Wednesday, September 2, 2020

திருமழிசை யாழ்வார் 


4. திருமழிசை யாழ்வார்.

 

இப்பெரியார் அவதரித்த ஸ்தலம் திருமழிசை. ஒருசமயம், அத்திரி, பிருகு, வசிஷ்டர், ஆங்கீரசர் முதலிய மகரிஷிகள், பிரமதேவரிடஞ்சென்று, தாங்கள் தவம் புரிவதற்குத் தங்களுக்கோர் தகுதியான க்ஷேத்திரத்தைத் தெரிவிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவர், பூமியின் சத்தெல்லாம் ஒருங்கே திரண்டுள்ள க்ஷேத்திரம் எதுவென்று தமக்குள் யோசித்துப் பார்க்கையில், மகிசார க்ஷேத்திரத்தின் ஞாபகம் அவருக்கு உதயமாயிற்று. (மகி - பூமி; சாரம் - சத்து.) (மகிசாரம் என்னும் வடமொழி தமிழில் மழிசை என வழங்கப் பெற்று வருகிறது.) இந்த மழிசையம்பதியையும், பூமியின் மற்றபாகத்தையும் அந்தப் பிரமமூர்த்தி தமது ஞானமாகிற தராசினிடம் வைத்து நிறுத்துப் பார்க்க, மழிசையே கனத்திருக்கக்கண்டு, அதை யவர் மகரிஷிகளுக்குத் தெரிவித்தார். ஆகையால் இந்த க்ஷேத்திரம் மிகவும் உத்தமமானதொன்றாயிற்று.

 

இந்த க்ஷேத்திரத்தின் மேற்பாகத்தில், கொஞ்ச தூரத்திலிருக்கிற விதேகவனத்தில், பார்க்கவ மகரிஷி ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து, தீர்க்கசத்ரயாகஞ் செய்து கொண்டிருந்தார். இந்திரன் இந்த யாகத்தைப் பங்கஞ் செய்து வரும்படி தேவதாசிகளில் அதிசுந்தரவதியான கனகாங்கி யென்பாளொருத்தியை மகரிஷியிடம் அனுப்ப, அந்த மகரிஷி கனகாங்கியை நேசித்து ஒரு புத்திரனைப் பெற்றார். இப்புத்திரன் எவ்வித உறுப்பும் விளக்கமாகத் தோன்றாதபடி, வெறும் பிண்டாகாரமாய், துவாபரயுகம் 8,62,901 - ல் நிகழ்ந்த சித்தார்த்தி, தைமீ, கிருஷ்ணபட்சம், பிரதமை, பானுவாரங்கூடிய மகநட்சத்திரத்தில் உதித்தது கண்டு, பார்க்கவரும் கனகாங்கியும், இப்பிண்டத்தை யாதரியாமல், ஒரு பிரப்பம் புதரின் கீழ் எறிந்து விட்டுப் போய் விட்டார்கள்.

 

ஜெகன்மாதாவான மகாலக்ஷமி இந்தப் பிண்டத்தைக் கடாக்ஷித்தருள், இது நாளடைவில் எல்லா அவயவங்களும் விளங்கப் பெற்று ஓர் பச்சிளங்குழந்தையாய் அழத்தொடங்கிற்று. மழிசைப்பதியில் கோயில் கொண்டுள்ள பகவான் இக்குழந்தை முன் தோன்றிக் கடாக்ஷிக்க, இதன் அழுகை நின்றுவிட்டது. பகவான் மறைந்ததும் குழந்தை மீண்டும் ரோதனஞ் செய்தது. இச்சந்தர்ப்பத்தில், திருவாளனென்பானொருவன், பிரம்பறுக்கும் பொருட்டு அப்புதரினிடம் வந்தான். வந்தவன் குழந்தையைக் கண்டு, ஆனந்தங்கொண்டு, அதை எடுத்துக் கொண்டு போய்த் தன் மனையாளான பங்கயச் செல்வியிடங் கொடுத்தான். புத்திரப்பேறின்றி வருத்த முற்றிருந்த அவள், தனத்தைக்கண்ட தரித்திரனைப்போல் சந்தோஷசாகரத்தில் மூழ்கி, அக்குழந்தையை அன்புடனேற்றுக் கொண்டு, பார்ப்பவர், 'இவள் இக் குழந்தையைத் தத்துக்கொண்டாள் கொலோ, தானே பெற்றாள் கொலோ' என்று அதிசயிக்கும்படி, சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தாள். பங்கயச் செல்விக்குப் பகவத்கிருபையால் அவளுடைய ஸ்தானங்களில் பால் சுரக்கத் தொடங்கிற்று. குழந்தை இப்பாலை அருந்தாமலே அதுமுதல் அழாமலும், மல ஜலாதிகளில்லாமலும், சுகவளர்ச்சியில் தளராமலு மிருந்து வந்தது.

 

இவ்விசித்திரத்தைக் கேள்வியுற்ற அவ்வூராரில் ஒருவனும், நான்காம் வருணத்திற் பிறந்தவனும், பிள்ளையில்லாதவனும் ஆகிய ஒரு கிழவன் அக்குழந்தையின் மீது பேரன்பு கொண்டு நாள்தோறும் பயபக்தி விசுவாசத்துடன், பசும்பால் வாங்கி, அதைப் பக்குவமாகக் காய்ச்சி எடுத்துக் கொண்டு தன் மனைவி சகிதமாய் வந்து அப்பாலை யருந்தும்படி பிரிய வசனங்களால் குழந்தையை வேண்டிக் கொள்வான்; குழந்தை அதனை மகிழ்ச்சியோ டருந்தி வந்தது.

 

இப்படிப் பலநாள் நடந்துவர, ஒருநாள், இத்தம்பதிகளின் கருத்தறிந்து அத்தெய்வக் குழந்தை, தானருந்தும் பாலில் கொஞ்சம் மிச்சப்படுத்தி, அவர்களை நோக்கி, " நீங்கள் இதனை யுட்கொண்டால் உங்களுக்கோ ரறிவறிந்த புத்திரன் பிறப்பான்; அவனால் சுகமடைவீர்கள்'' என்று குறிப்பிக்க, அவர்களும் அவ்வாறே செய்து விதுரரைப் போன்ற ஞானவானாகிய ஒரு குமாரனைப் பெற்று, கணிகண்ணன் என்று அக்குமாரலுக்குப் பெயரிட்டு, சகல வித்தைகளிலும் தேர்ச்சி பெற வைத்தார்கள். நிற்க,

 

எம்பெருமானுடைய ஜாயமான கிருபாகடாக்ஷத்தைப் பெற்ற தெய்வீகக் குழந்தையும் ரிஷிபுத்ரருமான ஆழ்வார், ஏழுவயதிலேயே சகலமும் ஓதாதுணரும் வல்லமையைப் பெற்று, '' இளைப்பினை யியக்க நீக்கி, யிருந்து முன்னிமையைக் கூட்டி யளபிலைம் புலனடக்கி இயம நியாமாதி அஷ்டாங்க யோகம் புரிய இச்சைகொண்டார். இதற்கு ஸர்வஜகத்காரணத்வமும், ஸர்வரக்ஷகத்வமும், மோக்ஷப்ரதத்வமும் கொண்டுள்ள பரப்பிரம வஸ்துவையுள்ளபடி யறிந்து தியானத்திற்கு விஷயமாக்க வேண்டுமென்று சாத்வீகசாஸ்திரங்கள் முறையிடுகின்றன.

 

பரம்பிரம்மத்திற்கு ஸர்வஜகத் காரணத்வமாவது, எல்லாம் இறுதியுற்றுத் தன்னிலடங்கிய காலத்துத் தானொன்றிலும் அடங்காது எஞ்சி நின்று சிருஷ்டி காலம் வந்ததும், சேதனாசேதனங்களான யாவும் உண்டாவதற்குத்தானே முதற்காரணமாயிருப்பதாம். ஸர்வரக்ஷகத்வ மென்பது சிருஷ்டிக்கப்பட்ட ஜீவான்மாக்கள் முத்தியின்பம் பெறுவதற்கு அவரவர்கட்குள்ள தடையை யொழித்து விருப்பத்தை யளித்து, நன்னெறியில் நிறுத்திக் காத்தலாம். மோக்ஷப்ரதத்வமாவது, நன்னெறியில் நின்ற அவ்வானமாக்களுக்கு நிரதிசயப் பேரின்பப் பேற்றை யளிப்பதாம்.


