Thursday, September 3, 2020

 

நற்குண முடமை

 

குணம் நற் குணமெனவும், தீக்குணம் எனவும் இருபிரிவினை யுடைத்து. இவற்றுள் முன்னது எல்லோராலுங் கொள்ளத்தக்கது, பின்னது ஒருவ ராலுங் கொள்ளத்தகாதது மாகும். ஆகலின், இங்ஙன் நற்குணத்தையே விளக்க நினைந்து அதனையே இவ்வியாசத்திற்குத் தலையங்கமாக வெடுத்துக் கொண்டேம்.

 

இறைவனால் சிருட்டிக்கப்பெற்ற இவ்வுலகம் பலவிதம்? இவ்வுலகத்து மக்கள் எல்லாரும் ஒருதன்மை யுடையராயிரார். சிலர் நன்மையாற் பயன் பெறுவோராயும், சிலர் தீமையால் கெடுபவராயும் இருக்கின்றனர். எவர் எத்தகைய குணத்தை யுடையராயினும் அவர் விரும்புவது நன்மையையே என்பது எல்லாராலும் அறியத்தக்க தொன்றாம். ஒருவன் தீங்கையே செய்து செல்லினும், அவன் அடைய விரும்புவது நன்மைதான். ஆனால், உலக நீதி அவ்வாறிருத்தற் கிடங் கொடாது. ஒவ்வொருவரும் தாம்தாம் நன்மை செய்தாலொழிய நன்மையடையார். நற்குணத்தையுடைய ரல்லாதவர்கள் எஞ்ஞான்றும் நன்மை செய்தலும் இயலாததே. ஆதலால், மனத்திற்கொப்ப நன்மையடைய விரும்புவோ ரெல்லாரும் தடையின்றி நற்குணத்தையே அருமருந்தன்ன அணியாகக் கொள்ளுதல் வேண்டும். குணனுடை மாந்தர்க்கன்றோ குறைவராதொழியும்? குணமுடையாரே நலமுடையார். குணமென்னும் குன்றேறி நின்றார்க்கே எல்லா நன்மையும் இடையூறின்றி உண்டாம்.

 

இவ்வங்கண்மா ஞாலத்து ஒருவன் பிறனொருவனிடம் அழியாத சினேகம் கொள்ள வேண்டுமாயின், பின்னவனுக்கு நற்குணங்கள் உண்டாயிருத்தல் வேண்டும். எவனிடத்து நலந்தருங்குணங்கள் இல்லையாமோ அவனிடத்து உலகம் யாதொருபற்றும் வையாது. அவனைப் பலவாற்றானும் புறக்கணித்து விடும். ஒருவன் எத்துணைச் சிறியதோர் நலம் பெறல் வேண்டுமெனினும், நற்குணமே முதற்கண் வேண்டற்பாலது. அஃதிலார் ஒருவராலும் எப்பொழுதும் நன்மை பெறுதல் இன்று.

 

ஒருவனது ஒழுக்கம் அவனது குனத்தை அடியொற்றியதாக விருக்கின்றது. நற்குணமில்லானிடம் நல்லொழுக்கம் துன்னுதல் இல்லை. நல்லொழுக்க மில்லாதவர்களை மேலோரெல்லாம் கைவிடுவர். ஒருவனை மேன்மைப் படுத்துவதும் கீழ்மைப்படுத்துவதும் அவனது குணமே. நல்லவன் நற்குணத்தைக் கொண்டு மேன்மை யடைகின்றான்; மற்றையோன் தீக்குணத்தினால் கீழ்மையடைகின்றான். ஆதலால், மேன்மையடைய விரும்புவோ ரெல்லாரும் நற்குணத்தைக் கைக்கொள்ளுதல் முறைமை.

 

இவ்வுலகத்தில் மேன்மையடையாத ஒருவன் எவ்வுலகத்தும் மேன்மையடையான் என்பது மறுக் கொணா உண்மை. இவ்வுலகில் நற்குணத்தைக் கொண்டு மேன்மையடையாதவன் மறுவுலகிலும் துன்பத்திற்குள்ளாவன். இவ்வாற்றால் அத்தகையோனுக்கு எவ்விடத்தும் துன்பமே உடைமை யாகின்றது. சுகம்பெற வேண்டுவார் நற்குணத்தையே கைக்கொண் டொழுகத் தகுந்தவர்கள்.

 

இவ்வுலகத்தா ரெல்லாம் வணங்கத் தகுந்த செல்வத்தை ஒருவன் உடைத்தாயிருப்பினும், நற்குணமொன்று மின்றேல், அவன் என்ன பயனை யடைவன்? செல்வமிகுந்த காலத்து அஃது இருந்து அவனை உண்பிக்குமே யல்லாது யாதேனும் நன்மை செய்யுமோ? குணமன்றோதானம். ஒருவனுக்குக் குன்ராத குணமிருப்பின் அவன் ஒருபோதும் வறுமையாற்றுன்பம் அடையான். அவனுக்கு அக்குணமே யழியாத செல்வமாம். செல்வத்தினாலுண்டாம் புகழும், செல்வாக்கும் உடனே மாயுந்தன்மையனவே. குணத்தால் உண்டாகும் மேன்மை எக்காலும் குன்றுதலில்லை. அன்றியும், செல்வத்தால் எவ்வெந் நன்மைகள் உண்டாமோ, அவ்வந் நன்மைகளனைத்தும் நற்குணத்தாலும் உண்டாமென்பது ஒருதலையே. ஆதலால், எவ்வாற்றானும் செல்வத்தைவிட நற்குணமுடைமை மிக்க மேன்மைக்குரித்தாம் என்க. குணத்தோடு செல்வமுடைமையும் ஒருவனுக்கிருக்குமாயின், அஃது பயன் மிகக்கொடுக்கும் என்பதில் ஐயமின்று. குணமில்லாதவனுடைய செல்வம் ஈகைக் குரித்தன்று; ஈகைக்குரித்தல்லாத செல்வம் மண்ணுக்குச் சமானமேயன்றோ?

 

"மனம் வேறு சொல்வேறு மன்னுதொழில் வேறு'' பட்ட துட்டரிடத்தை மேலோர் சேரார். ஏனெனில், நினைப்பதொன்றும் சொல்வ தொன்றும், செய்வதொன்றுமாகக் காலங்கழிப்பவர் நற்குணமுடையரல்லராகலின். எனவே மேலோர் நற்குணமுடையாரிடத்தையே நண்ணுவர் என்பதுபோதரும். குணமில்லாரிடத்து அத்தகையார்க் காவதொன்று மிலது. மேலோர் மேலோரையே யடைவதும் கீழோர் கீழோரையே யடைவதும் இயல்பு. மாணின்மை யுடையார் யாவரே யாயினும் மேலோரால் பழித்தற்குரியரே யாவர்.

 

ஆதலால், நற்குணத்தையே கொண்டு நயமுற நானிலத்தில் வாழ்ந்து நன்மை நண்ணுதலே நல்லார் தொழில். நற்குணமுடைமையால் வரும் நன்மைகளையும் அஃதில்லாமையினால் வரும் தீமைகளையும் நன்குணர்ந்தார், நற்குணத்தையே நாடுவர் என்பதில் யாதோர் ஐயப்பாடு மின்று.


 ராம. சுப்பிரமணிய நாவலர்,

பத்மநாபபுரம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - செப்டம்பர் ௴

 

 



 

No comments:

Post a Comment