Thursday, September 3, 2020

 

“நவராத்திரியும் – சரஸ்வதி பூஜையும்”

(ப.ரெ. ராஜரத்தினம்.)

கலைக்கு இருப்பிடமானவள் 'கலைமகள்'; கலைவாணி; சரஸ்வதி. சரஸ்வதியைப் பூஜிக்க சகலரும் விரும்புவர். 'கலைமகளை' கற்றவர் கொண்டாடவேண்டியது கடமை. புராண ரீதியாகவும், சரித்திர சம்பந்தமாகவும் உடைய முக்கியமான இந்துப்பண்டிகைகளில் இதுவும் ஒன்று. பிரதி வருவமும் புரட்டாசி மாதம் அமாவாசையினின்று ஒன்பது நாட்கள் தான், 'நவராத்திரி' எனப்படும். கடைசி நாளாகிய நவமி – திதி யன்று சரஸ்வதி பூஜையையும், மறுநாள் தசமிதிதி யன்று விஜய தசமீயையும் கொண்டாடுவார்கள்.

மகிஷாசுரன் என்ற அரக்கனுடைய கொடுமை தாங்காது, அவனை சம்மரிப்பதற்குச் சக்தியைப் பெற வேண்டி தேவியானவள் அகோராத்ரம் ஒன்பது நாள் ஊசியின்மேல் நின்று கடுந்தவம் புரிந்து, பத்தாவது நாளில் (தசமி) புன்னை விருக்ஷ ரூபமாக இருந்த அவ்வரக்கனை சம்மாரம் செய்து ஜெயத்துடன் திரும்பி வந்ததால், அதற்கு 'விஜயதசமி', எனப் பெயர் வந்ததாக ஐதீகம்.

மேற்படி புராண சம்பந்தமான ஒன்பது தினங்களையும், நமது முன்னோர்கள், புண்ணியமாகக் கருதி மிகவும் பக்தி - சிரத்தையுடன் கொண்டாடினார்கள். அத் தினங்களில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் பெரியவர்கள் அதிக ஆசாரமாகவும்; நியம நிஷ்டைகளுடனும், பூஜாகிருகத்தைச் சுத்தமாக வைத்து; பட்டினியிருக்து தேவி பூஜை செய்து உபாஸிப்பார்கள், சந்தியாகாலத்தில் அஷ்டோத்திர ஸஹஸ்ரநாம-அர்ச்சனைகள்; புராண இதிகாச படனங்கள் நடைபெறும்.

சகல தேவாலயங்களிலும் அம்மன் புறப்பட்டு அதற்காக பிரத்தியேகமாய் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு வந்து கொலு வீற்றிருப்பாள். அதிகப்படியான பூஜைகள்; அர்ச்சனைகள்; தூபதீப நைவேத்தியங்கள்; அலங்காரங்கள்; மேளவாத்திய பாட்டுக் கச்சேரிகள் விசேஷமாய் நடக்கும். அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களிலிருந்து பக்தகோடிகள் திரளாக வந்து தரிசனம் செய்வார்கள்.

பத்தாவது தினமாகிய விஜயதசமி யன்று அம்மன் புறப்பட்டு, சமீபத்தில் வன்னி விருக்ஷம் இருக்கும் இடத்திற்கு எழுந்தருளி அப்பு போட்டுவிட்டுத் திரும்பும் காட்சி கண் கொள்ளாததாய் இருக்கும்.

வீடுகள் தோறும் சரஸ்வதி பூஜை யன்று, தங்கள் தங்கள், கல்வி - கலை தொழில்களுக்குரிய புராண-இதிகாச-சாஸ்திர புத்தகங்களையும்; ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்து, சரஸ்வதியை மனதார்த் தோத்தரித்து, வந்தனை வழிபாடு செய்து; மறுநாள் விஜயதசமி யன்று நல்ல சுபவேளை பார்த்து, புத்தகங்களைப் படிக்கவோ, தொழில்களை நடத்தவோ ஆரம்பம் செய்வார்கள். ஐந்து அல்லது ஆறு வயது நிரம்பிய ஆண் குழந்தைகள்
உள்ள வீடுகளில், அன்று அவைகளுக்கு சாஸ்திர விதிப்படி புரோகிதரைக் கொண்டு ''ஹரிஹி-ஓம்," என்ற பிரணவத்தைச் சொல்லி, அக்ஷராப்யாஸம் செய்து
வைத்து, வேண்டியவர்களுக்கு விருந்தளிப்பார்கள். இப்படியெல்லாம் செய்தால் சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷம் கிடைக்கப்பெற்று, நமது கல்வியும் கலையும் விருத்தி யடையும் என்ற ஒரு நம்பிக்கை.

சரித்திர சம்பந்தமாகப் பார்ப்போமானால் பிற நாடுகளை விட இந்தியா ஒரு கலைக் களஞ்சியமாகவும், கல்வியின் பொக்கிஷமாகவும் விளங்கி வந்தது தெரியவரும். நமது தேசத்தில் கலைகளுக்குப் பஞ்சமா? அஜந்தா, எல்லோரா! குகைகனென்ன! ஸ்ரீரங்கம்; ஜம்புகேஸ்வரம்; மதுரை நாயக்கர் மஹால்; மஹாபலிபுரம் முதலிய இடங்களைப் போய் பார்த்துவிட்டு வாருங்கள். சித்திரம் வேண்டுமா? - ரவிவர்மா படங்களையும்; சாந்தி நிகேதனச் சித்திரங்களையும் சிந்தித்துப் பாருங்கள். கவிகளுக்குக் குறைவா! கம்பன்-
காளிதாசன்-மஹா கவிதாகூர்-சுப்ரமண்ய பாரதி இவர்களின் கவிதைகளைப் பார்த்தாலே போதுமே!

பண்டைகாலத்து பாரத மக்களின் பராக்கிரமம்; காவியம்; ஓவியம்; சிற்பம்; ஒளதார்யம்; முதலியன மண்ணொடு மண்ணாய் மறைந்து விட்டன. ஏன்? கவலையுடன் கவனித்து ஆதரிப்பாரில்லை. சுதேச சமஸ்தானங்களிலுள்ள அக் காலத்து அரசர்கள் தங்களது பொக்கிஷத்தைத் திறந்து பணத்தை வாரி இறைத்து, மேற்படி கலை பொக்கிஷங்களைக் காப்பாற்றி வந்தனர். உதாரணமாக, மைசூர்; புதுக்கோட்டை முதலிய சமஸ்தானங்களில் இன்னும் அதன் அம்சமாக ஓரளவு நவராத்திரியின் பொழுது நடை பெறுவதைக் காணலாம். அவ்வாசர்கள் அடிக்கடியும், முக்கியமாக நவராத்திரியாகிய ஒன்பது தினங்களிலும் வித்வத் சபை கூட்டுவரர்கள். நாட்டின் நாலா பக்கங்களிலுமுள்ள, புஜபலம் மிக்க மல்வர்கள்; சிற்ப சித்திரக்காரர்கள்; சங்கீத வித்வான், சாஸ்திரக்ஞர்கள்;
பண்டிதர்கள், எல்லோரும் ராஜசபை முன் ஒன்று கூடி, தங்கள் தங்களுக்குள்ள திறமையை வெளிப்படுத்துவார்கள். புதிதாகப் பயின்றவர்கள் அரசர்கள் முன் அரங்கேற்றம் செய்வார்கள். அரசர்களும் அவரவர்களுடைய திறமைக்குத் தகுந்தபடி சன்மானம் செய்து கெளரவித்து அனுப்புவார்கள்.

ஆனால் இப்பொழுது இருக்கும் சமஸ்தானாதிபதிகள் மேல் நாட்டு
நாகரீகத்துக்கு அடிமையாகி, முன்னோர்களுடைய பழக்க வழக்கங்களுக்கு இழுக்கைத் தேடி, தமாஷாக்களிலும்; படாடோபத்திலும் மூழ்கி, நவநாகரீகமாய் இருப்பதாய் நினைத்து பணத்தைப் பிரயோஜனப்படுத்தாமல் பாழ்ப் படுத்துகிறர்கள். இதனால் நமது கலைகளும் கல்விகளும் கவனிப்பாரின்றி அழிந்து பட்டதை நினைக்குங்கால் மனம் புழுங்குகிறது.

இக்காலத்தில் மாந்தர்கள் நவராத்திரிப் பண்டிகையை கொண்டாடும் விதத்தைப் பார்த்தால் துக்கம் உண்டாகிறது. ஏன்? இப் பண்டிகை யாகிய நவராத்திரி நாரீமணிகளுக் குரியதாய் போய் விட்டது. அதன் புனிதத் தன்மையைப் புறக்கணித்து விட்டார்கள். களிமண் பொம்மையும்; கடலைக் கண்டது தான் சுண்டலும் பலன்.

      தங்களிடமுள்ள செல்வத்தை பிறருக்கு எடுத்துக் காட்டுவதற்காக தற்போது பெரும்பாலோர் தங்கள் வீடுகளில் ‘கொலு’ வைத்து வருகிறார்கள்.

      இவ்விதம் கலைமகள் திருவிழாவை நடத்துவதை விட்டு, “ஹே! பாரத தேவி! ஹே! பரா சக்தி!! உன் தளைகள் தகர்ந்து, இவைகளைப் புனிதமாய்க் கொண்டாடி, பாரதமக்கள் உன்னத மெய்தி, உலகில் தலை நிமிர்ந்து சகல கலைகளிலும் வல்லவராகி “எனது நாடு இந்தியா! “நான் இந்தியன்,” என மார்பு தட்டிப் பேசுங்காலம் என்றைக்கு வருமோ? கிருபை கூர்ந்து சீக்கிரம் அருள் செய்வாயாக” என்று பிரார்த்தனை செய்தாலும் விமோசனம் ஏற்படும்.

ஆனந்த போதினி – 1942 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment