Thursday, September 3, 2020

 

நவீன நாகரீக மென்னும் பாதாளத்துக்குப் போகும் படிகள்

 

1. இவ்வியாசத்தின் தலைப்பை நோக்கும் நேயர்கள் நவீன நாகரீகத்தைப் பாதாளத்துக்கு ஒப்பிட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டுவ தில்லை. ஏனெனில் அந்த நாகரீகமே நம்மிந்திய மக்களை வீண் மயக்கத்திலாழ்த்தித் தரித்திரத்தில் கொண்டு வந்து விட்டதென்பது மறுக்கக்கூடாத விஷயம். நம்மவரில் (இந்தியரில்) நவீன நாகரீகத்தை அனுசரிக்காம லிருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 

2. ஒரு தேசத்துக்குப் புராதனமாக ஏற்பட்டுள்ள பழக்க வழக்கம், நடையுடை, உணவு, ஆசாரம் முதலியவற்றினின்று மாறுதலடைவதும்; பிறதேசத்துக்கடுத்த மேற்கூறியவற்றை அனுசரிப்பதுமே நவீன நாகரீக மெனப்படும். அப்படிச் சுய தேசத்துக்கடுத்த புராதன நாகரீகத்தை விடுத்து நவீன நாகரீகத்தை அனுசரிப்பதில் இந்தியாவோடு வேறு எந்தத் தேசமும் போட்டி போட முடியாது. முதலில் சிறிய பழக்கங்களைச் சாதாரணமாக நினைத்துக் கைக்கொண்டுவிட்டு அப்பால் ஒன்றன்பின் னொன்றாய் வெறுக்கக்கூடிய பல காரியங்களைச் செய்யும் பழக்கங்களுக் குட்பட்டு, அனாவசிய மாயும், பைத்தியக்காரத் தனமாயும் பொருளைச் செலவு செய்து ஏங்கி நிற்கும் பலரை இந்தியாவிலெங்கும் ஏராளமாகக் காணலாம். அதினாலேயே நவீன நாகரீகத்தைப் பாதாளத்துக்கும், ஒவ்வொரு புதுப்பழக்கத்தை ஒவ் வொரு படிக்கும் ஒப்பிட்டுக் கீழே வரையத்துணிந்தோம். இவ்வியாசத்தின் பலனாக நமது பாரத மக்கள், அப்படிகளின் போக்கைச் சற்று கவனித்து அவற்றைப் பின்பற்றாது விலகி க்ஷேமமடைவார்களென்றே முற்றும் நம்புகிறோம்.
 

முதற்படி காப்பிக்குடி - முதன் முதல் காப்பிக்குடியைத்தான் நம் நாட் டார் நவீனபானமாய் உபயோகிக்க ஆரம்பித்தார்கள். அதிலிருந்து டீ, கோக்கோ முதலிய பானங்கள் உறவாடத் தொடங்கிவிட்டன. காப்பிக் குச் சிநேகமாய் முதல் முதல் விளங்கினவை இட்டலியும், தோசையும், அப்பமுமே. பின்பு காப்பி என்னும் பானம் டீ, கோ கோ, என்னும் பானங்களுடன் சேர்ந்து குலவியதைக் கண்ட இட்டலி வகையராவும் போட்டி போட்டுக் கொண்டு உப்புமா, கேசரி, ஹல்வா, ஸொஜ்ஜி, ரவாலாடு, குஞ்சா லாடு முதலியவற்றோடு சம்பந்தியைப் போல் நெருங்கிப்பழக ஆரம்பித்து விட்டன. மேற்கூறிய பானங்களும், பக்ஷணங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போடுவதைக்கண்டு, " ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்'' என்றமாதிரி அவை, சர்க்கரை, நெய், பால், முந்திரிப் பருப்பு, கடலைமா, ஏலம், கிராம்பு, திராசைப்பழம் முதலிய ஒவ்வொன்றும் இதுதான் சமயமென்று தன் தன் விலைமதிப்பை அளவிற்கு மிஞ்சி உயர்த்திக் கொள்ளவே மனிதர் தங்கள் கையிலுள்ள பொருளை மேற்கூறிய வற்றிற்குப் பங்குபோட்டுக் கொடுக்கும் படியான நிர்ப்பந்த நிலைமைக்குட்பட்டு விட்டார்கள். வயிறு நிறையப் பழைய சாதம் சாப்பிட்டால் சராசரி 1 அணாவுக்கு மேல் செலவழியாது; தேகாரோக்கியத்துக்கும் பங்கமேற் படாது. இதை விட்டு, சனியனை விலைக்கு வாங்குவதுபோல் காப்பி முதலிய பானங்களை வழக்கத்துக்குக் கொண்டுவந்து 8 அணா செலவழித்தும் நம்மவர்கள் அரைவயிறுகூட நிரம்ப வழியின்றிக் காசவியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் போல் பெருமூச்சு விட்டலைகிறார்கள்.

 

தற்காலம் காப்பிக்கிளப்பு வைப்பதையே ஜாதித்தொழிலாகக் கொண்டு அநேகர் ஜீவிக்க முன்வந்து விட்டார்கள். இவர்களிற் பலர் ஜீவகாருண்ய மின்றித் தங்கள் விடுதியில் பசியாற வருபவர்களிட மிருந்து துட்டைப் பிடுங்குவதிலேயே கண்ணாயிருக்கிறார்களே யன்றி அவர்கள் பசிதீரவேண்டு மென்றாவது, சுகாதாரம் கெடாமலிருக்க வேண்டு மென்றாவது கிஞ்சித் தேனும் கவலைப்படுகிறதில்லை. எப்படியெனில் 4 அணா செலவு செய்து பக் குவப்படுத்தப்பட்ட பக்ஷணங்களைச் சிலவேளைகளில் 1 ரூபாய்க்குக்கூட விற்று விடுவார்கள். மேலும் பசியாற வருபவர்களிடம் வெகு மரியாதையாகப் பேசித் தங்களால் செய்யப்பட்ட விலையுயர்ந்த தினுசுகளையே அடிக்கடி வற்புறுத்திக்கூறி " பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து " என்ற பல செய்யுள்களையும் பாடி, நயமான வார்த்தைகள் சொல்லி உத்தேசம் 1 சேர்காப்பி 1 கிண்ணம் ஸோஜ்ஜி, 1 ஹல்வாத்துண்டு, 1 ரவாலாடு,
1 ரவாதோசை முதலியன சாப்பிடும்படி செய்து விடுவார்கள். இவ்வளவும் சேர்ந்து அரை வயிறுகூட நிரம்புவது சந்தேகம். ஆனால் துட்டு மாத்திரம் பத்து அணாவாகிவிடும்.

 

இந்தியாவில் பலகோடி ஜனங்கள் 4 அணா கூலி கூட கிடைக்காமல் பசியால் மெலிவுற்று வருந்துங்கால் 1 அணாவுக்குள் முடியும் காலை போஜனத்தை அலக்ஷியம் செய்து அதற்காக 10 அணா செலவழித்தும் அரை வயிறுகூட நிரம்ப வழியின்றி யலையும் நமது பேதை இந்தியர்களைப் பார்த்து மற்றவர்கள் அலக்ஷியம் செய்து கை கொட்டிச் சிரிப்பதில் ஆச்சரிய மொன்று மில்லை. இன்னும் சிலர் மாலை 3 மணிக்கு இடைப்போஜனத்துக் காகவும் இப்படியே செலவு செய்கிறார்கள். நிற்க, சிற்சில காப்பிக்கிளப்புகளில் உள்ள சுத்தா சுத்த விதிகளை உள்ளபடியே எடுத்துரைத்தால் சுமார் 1 வருஷத்துக்கு முன் காப்பிசாப்பிட்டவர் கூட வாந்தி பண்ணி விடுவார். சுருக்கமாய்ச் சொல்லுமிடத்து, பாகம் செய்கிறவனுடைய வியர்வை, வெற்றிலை பாக்குப் புகையிலை கலந்த எச்சில் முதலிய எல்லாம் பக்ஷணங்களில் சம்பந்தப்பட்டுவிடும். பிறகு அவற்றையும் விலைகொடுத்து வாங்க வேண்டியது தான். நவீன நாகரீகத்தில் இன்னும் முன்னேறியவர்கள் பாத்திரங்களில் வாய்வைத்துக் குடிக்கும் வழக்கத்தினால் ஒருவருக்கு இருக்கும் ஒட்டுவாரொட்டி வியாதி மற்றவருக்குப் பரவ ஏதுவாகிறது. இந்தியாவில் மதுபானங்களை விட இதுவே அதிக கேடுவிளைவிக்கக் கூடியதாயிருப்பதால் புத்திமான்களென்று சொல்லிக்கொள்ளும், கருதும் ஒவ்வொருவரும் முதலாவது ஒழிக்கவேண்டியது இப்பானமேயாகும்.

 

சிலர் காப்பி குடிப்பதை ஒரு பெருமையாக எண்ணியே பழகிவிடுகிறார்கள். பழைய சாதம் சாப்பிடுவதை இகழ்ந்தும் காப்பி சாப்பிடுவதைப் புகழ்ந்தும் பேசுவது சில நவீன நாகரீகரின் வழக்கம். இவர் சிலர் காப்பி சாப்பிடக் கையில் துட்டு இல்லாவிட்டாலும் கிளப்பினுள் புகுந்தாவது வெளிவந்தால் பலரும் தாம் காப்பி சாப்பிட்டு வருவதாக எண்ணுவார்கள் என்று உள்ளே போய் ஒரு டம்ளர் ஜலம் வாங்கிக் கொஞ்சங் குடித்துவிட்டு மீதிஜலத்தைக் கொப்பளித்துத் துப்பிவிட்டு வெளிவருவார்கள். என்னே இவர்களின் சொகுசு.

 

காப்பிக் கிளப்புகளைக் கிராமங்களில் கூடக் காணலாமெனினும் நகரங்களில் கணக்கிலடங்காம லிருக்கின்றன. தடுக்கிவிழுமிடமும் காப்பிக்கிளப்புதான். போதும் போதாததுக்கு சர்க்கார் கச்சேரிகளிருக்கும் காம்பவுண்டுக்குள் கூட இரண்டு மூன்று கிளப்புகளுக்குக் குறையாமல் இருக்கின்றன. கக்ஷிக்காரர் தங்கள் கையிலுள்ள பொருளை வக்கீல்களிடம் கொடுத்துவிட்டுப் பட்டினியும் பசியுமாய்க் கச்சேரிவாசலில் காத்துக்கொண் டிருக்கையிலுங்கூட ஷை வக்கீல்களிற் சிலர் மறுபடியும் அவர்களைக் கண்டு டிபனுக்கு (TifiD) வழிசெய்தாயா என்று கேட்க, கக்ஷிக்காரன் மிரண்டு விழிக்கும் பரிதாபம் நேரில் பார்ப்பவருக்கே தெரியும். காசு இல்லையென்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள்; கேசையும் கவனிக்க மாட்டார்கள் என்ற பயமே கக்ஷிக்காரர்களை வருத்த, அவர்கள் காதில் போட்டிருக்கும் கடுக்கன்களைக்கூட அடகுவைத்து வாங்கிக்கொடுத்து விடுவார்கள். இப்படிப்பட்ட காருண்ய முள்ள வக்கீல்கள் வெகு சிலரேயாயினும் காப்பிக் குடியின் கொடுமையை விளக்கவே இது எழுதலாயிற்று.

 

இரண்டாம் படி பீடி சிகட்டு: - காப்பிக் கிளப்புக்குள் நுழைந்து வெளிவந்தவுடன் ஊக்கங்கிளம்பி பீடி, அல்லது சிகரட் ஒன்றைக் கொளுத்தி விடுவார்கள். வரவர பைசாவுக்கு ஒன்று வீதம் விற்கும் சிகரட்டைக் குடிப்பது மதிப்புக் குறைவென்று கருதி ஒன்று அரையணா பெறுமானமுள்ள கத்தரிக்கோல் மார்க்கு போன்றதை உபயோகிக்கத் தலைப்பட்டு விட்டார்கள். இப்பழக்கத்தினாலுண்டாகும் தீமைகளைப்பற்றிப் பன்முறையும் நமது ஆனந்தபோதினி விளக்கி யுள்ளதாதலால் ஈண்டுக் கூறுவது அனாவசியம். சுருக்கமாய்ச் சொல்லுமிடத்து இது ஷோக்குக்காகவே பழகும் துர்ப்பழக்கமாகும்.

 

மூன்றும்படி தலை மொட்டை: - பீடி சிகரட்டுப் பிடித்தவுடன் சற்று மேனாட்டு நாகரீகத்தில் பிஞ்சு விட்டதுபோ லெண்ணம் வரவே தலையில் குடுமிவைத்திருப்பது சற்று அநாகரீகமாகத் தோன்றும். உடனே கிராப் செய்து படிப்படியாய் எண்ணெய் இடுவதைவிட்டு வாஸ்லின் தடவி உயர்ந்த தந்தச் சீப்புக்கொண்டு பெரிய கண்ணாடி முன் நின்று கால் மணிநேரம் செலவு செய்து பலவிதமாக நெளிவும் வளைவும் பொருந்தச் சீவிச் சிங்காரித்துக் கொள்வார்கள். வாஸ்லின் வாங்கச் சக்தியில்லாதவர்கள் தண்ணீரும் எண்ணெயும் கலந்து பூசுவார்கள். இப்படிச் செய்யாவிட்டால் உரோமம் படிந்துவராது. கிராப் செய்தவுடன் சிலர் பொட்டு வைக்கவோ, மதாசாரப்படி ஏற்பட்ட நாமமோ, திருநீறோ, அணியவோ பிரியப்படார்கள். கிராப்செய்யக் கூலிதடவைக்கு 6 அணா. தவிரவும் 4 நாளைக் கொருதடவை முகச்சவரம் செய்யத் தடவைக்கு அணா 2 ஆகக்குறைந்தது மாதம் ஒன்றுக்கு 1 ரூபாயாகும். இப்படி ஆயுளில் வாஸ்லின் வாங்கவும் க்ஷவரக்கூலி கொடுக்கவும் எவ்வளவாகிற தென்பதைச் சிந்திப்பதேயில்லை. டாக்டர் யூ ராமராவ் முதலிய வைத்திய நிபுணர்கள் தலைமத்தியில் குடுமிவைத்துச்சுற்றிலும் க்ஷவரம் செய்து கொள்வதே, இந்தியாவிலுள்ளவர்களுக்கு நலம் என்று கூறி யுள்ளார்கள்.

 

நாலாம்படி கால்சட்டை, தொப்பி, பூட்ஸ் முதலியன: - தலையில் கிராப் வைத்தவுடன் வேஷ்டி கட்டிக்கொள்வது நாகரீகக் குறைவாகத் தோன்றும். உடனே கால்சட்டையும், அதற் கேற்றாற் போல் கைச்சட்டை, வேஸ்ட்கோட், காலர், டை, தொப்பி, பூட்ஸ் முதலியனவும் அணிய ஆரம்பித்து விடுவார்கள். இவ்விதவேஷத்துக்கு சுதேசத்துணிகளையோ, அன்றி சாமான்களையோ உபயோகிப்பது அகௌரவமென்று கருதிச் சீமைத்தினுசுகளுக்கே பணத்தைக் கொட்டுகிறார்கள். சாதாரணமாய் நமக்கடுத்த அவசியமுள்ள உடுப்பை அணிந்தால் வேஷ்டி ரூ. 1 - 8 - 0, துண்டு 0 - 8 - 0, ஷர்ட்டு 2 - 0 - 0, ஆக மொத்தம் ரூ. 4 தான் ஆகும். நவீன ஆடையினால் சுமார் கால் சட்டை ரூ. 6 - 0 - 0, கைச்சட்டை ரூ. 8 - 0 - 0 ஷர்ட்டு ரூ. 8 - 0 - 0, வேஸ்ட் கோட் ரூ. 1 - 8 - 0, காலர் 0 - 8 - 0, டை 1 - 4 - 0, கிளிப், 0 - 4 - 0, பனியன் 1 - 4 - 0, கால்சட்டையை முன்னும் பின்னும் இழுத்துக்கட்டும் தோள் வார் 200, தொப்பி 3 - 0 - 0, பூட்ஸ் 5 - 0 - 0, மேல்ஜோடு 1 - 8 - 0, ஷஹார்ன் (Shoe horn) 0 - 8 - 0, பூட்க்ரீ ம் 0 - 8 - 0, இன்னும் பல ஆடம்பரச்செலவுடன் ரூ. 40 ஆகும். பின்னும் சலவை ஆபிஸில் (Laundry Office) 1 செட்டுத்துணி தோய்க்க ரூ. 2 - 0 - 0 கூட ஆகும். இது முற்றிலும் அநாவசியம். மேலும் தேகாரோக்கியத்துக்கும் குறைவேற்படும். எப்படியெனில் வஸ்திரங்களைத் தினம் குளிக்கும் போதெல்லாம் தோய்க்கலாம். நவீன உடுப்பகளோ
தோய்த்தால் சுருங்கி அழகுகெட்டுப் போகும். அதினால் எவ்வளவு வெயர்வை, அழுக்கு இருந்தபோதிலும் அப்படியே உடுத்திக்கொள்ள வேண்டியது தான். சரியான காற்றும் தேகத்தில் படாது. ஆகவே 4 ரூபாய் செலவு செய்து சுகத்தையும் செல்வத்தையும் விருத்தி செய்வதை விட்டு 40 ரூபாய் கொடுத்து வியாதியையும், தரித்திரத்தையும் விலைக்கு வாங்குகிறோம். இது பைத்தியமா? புத்திசாலித்தனமா? நிற்க நவீன ஆடையணிவோர் உடுத்த ஆரம்பித்தாலோ இவ்வளவையும் அந்தந்த இடத்தில் பொருந்தும்படியமைக்க 1 மணிநேரம் செல்லும்; சில வேளைகளில் ரயில் கூடத் தவறிப் போவது உண்டு. பரிதாபம்!

 

ஐந்தாம்படி மூக்குக்கண்ணாடி, ரிஸ்வாச், பட்டுக்கட்டை, பாதி மீசை. - இப்படி வேஷம் போட்டவர்களுக்குக் கண்கள் தெளிவாய்ப்பார்க்கக்கூடிய நிலைமையிலிருந்தாலும் ஷோக்குக்காகக் கண்ணாடிகளையும், நிமிஷந்தவறாமல் வேலை செய்பவர்களைப்போல் ரிஸ்ட்வாச் ஒன்றும், உள்ளூரில் வாங்குவது கவுரவமாகா தெனவெண்ணிச் சென்னை, கல்கத்தா, பம்பாய் முதலிய நகரங்களிலிருந்து வரவழைத்துப் போட்டுக் கொள்ளுவார்கள். பட்டுக்குட்டையைத்தான் இவர்கள் வேர்வையைத் துடைக்க உபயோகிப்பது. உள்ளூரில் நயமாகக் கிடைக்கக்கூடிய சாமான்களைக்கூட நகரங்களிலிருந்து இரட்டிப்பு விலைகொடுத்து வாங்கி, தபால் செலவும் செய்து பார்ஸலாக உடைப்பதை கவுரவமாக எண்ணுகிறார்கள். இத்தன்மையோரிருக்கும் வரையில் நமது தரித்திரம் நீங்கவழியேது? இவ்வளவு நாகரீகமும் முற்றிப்பழுத்தவுடன் கனிந்த பழம் கொம்பிலிருந்து விழும் வண்ணம் இவர்களுடைய பாதிமீசைதானே கீழேவிழும்படி செய்து கொள்ளுவார்கள். நம்மவர்களில் பாதி மீசை வைத்திருப்பவர்களின் முகலக்ஷணத்தை எழுத 3 அத்தியாயங்கள் வேண்டு மாதலால் விரிவஞ்சி விடுத்தோம்.

 

ஆறம்படி மேஜை சாப்பாடு படுக்கைக்காப்பி, சோடா. லெமேனெட், பாதி ஆங்கிலம், ரொட்டி பிஸ்கோத்: - மேற் கூறியவைகளுக்கு அடுத்தபடியாக மேஜையின்மேல் அன்னத்தை வைத்துக்கொண்டு நாற்காலியிலுட்கார்ந்து கொண்டு சாப்பிடும் வழக்கத்துடன் படுக்கையை விட்டெழுந்ததும் பல் கூடத்துலக்காமல் படுக்கைக்காப்பீ (Bed Coffee) சாப்பிடும் வழக்கமும் சாதாரணத்தில் வந்துவிட்டது. இவர்களிற் பலர் தாகமெடுக்கும் போதெல்லாம் சோடா அல்லது லெமெனெட் தான் குடிப்பார்கள். அதிலும் ஐஸ் (Ice) கலந்து கொள்ள மறப்பதில்லை. வரவர இட்டலி தோசை சாப்பிடுவதைப் புறக்கணித்து அயல் நாட்டு ரொட்டி, பிஸ்கோத் சாப்பிடுவது மேன்மையாகக் கொண்டாடப்படுகிறது. அரைமைல் கூட நடக்கச் சக்தியற்றவர்களைப்போல் 25 வயதுள்ள வாலிபரும் வண்டியிலேயேதான் செல்வார்கள். ரயில் மூலம் பிரயாணம் செய்யவேண்டி யிருந்தால் மிகச்சிறிய மூட்டைகளையும் கூடச் சுமக்கப் போர்ட்டர்களுக்கு அணா 2; 4; கொடுத்துவிடுவார்கள். சில பிரகஸ்பதிகள் மதராசிலிருந்து மதுரைக்குப் போவதாயிருந்தால் கும்பகோணத்திலிருக்கும் தன் நண்பர் அல்லது பந்து ஒருவருக்கு, டிபன் கொண்டு வந்து ஸ்டேஷனில் தன்னைச் சந்திக்கும்படி தந்தி கொடுத்து விடுவார்கள். அப்படித் தந்தி கொடுப்பதும், இவர்கள் டிபன் கொண்டு போவதும் ஒருவித கௌரவமான செய்கையாம். தந்திக்கு அவர் 1 ரூபாய் செலவு செய்திருக்க டிபன் கொண்டு போய் ஸ்டேஷனில் கொடுப்பவரும் போகவர வண்டிச்சத்தமாக 0 - 8 - 0 செலவு செய்து விடுவார். கடைசியில் டிபன் பெறுமானம் 4 அல்லது 8 அணாவே. இது பெரும் பைத்தியம். இதற்கு ஆஸ்பத்திரியே கிடையாது. சற்று அரைகுறையாய்ப் படித்தவர்கள் தமிழ் பேசுவதே கனவீனமென்று எண்ணி, பாதி இங்கிலீஷம் பாதிதமிழுமாகப் பேச்சைக் கொட்டி விடுவார்கள். அதிகமாக ஆங்கிலம் கற்றவர்களுக்குத் தாய்பாஷையே வெறுப்பாகத்தோன்றும். மேடைகளில் பிரசங்கம் செய்ய நேர்ந்தால் தமிழில் வார்த்தைகள் வருவதேயில்லை.

 

ஏழாம்படி ஜின், ஒயின், பிராந்தி, மாமீசபக்ஷ்ணம்: - ஆங்கிலங் கற்று மேற்கூறிய வேஷமணிந்து வயிற்றுப் பிழைப்புக்காக மேலுத்தியோ கஞ்செய்பவர்களிற் பலர் ஆங்கிலேயரோடு சதாகாலமும் பழகி, கைகுலுக்குவதையே பெருமையாக வெண்ணி அப்படியே செய்வதினால் முதலில் அவர்களால் கொடுக்கப்படும் ஒயின் போன்ற போதையில்லாத பானங்களையும், ரொட்டிகளையும் மறுக்கமுடியாமல் வாங்கிச் சாப்பிட்டுப் பிறகு நாளடைவில் ஜின், விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற போதை வஸ்துக்களையும் குடிக்கப்பழகி வரவர மாமிசத்தையும் உட்கொள்ளத் தலைப்பட்டு விடுகிறார்கள். ஐயோ பரிதாபம்! இவர்களின் தேசப் பெருமையென்ன! குலப் பெருமையென்ன! முன்னோர்களின் ஒழுக்கமென்ன! ஆசாரமென்ன! கணமென்ன! தெய்வபக்தியென்ன! கல்வியென்ன! இவ்வளவையும் மறந்து மேற்கூறிய துர்ப்பழக்கங்களை அனுசரித்துக் கடைசியில் நிற்கும் நிலைமைதானென்ன! இவைகளிலெவையேனும் அவசியமென்றாவது விலக்கக்கூடாதவை யென்றாவது கூற முன்வருவாரு முளரோ? இவையாவும் செயற்கைப் பழக்கங்களே யல்லவா? நிற்க, இவ்விதம் நடக்கும் நம்மவரைப்பார்த்து நமது பெண்மணிகளும் அவரோடு ஒத்து ஊத ஆரம்பித்து அவர் செய்வது நேரல்ல வெனக்காட்டுவதற்கு அறிகுறியாம் தங்கள் சிகையைக் கோணலாகக் கோடெடுத்து முன்னால் படம் (Buff) வைத்துச்சீவி,   பட்டுக்குஞ்சத்தோடு தொங்கவிட்டு, முகத்தில் டாய்லட்பவுடர் பூசி, உயர்ந்த சோப்புகளை உபயோகித்து, லேஸ்வைத்த லோநெக் (Low Neck) முழுச்சட்டையணிந்து, மூக்குக்கண்ணாடி, பூட்ஸ்முதலியவற்றைப்போட்டு, மஞ்சள் குளிப்பதையும், பொட்டு வைப்பதையும்; மூக்குத்தி, தோடு போடுவதையும் அநாகரீகமாகக்கருதி, ஆசாரத்தைத் துரத்தி, தரித்திரமென்னும் பாதாளத்தில் விழுந்து தாங்கள் பர்த்தாவுக்கேற்ற பதிவிரதைகள் என்பதை ரூபித்து விடுகிறார்கள். விதம்விதமான உருவத்தோடு பலவித நகைகள் மாதந்தோறும் தோன்றவே பழைய நகைகளையழித்துத் திருத்துவதில் மாற்றையும் குறைத்துப் பணத்தைச் சேதாரமாகவும், கூலியாகவும் செல விடுகிறார்கள்.

 

பெண்மக்கள் என்செய்வர் பாவம்! முற்காலத்தில் உடன் கட்டை யேறுவதையும் கணவன் யுத்தத்தில் மாண்டதைக் கேள்விப்பட்டதும் தீயிற்குதித்து மாள்வதையும் பதிவிரதா தர்மமாகக் கொண்டிருந்த நமது ஸ்திரீரத்னங்கள் இப்போது மட்டும் புருஷரைத்தனியே நவீன நாகரீகத்தை யனுசரிக்க விட்டு விடுவார்களா? "அரிச்சந்திரன் தான் கெட்டது மல்லாமல் சந்திரமதியையும் கூடக்கெடுத்தான்" என்ற வழக்கச் சொல்லுக்
கிணங்க நம்மவர் தம்மைத்தாமே கெடுத்துக்கொள்வது மல்லாமல் தமது பெண்மணிகளும் அவ்வாறே நடக்கக் காரண மாகின்றனர். பெண்கள் செய்யும் புண்ணியமும் புருஷன் செய்யும் புண்ணியங்களிலோர் பாகமும் பெண்களையே சேரும் என்றும், பெண்கள் செய்யும் பாவமும், புருஷன் செய்யும் பாவமும் புருஷனையே சேரும் என்றும் கூறும் தருமசாஸ்திரத்தை யறிந்து இனியாவது சீரடைய முயலவேண்டும். சகோதரர்களே! மேற்கூறிய நவீன நாகரீகமெனும் பாதாளத்துக்குச் செல்லும்போது நம்மோடு துணைவருவது யாதெனில் டாம்பீகம், கர்வம், ஆணவம், ஈயாமை, ஆசாரக் குறைவு, அசுத்தம், பெற்றோரையும் பெரியோரையும் மதியாமை, பிறரை இகழ்தல், தேசாபிமானம் பாஷாபிமானம் குலாபிமானங் குன்றுதல், ஈசுரபத்திநாசம், நாஸ்தீகம் முதலியவையே யாகும். பின்பு பாதாளத்தில் சென்றவுடனே கிடைக்கும் பலன் தரித்திரமும், வியாதியும், அகால மரணமும், கடைசியில் நரகமுமே.

 

நேயர்களே! இனியாவது மயக்கத்திலிருந்து எழுந்து புத்தியை ஸ்திரப்படுத்தி நமது புண்ணிய பூமியின் பெருமையை விளக்குவீர்களாக. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்காகுமா) என்னும் பழமொழியை உறுதிப்படுத்த வேண்டாம். நமது தேசத்து இயற்கை யாசாரங்களைக் கைவிடவேண்டாம். நல்லவழியைக் காட்ட நாதன் முன்வருவார்.

 

A. மெத்து சலா, உபாத்தியாயர்,
 போர்டு பெண்பாடசாலை, ஜெயங்கொண்ட சோழபுரம்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஆகஸ்ட் ௴

 

 

 

No comments:

Post a Comment