Wednesday, September 2, 2020

 

திருமங்கை ஆழ்வார் சரித்திரம்

 

ஸ்ரீய: பதியான சர்வேஸ்வரனுடைய திவ்ய கிருபையால் உலகிருளை நீக்கி, அஞ்ஞான வயத்தராய்ச் சம்சாரமென்ற சாகரத்திலழுந்திக் கடைத்தேற வழியறியாது, 'உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் திடம்பட ஈசனைத்தேடு தற்பொருட் டென்பதை யோராது, ஆற்றைக் கடந்து கரையேறுதற் பொருட்டு அளிக்கப் பெற்ற புணையிருக்க, அவ்வாறு செய்யாது வெள்ளப் பெருக்கின் வழியே சென்று கடலைச் சேர்வார் போல உழலும் மாந்தரை உஜ்ஜீவிக்கும் பொருட்டுத் திருவவதாரம் செய்தவர்கள் ஆழ்வார்கள் பதினொருவரும் ஆண்டாளுமாகப் பன்னிருவராவர்.


 "பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
 ஐய னருள்மாறன் சேரலர்கோன் - றுய்யப்பட்ட
 நாதனன்பர் தாட்டூளி நற்பாண னற்கலிய
 னீதிவர் தோற்றத்தடைவா மிங்கு "
                     (உபதேசரத்னமாலை)


என்னும் முறைமையோடு, நம்மாழ்வாரது சீடரான மதுரகவியாழ்வாரையும், பெரியாழ்வாருக்கு, ஜனகனுக்குச் சீதைபோல அயோனிஜையாயவதரித்த, ஸ்ரீ ஆண்டாளையும் சேர்த்துப் பன்னிருவராகக் கூறுவது மரபு.


 பெரிய புராணத்திற்குக் கண்ணப்ப நாயனாரே போல, ஆழ்வார்கள்
 வைபவத்துள் திருமங்கை மன்னன் விளங்குகின்றார்.


 * நெஞ்சுக் கிருள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
 நஞ்சுக்கு நல்ல வமுதம் தமிழநன் னூல் துறைகள்
 அஞ்சுக் கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்
 பஞ்சுக் கனலின் பொறிபா காலன் பனுவல்களே.

 

* ஆழ்வான் அருளிச்செய்த தனியன்.

 

என்று ஆழ்வான் அருளிச் செய்ததற்கேற்ப, நாலாயிர திவ்ய ப்ரபந்தத்துள் பொருட்பொலிவும், சொல் நயங்களும் சிறந்து விளங்கும் உருக்கமான திருப்பாசுரங்கள் ஆயிரத்திற்கதிகமாக அருளிச் செய்துள்ள திருமங்கை மன்னன், கங்கையிற் புனிதமாய காவிரியாறு புனல் நிறைந்து பாயும் நீர்வள நிலவளங்களால் மிக்க சோழமண்டலத்தில் திருமங்கை நாட்டில், திருவாலி திருநகரி யென்னும் திவ்ய தேசத்திற்கு அருகிலுள்ள திருக்குறையலூரில் கள்ளர் மரபிலவதரித்தவர். இவரது தந்தை சோழ மன்னரின் சேனைத் தலைவர். ஆழ்வார் அவதரித்த காலம் கலியுகத்தில் முந்நூற்றுத் தொண் ணூற்றெட்டாவதான நள வருஷம் பூர்ணிமை திதி கூடிய வியாழக்கிழமையில் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரம் என்பர். இவர் விஷ்ணுவின் சார்ங்கமென்னும் கார்முகத்தின் அம்சமாய் அவதரித்தவர். இவர் மூலமூர்த்தி போல் நீல நிறமுடையராயிருந்தமை பற்றிப் பெற்றோர் இவருக்கு நீலனென்று பெயரிட்டனர்.

 

ஆழ்வார் இளமையிலேயே தமது குடிக்கேற்ப, வில் வாள் வித்தைகளில் வல்லவராகிச் சோழமன்னனை யடுத்துச் சேனைத் தலைவராகி, அவன் எவல்வழி பகைவர்களைச் செருக்கடக்கி, போர் முகத்தில் வந்தெதிரத்தவர்களெல்லோரும் புறங்காட்டியோடு மாறு வெருட்டி அப்பற்றலர் தமக்குக் காலனாய் விளங்கினமையின் பரகாலன் என்ற பட்டப் பெயரும் பெற்றார். சென்ற போர்களிலெல்லாம் வெற்றிவாகை சூடிவரும் இவரது ஆற்றலுக் குகந்த அபயராசன் இவரைத் திருமங்கை நாட்டிற்குச் சிற்றரசனாக்கினான். பரகாலரும் குறுநிலமன்னராய்ச் செங்கோலோச்சிப் புகழேந்தி இளமங்கையர் இன்னிசை பாடக் கேட்டு இன்புறுவதும், கூத்துக்களில் விருப்புக் கொள்வதுமாயிருந்தார்.

     

இங்ஙனமாக, அந்நாட்டில் திருவெள்ளக்குளம் என்ற திவ்ய தேசத்தில் உம்பர் நாட்டிலுமில்லாததென்று சிறப்பித்துக் கூறத்தக்க ஓர் தாமரைப் பொய்கையில், தேவமாதர்கள் பலர் உவந்து வந்து நீராடிச் செல்லு மளவில், அவர்களுள் ஒருத்தியான திருமாமகள் என்பாள் மட்டும் சுயேச்சையாய் தெய்வ உருவம் நீங்கி மானிட வடிவங்கொண்டு குமுதமலரொன்றைப் பறித்துக் கொண்டிருந்தாள். அவ்வமயம் அப்பொய்கைக்கு அனுஷ்டானஞ் செய்ய வந்த வைணவ வைத்தியரொருவர் அவளைக் கண்டு,'நீ யார்?' என்று வினவ, அந்த நங்கை தன்னுடைய வரலாற்றைக் கூறித் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்ட, மகப்பேறில்லா அவருமிசைந்து அப்பெண்மணியைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று, குமுதமலர் கொய்த வண்ணமருந்த சமயத்தில் அவளைத் தாம் கண்டமையால் குமுதவல்லி யென்று அவளுக்குப் பெயரிட்டுச் சீலமுடன் வளர்த்து வந்தார். குமுதவல்லி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து விவாகத்துக் குரிய நிலையை எய்தினள். அதுகண்டு அவள் தந்தை இவ்வுத்தம நங்கைக்கு ஏற்ற கணவன் கிடைப்பானோ? "என்ற கவலை மிக்குற்றிருந்தார்.

 

இப்படியிருக்கும் போது, குமுதவல்லியின் அழகைக் கண்டோர் அதைவருணிக்கக் கேட்டார் பரகாலர்; விட்டார் அரசகாரியங்களனைத்தையும்; அவருடைய உடலைக் காட்டிலும் மனம் மாருத வேகமாய் எழுந்தது. விரைந்து திருநாங்கூரென்னும் திருப்பதியைச் சார்ந்த திருவெள்ளக்குளத்தை எம்பெருமான் அருள் வெள்ளத்தால் அரிதிலடைந்து அவ்வைத்தியர் வீட்டையடைந்தார். அடைந்தவர் அங்குள்ள வைத்தியரோடு பேசிக் கொண்டிருக்கையில் குமுதவல்லி கண்ணெதிரிற்படக் கண்டதும் தமது மனமாகிய குமுதத்தில் காதலாகிய தேன் அரும்பப் பெற்றவராய், அவளைத் தமக்கு மணம்பு ரிவிக்குமாறு வைத்தியரை வேண்ட, அவரும் இசைந்தார். உடனே, பரகாலர்தாம் கொண்டு வந்த ஆடையாபரணங்களை அவண் பரப்பி ஆவலுடனிருந்தார். அப்பொழுது குமுதவல்லி 'தப்தசக்கராங்கம் திவ்யோர்த்துவ புண்டரம் முதலிய பஞ்ச ஸம்ஸ்காரமுமுடைய ஓர் வைணவருக்கே யன்றி மற்றொருவர்க்கு நான் உரியவள் ஆகமாட்டேன்' என்றுரைத்தாள். ஆலிநாடர் அவற்றை இதன் முன்பு அறியாதவராயினும், சம்ஸ்கார ஆர்வத்தை அடைந்தவரல்லாதவரானாலும் குமுதவல்லியை மணக்க வேண்டுமென்ற காதல் மிகுதியால், கணமுந் தாழ்க்காமல் திருநறையூர் என்னும் திருப்பதியை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நம்பி என்னுந் திருநாமங் கொண்ட பெருமாள் முன்னே நின்று தமது குறை கூறி இரங்கிப் பிரார்த்திக்க அப்பெருமானால் சங்க சக்ர முத்திரைகள் பொறிக்கப் பெற்று, துவாதச ஊர்த்துவ புண்டரங்களணிந்து ஓடோடி திருவெள்ளக்குளத்தை யடைந்தார்.

 

கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் எட்டுமைல் தூரத்திலுள்ளது.

 

ஆலிநாடர் வந்தமை யறிந்து குமுதவல்லியார், அவ்வளவோடு நில்லாமல் அவரை நோக்கி "நீர் தினந்தோறும் ஆயிரத்தெட்டு பாகவதோத்தமர்களுக்குத் திருவமுது செய்வித்து, அவர்கள் போக்யமாக உண்ட பின்னர், அவர்களுடைய திருவடிகளைச் சோதித்து, அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தையும், அவர்கள் திருவமுது செய்தருளிய உச்சிட்டத்தையும் உண்ணவேண்டும். இங்ஙனம் ஓராண்டளவும் செய்து வர வேண்டும். இல்லையேல் உம்மை நான் மணக்க இசையேன்" என்றுரைத்தனள். ஆலிநாடர் காதல் மிகுதியால் இவை மட்டுமல்ல, இன்னும் எவ்வளவு கூறினும் செய்து விடக் கூடியவராயிருந்தார்; நங்கையின் விருப்பப்படியே செய்வதாக சூளுரை செய்தார். பின்னர் திருமணம் நடந்தேறியது.

 

அப்பால், பரகாலர் தாம் வாக்களித்தவாறே, உத்தம நங்கையான குமுதவல்லி உவக்க, நாளும் ஈஸ்வராராதனத்தை விடச் சிறந்த பாகவதாராதனஞ் செய்து உள்ளங்களித்திருந்தார். குமுதவல்லியை மனைவியாக அடையப்பெற்ற பெரும் பாக்கியத்தாலன்றோ, கள்ளர் குலத்திற்றோன்றி மெய்ஞ்ஞானமற்று உழன்றலைந்த பரகாலர் உத்தமமான சத்கர்மாவிலீடுபட்டு, அனுதினமும் 'நாராயணாவென்னும் நாமம்' ஆகிற திருமந்திரத்தை செவிக்குணவாகக் கொண்டு அந்தப்பழக்கத்தின் முதிர்ச்சியால் அடைதற்கரிய பெரும் பேற்றையடைந்தார்! குமுதவல்லியன்றோ பரகாலருக்கு அமுதமாயினாள்; அமுதத்தினுமினிய ஆழ்வார் என்னும் பதத்தை அவர் அடையக் காரணமாய் நின்றாள். இத்தகைய சிறந்த ஸ்திரீரத்னங்களன்றோ நம் நாட்டிற் கணிகலனாய் விளங்குவோர். ஏனையோர் பிணியை வளர்க்கும் பேய்களுக்கன்றோ ஒப்பாவர். நிற்க,

 

பாகவதோத்தமர்களுடைய பகவந் நாம ஸ்மரணையைக் கேட்ட பரகாலர் தம்மை மறந்தார். தாமொரு குறுநில மன்னரென்ற நினைவும், அபயகுல மன்னருக்குப் பகுதி செலுத்த வேண்டியவர் என்னும் உணர்ச்சியும் அவருக்கு இலவாயின. ஸ்ரீராமதாஸர் எங்ஙனம் நவாபுக்குச் செலுத்த வேண்டிய பகுதிப்பணத்தைக் கொண்டு பத்ராசல ஸ்ரீராமனுக்குக் கோயில் ஜீரணோத்தாரணத் திருப்பணியைச் செய்து முடித்தாரோ, அதுபோல ஆலிநாடர் பாகவதாராதனத்தில், சோழ மன்னருக்குச் செலுத்த வேண்டிய பகுதிப்பொருளைத் தாராளமாகச் செலவிட்டு ஆயிரத்தெட்டென்னும் கணக்கின்றி, வந்த பக்தர்கட்கெல்லாம் உணவளித்து வந்தார். திருக்குறையலூரில் எழுந்த பகவந்நாமஸ்மரணப் பேரொலி விண்ணளாவியது. எதற்கும் பழக்கமும் சகவாஸமுமன்றோ காரணமாகின்றது. 'சத்சங்கத்வே நிர்ச்சங்கத்வம்' என்றபடி மெய்யடியார்களுக்குத் திருவமுதளித்தமையால் மனபரிபக்குவமும், அவர்களுடைய கூட்டுறவால் நற்செய்கையும், அவர்களது பக்தியால் தீய எண்ணங்களின் ஒழிவும், அன்னோர் உச்சிஷ்டத்தையும், திருவடி கழுவிய நீரையும் உட்கொண்டமையால் அகங்கார மமகார நிவர்த்தியும் ஏற்பட, அடியேன்! எளியேன்' என்னும் தன்மையும் ஆலிநாடரின் மோக்ஷ சாதனங்களாயின். பரகாலர் பழைய குணங்கள் மாறி, எம்பெருமானுடைய கடாக்ஷ வீக்ஷண்யத்திற்குப் பாத்திரராகும் பரிபக்குவத்தை அடைந்திருந்தார்.

 

ஆலிநாடர், குமுதவல்லி மகிழ, பரமோத்தமமான பாகவதாராதனத்தைத் தினந்தினம் செய்தவண்ணம் சோழ மன்னருக்குத் தாம் செலுத்தற்குரிய திறைப் பொருளையும் அதன் பொருட்டே செலவிட்டு வருவாராயினர். ஒற்றர் வாயிலான் உற்ற துணர்ந்த அபயன் சினந்தெழுந்து, ஆலிநாடரிடம் கப்பப் பொருளைத் தப்பாமல் எவ்வாற்றானும் வாங்கி வருமாறு ஏவலாளரை விடுத்தனன். வந்த ஏவலாளர் பன்முறை காத்திருந்தும் ஆலிநாடர் அவர்கட்கு "இன்று, நாளை, காலை, நண்பகல்'' என்று தவணைகள் கூறி, அங்ஙனம் குறித்த காலத்திலுங்கூடக் கொடாமல் காலம் நீட்டித்து வந்தார். அப்பால், அமைச்சர் முதலானோர் ஆலிநாடரிடம் பகுதிப் பொருளை உடனே வாங்குமாறு ஏவலாளரை நிர்ப்பந்தம் செய்ய அவர்கள் சிறிது கடுமையாகவே கேட்கலாயினர். ஆலிநாடர் ஆர்த்தெழுந்தார்; வந்த ஏவலாளரை எதிர்த்து வெருட்டி யடித்தார். அவர்கள் நேராகச் சென்று அரசன் முன்னிலையில் நிகழ்ந்த வனைத்தையும் கூறினர். சோழன் சினமிக்கவனாய்த் தனது படைத்தலைவனை யழைத்து, பரகாலரை கணப்போழ்தில் தம்முன் கொண்டு வந்து நிறுத்துமாறு உத்தர வளித்தான். தானைத் தலைவன் தாழாது ஏகி, பரகாலரைச் சூழ்ந்து பிடிக்கத் தொடங்க, அவர் ஆடன்மா என்னும் தமது வாம்பரிமேலேறி, அநீகத்தோடு அவன் முன் நின்று போராடி, அவனைப் புறங்காட்டியோடச் செய்தார். இஃதறிந்த காவலன் கோபித்து, இரையை வேட்ட பெரும் புலிபோல் சீறிப் பகைவர் மேல் வந்தான். பரகாலர் தமது படைவலிமையால், சென்னி மன்னனின் முன்னிட்ட சேனையைத் தோற்கடித்துப் போர் புரிந்தார். அரசன் தோல்வியடையும் தருவாயில் பரகாலர் தாம் அருள்மாரி யாதலால், மன்னனைக் கொல்லுதல் மாண்பாகா தெனக்கருதி, சிறிது பொழுது சண்டையை நிறுத்தினார்.

 

சூழ்ச்சியிலும், ராஜ தந்திரத்திலும் மிகுந்த சோழ வேந்தன், பரகாலரை நயத்தால் வென்றிடக் கருதி, இன் மொழி பேசிய வண்ணம் அருகே வந்து உறவாடி 'இயன்ற விரைவில் நீர் கப்பப் பொருளைச் செலுத்தி விடக்கடவீர்' என்றுரைத்து அவரைத் தந்திரமாய் மந்திரி வசமாக்கி விட்டுத் தனது தலைநகருக்கேகினன். அமைச்சர் மெல்ல ஆலிநாடரைப் பிடித்து, ஓர் கோயிலில் அவரை மூன்று நாளளவும் சிறைப்படுத்தி வைத்தான். பரகாலர் அன்னாகாரமின்றி அக்கோயிலிலேயே மூன்று நாள் பட்டினி கிடக்க, பாகவதாராதனத்தால் மகிழ்ந்த காஞ்சீபுரம் என்னுந் திருப்பதியின் கண்ணெழுந்தருளியுள்ள பேரருளாளப் பெருமாள் அவரது கனவிலே தோன்றி 'உமக்குவேண்டிய பொருளை அளிக்க உவந்தோம். வாரும்' என்று கடாக்ஷித்தருளினார். எம்மானது ஆணையை ஆலிநாடர் நம்பி ஆனந்தம் மிகுந்தெழ, அவணிருந்த அமாத்தியனை நோக்கி “திருக் காஞ்சிபுரத்திலே நிதியுள்ளது; அவ்விடம் என்னோடு வருவீராயின் தருவன் யான் திறைப் பொருள்'' என்றார். அமாத்தியன், இதனை அபயனுக்கு அறிவித்து அவனனுமதி பெற்று, தக்க படைவலிமையுடன் ஆலி காடரைத் தப்பித்தோடாவாறு காவல் செய்து அழைத்துக் கொண்டு காஞ்சீபுரஞ் சென்றான். பரகாலர் பலவிடங்களிலும் தேடிப் பணப்புதையலைக் காணாராகி 'பணமில்லாதவன் பிணமாத'லின் சோர்ந்து, மூர்ச்சித்து'' எம்பெருமானே! என்செய்வேன் அடியேன்'' என்றிரங்க, பக்தபராதீனகன வரதராஜன் மீண்டும் அவர் கனவிற்றோன்றி. முன்பு பிரமன் செய்த வேள்வியைத் தடுக்கத் திரை கொண்டெழுந்த சரஸ்வதி தேவியான வேகவதி நதிக்கரையில் நிதிக் குவியலிருந்த விடத்தைக் காண்பித்தருளினார். பரகாலர் பரிந்தேகிப் பணப் புதையலைக் கண்டெடுத்து, அரசருக்கு அளித்தற்குரிய பொருளைக் கொடுத்து எஞ்சியதைக் கொண்டு போய் பாகவதாராதனத்தை நடத்தி வந்தார். இங்ஙனமாக, பரகாலரிடமிருந்து பகுதிப் பொருளைப் பெற்றுச் சென்ற அமைச்சன் அதனை அபயன் முன்னிலையிற் குவித்து நிகழ்ந்தவற்றைக் கூறினன். அது கேட்ட சென்னி (சோழன்) அச்சமும் ஆச்சரியமு மடைந்து, பரகாலரை வரவழைத்து, தாம் அவரைப் பலவாறு துன்புறுத்தியதற்காக இரங்கி, பிழை பொருத்தருளுமாறு வேண்டி, 'நீண்டானே! கரியானே! நிமலா! வென்றாற்றினளாய் நின்று சோர்ந்த தீண்டாத கற்புடைய 'திரௌபதிக்கு எம்பெருமானருளால் சேலை வளர்ந்தது போல, ஆலிநாடருக்கு அமோகமாக கிடைத்த இப்பொருளைப் பொருட்சாலையில் சேர்த்து விடக் கூடாதென்று கருதி, பரகாலரை மூன்று நாட்களளவும் பட்டினியாக வைத்த தீவினை தீர்தற்பொருட்டு அப்பொருள் செலவாகுமளவும், பாகவதாராதனம் நடத்தி வந்தார்.

 

அப்பால் பரகாலர், எம்பெருமானளித்த நிதிக்குவியலில் அரசன் கைப்பற்றிச் செலவிட்டது போகத் தம்மிடம் இருந்த எஞ்சிய பொருளையும் தாமே பாகவதாராதனத்திற் செலவிட்டு, பிறகு கையிற் பொருளின்றி, வழிப்பறிக் கொள்ளை செய்து திரவியம் சேர்த்தாகிலும் பாகவத கைங்கரியத்தை நிறுத்தாமல் நடத்த உறுதி பூண்டார். நீர்மேல் நடப்பான், நிழலிலொதுங்குவான், தாளூதுவான் தோலாவழக்கன் எனும் நால்வரும் இவருக்குத் துணைவராயினர். பாதையிற் செல்வோரை யெல்லாம் பரகாலர் கொள்ளையடித்துப் பொருளீட்டி வந்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் மாலடியார்கட்கு அமுதளித்துத் தமது கைங்கர்யத்தை நடத்தி வரலாயினர்.


 “இழிந்த மாந்தர்கைப் பொருள்களும் இகபரத்தரசை
 கழிந்த யோகியர் கைப்பாடின் தூயவாய்க் களங்கம்
 ஒழிந்தவாறுபோல்"                                    -
என்கிறபடியும்,


''பிறர்க்குதவி ரெய்யார் பெருஞ்செல்வம் வேறு
 பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம்"                      
- என்கிறபடியும்,

 

இவர் பிறர்பொருளை சற்பாத்திரத்திற் செலவிட்டனர். பரகாலரின் கொள்ளையிடு தொழிலாலீட்டப்படும் பொருளும் நற்காரியத்தின் பொருட்டே செலவிடப்படுகின்றமை கண்ட எம்பெருமான், இவரது செய்கையைத் தீவினையெனக் கொள்ளாது அறமெனவே அங்கீகாரம் பண்ணி, இவருக்கு விசேஷகடாக்ஷம் செய்தருளத் திருவுளம் பற்றினார். பற்றியவர் பரகாலர் தம்மை வழிபறி செய்யுமாறு அந்தண வடிவந்தாங்கி சர்வாலங்கிருதபூஷிதனாய் அழகிய மணவாளத் திருக்கோலம் பூண்டு பிராட்டியுடன் எழுந்தருளினார். அவ்வமயம் திருமணக்கொல்லையில் அரச மரத்தினடியில் ஒளிந்து கொண்டிருந்த ஆலிநாடர் 'இன்று நமக்கு நல்ல வேட்டை கிடைத்ததென்று, தடி உடைவாளுடன் தமது துணைவர்கள் பின்னே வர எம்பெருமானைச் சூழ்ந்தார். எம்பெருமானும் தாழ்ந்து தம்மைத் துன்புறுத்தாது ஆடையாபரணங்களைக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். அங்ஙனம் கொள்ளும் போது, மாயவன் தமது கால்விரல் மோதிரத்தைச் சிறிது இறுக்கியருள அதனைக் சழற்ற முடியாமல் பரகாலர் சுபாவகுணத்தாற் பல்லாற் கடித்து, அதனையும் விடாதபகரிக்கையில், அவரது வலிகண்ட எம்பெருமான் அவரை 'கலியன்' என்றழைத்தார். அதன்மேல், ஆலிநாடர் தாம் கொள்ளையிட்ட பொருளனைத்தையுஞ் சேர்த்துத் தூக்க, அம்மூட்டை பூமிக்குள் வேரோடியதுபோல்அசைக்கவும் முடியாமலிருக்கக் கண்டு, வெகுண்டு, 'தமது உடைவாளை உருவிக் காட்டி எம்பெருமானை நோக்கி, 'ஓய்! என்ன மந்திரம் செய்தீர்?' என்று பயமுறுத்த

 

"பதி துனி புரோசெ பட்டாபி ராமும்” என்ற ஸ்ரீ த்யாகராஜ சுவாமிகளின் கீர்த்தனப்படி, சர்வேஸ்வரன் ஆலிநாடரை அருகே யழைத்து, நான் மறைப்பொருளாய் பிறவித்துயரறுத்துப் பரமபதமளிக்கும் அஷ்டாக்ஷர மந்திரத்தை இவர் செவிக்கமுதாமாறு உபதேசித்து கருடாரூடனாய்த் திருமாமகளுடன் சேவை சாதித்தார்.

 

அஷ்டாக்ஷர மந்திரோபதேசம் பெற்றமையாலும், எம்பெருமானைச் சேவித்த பாக்கியத்தாலும், கால் விரல் மோதிரம் கழற்றிய போது ஆரணங்களும் தேடிக்காணா அடியிணைகளில் தமது முடிபட வாய்த்ததாலும் பரகாலரின் அறியாமை நீங்கிற்று; அருள் பெருகிற்று; தத்துவ ஞானச்சுடர் உதிக்கப் பெற்றார். சர்வேஸ்வரனை பரிபூரணானுபவம் பண்ணி, அவ்வானந்த மேலீட்டை வெளியிடுவாராகி எம்பெருமானருளால், நாற்கவியும் பாடவல்ல திறமை யுடையவரானார். '' வாடினேன் வாடி வருந்தினேன்'' என்று இருகை கூப்பிச் சேவித்துப் பாடத் தொடங்கி,


 "குலந்தருஞ் செல்வந் தந்திடு மடியார் படுதுயராயினவெல்லா
 நிலந்தரஞ்செய்யு நீள் விசும்பருளுமருளொடு பெருநிலமளிக்கும்
 வலந்தரு மற்றுந்தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்
 நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா! வென்னு நாமம்''


என்ற பாசுரத்தால் தமதனுபவத்தை மொழிந்து, சதுர் வேதங்கட்கும் வேதாங்கங்கள் ஆறு அமையப் பெற்றிருப்பது போல, அவ்வேதங்களின் உட்பொருள்களை அருளிச் செய்த நம்மாழ்வாரின் நான்கு திவ்யப் பிரபந்தங்கட்கும் ஆறங்கங்கள் அமையுமாறு பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய ஆறினையும் அருளிச் செய்தார். ஆலிநாடர் கலியனாகி 'திருமங்கையாழ்வார்' என்னுந் திவ்ய நாமமும் பெற்றார்.

 

அதன்மேல் திருமங்கையாழ்வார் திவ்ய தேச யாத்திரை செய்யப் புறப்பட்டு, பதரிகாச்சிரமம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், சிங்கவேள் குன்றம், திருவேங்கடம் ஆகிய வடநாட்டுத் திருப்பதிகட்குச் சென்று அந்தந்த க்ஷேத்திரங்களில் எழுந்தருளியுள்ள பெருமானை மங்கள சாஸனஞ் செய்து, பாசுரங்களருளிச் செய்தனர். பின்பு, சான்றோருடைய தொண்டை நன்னாட்டை யடைந்து திவ்ய தேசங்களைக் கண்கொள்ளக் கண்டு களிகூர்ந்த வண்ணம் திருகின்ற வூருக்கு வந்தார். அந்த க்ஷேத்திரத்தி லெழுந்தருளியுள்ள பத்தராவிப் பெருமாள் ஆழ்வாருக்கு சேவை சாதிக்காமல் பிராட்டியார் பால்காதலுற்று விளையாடி யிருக்க, திருமங்கை மன்னர் போக திருவல்லிக்கேணிக் கேகி ஆங்கெழுந்தருளியிரா நிற்கும் பெருமாள் ஐவரையும் தரிசித்துக் கொண்டு, அப்பால் அங்கிருந்து திருநீர்மலையை யடைந்து அப்பெருமாளிடத்திலே மிகுந்த பக்தி பூண்டு திருப்பாசுரம் அருளிச் செய்தார். அதன் மேல் ஆழ்வார் திருக்கடன் மல்லையை யெய்தி பெருமாளைச் சேவித்திருக்கும் போதுதி ருநின்றவூர் பெருமாள் பிராட்டியாரின் தூண்டுதலின் பேரில் ஆழ்வாரால் பாடல் பெற்றுவப்பான் வேண்டித் திருக்கடன் மல்லைக்குத் தாமே எழுந்தருளி சேவை சாதித்தருளினார். கலியனார் அப்பெருமாளையும் சேவித்து அவ்வூர்ப்பதிகத்திலேயே "நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக், காண்டவத்தைக் கனலெறிவாய்ப் பெய்வித்தானைக், கண்டது நான் கடன் மல்லைத்தல சயனத்தே'' என்று மங்களாசாஸனம் செய்தார். இத்திவ்ய தேச யாத்திரையில் பரகாலர் பெரிய திருமொழியைப் பாடினார் என்பர்.

 

இங்ஙனம் ஆழ்வார் தொண்டை நாடு நடுநாட்டிலுள்ள திவ்ய தேசங்களைச் சேவித்துக்கொண்டு, சோணாட்டைச் சார்ந்து தில்லை நகர் திருச்சித்ரகூடத்தைப் பாடி சீர்காழி வழியே எழுந்தருளும் போது, ஆழ்வாருடன் வரும் பரிசனங்கள் அவரைச் சிறப்பித்துப் பல பிருதாவளிகள் சொல்லிக் கொண்டு சென்றார்கள். அப்பொழுது சீர்காழியில் எழுந்தருளி யிருந்த காழியப்பு வள்ளலாரான திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளின் அடியார்கள், ஆழ்வாரோடு விருது ஊதிச் செல்லும் அடியார்களைத் தடுத்தார்க ளென்றும், அப்பொழுது ஆழ்வார் சம்பந்தர் வீற்றிருந்த மடத்திற்குச் சென்று அவரைக் கண்டு வாதிட்டு அவர் வினவியதற் கிணங்க

 

 ஒரு குறளா யிருநில மூவடி மண் வேண்டி
      யுலகனைத்து மீரடியாலொடுக்கி யொன்றுந்
 தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
      தாடாளன் றானணைவீர் தக்க சீர்த்தி
 அருமறையின் றிரணான்கும் வேள் வியைந்து
      மங்கங்களவையாறு மிசைகளேழுந்
 தெருவின் மலிவிழாவள முஞ்சிறக்குங் காழிச்
      சீராம விண்ணகரே சேர்மினீரே.


என்று தொடங்கி சமீபத்திலுள்ள காழிச்சீராம விண்ணகர மென்னும் திவ்யதேசத்திலுள்ள தாடாளப் பெருமாளைப் பற்றிப் பாடினாரென்றும், அதற்கு கந்த காழியப்ப வள்ளலார், தமது வேலாயதத்தை ஆழ்வாருக்குச் சமர்ப்பித்தாரென்றும், இந்நிகழ்ச்சி தோன்ற ஆழ்வார்,

செங்கமலத் தயனனைய மறையோர் காழிச் சீராம

விண்ணகரின் செங்கண்மாலை, அங்கமலத் தடவயல்

சூழ் ஆலிநாடனருள் மாரி யாட்ட முக்கியடையார்

சீயங் கொங்கு மலர்க் குழலியர் வேண்மங்கை

வேந்தன் கொற்றவேல் பாகாலன் கலியன் சொன்ன,

சங்கழகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் தடங்கடல்

சூழுலகுக்குத் தலைவர் தாமே.

என்ற பாசுரத்தோடு பயன்கூறி முடித்தாரென்றுங் கூறுவர்.

 

அதன் பின், ஆழ்வார் திருவாலி திருநகரி, திருநாங்கூர் முதலிய திருப்பதிகளைச் சேவித்துக் கொண்டு, திருவிந்தளூரை யடைந்தார். அப்பொழுது திருவிந்தளூர் பெருமாள் ஆழ்வாருக்கு ஒருமுறை சேவை சாதித்து மறைய, அவர் அதற்கிரங்கி மனக்குறைபாடுடையவராய் " வாசி வல்லீர் இந்தளூர்வாழ்ந்தே போம் நீரே'' என்று பாட, எம்பெருமான் இரங்கி நிரந்தரமாக நின்று சேவைதா, பொங்கிய மனதுடன் சேவித்துப் பாடி, அவண் நீங்கி வழியிலுள்ள திவ்ய தேசங்களை யெல்லாம் சேவித்துக்கொண்டு திருவரங்கம் பெரிய கோயிலை யடைந்தார். ஸ்ரீரங்கநாதனிடத்தில் மற்ற எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியுள்ள மூர்த்திகளை விட அதிக ஈடுபாடுடையவராய்ப்பாடி இன்புற்றிருக்க ஸ்ரீரங்கநாதனும் ஆழ்வாருடைய அடிமைத் திறத்தை வியந்து 'தமது விமானம், மண்டபம், கோபுரம், பிரகாரம்' முதலிய கைங்கரியங்களைச் செய்யும்படி நியமித்தருளினார். அதற்கிணங்க ஆழ்வார் தமது மந்திரிமார் நால்வருடன், கோயில் திருப்பணிக்கு வேண்டிய திரவியத்தின் பொருட்டு ஆலோசிக்கும் போது, அம்மந்திரிகள் நாகையில் பொன்மயமானதோர் பௌத்த விக்ரஹம் ஆங்கு பௌத்தர்களால் அமைக்கப்பெற்ற ஆலயத்தின் கண்ணுளதென்றும், அதைத் திருட்டு செய்து கொண்டு வந்தால் பொருள் முட்டுப்பாடு ஏற்படாதென்றும் கூறினர். பரகாலரும் மகிழ்ந்து தம் பரிவாரங்களுடன் நாகையை நோக்கிப் புறப்பட்டார். நாகையில் அதி விசித்திரமான சித்திர வேலைப்பாட்டுடன் அமைந்திலங்கும் அப்பௌத்த ஆலயத்தினுள் புக வழியேதும் இல்லாமை கண்டு திகைத்து சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவ்வாலயத்தின் விமானத்திலுள்ள சிகரமானது சக்ராகாரமாய் யந்திர விசேஷ முடையதாய் இடைவிடாமல் சுழன்று கொண்டே யிருந்தது. அதை நிறுத்துதல் பொருட்டு, வாழைத் தண்டுகளை மெல்ல அதன் மீது ஒன்றொன்றாய் எறிய, சக்கரத்தின் சுழற்சியிலே அவ்வாழைத் தண்டின் நூல்கள் சுற்றிக் கொள்ள அப்பொறி நின்று விட்டது. பிறகு ஆழ்வார் தமது பரிவாரத்தி லொருவரை உள்ளேயனுப்பினார். அவர் உள்ளே சென்று பொன் மயமான அச்சிலையைக் கவாயத்தனிக்கும் போது, இது மந்திர வலிமையால் இடம் பெயர்ந்து, அச்சிகரம் முற்றிலுந் திரிந்து அவர் கைக்கு அகப்படாமல் ஓட, அவர் கலங்கி வெளியிலிருந்த ஆழ்வாரை நோக்கினார். அக்கணமே ஆழ்வார், அவ் விக்கிரஹத்தை அபரிசுத்தமாக்கி விட, அது பலங் குன்றி,


 "ஈயத்தாலாகாதோ விரும்பினாலாகாதோ
 பூயத்தான் மிக்கதொரு பூதத்தாலாகாதோ
 தேயத்தே பித்தளை நற் செம்புகளாலாகாதோ
 மாயப்பொன் வேண்டுமோ மதித்தென்னைப் பண்ணுகைக்கே''

 

என்று பிரலாபித்துக் கொண்டே விழுந்தது. பின்பு, ஆலிநாடர் அதைஎடுத்துக் கொண்டு வந்து புடமிட்டு உருக்கி விற்றுப் பொருள் கொண்டு, ஸ்ரீரங்கநாதன் நியமனப்படி கோயில் திருப்பணிகளனைத்தையும் குறைவறச் செய்து முடித்து, மதில் எடுக்குமளவிலே, தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலைத் திருநந்தவனம் நேர்பட, சாஷ்டாங்கமாக அத் திக்கு நோக்கிச் சேவித்து, மதிலை விலக்கிக் கட்டி முடித்தார். இங்ஙனம் பெரிய கோயில் திருப்பணிகளனைத்தையும் குறைவின்றிச் செய்து முடித்த பின்னர், மங்கைவேந்தர், பெருமாளிடத்தில் விடை பெற்றுக் கொண்டு திவ்ய தேச யாத்திரை செய்யப் புறப்பட்டு, தென் திருப்பேர், நந்திபுர விண்ணகரம், திருவிண்ணகரம், முதலிய க்ஷேத்திரங்களை மங்களாசாஸனம் செய்து, திருநரையூரையடைந்தார். திருநரையூர் நம்பி விஷயமாய் நூறு பாசுங்களை யருளிச் செய்து விடை கொண்டு, திருச்சேறை, தேரழுந்தூர், சிறுபுலியூர் என்னும் தலங்களின் வழியாக திருக்கண்ணமங்கையை எய்தி, ஆங்கெழுந்தருளியுள்ள எம்பெருமானைப் பாடி, மகிழும் போது, திருநின்றவூர் பத்தராவிப் பெருமாள் முன்பு தாம் ஒரு பாடல் பெற்றதில் திருப்திப்படாமல், அங்கு வந்து சேவை சாதிக்க, ஆழ்வார் " நின்றவூர் நின்ற நித்திலக் கொத்தினை... கண மங்கையுள் கண்டு கொண்டேன்'' என்று அவரையும் சேர்த்துப் பாசுரம் அருளிச் செய்தார்.

 

பின்னர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருநாகை முதலான சோணாட்டுத் திருப்பதிகளைச் சேவித்துக் கொண்டு, திருப்புல்லணை, திருக் குறுங்குடி என்னும் பாண்டிய நாட்டுத் தலங்களையும், திருவல்லவாழ் என்னும் மலை நாட்டுத் திருப்பதியையும், தென்னாட்டில் திருமாலிருஞ் சோலை மலை, திருக்கோட்டியூர் முதலியவற்றையும், வழியிலுள்ள ஏனைய க்ஷேத்திரங் களையும் சேவித்தவராய், எம்பெருமானின் அர்ச்ச விபவாவதாரங்களை மன முருகிப் பாடிப் பெரிய திருமொழியை முடித்தார்.

 

அதன்மேல் பக்தி பாவியெழ மற்றும் ஐந்து பிரபந்தங்களை அருளிச் செய்து, திருவரங்கத்திற் கெழுந்தருளி, அவர் சந்நிதியில் திரு நெடுந்தாண்டகத்தைத் தேவகானத்திற் பாட, எம்பெருமாள் உளமுவந்து "உமக்கு வேண்டிய வரத்தைக் கேளும்'' என்று நியமிக்க, ஆழ்வார் "முன்பு தேவரீர் நம்மாழ்வார் வாயிலாக வெளியிட்டருளிய தமிழ் வேதங்கள் நான்கையும் மார்கழித் திங்களில் தேவரீர் கண்டருள்கின்ற அத்யயன உற்சவத்தில் கீர் வாண வேதங்களோடு பாராயணம் செய்யுமாறு அருளிச் செய்ய வேண்டும் " என்று வேண்ட, பெருமாள் அவ்வரத்தை அளித்தருளினார்.

 

அங்ஙனமே, ஆழ்வார், விக்ரஹ ரூபமான நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியிலிருந்து அவ்வுற்சவத்திற்கு எழுந்தருளப் பண்ணி, உபய வேத பாராயணங்களை ஒழுங்காய் நடத்தச் செய்து, விழா முடிந்ததும் ஆழ்வாரை மீண்டும் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளப் பண்ணினார்.

 

இவ்விதம், ஒவ்வொரு வருடமும் அத்யயனோற்சவத்தை நடத்தி வரும்படி ஏற்பாடு செய்துவிட்டு, மகேந்திரகிரிக்குப் பக்கலிலுள்ள சித்தாஸ்ரமம் என்னும் திருக்குறுங்குடிக்கு வந்து, அங்குள்ள நம்பியின் அழகில் ஈடுபட்டு அங்கேயே நிரந்தா வாசஞ் செய்வாராய், குமுதவல்லியாருடன் விரக்தராய் சிலகாலம் யோக நிஷ்டையில் எழுந் தருளியிருந்து நூற்றைந்தாம் ஆண்டில் எம்பெருமானுடைய திருவடிகளை சாஸ்வதமாகச் சேர்ந்தார்.


திரிசிரபுரம், தேசீயக் கலாசாலைத் தமிழாசிரியர்

 (திரு. எஸ். வி. வரதராஜையங்கார் எழுதியது.)

 

ஆனந்த போதினி – 1929 ௵ - மார்ச்சு, ஜுன், ஜுலை, ௴

 

No comments:

Post a Comment