Thursday, September 3, 2020

 

நவீன நாகரீகத் தீங்கு

 

 ஆங்கிலம் படித்தவர்களில் பெரும்பாலர் எல்லா விஷயங்களிலும் ஆண் பெண் இருபாலரும் மேல் நாட்டார் ஒழுக்க ஆசாரப்படி நடக்க வேண்டுமென்கின்றனர். அதற்கு ஆதாரமாக'புதியன புகுதலும் பழையன கழிதலும் வழுவல கால வகையினானே " என்றதைக் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் பி. ஏ., பட்டம் பெற்ற ஒரு முதலியார் (பெயரைப்பற்றி நயக்கு அவசியமில்லை) ஒரு வியாசத்தில் இதே ஆதாரத்தைக்காட்டி பின்வரு மாறு வரைகிறார். –

 

"நாகரீகம் அதிகரிக்க அதற்கு ஏற்றவாறு நாம் நடந்து கொள்ளுதல் முன்னோரால் ஏற்படுத்தப்பட்ட நீதிகளுக்கு விரோதமாயிருப்பினும் குற்றமாகாது. மங்கைப் பருவமடைந்த மங்கையர்கள் வீட்டை விட்டுச் செல்லலாகாது என்று கூறியிருப்பினும், தற்கால சிறுமிகள் பாடசாலைக்குச் செல்கின்றனர். மற்றும் சிலர் ஆடவர்களுக்குரிய சுதந்தரங்கள் தமக்கும் உண்டென்று போர் செய்து அவைகளை யடைந்து அவர்களோடு ஒத்து உழைக்கின்றனர். இது நம் தமிழ் மக்கள் வழக்க ஒழுக்கங்களுக்கு, மாறுப்பட்டிருப்பினும் குற்றமாகுமா? (ஆகாது என்பது பொருள்.) இது போலவே ஆண் மக்களிலும் அனேக மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்கள் தலைகளில் முன் மயிர் வைத்துக் கொள்வதும், மேனாட்டு மக்கள் போல் உடைகள் உடுத்துவதும், இன்னும் பல செய்கைகளும் (இவை அரை மீசை கால் மீசை வைப்பதும், சாராயங் குடிப்பதும், சுருட்டு பிடிப்பதும், மாதரோடு கை கோர்த்துக் கொண்டு திரிவதும் ஆகியவர்களைக் குறிக்கிறதாக்கும்) நம் ஒழுக்கத்திற்கு மாறுபட்டிருப்பினும் குற்றம் என்று கூறமுடியாது * * * ''

 

நமது முதலியாரவர்கள் உயர்தர ஆங்கிலக் கல்விகற்றதன் பயன் இது போலும். "புதியன புகுதலும் பழையன கழிதலும் வழுவல கால வகையினானே' என்று கூறப்பட்டதாலேயே நாம் நமது முன்னோர் ஆசார ஒழுக்கங்களையெல்லாம் அலட்சியம் செய்துவிட்டுத் தகாத மேல் நாட்டு ஆசாரங்களைக் கண்மூடித்தனமாய் கைக்கொள்வதா? ஒளவையார் ''தையல் சொற்கேளேல்'' என்று கூறியதால், மனைவி " சாப்பிட வாருங்கள்'' என்றால் கணவன் சாப்பிடாமல் பட்டினியாகவே யிருக்க வேண்டு மென்பதா? இது நாகரீகம் என்கிறார் நமது நண்பர். ஆகையால் நாம் சுத்த அநாகரீகர்களாகவும் மூடர்களாகவும் இருந்து இப்போதுதான் மேல் நாட்டாரிடம் நாகரீகம் கற்றுக்கொள்கிறோம் என்று கருதுவோரில் நமது நண்பரும் ஒருவர் என்று கருதுகிறோம். நமது முன் நிலைமை யெவ் வாறிருந்தது, நமது நாகரீகம் எத்தகைய நிலையிலிருந்தது, எவ்வளவு புராதனமானது என்பதை அறிந்திருந்தால் இவ்வாறு இவர் வரைந்திருக்க மாட்டார். ஒவ்வொரு நாட்டாரின் உடை, ஆசாரம் முதலியவை அந்தந்த நாட்டின் சீதோஷ்ண நிலைமையையும் வசதிகளையும் பொருத்தவை. மேல் நாட்டாரின் உடை நமக்கு ஒவ்வாதென்பதும் நமது ஆசாரத்திற்குத் தகா தென்பதும் ஒரு பக்கமிருக்க, நமது வருவாய்க்கே யது பொருந்தாது என்பது வெளிப்படை. தங்கள் தேசாசார ஒழுக்கத்தைக் கைவிடுவோர் எங்கேனும் ஒரு ஜாதியாராக மதிக்கப்படுவார்களோ? மேல் நாட்டார் எந்தத் தேசம் சென்று எவ்வளவு காலம் அங்கு தங்கியிருப்பினும் தங்கள் தேசாசாரத்தைக் கைவிடுகிறார்களா?

மேல் நாட்டு ஆசார ஒழுக்கங்கள் நம் ஆடவர்க்கே பல தீங்குகளை விளைவிக்கின்றன வென்பது பன்முறை அறிவாளிகளாகிய ஆன்றோரால் நன்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கப் பெண்மக்கள் இவர் கூறுகிற வழிகளில் நடந்தால் அவர்கள் நிலைமை யென்னாகும்? கொஞ்ச காலத்திற்குள் பெண்களுக்குரிய அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற நாற்குணங்களும் அறவே யொழிந்து 'கற்பு' என்ற வார்த்தையே கனவாய் மறைந்துபோம். நமது பெண்மக்கள் கற்பரசிகளாய் இருந்து தெய்வ வருள் பெறவேண்டுமென்றும், அனாதிகால முதல் நம் நாட்டு மாதர்க்கிருக்கும் கற்பினாலுண்டாகும் பெருங்கீர்த்தி மங்கலாகாதென்றும் கருதுவோர் மேல் நாட்டு ஆசாரப்பேயினிடம் அவர்கள் சிக்கவொட்டாது பாதுகாக்க வேண்டும். மங்கைப் பருவம் வந்த பெண்கள் சாதாரணமாய் அன்னிய ஆடவரோடு புழங்குவதால் எத்தகைய தீங்குகள் நேரிடுமென்பது சாதாரண புத்தியுடையோர்க்கே சற்று சிந்தித்தால் நன்கு விளங்கி அவர்களைத் திடுக்கிட செய்யும். மேல் நாட்டு ஆசார சம்பந்தமான கதைகளை வாசிப் போர் இந்த உண்மையை யறிந்தேயிருப்பார்கள். மங்கையர் கல்வி (நமக்கு அவசியமான கல்வி வரையில்) கற்பதைப்பற்றி நாம் கூறவில்லை. ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளிப்பட்டு பாடசாலைக்குச் செல்வது தகாத நடக்கையே. அதிலும் ஆடவராகிய உபாத்திமார்கள் இருக்கும் பாடசாலைக்குச் செல்வதாவது, அன்னிய மத உபாத்தினிகளிடம் கல்வி கற்பதாவது மிகுதியும் தகாததேயாகும். இவற்றால் பெருங் கெடுதிகள் விளைவது பிரத்தியட்ச அனுபவமாக விருக்க, நமது முதலியார் நம்மவர்க்கு இத்தகைய போதனை செய்வதைப்பற்றி நாம் மிக்க விசனிக்கிறோம். மேல் நாட்டு நாகரீகத்தில் இவருக்குண்டாகிய மயக்கமே யிதற்குக் காரணம்.

 

மேல் நாட்டு மாதரின் நிலைமைக்கும் நம் நாட்டு மாதரின் நிலைமைக்கும் மிக்க வித்தியாசமுண்டு. ஆதியில் அவர்கள் ஆண் பெண் இருபாலரும் வித்தியாசமின்றி யிருந்தவர்கள். அந்த நிலைமையிலிருந்து அவர்கள் சீர்திருத்த மடைந்தவர்கள். அவர்களில் அனேகர் தாங்களே ஒரு தொழிலைச் செய்து ஜீவிக்க வேண்டியவர்களாக விருக்கிறார்கள். நமது மாதர் எப்போதும் ஆடவரால் ஆதரிக்கப்படுபவர்கள். அப்படி யாரேனும் அனாதரவான நிலைமையை யடைந்து விட்டால் அப்போதும் வீட்டிற்குள்ளிருந்த படியே, நூல் நூற்றல், சிறு தின்பண்டங்கள் செய்தல் முதலிய ஏதேனுமொரு தொழில் செய்து ஜீவிப்பார்களே யன்றி வெளியில் சென்று அன்னிய ஆடவரின் அதிகாரத்திற்குட்பட்டு வேலை செய்யமாட்டார்கள்.

 

மேல் நாட்டாருக்கு இல்லற தருமம் என்ற ஒன்றில்லை, நமக்கோ இல்லற தருமம் மிக முக்கியமான அறம். அதற்கு மனைவி அவசியம். இல்லறத்தைச் சரிவர நடத்துவதிலேயே ஒரு ஸ்திரீக்கு எவ்வளவோ வேலைகளிருக்கின்றன. அதற்கு அவசியமான கல்வியைக் கற்று இல்லறத் தைச் சரிவர நடத்தி கற்பரசியாக விருந்தால் அவள் இருமைப் பயனையும் அவசியம் அடைவாள்

 

. வாலிப காலத்தில் உலக அனுபவம் தெரியாது, மனப்போக்கைத் தடுக்கும் வல்லமை கிடையாது. அக்காலத்தில் பெண்கள் தனியே வெளியில் செல்வதால் சுலபத்தில் ஆபத்துகளில் சிக்கிக்கொள்வார்கள். இத்தகைய தீமைகளுக்கு இடந்தராமல் நம் பெண் மக்களைக் காப்பாற்றவும், மறுமையில் அவர்கள் தெய்வீகப் பதவியடையவும் கருதியே அத்தகைய ஆசார ஒழுக்கங்களை மகான்களாகிய நம் முன்னோர் ஏற்படுத்தியுள்ளார்கள். நமக்குத் தீமைவிளைக்காத சிற்சில விஷயங்களில் காலத்தை யனுசரித்து நாம் மாறுதலடைய வேண்டியது அவசியமாயினும் மேற்கண்டபடி நாம் நமது முன்னோரது மதசம்பந்தமான பூர்வீக ஆசார ஒழுக்கங்களை யலட்சியம் செய்தொழித்து விட்டு மேல்நாட்டு அன்னிய ஆசாரங்களைக் கைக்கொள்வது பெருங்கேட்டை விளைவிக்கும் என்பதே ஆன்றோர்களின் அபிப்பிராயம். நாம் மனப்பூர்வமாக அதை நம்புவதாலேயே நமது நண்பர் கூறிய போதனையை மறுத்து வரைய நேர்ந்தது. இனி இதை வாசிப்போர் சிந்தித்து, ஐயமுளதேல் ஆன்றோரைக் கேட்டு அவர்கள் புத்தி கூறுமாறு நடந்து கொள்ளும்படி விட்டு விடுகிறோம்.


 ஓம் தத்
த்.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - அக்டோபர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment