Thursday, September 3, 2020

 

நவராத்திரியில் அம்பிகா பூஜை

(வி. சங்கரய்யர்.)

சிவாலயங்கனிலும், விஷ்ணு ஆலயங்களிலும், சைவ வைஷ்ணவ பேத மில்லாமல் நம் நாட்டில் ஆசரிக்கப்பட்டு வருவது தேவியின் நவராத்திரி உத்ஸவமே யாகும்.

நவராத்திரி உத்ஸவம் ஒவ்வொரு வருஷமும் இரு தடவை நடத்தப் படுகிறது. ஒன்று ஆச்வயுஜ மென்கிற சாந்திராயன ஐப்பசி மாதம் சுக்கில பக்ஷப் பிரதமை முதலும், மற்றொன்று சைத்திர மென்கிற சாந்திராயன சித்திரை மாதம் சுக்கிலபக்ஷத்துப் பிரதமை முதலும், ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இரண்டும் தேவீ பரமாகவும் ஸ்ரீராம பரமாகவும் நடத்தப்படுகிறது. ஏனென்றால் தேவியும் ஸ்ரீராமரும் தூர்வாசி யாமர்கள் (அறுகம் புல்லைப் போல் பச்சை 'நிறமேனி யுடையவர்கள்). அம்பிகையை விஷ்ணு சகோதரி எனக் கூறப்படுகிறது. ஸ்ரீராமர் அம்பிகையின் ஸ்வரூபம் என்று அத்யாத்ம ராமாயணத்தில் கூறப்படுகிறது. தவிர, ஸ்ரீ வால்மீக ராமாயணத்திலும், ஸ்ரீராமர் காட்டுக்குப் புறப்படும் பொழுது சீதாபிராட்டி அவரை பெண்தான் புருஷ வடிவமாக அவதரித்தவர் என்ற
பொருளுள்ள ‘ஸ்திரியம் புருஷ விக்ரஹம்' என கூறி யிருக்கிறாள். பல பிரமாணங்களைக் கொண்டும் விஷ்ணுவும் அம்பிகையும் ஒன்றே யென்றே விளங்குகிறது. ஆகையால் ஈசுவரன் பத்னியான தேவியாகவோ அல்லது விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமனாகவோ நவராத்திரியில் பகவானை ஆராதிக்கலாம்.

இந்த நவராத்திரி உத்ஸவத்தை இப்பொழுதும் மெக்ஸிகோ என்னும் அமெரிக்காவின் ராஜ்யத்தில் வெகு காலமாக ராம் லீலr' என்னும் பெயரோடு கொண்டாடப்படுகிறது. ஒன்பதாவது நாள் அதாவது நவமியன்று அவர்கள் ஸ்ரீராமப் பட்டாபிஷேகமும் நடத்துகிறார்கள். “வாஸந்தே பிரதமே பக்ஷே ஹ்யாரப்யப்ரதி பத்திதிம்|| படேத் ஸ்ரீராமசரிதம் நவம் யாம்து ஸமாபயேத்|| '' இதுபோலவே ஆச்விநைப்ரதமே பக்ஷே...
ஸமாபயேத்" என்ற வாக்யமும் இருக்கிறது.

ஒரு பெரிய குடும்பத்தில் பல குழந்தைகள் இருக்கலாம். சில குழந்தைகள் நல்லவர்களாகவும் சிலர் துஷ்டர்களாகவும் இருக்கலாம். ஆனால், தாயாரின் பிரியம் எல்லோரிடமும் ஒன்றுபோல் தான் இருக்கும். தாயார் குழந்தைகளை வளர்க்கிறாள், காப்பாற்றுகிறாள், நேசிக்கிறாள். இங்கே தாயும் குழந்தைகளும் அநித்தியமானவர்கள் அதாவது இறப்பவர்களே. பரதேவதையோ நித்யமான மாதா. மோக்ஷானந்தமாகிய பாலை நமக்கு ஊட்டி வளர்க்கிறவள்; அஞ்ஞானத்தைப் போக்கி ஞானததை பெற்று நித்யானந்
தத்தைப் பெறுவதே நாம் பிறந்த நோக்கம் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

கண்ணீர் பெருக மனமுருகி இவ்வுலக விசாரமே யில்லாமல் அம்பிகையினிடத்தில் நமது ஆத்மா லயிக்கும் பொழுதுதான் தேவியின் ஞானப்பால் பருக முடியும். தேவியானவள் மஹஷாஸுரன், பண்டாசுரன், சும்பாசுரன், நிசும்பாசுரன் இவர்களை சம்ஹரித்திருக்கிறாள். இவர்க ளெல்லாம் அஞ்ஞானம் எனக் கூறுவதின் பிரதிமைகளே. அஞ்ஞானத்தைத் தொலைத்து ஞானப்பாலூட்டுபவள் தேவி என்பதே இதன் உட்கருத்து.

அஷ்ட லக்ஷ்மீ ஸ்வரூபமான தேவியை நவாக்ஷரீ, ஷோடசாக்ஷரீ ஆகிய மத்திரங்களால் தோத்திரிக்கவேண்டும். நவராத்திரியில் குடும்பத்தில் ஒருவராவது மௌனத்துடன் டீரான்னம் மாத்திரம் உண்டு பரிசுத்த மனதுடன் குடத்திலோ, தீபத்திலோ, விக்ரஹத்திலோ, யந்திரத்திலோ ஆவாஹனம் செய்து இந்த ஒன்பது நாட்களும் பூசிப்பது மிகவும் சிலாக்கியம்.

நவராத்திரி விரதம்

ஆச்வயுஜ சுக்லப் பிரதமையன்று ஆரம்பிக்கவேண்டும். ஆனால் அமாவாஸ்யையுடன் கூடின பிரதமை கூடாது. இது ஒன்பது தினங்களில் பூர்த்தியாகிறது. விஜயதசமி நாளையும் சேர்த்து இதை தசரா என்று கூறுவது முண்டு. ஆரம்ப தினத்தன்று சித்திரை நக்ஷத்திரமோ வைதிருதி நாமநித்திய யோகமோ கூடி யிருக்கக்கூடாது. அவை சென்ற பின்புதான் ஆரம்பிக்கவேண்டும். இவ் விரதம் இன்னும் பல பிரகாரத்திலும் அனுஷ்டிப்பதுண்டு.

(1) பிரதமை முதல் பஞ்சமி வரையிலும்.

(2) பஞ்சமி முதல் நவமி வரையிலும்.

(இவைகளுக்கு பஞ்சராத்ரம் எனப் பெயர். முதல்நாள் ஒருவேளை பகல் மட்டும் ஆகாரம், இரண்டாம் நாள் ஒரு வேளை இரவில் மட்டும் ஆகாரம், மூன்றாம் நாள் கிடைத்ததை ஒரு தடவை மட்டும் சாப்பிடுவது, நான்காம் நாள் உபவாசம், ஐந்தாம் நாள் பாரணை செய்யவேண்டும் என்று விதி இருக்கிறது.)

(3) சப்தமி முதல் நவமி வரையிலும் திரிராத்ரம் எனக் கூறுவதுண்டு. பகலில் மாத்திரம் உண்ணலாம்.

(4) யுக்மராத்ரம் என்பது பிரதமை யன்றும் நவமி யன்றும் ஒரு வேளை யுண்பது.

(5) ஏகராத்ரம் நவமி யன்றே ஆரம்பித்து முடிப்பது ஒரு வேளை தான் உண்ணலாம். அதுவும் ஸாத்விக ஆகாரமே உண்ணவேண்டும்.

(6) தேவீ உபாஸகர்கள் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் கூறி யிருக்கிறபடி பிரதமை முதல் பௌர்ணிமை வரை பதினைந்து நாட்களும் கொண்டாடுகிறார்கள்.

ஆரம்ப தினத்தில் சுத்தமான வேதிகையில் நெல் அரிசி போட்டு அதன் மீது மூர்த்தி ஸ்தாபனம் செய்யவேண்டும். முதலில் கணபதி பூஜை, பிறகு ஸப்த மாதாக்களோடு கூடிய தேவிபூஜை, அஷ்ட திக் பாலக பூஜை செய்ய வேண்டும்.

தேவியை மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹா ஸரஸ்வதீ ஸ்வரூபமாகவும் பூஜிப்பது நம் நாட்டு வழக்கம். சப்த சதி என்ற தேவீ மகாத்மிய பாராயணம் செய்வது மிகவும் முக்கியம். இதை தினமும் ஒரு தடவை பாராயணம் செய்தால் அபீஷ்ட சித்தியும் மூன்று தடவை சர்வசாந்தியும், ஐந்து தடவை ஸர்வபய நாசமும் ஏழு தடவை ஞானப்பிராப்தியும் பலன்.

      தேவீ மகாத்மிய பாராயணத்தைப்போல குமாரீ பூஜையும் முக்கியமானதே யாம். தினம் ஒரு குமாரி வீதமோ, கடைசி தினம் மாத்திரமோ குமாரீ பூஜை செய்வது நலம். இவ்வாறு ஒன்பது தினமும் பூஜை செய்து பின் தசமி யன்று தசாம்ச ஹோமம் செய்யவேண்டும்.

(1) மஹாஷ்டமி, (2) மஹா நவமி

      அஷ்டமியும் மூலமும், நவமியும் பூராடமும் கூடி யிருக்கும் தினம் விசேஷ தினமாம். சூரிய உதயத்தில் அஷ்டமியும், அஸ்தமனத்தில் நவமியும், குஜவாரமும் கூடியுள்ள தினம் மஹா விசேஷமாகும். மஹாநவமியன்று நாம் ஸரஸ்வதி பூஜை செய்கின்றோம்.

(3) விஜய தசமி

      இத் தினத்தில் சிரவணம் சேர்ந்திருப்பது மிகவும் உத்தமம். இன்று மாலை நக்ஷத்திரம் காணும் வேளை மிக உத்தம சமயம். அதுவே விஜயகாலம். அப் பொழுது தான் தேவி ஜயிக்கிறாள். விஜயம் அடைகிறாள்.

      இவ்வளவு மஹிமையுள்ள ஆச்வயுஜ நவராத்திரி இவ் வருஷம் புரட்டாசி மாதம் 14-ம் தேதி வியாழக்கிழமை ஆரம்ப மாகிறது. 21-ம் தேதி வியாழக்கிழமை மஹா நவமியும், 22-ம் தேதி வெள்ளிக்கிழமை விஜய தசமியும் வருகிறது. இக்காலத்தில் யாவரும் தேவியை ஆராதனம் செய்து அவள் அருள் பெறப் பாடுபடும்படியாக எல்லா ஆஸ்திகர்களையும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

ஆனந்த போதினி – 1943 ௵ - செப்டம்பர் ௴

 



No comments:

Post a Comment