Wednesday, September 2, 2020

 

திருமண ஓலை

(ஆரியூர் -வ. பதுமநாப பிள்ளை.)

கீழ்வானத்தில் எழுந்த செங்க கதிரோன், தனது பொன்னிறக் கிரணங்களை எங்கணும் பரப்பி எல்லாப் பொருள்களின் மேலும் பொன் முலாம் பூச முயல்பவனைப்போல் விளங்குகிறான். பலவகைப்பட்ட நிறங்களை உடைய அழகிய பறவைகள் பலவும், தமது கூட்டைவிட்டுப் புறப்பட்டு சிறகடித்துக்கொண்டே உற்சாகமாகப் பறந்து திரிந்து கொண்டிருக்கின்றன. காலை இளவெயிலில் விரிந்து மலாந்த பலவகை மலர்களிலுள்ள செந்தேனை உன் - மதி மயங்கிய வண்ணம், பொன்னிறச் சிறகுகளை உடைய வண்டுகள் பலவகைப் பண்கள் பாடிப் பறந்து திரிந்து கொண்டிருக்கின்றன.
மலர்களின் மெல்லிதழ்களில் படிந்து நறுமணமளைந்த குளிர்ந்த பூந்தென்றம் காற்று, மேன்மையாக வீசிக்கொண்டிருக்கிறது. அழகிய பூங்கொடிகள் படர்ந்திருந்ததொரு சின்னஞ்சிறு சிங்காரக்குடிசையின் வாயிலிலே, பறவைகளின் இறகுகளாலும் மணிகளாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, இடையில் புலித்தோலும் முதுகில் புள்ளிமான் தோலும் அணிந்து கொண்டுள்ள சுமார் முப்பது வயது மதிப்புடைய வேடன் ஒருவன் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவனெ திரில், கம்பீரமான உடை உடுத்திய ராஜ சேவகன் ஒருவன் நின்றுகொண்டிருக்கிறான். அவ் வேட மன்னனின் அருந்தவப் புதல்வியின் பேரழகையும் சீரிய குணங்களையும் கேள்வியுற்ற ஒரு அரசனால், தனது பிள்ளைக்கு அப் பெண்ணைக் கொள்ளும் நோக்கத்துடன் எழுதிக் கொடுத்தனுப்பப்பட்ட திருமண ஓலையைக் கொண்டுவந்த தூதன் அவன். அவ் வேட மன்னனிடம் அத்திருமண ஓலையை அளித்த அத்தூதன், அரசன் சொல்லி யனுப்பிய செய்தியையும் கூறி நிற்கிறான். அச் செய்தியைக் கேட் இக் கலகலெவன்று சிரித்த அவ்வேட மன்னன், அரச தூதனை நோக்கிப் பின் வருமாறு கூறினான்: -

“நிகரற்ற வெற்றி வேந்தனாக தன்னை எண்ணிக்கொண்டு செருக்கு மிகுந்துள்ள அரசனது திருமுகத்தைக் கொண்டுவந்த தூதனே! அவனது திருமுகத்தை நீ இங்கு கொண்டுவந்து விட்டதனால், அவ்விடத்தில் அவனது முகமில்லாத வெறும் முண்டம் மட்டுந்தானே இருக்கக்கூடும்! அத்தகைய முண்டத்துக்கா, எங்களது குலக் கொழுந்தாகிய மெல்லிய பூங்கொம்பை யொத்த நல்லியற் செல்வியை மணம் செய்து கொடுக்கும்படி கேட்கத் துணிந்து வந்தாய்? கேவலம் அதிகாரத் திமிரினாலும் பணச் செருக்கினாலும்
படை வலியினாலும் அம்மன்னன் எங்களது குலக் கொழுந்தாகிய கோமளப் வீரம்
பெண்ணைக் கொண்டு போய் விடலாமென்று எண்ணிக்கொண்டு விட்டானா என்ன? பலவகைப்பட்ட ஆடம்பரங்களுடன் நாட்டில் வாழும் அம்மன்னவன், இயற்கைத்தேவி வழங்கியுள்ள இணையற்ற செல்வங்களுடன் காட்டில் வாழ்ந்து வரும் எங்களைக் கேவலமாக எண்ணிக்கொண்டு விட்டானா என்ன? எங்களது குலம் எத்தகைய குலமென்பதை அம் மன்னன் அறிந்திலன் போலும்! இராமபிரானது திருவுள்ளத்திற்குப் பெரிதும் உகந்த இன்னுயிர்த் தோழராகிய குகப்பெருமான், அவதரித்த திருக்குலம் எங்கள் குலமென்பதை அம்மன்னன் மறந்து விட்டானா என்ன? ''மன்னவர் நெஞ்சினில் வேடர் விடுஞ்சரம் வாயாவோ?'' என்று வீர முழக்கம் செய்து நின்ற குகப் பெருமானின் பொங்கும் இரத்தம், இன்னும் எங்களது உடலில் ஓடிக்கொண் டிருக்கிற தென்பதை உங்களது மன்னனுக்கு உணர்த்தக்கடவாய்! கேவலம் படைவலியின் துணை கொண்டோ பணப்பேயின் துணை கொண்டோ எங்களை இணங்கச் செய்து எங்களது செவியைக் கொண்டு போய் விடலாமென்னும் எண்ணம் உங்களது மன்னனுக்கு இருந்தால் அத்தகை எண்ணத்தை அவனது அகத்தினின்றும் அடியோடு அகற்றிக்கொண்டு விடும்படி தெரிவித்ததாகச் சொல்லு.

நீ கொண்டு வந்தது உண்மையில் மன்னனது திருமுகமேயானால், அந்த திருமுகத்தில் இருக்க வேண்டிய வாய் – செவி - கண் - மூக்கு முதலிய அங்கங்களெல்லாம் எங்கு சென்று ஒளிந்துகொண்டு விட்டன? அவ்வங்கங்கள் எதுவுமில்லாத இதனை, திருமுகமென்று சொல்ல நீ எப்படி மனம் துணிந்எங்களது குலத்தின் அரும் பெருஞ் செல்வமாக நாங்கள் பேரன்புடன் வளர்த்து வரும் பூங்கொம்பைப் போன்ற எங்களது செல்வியை, அம்மன்னன் அழகிய அங்கம் எதுவுமில்லாமல் மரத்தைத் தழுவிப் படர்ந்து வளரும் உயிரற்றதொரு கொம்பாக எண்ணிக்கொண்டு விட்டானா என்ன?
அவ்வாறு அரச மாத்தைத் தழுவிப் படர்ந்து வளர எங்கித் தவித்து நிற்கும் பூங்கொடி இவ்விடத்தில் எதுவுமில்லை யென்பதை அம் மன்னனிடம் போய்ச் சொல்லிவிடு.

அம் மன்னன் தனக்காகவன்றி, தான் பெற்று வளர்த்த தனது அருமைப் புதல்வனுக்காக எங்களது செல்வியைக் கேட்டனுப்பி யிருப்பினும், அதற்கும் இணங்க இப்பொழுது நாங்கள் சித்தமாக இல்லை. அரச குலத்திற் பிறந்து வளர்ந்த ஒரு இளவரசுக்கு, அவ்வினத்திற் பிறந்து வளர்ந்த ஒரு பெண் அகப்படாமற் போய்விட்டாளா என்ன? புதிதாக ஒரு பெண்ணைக் கொள்ள விரும்புவோர் தங்களது குலத்திலேயே அப் பெண்ணைத் தேடிக்கொள்ள வேண்மே யன்றி மற்றொரு குலத்துப் பெண்ணைத் தேடிக்கொள்ள விரும்புவது பொருந்தாது; முறைமையுமன்று. ஆதலின், உங்களது இளவரசுக்கு ஒரு பூங்கொம்பைத் தழுவியணைத்து முத்தமிட்டுக் கலந்து களிக்கவேண்டு மென்னும் மோகம் அடக்க முடியாதவாறு பெருகி விட்டிருந்தால், அவ்வினத்திற் பிறந்து வளர்ந்த ஆலமரத்தினிடம் சென்று நிலத்தில் ஊன்றி நிற்கும் அதன் விழுதாகிய கொம்பைக் கொடுக்கும்படி மணம் பேசி முடித்துக்கொள்ளுமாறு நான் சொன்னதாக உங்களது மன்னனிடம் போய்ச் சொல்லக்கடவாய்!

எங்களது குலக் கொழுந்தாக வளர்ந்து வரும் எங்களது செல்வியைத்
தழுவியணைத்து மகிழத் தகுதி உடையவர் எவரென்பதை நாங்கள் நன்கு அறிவோம். அவ்விஷயத்திலே, எங்களுக்கு வேறு எவரும் எவ்வித யோசனையும் கூற வேண்டுவதில்லை; அவ்வாறு கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் இப்பொழுது சித்தமாக இல்லை. எங்களது பூங்கொம்பைத் தாங்கித் தழுவி ஏற்று வாழத் தகுதி உடையவர், பொன் வண்டுகள் பல வகைப் பண்கள் பாடிப் பறந்து திரிந்து கொண்டிருப்பதும் நீல மயில்கள் தமது அழகிய தோகையை விரித்து ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்
பதும் கருமுகில்கள் தவழ்ந்து செல்வதும் மாங்குயில்கள் மதுரமாகப் பாடிக் கொண்டிருப்பதுமாகிய மனோகரமான மலர்ச் சோலைபி னிடையிலே, அரவணைமேல் பள்ளி கொண்டு கிடக்கும் திருவரங்கப் பெருமான் ஒருவரே ஆவர். இரண்டாறுகளின் இடையிலே அரவணைமேல் சாய்ந்து கிடக்கும் ஒப்புயர் வற்ற மரகத மலையைத் தழுவி மகிழ்வதற்காகவே வளர்ந்தும் வரும் எங்களது குலக்கொழுந்தாகிய சுந்தரியிடம், பகைவர்களின் வருகையை எண்ணி எண்ணிப் பயந்து கொண்டிருக்கும் உங்களது மன்னன் மகன் மையல் மிகுந்து நிற்பதால் என்ன பயன்?

எங்களது பெண்ணை மணம் பேசுவதற்காக மன்னனால் அனுப்பப்பட்டு
வந்து நிற்கும் தூதனே! நீ கொண்டுவந்த ஓலையாவது மங்களகரமாக – தனது அழகு குலையாமல் இருக்கிறதா என்ன! இவ்வோலையிலே, என்னென்ன வெல்லாமோ கிறுக்கி யிருக்கிறதே! அடடா! இந்த ஓலையை மெல்ல மெல்ல செல்லரித்துத் தின்ன முயன்றிருப்பது போலல்லவா காணப்படுகிறது! செல்லரித்து விட்டதொரு ஓலை, எவ்விடத்திலேனும் செல்லுவதும்ண்டோ? செல்லவல்ல தல்லாததொரு ஓலையை மோகப் பெருக்கினால் மதி யிழந்த மன்னன் தான் கொடுத்தனுப்பி யிருந்தாலும், அதை என்னிடம்
கொண்டுவந்து கொடுக்க நீதான் எப்படி மனந் துணிந்துவிட்டாய்? செல்லரித்துச் செல்லாமற் போனதொரு ஓலையை, மண ஓலையாகக் கருதி ஏற்று மகிழக்கூடிய வவ்வளவு அறிவற்ற பேதைகளா நாங்கள்?

எங்களது அருந்தவச் செல்வி சிறு குடிலிற் பிறந்து வளர்ந்தவளே யெனினும், அதனாலேயே அவளது அறிவுங்கூட சிறுமை யடைந்து விட்டதா என்ன? எங்களது உடலில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் இன்னமும் வீர ரத்தம் ஓடிக்கொண்டிருப்பது வீணாய்ப் போய் விடுமா என்ன? வீரக் குலத்திற் பிறந் - வீரத் தாயின் பாலருந்தி - வீர விளையாட்டு களையே விளையாடி வீரக்குடிலில் வளர்ந்து வந்த வீரமங்கையாகிய எங்கள் செல்வியின் மனம், எவருக்குமே சற்றும் அஞ்சாதவனும் எவரையும் எளிதில் அடக்கி ஆள வல்லவனுமாகிய சீரிய வீரன் ஒருவனையே நாடி நிற்பது இயல்பேயன்றோ? ''அன்னம் ஊட்டிய தெய்வ மணிக்கையின் ஆணை காட்டிய அனலை விழுங்குவோம்!''- என்றவாறு, தான் காதலிக்கும் ஒருத்தியின் கையைப் பிடிக்கும் முன்பே, அவள் பொருட்டு எத்தகைய அபாயகரமான வீரச் செயலையும் செய்யப் பின் வாங்காத நெஞ்சத்திண்மை சீரிய வீரனேயன்றோ, உத்தம வீர மங்கையின்
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக்கூடிய சக்தி உடையவன்! அன்பின் மிகுதியினால் அஞ்சி ஒடுங்கி கின்ற நப்பின்னைப் பிராட்டியின் கண்கள் மகிழ்ச்சிப் பெருக்கினால் புத்தழகு
பெற்று மலர்ந்து விரிந்து வீர ஒளி வீசிக் கூரிய வேலிணையைப்போல் தன் மேல் பாய்ந்து வரக்கூடியவாறு, கொடிய எருதுகள் ஏழையும் செருக்கடக்கிச் சிரித்து நின்ற கண்ணபிரானிடமே எமது அருந்தவப் புதல்வியும் இன்று மனம் செலுத்தி நிற்கிறாள்.

அத்தகைய வீர நாயகனாகிய கண்ணபிரானே, 'கண்டவர் சிந்தை கவரும்' கட்டழகிற் சிறந்த திருவருவத்துடன் கூடியவனாய் திருவரங்கப்பெரு நகரில் இன்றும் நம்பெருமாளாகக் காட்சி யளித்து நிற்கிறான். வில்லி புத்தூர்ச் செல்வியாகிய ஆண்டாளையும் உறையூர்ச் செல்வியாகிய கமலவல்லியையும் கைப்பிடித்து மணந்து கொண்டு இன்றும் அம் மணவாளத் திருக்கோலத்துடனே அழகிய மணவாளப் பெருமாளாக அன்பர்களுக்கு சேவை சாதித்து நிற்கும் திருவரங்கச் செல்வனாரது திருவடிகளிலேயே, எங்களது செல்வி காதல் மிகுந்து கனிந்த சிந்தையளாய் நெஞ்சு கரைந்து உருகி நிற்கின்றாள். எல்லா உலகுகளிலுமுள்ள எல்லா வீரர்களுக்கும் தனிப்பெருந் தலைமை பூண்ட ஒப்புயர்வற்ற வீரர் குலத் தெய்வமாக விளங்கும் நம்பெருமாளது திருவடிகளை வருடி மகிழ ஆர்வம் மிகுந்து நிற்கும் எங்களது செல்வின் யை - அவ் வீரகாயகன் ஒருவனையே தனது மனக்கோயிலில் எழுந்தருள்வித்து இரவும் பகலும் இடையறாமல் பூசித்துவரும் எங்களது சுந்தரியை-என்றும் எதற்கும் எவருக்கும் அஞ்சாத ஒப்புயர்வற்ற வீரன் ஒருவனையே தனது துணைவனான ஏற்று மகிழவேண்டுமென்பதொன்றையே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு நிற்கும் எங்களது குலக்கொழுந்தை, சின்னஞ் சிறியதொரு அரசுக்கு உரிமை பூண்டு - அதையும் மற்ற மன்னர்கள் எப்பொழுது படையெடுத்து வந்து பிடுங்கிக்கொண்டு விடுவார்களோ என்று எப்பொழுதும் பயந்து கொண்டிருக்கும் குறுநில மன்னர்கள் இச்சைப்படுவது, அந்தணர்களால் மந்திர வேள்வியில் அமரர்களுக்காக அளிக்கப்படும் அவியுணவை எச்சிலிலை தின்று தெருவில் திரியும் ஈன நாய் விரும்புவதைப் போலாகு மல்லவா?

மதியற்ற மன்னனின் ஏவலைக் கேட்டு என் எதிரில் வந்து நிற்கும் பேதைத் தூதனே! எங்களது சிறு குடிசைக்குள் தங்கியிருக்கும் எங்களது குல விளக்காகிய செல்வியின் வடிவம் சிறிதேயாயினும், அக் குலவிளக்கிள் அழகொளியும் அறி வொளியும் குண ஒளியும் இச்சிறு குடிசிலில் மட்டும் கட்டுப்பட்டிராமல் காடு கடந்து நாடடைந்து பல விடங்களிலும் பெரிதும் பரவி விட்டிருக்கின்றன. அவ்வொளிகளினால் கவரப்பட்ட கருத்தினராகிய எண்ணிறந்த மன்னர்கள், தங்களது தோள் வலியினாலும் படைத் துணையினாலும் எங்களை எளிதில் வென்று எங்களது குடிசையில் ஒப்பற்ற அற்புதப் பேரொளி வீசி நிற்கும் அருள் விளக்கைக் கவர்ந்துகொண்டு போய் விடலாமென்னும்
எண்ணததுடன் இங்கு வந்து எவ்வளவு பாடு பட்டுப் போய் விட்டார்கள் தெரியுமோ? அவர்கள் இங்கு வந்து எத்தகைய கதிக்குள்ளாயின ரென்பதை நான் எனது வாயினால் கூற விரும்பவில்லை. இப்பொழுது உனது இரு கண்களும், உனக்கு இன்னும் சொந்தமாகவே இருக்கின்றன வல்லவா? அந்த இரு கண்களைக் கொண்டே, இக் குடிசையைச் சுற்றிலுமுள்ள எல்லார் குடி சைகளையும் நன்றாக உற்றுப் பார். உனது கண்களுக்குப் புலனாகும் காட்சிகளே, இங்கு வந்து எங்களை எதிர்த்து நிற்கத் துணிந்த மன்னர்கள் என்ன
கதியடைந்தன ரென்பதை நன்கு உணர்த்தக்கூடும்.

அதோ பார்! அந்த குடிசைகளின் வாசலில் வைத்து மூடப்பட்டிருப் எவை தெரியுமா? ஐயோ, பாவம்! அவைதான், தங்களது தோள் வலியையும் படைத்துணையையும் நம்பி வந்து எங்களை எதிர்த்து நிற்கத் துணிந்த மன்னர்கள் மிக மிக ஒய்யாரமாகப் பிடித்துக்கொண்டு வந்த அழகிய பூச் சக்கரக் குடைகள்! கொஞ்ச காலத்திற்கு முன்னர், அழகிய சிங்காசனத்தின்மீது அம் மன்னர்களின் தலைமேல் கம்பீரமாகச் சுழன்று கொண்டிருந்த அழகிய வேலைப்பாடுகள் அமைந்த விலையுயர்ந்த வெண்பட்டுக் குடைகள்,
இப்பொழுது எங்களால் எங்களது சிறு குடிசைகளின் குறுகிய வாயிலை மூடுவதற்கு உரிய சிறு படல்களாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. அதோ சிற்சில குடிசைகளின் வெளியிலே, பலவகைப்பட்ட அளவுடைய அழகிய மணி முடிகள் காண எப்படுகின்றனவல்லவா? அவை எங்களுக்கு எப்படிக் கிடைத்தன தெரியுமோ? விற்போரில் எங்களை எதிர்த்து நிற்கப் போதிய சக்தியின்றி - உயிரைக் காத்துக்கொள்ளும் ஆசை மிகுந்து - புறமுதுகிட்டு வந்த வழியே திரும்பி ஓடிப்போய்விட்ட மன்னர்கள், தாங்கள்
ஓடிய ஓட்டத்தின் அவசரத்தில் நிலத்தில் விழுந்துவிட்ட மணி முடிகளை எடுத்தணியவும் துணிவில்லாதவர்களாய் அவற்றை இங்கு விட்டு விட்டுப் போய் விட்டார்கள். பலவகைப்பட்ட சிறந்த மணிகள் இழைக்கப்பட்டு மிக அழகாக விளங்கும் அந்த மணி முடிகளைத் தான், நாங்கள் இப்பொழுது தினை முதலிய தானியங்களை அளப்பதற்கு உரிய படிகளாகவும் மரக்காலகளாகவும் பயன் படுத்திக்கொண்டு வருகிறோம். மன்னர்களின் தலையில் விளங்கிய மணி முடிகள், இப்பொழுது இங்கு மரக்கால்களாகவும் படிகளாகவும்
விளங்கும் விநோதக் காட்சியை உற்றுப்பார். அக் குடிசைகளின் மேல் வெள்ளை வெளேரென்று சில பொருள்கள் காணப்படுகின்றன வல்லவா? அவற்றை, நீ என்னவென்று நினைக்கிறாய்? எங்களை எதிர்த்து வந்த மன்னர்களுக்கு, சிற்சில சேவகர்கள் வெண்சாமரம் வீசிக்கொண்டு வந்தனர். எங்களது வில்லின் முன் எதிர்த்து நிற்க முடிய
உயாமல் அம்மனனர்கள் தமது உயிருக்குப் பயந்து ஓட்டமெடுக்கவே, அச் சேவகர்களும் தாங்கள் பிடித்திருந்த வெண்சாமரங்களை எங்களது குடிசைகளின் மேல் வீசி எறிந்து
விட்டு ஓடிப்போய் விட்டனர். அன்று முதல் இன்று வரையில், அச் சாமரங்கள் எங்களது குடிசைகளின் கூரைகளில் அப்படியே கிடக்கின்றன. அதோ அந்த வேலியைப் பார்! அந்த வேலி எவற்றினால் அமைக்கப்பட்டது, தெரியமோ? எங்களை எதிர்த்து நிற்கக் சக்தியற்று தோல்வியடைந்து திரும்பி ஓடிப்போய்விட்ட மன்னர்கள், கீழே போட்டுவிட்டுப் போய்விட்ட வில் - வாள். வேல் முதலிய ஆயுதங்களைச் சேகரித்து, அவற்றினாலேயே
நாங்கள் அந்த வேலியை அமைத்திருக்கிறோம்! நீ திரும்பிப் போய், உன்னைத் தூது விட்ட மன்னனிடம் இவற்றையெல்லாம் விவரமாகக் கூறு. எங்களது குலவிளக்காகிய செல்வத் திருமகள் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் ஒருவருக்கே உரிமை உடையவளாதலின், அவளை அடையும் ஆசையை வேறு எவர் கொள்வதிலும் எவ்வித பயனுமில்லை யென்பதை தெளிவாகத் தெரிவித்துவிடக் கடவாய்."

(இக் கட்டுரை, திவ்விய கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய திருவரங்கக் கலம்பகத்தி லிருப்பனவும்; நகைச்சுவையும் வீரச் சுவையும் கலந் தனவு'; 'மரம்' என்னும் உறுப்பைச் சேர்ந்தனவு மாகிய “கொற்ற வன்றன் திருமுகம்"; ''பேச வந்து தூத!" - எனும் இரு சீரிய கவிகளின் கருத்தை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்டதாகும்.)

ஆனந்த போதினி – 1937 ௵ - மார்ச்சு ௴

 

No comments:

Post a Comment