்கப்படுவார்கள். ஒருசமயம் அதற்குந் தவறினாலும் தெய்வ வல்லமையால் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். ஆதலின், அக்கிரமக்காரர்கள் அதனை விட்டால் மாத்திரமே சுகம் பெறுவார்கள்.

 

இக்காலத்தில் பலர், அவிவேகத்தால் தெய்வவல்லமை யொன்று நம்மைப் பாதாளத்தில் அழுத்த இருந்து கொண்டிருக்கிறதென்பதை அடியோடு மறந்து தங்கள் வல்லமையே சிறந்ததெனக் கருதி இவ்வகையான எத்தனையோ எண்ணத்தொலையாத கொடுஞ் செயல்களைச் செய்து வருவதை எவரும் எங்கும் காணலாம். இத்தீச்செயல்கள் ஒழிக்கப்பட வேண்டும். பின்னே இத்தகையினர்க்குத் தெய்வ தண்டனை யேற்படுவது நிச்சயமாயிருந்தாலும் இக்கொடுஞ் செயல்கள் நடைபெறாதிருப்பதற்கான முயற்சிகளை, காருண்ய கவர்ன்மெண்டாரும், அறிஞராகிய பெரியாரும் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். அங்ஙனம் மனிதவல்லமைமையைக் கொண்டு நீதியை நிலைநிறுத்தினால், தெய்வவல்லமையால் எல்லோருக்கும் நன்மையே உண்டாகும்.


ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment