Thursday, September 3, 2020

நவீன நாகரிக நாடக வினோதம்

 

நாடகம் குறுமுனிவர் வளர்த்த முத்தமிழுள் ஒன்று. இன்றைய தமிழ்நாட்டில் அது எந்நிலை உற்றிருக்கின்றது? காட்சி வாயிலாகக் களிப்பூட்டும் நாடகம், முத் தமிழுள் மூன்றாவதாக ஆன்றோரால் குறிக்கப்பட்டுளது. இயலும் இசையும் - அதாவது வசனமும் பாட்டும் நாடகம் எழுந்தது. முன்னோரது சரித்திரங்களுள் மக்க ளுக்கு நற்புத்தி, கற்பிப்பனவற்றை நடித்துக் காட்டுவதே நாடகம் எனப்படும். இயல் இசை எனும் ஏனைய இரு தமிழ்களைப்போல் நாட கத் தமிழுக்குரிய நூல்களாகப் பண்டைக்காலத்தில் இயற்றப்பட்டவை எவையும் இக்காலத்தில் கிடைக்காமையாலும், தமிழ் மொழியில் தற்சமயம் இருந்து வரும் சிற்சில நாடகங்களும் இரண்டொரு நூற்றாண்டு களுக்குள்ளாக இயற்றப்பட்டவை யாதலாலும், 'நாடகம்' என்பதே மொழியாசலாலும் ஆரியர்கள் இத்தென் தமிழ்நாட்டில் புகுந்து இங்கிருந்தோருடன் கலந்து பழகிய பின்னரே, நாடகம் இந்நாட்டில் செழிக்கலாயிற்று என்பர் ஒரு சாரார். 'முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் !'- எனச் சைவப் பெரியார் பாடிச் சென்றிருப்பதற் கிணங்க, நாடகத் தமிழ் என்ற ஒன்று இன்றேல், அதை முத்தமிழ்களுள் ஒன்றாக முன்னோர் மொழிந்திரார் என்றும், வடமொழிக் கலப்புச் சிறிதுமின்றி இலக்கியங்களனைத்தும் தனித் தமிழிலேயே இயற்றப்பட்ட பண்டைக்காலத்தில் நாடகம், 'கூத்து' எனும் செந்தமிழ்ச் சொல்லால் குறிக்கப்பட்டு வந்திருக்கின்றது என்றும், இடைக்காலத்தில் நாடகத்துறையில் சில கயவர்கள் செயலால் கிளர்ந்தெழுந்த சிற்றின்பக் கிளர்ச்சியின் பயனாக அத்துறையை அறிவிற் சிறந்தோர் கவனியாதொழிந்தமையால் அது கேவல நிலையை அடைந்து விட்ட தென்றும் கூறுவர் மற்றொரு சாரார். இவ் விருவரது கூற்றுகளுள், பின்னவர் கூற்றே ஆதரித்தற்கு உரியது,

 

''கூத்தாட்டவைக் குழாத்தற்றே செல்வம்; போக்கும் அது விளிந்தற்று "என்று திருவள்ளுவரும், " நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான்நடுவே - வீடகத்தே புகுந் திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்" – என மாணிக்கவாசகரும் நாடகம்' அல்லது 'கூத்து' எனும் சொல்லை எடுத்தாண்டிருத்தலாலும், சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய பழந் தமிழ் நூல்களில் காணப்படும் சில ஆதாரங்களாலும், நாடகம் 'நந்தமிழ் நாட்டில் தொன்று தொட்டு நடை பெற்று வந்திருப்பதே எனும் உண்மை தெளியக் கிடக்கின்றது. மேலும், சைவ வைணவ சமயத் திருப்பதிகள் எல்லாவற்றிலும் தலைமைபூண்டு - அடைமொழி எதுவுமின்றி கோயில்' என்ற அளவிலேயே குறிக்கப்படுவன, தில்லை, திருவரங்கம் எனும் இரு திருப்பதிகளாகும். தில்லையில் திகழும் தெய்வம் ஆனந்தத் திருக்கூத்து ஆடி நிற்பது கொண்டு 'நடசேன' எனவும், மெய்யன்பர்கள் ஆடிப் பாடி ஆனந்திக்குமாறு ஆண்டவனது திருவருள் நர்த்தனம் செய்கின்ற இடமாதலின, பெரிய பெருமாள் திருக்கோயில் கொண்டு விளங்குவது ‘திரு அரங்கம்' எனவும் இன்றும் போற்றப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

நூலாராய்ச்சியில் தலைப்பட்டுப் பலதிற உண்மைகளையும் உணர்ந்து கொள்ளப் போதிய ஓய்வு வாய்க்கப் பெறாதவர்களும், நூலாராய்ச்சியில் தலைப்படப் போதிய கல்வி யறிவில்லாதவர்களும் நன்முறையில் நடத்தப்படும் நாடகங்களைக் காண்பதால் நலங்கள் பல பெறுதல் கூடும். பாமர மக்களுக்கு அறிவுச்சுடர் கொளுத்தி அவர்களை நல்வழிப்படுத்த நாடகங்கள் பெருந்துனை செய்வனவாகும். தற்காலத்தில் கிராமங்கள் தோறும் அடிக்கடி நடைபெற்று வரும் 'தெருக்கூத்துகள்' என்பன, 'நாடகங்கள்' என்று கூறப்படுவதற்குச் சிறிதும் தகுந்தனவாகா. நல்ல நாடகங்களுக்கு இருக்க வேண்டிய லட்சணங்களுள், சிறிதளவும் அத் தெருக் கூத்துகளில் கிடையா. அவற்றைக் காண் போரது அகங்களில் சிற்றின்பக் கிளர்ச்சி முதலியன விளையுமே யல்லது, அவற்றால் அன்னோர் எத்தகைய நற்பயனையும் எய்தார். இசை யின்பத்துக்கும் தெருக்கூத்துக் கட்கும், இமயமலைக்கும் இராமேசுவரத்துக்கும் இடையிலுள்ள தூரம்தான்! கர்ணானந்தமான பாடல்களுக்குப் பதிலாக கர்ண கடூரமான பேரிரைச்சல்தான்! அவற்றிலுள்ள பேரிழிவுகளை எடுத்து விளக்கித் திருத்த முயல்வது பயன்படாத வேலையாதலின், தற்காலத்தில் அறிஞர்களது நன்மதிப்பை ஓரளவு பெற்றுள்ள ‘டிராமாக்கள்' எனப்படும் நவீன நாகரிக நாடகங்களில் காணப்படும் குறைகளை எடுத்து விளக்கித் திருத்த முயல்வது நற்பயன் நல்கக்கூடுமென எண்ணுவதால், இக் கட்டுரை எழுத முன் வந்தேன்.

 

மேல்நாட்டு நாகரிகம் இந்நாட்டில் பரவத்தொடங்கிய காலந்தொட்டு, அந்நாட்டு நாகரிக முறைகளைப் பின்பற்றி இந்நாட்டு நாடகங்களைச் சீர்திருத்த முன் வருவோர் பலராயினர். 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' எனும் கொள்கையுடயவர்களாகவும் 'பகவத் பக்தி'யைச் சிறிதளவும் பொருட்படுத்தாதவர்களாகவும், ஆடம்பர வாழ்வையே விரும்பி நிற்பவர்களாகவும் இருந்துவரும் மேல்நாட்டாரால் நடத்தப்படும் நாடகமுறைகள், அவர்களுக்கு நேர்மாறான நிலையினராய இந்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்ககூடியனவல்ல. அந்நாட்டு நாகரிகம் வேறு: இந்நாட்டு நாகரிகம் வேறு. இரண்டின் நோக்கங்களும் ஒன்றுக் கொன்று முரண்பட்டு நிற்பனவாகும். ஆதலின், தமிழ்நாடக முன்னேற்றத்திற்குப் பாடுபட முன்வருவோர், மேல் நாட்டு நாடக முறைகளில் மோகம் கொள்வது கூடாது. அத்தகைய சீர்திருத்தத்தால் விளையக்கூடியன விபரீத பயன்களேயாம். இனி, தற்கால நாகரிக நாடகங்களில் காணப்படும் குறைகளை ஆராய்வோம்.

 

முதலில், படிப்போர் பரிகசிக்கக் கூடியவாறு எழுதப்பட்டு வரும் ஆடம்பர நாடக விளம்பரங்களை எடுத்துக்கொள்வோம்.


 இன்றிரவு இன்றியமையாத இன்பகரமான நன்றிரவு!!
 அன்பர்களுக்கு ஆனந்தமூட்டும் நாடகத் திருவிழா!
 வந்துவிட்டனர்! யார் வந்துவிட்டனர்!! வந்துவிட்டனர்!!!
 தென்னிந்திய நாடகமேடை திரிமூர்த்திகளின் தோற்றம் !
 வாருங்கள்! வந்து பாருங்கள்!! களி கூருங்கள்!!!! ஆசீர் தாருங்கள்!!!
 சென்னை கோல்டன் கம்பெனியார்
 விழுப்புரம் கணபதி விலாச தியேட்டரில்
''சத்தியவான் சாவித்திரி"
 எனும் சரித்திரத்தை அதி அற்புத சீன்களுடன் வெகு விமரிசையாக
 நடித்துக் காட்டுவார்கள்.

 

நாடகப் பிரிய நண்பர்களின் சந்தோஷத்தை முன்னிட்டு ஏராளமாகபொருட் செலவுசெய்து ஸ்பெஷலாக ஒரே நாடகத்திற்கு மட்டும் வரவழைத்திருக்கும் ஜலப்பிரதேச மெங்கும் ஜயக்கொடி நாட்டி மகாராஜாக்கள் ஜமீன்தார்கள் பிரபுக்கள் முதலியவர்களால் அனேகம் பொன் வெள்ளி மெடல்கள் சன்மானிக்கப் பெற்ற உலகப் பிரசித்தி பெற்ற

 

கிராமபோன் பிளேட் கவாய்

மிஸ்டர். தண்டபாணி செட்டியார் - கலியுக எமதர்மன்.

 குயிலைப் பழிக்கும் குரல்வாய்ந்த அபிநய சிங்கார அமிர்த வசன கந்தர்வகான லோல தென்னிந்திய நாடகமேடை இளவரசி இங்கலீஷ் ப்யூட்டி - மிஸ் கோகிலாம்பாள் –

சிங்கார சாவித்திரி சாதுர்ய சம்வாத சமத்கார கோகிலகான மிஸ். மந்தராம்பாள் - பின் சாவித்திரி

சபாரஞ்சித சாதுர்ய வசனாலங்கார சங்கீத வித்வசிரோமணி தென்னிந்திய நாடகமேடை இளவரசரான மாஸ்டர் கோவிந்தசாமி நாயுடு - சத்தியவான்.
 உலகப் பிரசித்திபெற்ற இந்திய சார்லி சாப்ளியன்
 மாஸ்டர். முத்துசாமி - மாடவ்யன்.
 சுகசாரீர சங்கீத விற்பன்ன மிஸ்டர். ரத்தினசாமி - ஆர்மோனியம்.
 கோடை இடி மிஸ்டர். பாலு - தபேலா.
 நாடகங் காண கொட்டகையில் முன்னிடம் தேடுங்கள்.

 

“நாகலோகம் அடைந்து எமதர்மன் எதிரில் நிற்கும் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம், இப்பொழுதே 'பாவம்'' பாவம்' என்று பயந்து சாவானேன் " - என்று இறுமாந்திருப்பவர்களே! உங்களை அடக்க படாடோப பயங்கர கலியுக எமதர்மன் 'நாடக மேடையில் தோன்றி யிருக்கிறான்; எச்சரிக்கை! எச்சரிக்கை!! கந்தர்வ லோகத்திற்குப் பறந்து சென்று கந்தர்வகானம் கேட்டு ஆனந்தம் அடைவோமா என்று கனவு காண்பவர்கள், கேவலம் நான்கணா செலவழித்து டிக்கட் பெற்றால், சிரமமின்றி நாடகக் கொட்டைகையிலேயே சாஷாத் கந்தர்வ கீதானந்தத்தை அனுபவிக்கலாமே! 'இந்திய அழகு' போதாதென்று இங்கிலாந்திலிருந்து பெற்று வந்திருக்கும் ‘இங்க்லீஷ் ப்யூட்டி'யைக் கண்டு களிக்கத் தவறலாமா! காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா! சென்னை மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களையே சரிவர பார்த்தறியாத 'இந்திய சார்லி சாப்ளின்' மாஸ்டர். முத்துசாமி -- உலகப் பிரசித்தி பெற்ற கீர்த்தி உடையவரானது எவ்விதமோ?

 

இனி ‘பிரமிப்பை உண்டாக்கும்படி பிரத்தியட்சமாய் பிரகாசிக்கும் அற்புதம் மிக்க சீன்கள்'- என்று நோட்டீஸ்களில் குறிப்பிட்டவைகளைப் பற்றி கவனிப்போம்.

 

"வத்ஸலா கல்யாணம் "எனும் நாடகம் ஒன்றைச் சமீபத்தில் யான் காண நேர்ந்தது. சகுனி மாமாவோடு துரியோதனன் அந்தரங்கமாக ஆலோசனை செய்யும் காட்சியில், சென்னை ஹைகோர்ட்டு கட்டடமும் மின்சார விளக்குக் கம்பங்களும் லைட் ஹவுஸ் - ம் வரையப்பட்டுள்ள தெருப்படுதா விடப்பட்டிருந்தது. அந்தரங்கமாக ஆலோசனை செய்யப்படும் இடம், பலர் சஞ்சரிக்கும் நடுத்தெருவே போலும்! பலராமன் அரண்மனைக் காட்சியில் நவீன நாகரிகம் முதிர்ந்த பிரபுக்கள் வீட்டிலிருப்பன போல - நிர்வாணமான பலவித 'லேடி' களின் உருவச் சிலைகளும் படங்களும் வரையப்பட்டுள்ள திரைவிடப் பட்டிருந்தது! அவற்றை எழுதுவித்த கம்பெனியாருக்கு, ஆங்கிலேய லேடிகள் ஐயாயிரம் வருஷங்களுக்கு முன்னரே இந்தியாவுக்கு வந்துவிட்டனரென்பது அபிப்பிராயம் போலும்! மற்றொரு காட்சியில், மேடைக்கு நடுவில் அடர்ந்த காட்டுப் படுதாவிட்டிருக்க, பக்கப் படுத்தாக்களில் பாதி மரங்களின் திரைகளும் பாதி தர்பார் சீனுக்குரிய தூண்களின் திரைகளுமாக விளங்கின! நடுக்காட்டில், தர்பார் மண்டபத்திற் குரிய தூண்கள் எவ்விதம் ஏற்பட்டனவோ தெரியவில்லை! இதுபோன்ற 'சீன்கள்' எத்தனை எத்தனையோ? ஒன்றுக் கொன்று முரண்பட்ட இத்தகைய விபரீதமான காட்சிகள் காண்பிக்கப்படுவது விரைவில் அகற்றப்பட வேண்டும். அவற்றை 'அற்ப விஷயங்கள்' என எண்ணிவிடக் கூடாது. அற்ப விஷயங்களே பெரும் தவறுகளாகிப் பலரும் பரிகசிக்கக் கூடியனவாக மாறிவிடும். ஆதலின், இவ்விஷயத்தில் தென்னிந்திய நாடகக் கம்பெனியாரனைவரும் தக்க கவனம் எடுத்துக்கொண்டு, படுதாக்கள் பக்கத்திரைகள் ஆசனங்கள் முதலியவற்றை அவ்வக்காட்சிகளுக்குப் பொருந்தும் முறையில் ஏற்பாடு செய்வார்களாக.

 

தற்கால நாகரிக நாடகங்களில் தோன்றும் நடிகர்கள் உடை உடுத்தும் விதம், பெரிதும் இரங்கத்தக்க நிலையிலிருக்கின்றது. உதாரணமாக, ஒரு வருஷம் இரண்டு வருஷங்கள் அல்ல - முப்பது வருஷங்களாக - ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையாவது தவறாது 'இராமபிரானாக 'நடித்துவரும் பிரசித்தி பெற்ற பெரிய ஆக்டர் ஒருவர்; அவர் நடிக்கும் கம்பெனியின் தலைவரும் அவரே! நாட்டை விட்டுக் காட்டுக்குப் புறப்படும் சாட்சியில், இராமபிரான் வேடம் பூண்டு தோன்றிய அப் பிரபல நடிகர், கால்களில் சரிகை வைத்துத் தைத்த வெல்வெட் ஜோடுகளும், முழங்கால் வரையில் பளபளவென்று மின்னும் சரிகை தைத்த மஞ்சள் பட்டுக் கால்சட்டையும், கைகளில் இரண்டு ஜதை கொலுசுகளும், மெல்லிய தங்க வளையல்களும், முழங்கைகளில் வங்கிகளும், மார்பில் சிவப்பு வைரம் முதலிய கற்கள் பதிக்கப் பெற்ற நகைகளும், கழுத்தில் முத்துமாலைகளும், செவிகளில் வைரக் கடுக்கன்களும் அணிந்து கல்யாணப் பந்தலில் காதலிக்குத் தாலிகட்டத் தயாராக வந்து நிற்கும் புது மாப்பிள்ளையே போல் மேடைமீது தோன்றினார். போதாக் குறைக்கு தலைமயிரைத் தைலமிட்டு ஒழுங்காகச் சீவி 'கிருஷ்ணன் கொண்டை யாக முடித்து மல்லிகை மலர்ச் சரங்களாலும் அக்கொண்டையை அழகாக சுற்றிக் கட்டிக் கொண்டிருந்தார்! இராமபிரான் தன்னை அவ்வளவு சிங்காரித்துக் கொண்டு சீதையிடம் விடை பெறச் செல்வதானால் அவருக்கு அயோத்தியை விட்டு ஆரணியம் செல்ல மனம் வருமா? பதினான்கு வருஷங்கள் அடவியில் அம்மஞ்சள் பட்டை அழுக்குப் படாமல் காப்பாற்றியிருக்க முடியுமா? நகைகளைக் கண்டு காட்டில் அவருக்கு கௌரவம் கொடுப்போர் எவர்? தினந்தோறும் ஒழுங்காகச் சீவி 'கிருஷ்ணன் கொண்டை' முடித்துக் கொள்ள தைலத்துக்கும் சீப்புக்கும் எங்கே போவது?

 

அதே ஆக்டர் 'அரிச்சந்திர நாடகத்தில் மயானக் காட்சியில் தோட்டியாகத் தோன்றிய போது கருப்புத் துணிக்குப் பதிலாக உயர்ந்த சம்கி 'வைத்துத் தைத்த நீல வெல்வெட் அரைக்காற் சட்டையும் கம்பளத்திற்குப் பதிலாக சரிகைப்பூக்கள் தைக்கப்பெற்ற உயர்ந்த சால்வையும், மார்பில் தங்க மெடல்களும், கையில் மூங்கில் தடிக்குப் பதிலாக வெள்ளிப் பூண் போட்ட தடியும் பூண்டு தோன்றினார். மயானத்தில் காவல் காக்கும் அரிச்சந்திர தோட்டிக்கு அவ்வலங்காரங்கள் மிகவும் அவசியமானவையே அல்லவா?

ஒரு கம்பெனியில் எவர் பெரிய ஆக்டரோ அவர் எந்தக் காட்சியில் -எந்த வேஷத்தில் - தோன்றினாலும் உயர்ந்த உடுப்புகளையே உடுத்திக் கொண்டிருக்க வேண்டும் போலும்! தோட்டி வேடத்தில் தோன்றினாலும், கரிய துணி அணிந்தால் கௌரவம் போய் விடுமென்பது அவர்களது எண்ணம் போலும்! என்னே நமது நவீன நடிகர்களின் பேதமை இருந்தவாறு! அலங்கரித்துக் கொள்வதற்கு ஒரு வரம்புண்டென்பதையும், வேஷங்களுக்குப் பொருந்தாத சிங்காரம் பரிகாசத்திற்கே இடமென்பதையும் கவனித்து நடந்து கொள்ளுமாறு அந் நடிகர்களைப் பெரிதும் வேண்டிக் கொள்ளுகிறேன்.

 

இனி, நவீன நாடக நடிகர்களின் சங்கீதத்தைச் சற்று கவனிப்போம். கர்நாடகத் தெருக்கூத்துகளில் காணப்படாத சங்கீதம் -- நவீன டிராமாக்களில் இருந்து வருவது ஓரளவில் பாராட்டத் தக்கதே. எனினும், அதுவரம்பு மீறிச் சென்று விட்டிருக்கின்றது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியிருக்கின்ற றது. சங்கீதத்தில் கொஞ்சம் தேர்ந்தவர்கள் கதாநாயக கனாகவோ கதாநாகியாகவோ தோன்றிவிட்டால், பாவம் அவர்கள் மிகவும்கஷ்டப்பட வேண்டி வருகிறது! அரவு கடித்திறந்து கிடக்கும் தன் மகனதுபிணத்தைக் கண்டு அகம்பதறி, அவன் மேல் வீழ்ந்து சந்திரமதி கதறிப் புலம்பும் காட்சி. அவ்வேடம் பூண்டு மேடை மீது தோன்றிய ஆக்டரின் வாயிலிருந்து, முதலில் ஆத்திரம் மிக்க வார்த்தைகள் எவையும் கிளம்பவில்லை; அதற்குப் பதிலாக ராகம் பிசகாமல் தாளம் தவறாமல் கீர்த்தனைகளாகவே அவ்வாக்டர் பாட ஆரம்பித்து விட்டார். பின் ஒருவாறு தேறிய அவள் (ர்), மகனை எடுத்துக் கொண்டு சுடலைக்குச் செல்லத் தொடங்கிய சமயத்தில் 'சோகரஸம்ததும்ப ஒரு பாட்டு பாடினாள் (ர்). அந்த ரஸத்தை அனுபவித்து ஆனந்தித்த சபையாரிடமிருந்து 'ஒன்ஸ்மோர்'' ஒன்ஸ்மோர்' என்ற கூச்சல் பலமாக எழுந்தது. உடனே, சபையாரைத் திருப்திப் படுத்த வேண்டி கையில் வைத்துக் கொண்டிருந்த பொம்மைப் பிள்ளையை கீழே வைத்துவிட்டு - ஆர்மோனியப் பெட்டியருகில் வந்து நின்றுகொண்ட அவள் (ர்) முன்பு பாடிய பாட்டையே பாடத் தொடங்கிவிட்டாள் (ர்) !

 

பின்னர் காற்பணமும் முழத் துண்டும் தன்னை விலைக்கு வாங்கிய வேதியரிடத்திலிருந்து பெற்றுவரப் புறப்படும் காட்சி நேர்ந்தது. அப்பரிதாபகாமான சந்தர்ப்பத்திலே, சபையினிடமிருந்து 'தேயிலைத் தோட்டம்' என்றுஒரு குரல் கிளம்பியது; மற்றொருவர் அதைத் தொடர்ந்து 'தேயிலைத் தோட்டம்' என்று கூவலானார். பின்னர், படிப்படியாக 'தேயிலைத் தோட்டக் கூக்குரல்' அதிகமாயிற்று. பாவம்! அவ்வாக்டர் என் செய்வார்? பின்,


 “தேயிலைத் தோட்டத்திலே - பாரதச்
 சேய்கள் சென்று சென்று மாய்கிறார் ஐயையோ!

-தேயிலைத் தோட்டத்திலே "


என்று பாடத் தொடங்கிவிட்டார்! திரேதாயுகத்தில் வாழ்ந்த சந்திரமதிக்கு, கலியுகத்தில் - இலங்கைத் தோட்டங்களில் ஏழை மக்கள் படுந்துயரம் எவ்வாறு தெரிந்ததோ? சந்திரமதியும் சோதிடத்தில் தேர்ந்த அம்மையார் போலும்!

 

‘மனோஹான்' நாடகத்தில், சங்கிலி அறுக்கும் காட்சியில் – அடங்காப் பெருஞ் சீற்றம் கொண்டு தன்னைப் பிணைத்திருந்த சங்கிலிகளை அறுத்துக்காண்டு சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தந்தையைத் தன்னோடு போராட வருமாறு வீரவாசகம் பேசும் வேளையில், பத்மாவதி தோன்றி மனோஹானது கோபத்தை நீக்க அவனது கையைப் பிடித்துக் கொண்டு பாடத் தொடங்கவும், அவனும் அதற்குப் பதிலாக பாடத் தொடங்கி விடுவது இன்றும் பல நாடகச் கம்பெனிகளிலும் நடிக்கப்பட்டு வரும் காட்சிகளுள் ஒன்றாகும். மிக்க விரைவில் முடிக்கப்பட வேண்டிய அக்காட்சியில், பக்க வாத்தியங்களுக்கு இணங்க இருவரும் பாடிக்கொண்டிருப்பது எவ்வளவு விபரீதம்!

 

சங்கீத வித்வான்கள் நாடக மேடைகளில் நடிகர்களாகத் தோன்றி விட்டாலோ, தமது சங்கீதத் திறமையைச் சபையோர் கண்டு வியந்து சிரக்கம்பமும் கரகோஷமும் செய்யும்படி நாடகத்தோடு எவ்வித சம்பந்தமும் இல்லாத 'ஐயாவாள் கீர்த்தனைகள்' முதலியவற்றைப் பாடத் தொடங்கி, 'ச - நி - தா ரி - க - மா - ப - த - நீ - க - மப - த - ம - ப - சநி - சநி - ரி - க - ம - ப' என்று ஸ்வரம் பாடத் தொடங்கி விடுகின்றனர். அந்த ஸ்வாஞான ஆவேசத்திலே, தாங்கள் வேஷம் பூண்டு நாடக மேடைமேல் நிற்பதையும் மறந்தவர்களாய், ஆர்மோனியக்காரர்கள் தடுமாற்ற மடையுமாறு'' போட் மெயில் வேகத்தில் பாடிக் கொண்டே எழும்பி எழும்பிக் குதிக்கின்றனர். அவர் பாட்டு முடிந்ததோ இல்லையோ, சபையில் கிளம்பும் சந்தோஷ ஆரவாரம் சொல்லத்தரமல்ல! சபையினர் கரகோஷம் செய்து தமது அபார ஸ்வரஞானத்தை மெச்சிப் பேசுவார்களானால், அச்சங்கீத வித்வான்களுக்கு அதுவே போதும்! அதன்பொருட்டு எவ்வளவு உரத்துக் கத்தவும் என்ன வேண்டுமானாலும் பாடவும் அவர்கள் எப்பொழுதும் சித்தமாக இருக்கின்றனர்!

 

பெரும்பாலும், தற்காலத் தமிழ்நாடக மேடைகளில் சிற்றின்ப சம்வாதங்கள் இல்லாத நாடகங்கள் நடிக்கப்படுவது அபூர்வம்! நந்தனார் முதலிய பக்திரஸம் ததும்பும் நாடகங்களில் கூட, பறையர்கள் தம் மனைவிகளோடு கைகோத்துக் கொண்டு மிகுந்த ஆபாசமான பாடல்களைப் பாடிக் குதிப்பது போன்ற காட்சிகளைச் சேர்த்து விட்டிருக்கின்றனர். தசரத கைகேசி சம்வாதம் - சூர்ப்பநகா ராம சம்வாதம் - கிருஷ்ண கோபி சம்வாதம் முதலியவற்றில் -தற்கால நவீன நாகரிக நடிகர்கள் நடித்துவரும் விதம் மிக விபரீதமாகும்! என்னே காலத்தின் கோலம் ! பக்தி வீரம் கருணை அற்புதம் சோகம் பயங்கரம் ஹாஸ்யம் முதலிய ஏனைய ரஸங்களை விட, சிற்றின் பந்தானா பிரதானரஸம்? 'ச்ருங்கார ரஸத்'துக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா?


 "காம ஸந்தராங்கி எனது காதலோங்கியே மனம் உருகுது; அறிவாய் இனி";
''சப்ரமஞ்சம் அலங்கரித்து, கோலாகல லீலை செய்திட வாராய்''.


என்றெல்லாம் பாடுவதுதானா சிறந்த நடிகர்களின் லட்சணம்? உயிரோடு தொடர்புடைய உயரிய உண்மைக் காதலை விட்டு, லீலைகளில் கலைப்பட்டு மதிமயங்கிக் கிடக்கும் காமத்தை பகிரங்கமாக நடித்துக் காட்டுவது எவ்வளவு விபரீதங்கட்கு இடனாகக் கூடும்! இவ்வாறு நடிப்பதாலும் பாடுவதாலும் நாடகத் தமிழுக்கேயல்லவா கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது! வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா முதலிய நல்ல நாடகங்களில் பாடப்படுவனவே அத்தகைய பாடல்களாயின், சதாரம், தாராச்சாங்கம், டம்பாச்சாரி முதலியவற்றின் ஆபாசப் பாட்டுகளை என்னென்பது? செந்தமிழ் நாட்டு நவீன நாகரிக நடிகர்காள்! இனியேனும் அத்தகைய ஆபாசப் பாட்டுகளை விபரீத சிங்காரப் பாட்டுகளை -அறவே அகற்றிவிட்டு, அகத்தை மாசுபடுத்தாத களங்கமில்லாத - சீரிய பாடல்களையே பாடி வருவதென்று ஒவ்வொருவரும் உறுதி செய்து கொள்வீர்களாக.

 

பண்டைக்காலத்துச் சீரிய நாடகங்கள் சில, மிக்க விபரீதமாக மாற்றப்பட்டு நடிக்கப்பட்டு வருவது பெரிதும் வருந்தத்தக்கதாகும். உதாரணமாக, பாரிஜாத புஷ்பஹாணத்தில் ருக்மிணி வேடம் பூண்டு தோன்றும் நடிகர் சத்யபாமையுடன் வா திடத் தொடங்கி,


''பேச்சறிந்து பேசு - பலமாகும் இந்தக் கேசு''


என்று பாடுகிறார்; அவ்விருவரும் கல்வி மணம் சிறிதுமில்லா வாய்ப்பட்டிக்ளான பாமரப் பெண்கள் போல, வாயினால் கூறக் கூசும் ஆபாசமான இழிமொழிகளால் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளுகின்றனர். இறுதியில் பாமையை ருக்மிணி எட்டி உதைத்துச் செல்கிறாள். அந்தோ! என்னே விபரீதக் காட்சி! பதிபக்தியில் தலைசிறந்த பதிவிரதா சிரோமணியாகிய ருக்மிணிப் பிராட்டியாரின் மீது அத்தகைய விபரீதப் பழியைச் சுமத்தி நடிப்போர், கண்ணபிரானால் எவ்வண்ணம் தண்டிக்கப்படுவர் என்பதைக் கூறவும் வேண்டுமோ? பத்தினிக் கடவுள் எனப்படும் கண்ணகி, தனது கணவனை காவ்லன் உண்மை அறியாது கொல்வித்தான் என்ற செய்தி கேட்டதும், அரசவையை அணுகிப் பாண்டியன் இழைத்தது பெரும்பிழை என்பதை அவனுக்கு நிரூபித்துக் காட்டிய மறுகணமே, அம்மன்னன்,'யானோ அரசன் யானே கள்வன்' என்று கூறிப் பெரிதும் இறங்கியவனாய் அரியாசனத்தினின்றும் வீழ்த்து ஆருயிர் துறந்தான்'- என்பது பண்டைய சிலப்பதிகாரக் கதை. இக்காலத்தில் நடிக்கப்படும் கோவலன் நாடகத்திலோ, கணவனது மரணச் செய்தி கேட்ட மறுகணமே, கண்ணகி உக்ரவீர மகா காளிதேவியாகவே மாறி விடுகின்றாள்! கையில் சூலம் பிடித்துக் கோரவடிவம் கொண்டு அரசவையை அடைந்து, 'பழிக்குப் பழி கொட்டா! பழிகாரப் பாண்டியனே!' என்றுபாடிக் கொண்டே மன்னனைத் தரையில் வீழ்த்தி அவன் மீது உட்கார்ந்துகொண்டு அவனது வயிற்றைக் கிழித்துக் குடலை எடுத்து மாலையாகத் தரித்துக்கொள்ளுகின்றாள்! வஞ்சிபத்தன் - துன்மந்திரி எனும் இருவரையும் அவ்வாதே கொல்கின்றாள்! தெய்வமே! என்ன விபரீதக் காட்சி இது! இத்தகைய விபரீதப் பெரும்பழியைத் தமிழ்நாட்டுப் பத்தினித் தெய்வமான கண்ணகி மீதும் சுமத்தத் துணிவு கொள்வது எத்துணைக் கொடுமை! எவ்வளவு அறியாமை!

 

சிற்சில நாடகங்களில் வீரம் சோகம் கோபம் முதலிய ரஸங்கள் வாய்ந்த காட்சிகள் தோன்றும் போது, தமது முழு சக்தியுடனும் மிக்க உரத்த குரலில் வசனங்களைக் கத்துவது சிறந்த நடிகர்களுக்குப் பேரிழுக்காகும்; மிகுந்த ஆடம்பரமாக நடிப்பது அறியாமையேயாம். எதற்கும் ஒரு வரம்பு உண்டு. இவ்விஷயத்தில் ஆங்கில நாடகச் சக்ரவர்த்தியான ஷேக்ஸ்பியாது பின்வரும் அமுதமொழிகளைத் தத்தம் அகத்தில் பதித்துக் கொள்ளுமாறு தற்கால நடிகர்களை வேண்டுகின்றேன்.

 

''உங்களுள் பலர் கூறுவதுபோல் வசனங்களை வாய் விட்டுக் கத்து வீராயின், அதைவிட நான் எழுதியிருந்தவைகளை நகரங்களில் பறைசாற்றும் வெட்டியானைக்கொண்டு விளம்பச் செய்ய விரும்புவேன். இடிபோல் முழங்கிச் சண்டமாருதம் போல் வெளிக் கிளம்பும் உமது ரௌத்திரம் முதலிய ஆவேசங்களிலும், ஓர்வித அடக்கத்தை வகுத்தவராய் அத்து மீறாமல் ஒழுங்கை உடையவராக இருத்தல் வேண்டும். அர்த்தமில்லா அபிநயங்களையும் ஆரவாரக் கூச்சல்களையுமே அதிகமாக விரும்பும் அற்ப ஜனங்களின் செவிகள் செவிடுபடும் படி கத்துவதைக் காணுந்தோறும் என் மனம் புண்ணாகின்றது. வரம்பு மீறிச் செல்வது நாடகமாடுவதன் தாத்பர்யத்துக்கே முற்றிலும் விரோதமாகும்.''

 

நாளுக்கு நாள் புதிது புதிதாகப் புறப்பட்டுவரும் 'வர்ணமெட்டு' களில் நாடகம் காண்போரும் நடிகர்களும் கொண்டுள்ள பெருமோகத்தால், புதிது புதிதாக புனையப்பட்டு நாடக மேடைகளில் தற்சமயம் பாடப்பட்டு வரும் பாடல்களில் காணப்படும் பிழைகள் எண்ணிறந்தனவாக இருக்கின்றன. இராமாயணம் பாரதம் முதலிய புராதன சரித்திரங்களுக்கு, பொருத்திய மிகமிகச் சிறந்த பொருள்கள் பொதிந்த பழங்காலக் கீர்த்தனைகளும் கவிகளும் பற்பல இருந்தும், அவற்றை முற்றும் கைவிட்டு விட்டு நூதனமாகப் பாடப்பட்டு வரும் கீதங்களில் நல்லின்பம் உண்டாகாததோடு, அவை பலதிறப் பிழைகள் உடையனவாகவும் உள. தற்கால நாடகப் பாடல்களை சிறந்த முறையில்சீர்திருத்த வேண்டுவது, தமிழ்நாட்டுப் புலவர்களுடைய சிறந்த கடமையாகும்.