 இவ்வாற்றலைக் கொண்ட அவ்வஸ்துவை நாடிய திருமழிசை யாழ்வார், பகவானுடைய சங்கல்பத்தின்படி பல சமயங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக நுழைந்து, பிரம்மலக்ஷணத்தைப் பேசும் விஷயத்தில் அந்தந்தச் சமயத்தார் கொண்டுள்ள கொள்கைகளை அவரவர் கூறும் வண்ணமே அனுசரித்துப் பார்த்தார். அவையாவும் தமதறிவுக்குப் பொருத்தமானவையாகப் புலப்படாமையால் அவற்றை விட்டுச் சைவமதப் பற்றில் தலையிட்டு, சிவவாக்கியர் என்னும் பெயருடன் வாழ்ந்து வரலானார்.

 

இப்படி இவர் சைவாபிமானராய்ப் பூசஞ்சாரம் செய்து வரும் போது திருமயிலையில் ஸ்ரீ வைஷ்ணவாக்ரேசரான பேயாழ்வாரைச் சந்தித்து, அவருடன் மதவிஷயமாகத் தர்க்கித்து, அவர் சொன்ன பரப்பிரம்ம லக்ஷணங்கள் சுருதி யுக்தி யனுபவங்களுக்கு ஒத்திருந்தமையாலும், தமது யோகதிருஷ்டியால் விஷ்ணுவாக்ருதியே பரதத்வமா யிருக்கக்கண்டமையாலும் அவரால் திருத்தப் பெற்று, பஞ்சசமஸ்கார பூர்வகமாக ஸ்ரீ வைஷ்ணவராய், அவ்ரையே தமது ஞானாசாரியராகவடைந்து, அவர் நியமனப்படி யொழுகி வந்தார்.

 

பிறகு திருமழிசையார், பேயாழ்வாருடைய அனுமதி பெற்றுத் திருமழிசைக் கெழுந்தருளி அங்கே கஜேந்திர சரஸின் தீரத்தில் யோகத்திலிருந்தார். அப்போது ஆகாயவீதியில், ரிஷபவாகனத்தில் பார்வதி சகிதமாகப் போய்க் கொண்டிருந்த சிவபிரான் யோகத்திலிருக்கும் ஆழ்வாரைக் கண்டு அவரது திடமான பக்திக்கு வியந்து அவருக்குப் பக்திசாரர் என்னும் சிறப்புப் பெயரைக் கொடுத்துப் போயினர். அதன்பின் சுக்திஹாரன் என்கிற கேசரன் ஆழ்வாரிடம் வந்து அவருடைய மகிமையைப் பார்த்து அடைக்கலம்புக அவனை அவர் கிருதார்த்தனாக்கி யருளினார். அப்பால் ஆழ்வார் மீண்டும் பூசஞ்சாரம் செய்து வந்து கச்சியம்பதியில், திருவெஃகாலில் எழுந்தருளி, சொன்னவண்ணஞ் செய்த பெருமாளைச் சேவித்து அங்கே யோகத்திலமர்ந்திருந்தார். இவ்விடத்தில் ஆழ்வாருடைய அனுக்கிரகத்தால் பிறந்து சிறப்புற்றிருந்த கணிகண்ணர் ஆழ்வாரை யடைந்து அவருக்குப் பணி விடை செய்து கொண்டிருக்கும் பாக்கியத்தைப் பெற்றார். இந்த சந்தர்ப்பத்தில் கச்சிப்பதியிலுள்ள தாசிக்கிழவி யொருத்தி ஆழ்வார் இருந்த இடத்திற்குத் தினந்தோறும் வந்து, 'கடைத்தலை சீக்கப் பெற்றால் கடுவினை களையலாமே' என்கிறபடி, அந்த இடத்தைச் சீத்தல், மெழுகல், கோலமிடல் முதலியவற்றால் அலங்காரஞ் செய்யுங் கைங்கரியத்தை மேற்கொண்டிருந்தாள். ஒருநாள் ஆழ்வார் அவளைக் கடாக்ஷித்து, "நீ இக்கைங்கரியஞ் செய்வதால் அடைய விரும்பும் பலன் என்ன?'' என்று கேட்டார். அதற்கந்தக் கிழவி. "சுவாமி! நான் விருத்தாப்பியத்தால் மிகவும் கஷ்டப்படுகிறேன். ஆதலால் யௌவனத்தை அபேக்ஷிக்கிறேன் " என்றாள். ஆழ்வார் அவளிஷ்டப்படி அவளுக்கு யௌவன பருவங் கைகூட அருள் புரிந்தார்.

 

இந்த அதிசயத்தைத் தாசியால் கேள்வியுற்ற பல்லவராயன் என்னும் அவ்வூர்க்கரசன், தானும் யௌவன திசையையடைய எண்ணங் கொண்டு, பிரதிதினமும் உபாதானார்த்தமாகத் தனது இல்லத்திற்கு வரும் ஆழ்வாருடைசிஷ்யரான கணிகண்ணரை யழைத்து, " உமது ஆசாரியரை நான் சேவிக்கக்காதலுற்றிருக்கிறேன். அவரை இங்கு அழைத்து வரவேண்டும்'' என்றான். ''நமதாசாரியர் ஒருவரகத்துக்கும் எழுந்தருளாரே! அரசராயிருப்பினும் கணிசித்துப் பாராரே! 'துறவிக்கு வேந்தன் துரும்பு' என்பதை நீர் கேட்டதில்லையா?'' என்றார் கணிகண்ணர். அதன்மேல் வேந்தன், கணிகண்ணரை நோக்கி, " நீரேனும் நம்மீது ஒரு கவிபாட வேண்டும் " என்றான். அதற்கவர்,'' நாக்கொண்டு மானிடம் பாடேன்; வாய்க் கொண்டு மானிடம் பாட வந்த கவியேனல்லேன் " என்றார். அதன்மேலும் அரசன் அவரை நிர்ப்பந்திக்க, அவர், ''ஆடவர்க ளெங்ங னகல்வா ரருள் சுரந்து, பாடகமு மூரகமும் பாம்பணையும் - நீடியமால், நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ, மன்றார் பொழிற்கச்சி மாண்பு " என்றார். அரசன் கோபங்கொண்டு, " நம்மைப் பாடும்படி கேட்டால் நீர் நமது ஊரையும் தெய்வத்தையும் பாடினீர். ஆகையால் இந்த க்ஷணமே நீர் நமது ராஜ்யத்தினின்றும் போய்விட வேண்டும்'' என்று கட்டளை யிட்டான்.

கணிகண்ணர் இதனைத் தமது ஆசாரியருக் கறிவித்து, அடியேனுக்கு விடைதந்தருள வேண்டும்'' என்று பிரார்த்தித்தார். ஆழ்வார், " நீர் போம் போது நாமும் இங்கிரோம், எம்பெருமானும் இங்குக் கண் வளர்ந்தருளான் "என்று சொல்லி, பகவானுடைய சந்நிதானஞ் சென்று,


 "கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
 மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
 செந்நாப் புலவனியான் செல்கின்றேன் நீயுமுன்றன்
 பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்''


 என்று விண்ணப்பித்தார்.


ஆழ்வார் சொன்ன வண்ணமே பகவான் பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு பின்தொடர ஆழ்வாரும் கணிகண்ணரும் ஊரை விட்டுப் புறப்பட்டனர்; இவர்களுடன் அவ்வூரிலுள்ள சகல தேவதைகளும் புறப்பட்டு விட்டன. அந்த நகரம் பொலிவிழந்து இருளடைந்தது; அரசனும் மந்திரியுமிவ்வற்புதத்தைக் கண்டு, பயங்கொண்டு ஓடோடி வந்து, 'ஓரிரவிருக்கை' என்னும் கிராமத்தில் கணிகண்ணரின் திருவடியில் வீழ்ந்து தங்கள் குற்றத்தை க்ஷமிக்கும்படி அவரை வேண்டிக் கொண்டனர்; கணிகண்ணர் அவர்கள் பால் மனமிரங்கி முன்போலெழுந்தருள ஆழ்வாரை வேண்ட, ஆழ்வாரும் பகவானை வேண்ட, யாவரும் முன்போலவே திருவெஃகாவிற்குடி புகுந்தருளினர். இவர்கள் ஒரு இராத்திரி தங்கிய கிராமம், 'ஓரிரவிருக்கை' என்னும் பேர்பெற்று இன்றும் அப்பேருடன் விளங்கிவருகின்றது. அனந்தரம், ஆழ்வார் திருக்குடந்தைக்குப் புறப்பட, வழியில் பெரும்புலியூர் என்னும் கிராமத்தில், ஒரு வீதியில், ஓர் திண்ணை மீது சிறிது நேரம்ஆயாசந் தீர உட்கார்ந்தார். அத்திண்ணையில் சில பிராமணர் வேதாத்யயனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவரைக் கண்டதும், சூத்திர ரென்றெண்ணி, அத்யயனஞ் செய்வதை நிறுத்தினர். இவர் உடனே அதை விட்டுப் புறப்பட்டார். ஆழ்வார் புறப்பட்டதும் பிராமணர் அத்யயனத்தை ஆரம்பிக்க முயன்றனர்; ஆனால் அவர்களுக்கு விட்ட இடம் ஞாபகத்திற்கு வராமல் சஞ்சலப்படலானார்கள். ஆழ்வாரிதைக் கண்டு தரையிற் கிடந்த ஓர் கருப்பு நெல்லை எடுத்து நகத்தாற் கீறிக் காட்டினார். அவர்கள் அதனால், "கிருஷ்ணாநாம் வ்ரீஹீணாம் நகநிர்பிந்தம்' என்ற விட்ட இடங் கண்டு அத்யயனஞ் செய்து ஆழ்வாரை மகானென்றறிந்து, தங்கள் குற்றத்தைப் பொறுத்தருளக் கேட்டுக் கொண்டார்கள். அந்தக் கிராமத்தில் ஆழ்வார் சிலநாள்கள் வீதிதோறுஞ் சென்று உபாதானம் எடுத்துக் கொண்டிருந்தார். அக்காலத்தில் அவ்வூரில் கோயில் கொண்டுள்ள பகவான் ஆழ்வார் நடையாடும் பக்கமெல்லாம் முகங்காட்டிக் கொண்டிருந்தார்.

 

இதனைக் கண்ணுற்ற பெரும்புலியூரடிகள் அச்சமயம் தாம் செய்யும் யாகத்திற்கு ஆழ்வாரை யழைத்து வந்து தலைவராக்கினார். அது பொறாத சில பிராமணர் ஆழ்வாரைக் குறை கூற, ஆழ்வார் தமது இருதயத்துள்ள பகவானை நோக்கி,


 "அக்கரங்க ளக்கரங்க ளென்றுமாவ தென்கொலோ
 இக்குறும்பை நீக்கியென்னை யீசனாக்க வல்லையேல்
 சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட
 உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே''


என்று பாடி, அப்பகவானை யாவருக்கும் பிரத்தியட்சமாக்கி அசடர்களின் வாயை அடக்கியருளினார்.

 

பின்னர் ஆழ்வார் திருக்குடந்தைக் கெழுந்தருளி ஆராவமுதப் பெருமானைச் சேவித்து, அதன்பின் தாம் செய்தருளிய கிரந்தங்களை யெல்லாம் காவிரி நதியின் பிரவாகத்திலே விட்டு நிற்க, அவற்றில் திருச்சந்த விருத்தமும், நான் முகன் திருவந்தாதியும் எதிர்த்துவர, அவற்றை எடுத்துக் கொண்டு, மறுபடியும் ஆராவமுதனை வணங்கி, " காவிரிக்கரைக் குடந்தையிற், கிடந்தவாறெழுந்திருந்து பேசு....'' என்று விண்ணப்பிக்க, ஆராவமுதன் தன் திருமுடியை நிமிர்த்தி யெழுந்திருக்கப் போகையில், அந்த சௌலப்பியத்தைக் கண்டு, " வாழி கேசனே " என்று மங்களாசாசனஞ் செய்தார். ஆயினும் ஆராவமுதப் பெருமான் ஆழ்வாருக்கு உத்தான சயனங் கொண்டு சேவை சாதிக்க, அந்த திவ்யமங்கள விக்கிரகத்தையே தியானம் பண்ணிக் கொண்டு யோகத்தில் இரண்டாயிரத்து முந்நூறு வருஷம் அங்கெழுந்தருளியிருந்து, இவ்வாறு திருமேனியுடனே அன்னாகார மின்றிப் பல மூலங்களில் சிறிது அமுது செய்தருளிக் கொண்டு விஷ்ணுதரிசன ஸ்தாபனாசார்யராய் 3,700 இந்த உலகிலிருந்து யாவரையும் வாழ்வித்தருளினார்.

 

சுபம்; சுபம்.


 வித்வான். ம. இராஜகோபால பிள்ளை

கோமளேஸ்வரன் பேட்டை.

 

ஆனந்த போதினி – 1928 ௵, ஆகஸ்டு ௴

 

 

No comments:

Post a Comment