Wednesday, September 2, 2020

 

திருமலைக் குமார சுவாமி

(க. சிதம்பர நடராஜசுந்தரன்)

 

தென்காசித் தாலுகாவில் உள்ள திருமலைக்குமாரர் கோவில் பிரசித்தி பெற்ற தலம், அது இயற்கை வளம் செழித்த இடத்தில் அமைந்துள்ளது. அந்த முருகன் (குமாரர்) விஷயமாக *திருமலை முருகன் பள்ளு' என்ற ஒரு நூலும் வெளியாகி இருக்கிறது. அந்தக் கோவிலைப் பற்றிய சில விவரங்களைக் கீழே காணலாம்:

 

மக்கள் உயிர் வாழ்வதற்குப் பல சாதனங்கள் உள. அதனுள் தெய்வ வழிபாடும் ஒன்று. அதிலும் மிக்க உயர்வாக உலக மக்களில் பெரும்பாலார் கருதுவது முருகனையே என்னலாம். “மூன்னோர் அருளிய நூல்களைக் கொண்டு முன்னவனை வழிபடுவது முறை" எனக் கூறுவர் பெரியோர். “நூலால் நன்றாக நினைமின்கள்'' என்று அப்பர் சுவாமிகள் அருளியுள்ளார்கள். அதற்கிணங்க இத்தலம் அமைந்துள்ளது.


கண்டதும் கேட்டதும்

 

இத்தலம் பாண்டி நாட்டில் திருநெல்வேலி ஜில்லா, தென்காசித் தாலுக்காவில் செங்கோட்டை புகைவண்டி நிலையத்திற்கு வட மேற்கில் எழுமைல் தூரத்தில் திருமலை என்னும் சிறுமலையில் உள்ளது. இதனைச் சிறிய குன்று என்றும் சொல்லலாம்.
குன்றின் மீது குன்றா விளக்கெனக் குமாரப்பெருமான் கோயில் கொண்டுள்ளார்.

 

இக்குன்றின் உயரம் சுமார் 400 அடிகள் என்று மதிப்பிடலாம். அடிவாரத்திலிருந்து உச்சி வரையில் 544 படிகள் இருக்கின்றன. மலையின் சுற்றுப்பிரகாரம் சுமார் 2 மைல் எனக் கணக்கிடுகின்றனர் அங்குள்ளோர். செங்கோட்டையிலிருந்து பண்பொழி வழியாக இம்மலையை அடையலாம். ரஸ்தாக்கள் சுத்தமாக அமைக்கப் பட்டிருக்கின்றன. தரிசிக்க வருபவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவு முதலியவற்றைச் செங்கோட்டையிலிருந்தாவது, தென்காசியிலிருந்தாவது கொண்டுவந்தே தீரவேண்டும். விசேஷ காலங்களைத் தவிர மற்றக் காலங்களில் அடிவாரத்தில் ஒன்றுமே கிடைக்காது.

 

மலையின் அடி வாரத்தில் வல்லபை கணபதி கோவில் உள்ளது. மலையின் இடை வெளியில் நந்தகோபாலர் மண்டபம் உளளது. இங்கே இடும்பன் சந்நிதியும் உள்ளது. மலையின் மேல், உச்சிப்பிள்ளையார் கோவிலும் இருக்கிறது. அங்கு சென்று தரிசிப்பவர்களும் உண்டு. அங்கு செல்வதற்காக 16 படிகளும் உண்டு. அதனை வெகு சிறப்பாக அங்கு உள்ளவர்கள் சொல்லுகிறார்கள். பக்கத்தில் தேவஸ்தான விடுதி உள்ளது. அதனை அடுத்து ஒரு சுனையும் உள்ளது. மேற்புறம் சப்த கன்னிகைகளின் சிலைகளும்
உள்ளன. பக்கத்தில் பசு மடம் உள்ளது. அங்கு உள்ள பசுக்களின் பால்தான் அபிஷேகத்திற்கு அனுப்பப்படுகிறது. மலையின் நடுவில் புளியமரம் ஒன்று உள்ளது. அம்மரம் அத்தல விருக்ஷமாக அமைந்துள்ளது. அதன் அடியில் வேலும் மயிலும் கொண்ட கற்சிலை இருக்கிறது. அதுவே இத்தலத்தில் ஆதி சந்நிதி எனச் சொல்லுகிறார்கள்.

மலைமேல் உள்ள குமார சுவாமி கோவில் தெற்கு நோக்கியும், முருகன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. உள்ளே ஒரு பிரகாரமும், வெளியே ஒரு பிரகாரமும் அமைந்துள்ளன. வாயிலை அடுத்து வசந்த மண்டபமும் வெகு அழகாக அமைந்துள்ளது. இதனையே சண்முக விலாசம் எனக் கூறுகிறார்கள். அம்மண்டபச் சுவர்களில் குமார சுவாமியைப் பற்றிய துதிப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. மூல மூர்த்தியாகிய குமார சுவாமியின் திருவுருவம் கண்டவர் மனதைக் கவரச் செய்கின்றது. இவ்விக்கிரகம் "கோட்டைத் திரடு" என்ற இடத்திலிருந்து கொண்டு வரப் பட்டதாகக் கூறப்படுகிறது.

 

இந்த ஆலயத்தின் மூலமூர்த்திக்குத் திருமலைக் குமார சுவாமி, திருமலை ஆண்டவர், திருமலை ஆண்டி, திருமலை வடிவேலர், திருமலைக் குருபரன், திருமலைப் பெருமாள், திருமலை நாயகன், திருமலைவேலன் எனப் பல பெயர்கள் வழங்குவதாகச் சொல்லுகிறார்கள். அத் தல விநாயகர் அனுக்கைப் பிள்ளையாராம்

 

இங்கு முன்னம் மூன்று தீர்த்தங்கள் இருந்ததாகச் சொல்லுகிறார்கள். அதனுள் தற்பொழு துள்ளது, பூஞ்சுனை என வழங்கும் தீர்த்தம் ஒன்றே தான் என்றும் சொல்லுகிறார்கள். அப்பெயர் வரக் காரணம் கேட்டதில் முற்காலத்தில் பெருமான் திருவருளால் தினந்தோறும் அச்சுனையில் ஒரு மலர் தோன்றியதாகவும் அதனைப் பெருமான் திருமுடியில் சூட்டி வந்ததாகவும் சொல்லுகிறார்கள். அச்சுனை என்றும் வற்றாதது; தூய நீரையுடையது; அதனுள் மூன்று கண்கள் இருக்கின்றன என்றும், அது இறைவனுக்குரிய மூன்று கண்களுக்கொப்பான தென்றும் சொல்லுகிறார்கள்.

 

இத்தலம் பார்ப்பதற்கு வெகு அழகாக அமைந்துள்ளது. குளிர்ச்சி பொருந்திய குன்று. அமைதி ஏற்படுவதற்கு ஏற்ற இடம்; தீராத நோய்கள் தீரும் இடம்; மலைமேல் முருகன் மருந்தாக விளங்குகின்றான். பக்திமேலீட்டால் முதிர்ந்த பக்தர்கள் தமது நாக்கைத் துண்டித்து வெற்றிலையில் வைத்துப் பிரார்த்தனை செய்வதாகவும், முருகன் திருவருளால் மீண்டும் அந்நாக்கு வளர்ந்து விடுவதாகவும் அங்குள்ளோர் சொல்லுகிறார்கள. இவ்வாலயத்தில் விபூதி பிரசாதம் பன்னீர் இலையில் வழங்கப்படுகின்றன. இவ் வாலயத்தில் எங்கு மில்லாத பெருங்காட்சி ஒன்று நிகழ்கின்றது. அதாவது பைரவ மூர்த்திக்குத் தேன்வடை மாலையாகச்சாத்தல். இரவுப் பூசைக்குப் பின் கோவிலின் சாவியை இம்மூர்த்தியிடம் ஒப்புக்கொடுப்பது இன்றும் நடந்து வருகின்றது.


ஆனந்த போதினி – 1944 ௵ - டிசம்பர் ௴

 

 

No comments:

Post a Comment