 

ஒரே மேடையில் - ஒரே நாடகத்தில் ஒரே பாத்திரத்தை மூன்று நான்கு நபர்கள் பூண்டு மாறி மாறித் தோன்றுவது பரிகசித்தற்கு உரியகுறையாகும். உதாாணமாக. 'பாரிஜாத புஷ்பஹாணம்' என்ற நான் கண்ட நாடகமொன்றில், கிருஷ்ண வேஷம் பூண்டு ஒருவர் பின் ஒருவராகத் தோன்றினோர் முதலில் பதினான்கு வயதுடைய சிறுவனும் இரண்டாவதாக இருபதுவயதுடைய இளைஞனும் மூன்றாவதாக பன்னிரு பருவமுடைய பாலனும் நான்காவதாக பதினாறு வயதுடைய சிறவனும் ஆவர்.  14! -20! -12! -16! கண்ணபிரானின் பருவ வளர்ச்சியின் வினோதத்தைக் கண்டீர்களா? கண்ணபிரான் முதலில் சிறுத்து திடீரெனப் பெருத்து மீண்டும் சிறுத்து மறுபடியும் வளர்ந்தனன் போலும்! 'வள்ளி திருமண'த்தில் முருகவிருத்தராகத் தோன்றியவன், பன்னிரு பருவமுடைய சிறுவன்! பன்னிரு வயதிலேயே விருத்தாப்பியம் வந்து விடக்கூடிய அவ்வளவு ஈன நிலைக்கு இன்னும் நம் இந்தியமக்கள் வந்து விடவில்லையே! இத்தகைய விபரீதங்களை எல்லாம் கவனியாதவர்கள், எப்படித்தான் நாடகமாடத் துணிவு கொண்டார்களோ? ஈசனே! இத்தகைய பெருங் குறைகளைக் கண்டறிந்தும் களிப்போரிடத்து என்னென இரக்கம் கொள்வதோ?

 

முற்காலத்தில் பெண்மணிகளும் அரங்கங்களில் தோன்றியதாகக் காவியங்களில் காணப்படுவது உண்மையே. அவர்கள் நடித்தது நர்த்தன சாலைகளிலேயே யன்றி மேடைகளில் அன்று. அவ்வாறு நடித்தோரும் விலைமகளிரே யன்றி குல மகளிர் அல்லர். இக்காலத் தென்னிந்திய நாடகமேடைகளிலே நடிகர்களாகத் தோன்றி - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் பெண்மைக்குரிய பெருங்குணங்கள் நான்கையும் உதறித் தள்ளிவிட்டு, காமக்கிளர்ச்சியை எழுப்பக்கூடிய சிற்றின்பப் பாடல்களைக் கூசாது பாடி, ஆடவருடன் சமமாகவும் - சில சமயங்களில் ஆண்வேடமும் பூண்டும் நடித்துவரும் மாதர்களை என்னென்பது? அத்தகைய விபரீத நடிப்பால் விளையக்கூடிய - ஏன்? - விளைந்து வருகின்ற பலவிதத் தீமைகளையும் பன்னி உரைக்குங்கால் பாரதமாம். இறைவன் அளித்தருளிய 'பெண்மை - தாய்மை - இறைமை'- என்று படிப்படியாக வளர்ச்சி பெற்றுவரும் மாண்பு வாய்ந்த - பெண்மையின் பெருமையை இனியேனும் உணர்ந்து நாடகமேடைகளினின்றும்விலகிக்கொண்டு, தாய்நாட்டு முன்னேற்றத்திற்கேற்ற சிறந்த பணிகளில்தலைப்படுமாறு நாடகத்துறையில் தலைப்பட்டுள்ள செந்தமிழ் நாட்டுப் பெண்மணிகளைப் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

 

செந்தமிழ் நாடு இன்று உள்ள நிலையிலே, காண்போரது அகத்தில் தீவிர தேச பக்தியை ஊட்டக்கூடிய சீரிய நாடகங்களை நடத்துவதால் பெரும் பயன் விளையும். தற்காலத் தமிழக நாடக சபையினர், தமது தாய் நாட்டுக்குத் தற்சமயம் செய்ய வேண்டிய சீரிய தொண்டு அதுவே. அத்தகைய சீரிய நாடகங்கள் பெருகிவருமாறு இறைவன் இன்னருள் செய்வானாக.

 

செந்தமிழ் நாட்டு நாடகப் பிரிய நண்பர்களே! சிரோயணிகளே! தமிழறிஞர்களே! தாய்நாட்டின் முன்னேற்றத்தை நாடும் தேசபக்தர்களே! இதுகாறும் கூறிவந்தவற்றை நன்கு ஆராய்ந்து, உள்ள உண்மைகளைக் கவனித்து, தற்காலத் தமிழகத்தின் முன்னேற்றத்திற் கேற்ற சிறந்த நன்முறைகளில் தற்கால நாடகத் தமிழைச் சீர்திருத்திப் புதுக்கிச் சிறப்புற வளர்த்து - தமிழ்த்தாயின் தண்ணருளுக்கும் குறுமுனிவரின் இன்னருளுக்கும் உரியவர்களாகி உய்ந்திடுமாறு உங்களெல்லோரையும் பெரிதும் வேண்டிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். அரங்கநாயகனும் நாடகத் தெய்வமாம் நடராசனும் உங்கட்குதிரு வருள் பொழிவார்களாகும். திருவருள் முன்னிற்க. வந்தேமாதரம்.


ஆனந்த போதினி – 1931 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment