Wednesday, September 2, 2020

 திருநாவுக்கரசு சுவாமிகள் மாட்சி

 

கடவுள் துதி.


 அறிவிற்கறிவா மானந்தனழ காரச்சுக் கூட மதில்
 செறியுங்கலைகளெலாம் போற்றுஞ் சீலமுடையவாசிரியர்

 குறியாரப்பர் சம்பந்தர் குலவும் நம்பியாரூரர்
 நெறியார் வாதவூரிரரிவர் நேடும் பொருளைப் போற்றுதுமே.
                (1)

 

சைவத்தின் பெருமையும் அச்சைவத்தில் விதந்து கூறும் தெய்வத்தின் கொள்கையினையும், அத்தெய்வத்தை யடைந்தார் பெரும் பேற்றினையும் யாவரும் எளிதிலுணர்ந்து கொள்ளப் போதிக்கும் சைவசமயாசாரியர்கள் நால்வரையும் போற்றித் துதித்து, அந்நால்வரில் ஒருவராகிய திருநாவுக்கரசுசுவாமிகள் சிவபெருமானுக்கியற்றிய தொண்டின் பெருமையினை முதலி லெடுத்துச் சுருக்கிக் கூறுகின்றேன்.

 

பரவுந் திருவாமூரதனில் பன்னும் புகழனார் தவத்தால்
அரவுமதியுமணிந்த சடையானாரருளா லவனியெலாம்
கரவேயின்றிக் கதியடையக் காட்டுமப்ப ரென்று சொலும்
உரவார் நாவுக்கரசுதனை யுன்னியுளத்தில் போற்றிடுவாம்
.                    (2)

 

உலகமெல்லாம் போற்றும் திருமுனைப்பாடி நாட்டிலேயுள்ள திருவாமூரிலே குறுக்கையர் குடியிலே எந்நாளும் அடுத்தவர்களைப் பாதுகாக்கும் வேளாண் மரபிலே சுமார் 1475 வருடங்களுக்கு முன் புகழனாரென்பவர் ஒருவர் இருந்தார். இவர் கல்வி, அறிவு, அடக்கம், வாய்மை, ஒழுக்கம், ஈகை, புகழ் முதலிய குணங்களிலே சிறக்கப் பெற்றவர். இவர் கற்புக்கரசியாகிய புனிதவதியா ரென்பவரை விவாகஞ் செய்து கொண்டு, தென்புலத்தார், தெய்வம், விருந்தோம்பல், சுற்றந் தழுவல், கபிலை பூசைசெய்தல் முதலியவைகளை யெல்லாம் ஒழுங்காகச் செய்துவந்தார். இவர் பத்தினியாராகிய மாதினியார் தம் நாயகனையே தெய்வமாகப் போற்றும் பெருமையுடையவராயும், சிவபெருமானையும், சிவபெருமானது அடியவர்களையும், போற்றித் துதிக்கும் நெறியையுடையவராயு மிருந்தார். இத்தகைய பெருமையினாலும், இந்நிலவலகம் செய்த புண்ணியப் பேற்றினாலும், சைவமதம் புரிந்தத வத்தினாலும், இவர்பால் திலதவதியா ரென்னும் அம்மையார் தோன்றினார். இவர் தோன்றிய சில ஆண்டுகளுக்குப் பின் சிவபெருமான் திருவருளினாலே உலகமெல்லாமீடேறவும், சைவமென்னும் பயிர் தழையவும், அஞ்ஞான மென்னு மிருள் விலகவும், மருள் நீக்கியா ரென்பவர் திருவவதாரஞ் செய்தார்.

 

சிவபெருமான் முதலியவர்கள் இவரை அறுபத்து மூன்று நாயன்மார்களிலே ஒருவராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அவற்றை உலகினர்களுக்குச் சிவபெருமான் நன்கு விளங்கும் பொருட்டு அருண்மொழித் தேவருக்கு “உலகெலா முணர்ந்தோதற்கரியவன்” என்று முதலடி யெடுத்துக் கொடுத்துத் திருத்தொண்டர் புராணத்தைப் பாடும் படியாய்த் திருவருள் புரிந்தார். சேக்கிழார் சுவாமிகளும் நடராஜப்பெருமான் திருவாய் மலர்ந்தருளியபடியேபுராணத்தைப் பாடி முடித்தார். அங்ஙனம் பாடிப் பூர்த்தி செய்வித்த புராணத்தின் முதற்செய்யுளாகிய "உலகெலா முணர்ந்தோதற்கரியவன் " என்னுந் திருப்பாட்டில் அறுபத்து மூன்றெழுத்துக்களே அமைந்திருக்கின்றது. ஆகையால் இப்பாசுரம் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கே பாடப்பட்ட தென்று தெள்ளிதின் உணர்தற்குரியவையா யிருக்கின்றது. அன்றியும் இவரைச் சைவசமயத்தாராலே போற்றப்படும் சைவசமயாசாரியர்கள் நால்வரில் ஒருவரெனக் கொள்ள வேண்டியதாயு மிருக்கிறது. இச் சைவ சமயாசாரியர்கள் நால்வர்களுக்கும், எல்லாச் சிவத்தலங்களினும், எல்லாச் சைவமடங்களினும், எல்லாச் சிவனடியார் கூட்டங்களினும், குருபூசையும் நித்திய பூசையும், உற்சவாதி முதலியவைகளும், நிகழ்ந்தேறி வருகின்றன. இச் சைவ சமயாசாரியர்கள் நால்வர்களிலே முந்தினவர் ஸ்ரீமத் மாணிக்கவாசக சுவாமிகள். இவரைப்பற்றித் தொண்டர் புராணத்தில் எடுத்துப் பேசவில்லை. திருவிளையாடற் புராணத்தில் ஸ்ரீமத் பரஞ்சோதி மாமுனிவரும், திருவாதவூரர் புராணத்தில் கடவுள் மகாமுனிவரும் புகழ்ந்து பாடியிருக்கின்றார்கள். இம்மாணிக்கவாசக சுவாமியை, திருநாவுக்கரசு சுவாமிகள் தாம் பாடிய தேவாரத்தின் கண்ணே ஸ்ரீமத் மாணிக்கவாசகப் பெருமானுக்காக நரியைப் பரியாகச் செய்தவனே யென்று சிவபெருமானைத் தோத்திரஞ் செய்திருக்கின்றார். அவை வருமாறு:

 

திருவாரூர்த் தேவாரம்.


 “நரியைக் குதிரை செய்வானும்

நரகரைத் தேவு செய்வானும்
 விரதங் கொண்டாட வல்லானும்

விச்சின்றி நாறு செய்வானும்
 முரசதிர்ந்தானை முன்னோட

முன் பணிந்தன் பர்களேத்த
 அரவரைச் சார்த்தி நின்றானும்

ஆரூரமர்ந்த அம்மானே"

 
என்று பாடி யிருக்குந் தேவாரத்தினாலே இச் சைவ சமயாசாரியர்கள் நால்வர்களிலும் முந்தினவர் ஸ்ரீமத் மாணிக்கவாசக சுவாமிகளென்றே கொள்ளவேண்டும்.

 

திருஞானசம்பந்த சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் ஒரேகாலத்தில் இருந்திருக்கிறார்க ளென்பதை விளக்கப் பெரிய புராணத்தில் அனேக காரணங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவ்விருவர்களுக்குப் பின் சுந்தரமூர்த்திச் சுவாமிகள் திருவவதாரஞ் செய்துள்ளதைச் சிவபெருமான் சுந்தரமூர்த்திச் சுவாமிகளுக்குத் தொண்டர்களை யெல்லாம் தனித்தனியே போற்றித் துதிக்கும்படிக் கட்டளையிட்டுத் தாமே அவருக்குத் தில்லை வாழந்தணர் தம்மடியார்க்குமடியே னென்று முதலடி யெடுத்துக் கொடுத்துள்ளார். இதனால் ஸ்ரீமத் மாணிக்கவாசக சுவாமிகள், திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், இவர்கள் காலத்திற்குப் பிற்பட்டவரென்றே துணிந்து பேசுதற்குத் தகுதியேயாகும். இவற்றை விளக்கத் தொண்டர் புராணத்திலும் பல ஆதாரங்கள் உள்ளனவென்பது சாலவுந்தோன்றும். இவை நிற்க,

 

மருள் நீக்கியாருக்குத் தந்தை உரிய பருவத்திலே கலை பயிலுவித்தார். அவர் சகல கலைகளையுங் கற்றுத் தேர்ச்சியடைந்தார்; திலதவதியாருக்குப் பன்னிரண்டு வயதாகவே அரசனிடத்தில் சேனாதிபதியா யிருக்கப்பெற்ற வரும், சிவநேசமுடையவரும், வேளாண் மரபினருமாகிய கவிப்பகை நாயனார், திலதவதியாரை மணஞ் செய்ய விரும்பிப் புகழனாரிடம் சில் முதியோர்களை யனுப்பினார். அவர் புகழனாரிடம் வந்து தெரிவிக்க, அப்புகழனாரும், பெண் கொடுப்பதாகச் சொல்லிச் சம்மதித்தனர். கவிப்பகையார் தம் திருமணத்திற்கு முன்னமே அரசனாணைப்படி வடதேசஞ் சென்று பகையரசர்களிடம் யுத்தஞ் செய்துகொண்டிருந்தார். அக்காலம் புண்ணிய மூர்த்தியாகிய புகழனார் சிவபதமடைந்தார். அவர் மனைவியாராகிய மாதினியாரும் உடன் கட்டை யேறினார். பின்னர் தில தவதியாரும், மருள் நீக்கியாரும், சுற்றத்தவர்கள் முத லானவர்களெல்லாந் தேற்றத் தாய் தந்தையர்களுக்குச் செய்யவேண்டிய கடன்களை யெல்லாம் செவ்வனே செய்து முடித்தார்கள். இவை நிற்க வேற்றரசர்களோடு போருக்குச் சென்ற கலிப்பகையார், யுத்த களத்திலே பூதவுடம்பை நீத்துப் புகழுடம் பெய்தினா ரென்பதைத் திலதவதியார் கேள்வியுற்று, இறக்கத்துணிய மருள் நீக்கியார் தன் தமக்கையாரை நோக்கி நம் தாய் தந்தையர்களிறந்தும் தங்களையே நான் தாய் தந்தையர்களாகக் கொண்டுள்ளேன். தாங்கள் உயிர் நீப்பின் தங்களுக்கு முன்னரே நானும் உயிர்விடுவேனென்று கூறினார். அதைக் கேட்ட அம்மையார் காருண்ய முடையவராகித் தம்பியார் உயிர் வாழவேண்டுமென்றும், தம் சந்ததி விளங்க வேண்டுமென்றும், யோசனை செய்து உயிர் நீக்காமல் இருந்த பொருள்களை யெல்லாம் சிவபுண்ணியத்துக்கே உபயோகமாகும்படிச் செய்தும், குளம் தோண்டுதல் நந்தவனம் வைத்தல் முதலிய திருப்பணிகளைப் புரிந்தும், தாமும் சிவாலயத்திலே பலவிதத் தொண்டுகள் முதலியவற்றை யியற்றியும் வந்தார்.

 

இவ்வாறிருக்கையில் மல மறைப்பால் மூன்றவத்தைப் படுகின்ற வுயிர் கட்குச் சருவ வியாபகனாகிய சிவனே அதன் பலன்களைக் கொடுப்பவனாதலால் மருள் நீக்கியார் சகல சாத்திரங்களையும் செவ்வையாக வோதி யுணர்ந்தும் முத்தியடைதற்குரிய நெறியைச் சிவபெருமான் உணர்த்தாமையாலே பாடலி புத்திரமென்னும் பதிக்குப் போய்ச் சமணர்களது பள்ளியடைந்து அவர்களுடைய நூல்களையுங் கற்றுத் தேர்ந்து அவர்களுக் கெல்லாம் ஆசிரியனாகித் தருமசேனன் என்னும் பட்டப் பெயரை அவர்கள் கொடுக்கப் பெற்று வாழ்ந்து வந்தனர். இஃது இங்ஙனமிருக்க எவர்களாலுங் காண்பதற் கரிய சிவனைக் கர்த்தாவாகக் கொள்ளாத சமயங்களிலே நின்று தடுமாற்ற மடையாத இவரது தமக்கையராகிய திலதவதியார் சிவதன்மத்தாலும், சிவயோகத்தாலும், சிவ ஞானத்தாலும் சிவனைக் கூடும்படிக் கருதுவோர்கள், தங்கள் செய்கைகளெல்லாம் தம்முடையதல்ல சிவனுடைய தென்றே கருதுவார்களென்பதும், அவர்களுக்கே சிவன் அருளுவா னென்பதும், செவ்வையாக வறிந்து சிவனையே போற்றி வருவார். இங்ஙனம் போற்றி வரும் அம்மையார் திருவதிகை வீரட்டான மென்னும் ஆலயத்தி லெழுந்தருளிய சிவபெருமானை நோக்கித் தன் தம்பியின் செய்கைகளைச் சொல்லி வருந்தினார். அப்போது சிவபெருமான் திலதவதியாரை நோக்கி "நீ யொன்றுக்கும் வருந்தாதே; அவன் நமக்குச் சிறந்த தொண்டன். அற்பக் குற்றத்தினால் சமணமதத்திலே சேரும்படி நேர்ந்தது. அவனை நாம் சூலை நோயைக் கொடுத்துத் தடுத்தாட்கொள்வோம்'' என்றனர்.

பின்னர் சிவபெருமான் திருவருளினாலே தரும் சேனருக்குச் சூலை நோய் அதிகரித்துக் குடரை முடுக்கித் துன்புறச் செய்தது. அந்நோய்க்கு ஆற்றாராகித் தருமசேனர் தாம் கற்றுள்ள சமண சமய மந்திரங்களாலே தடுக்க முயன்றும் அந்நோய் மேன்மேலும் அதிகரித்துத் துன்புறுத்தியது. அது கண்ட சமணர்கள் யாவரும் தாம் தாம் கற்றுள்ள மந்திரங்களின் வன்மையினாலே மந்திரித்தும் அந்நோய் தணியாததாகித் துன்புறுத்த மிகவும் வருந்தித் தருமசேனர் தன் தமக்கையாரை நினைந்து ஓர் பாகுகளை அனுப்பித் தம் சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தார். அதற்கு அம்மையார் மகாபாவிகளாகிய சமணர்கள் பள்ளிக்கு நான் வாரேன். என் சகோதரனுக்கு இதை யுரையென்று பகர்ந்தாள்.

 

அதைக் கேட்ட பாகுகன் அவ்வம்மையார் கூறியதைச் சொல்லினான் .சொல்லவுந் தருமசேனர் இதற்கு நானென்ன செய்வே னென்று வருந்தி மனஞ்சோர்ந்து, பின்னர் இப்புன் சமயத்தில் ஒழியா இக்கொடிய நோய் என்னை விட்டு நீங்கத் தில தவதியார் திருவடியை யடைவே னென்று நினைத்துச் சமண வேடத்தைப் போக்கி வஸ்திர மணிந்து தமக்குக் கைதருவார் சிலரைப் பற்றிக்கொண்டு சூலை நோய் மாத்திரந் தம்மைத் தொடர்ந்து வரத் திருவதிகை யடைந்து, திலதவதியார் திருமடத்துக்குப் போய் அவரைப் பணிந்து, "நம்குலஞ் செய்த நற்றவப் பயனே அடியேன் சூலை நோயால் மிகவும் வருந்திச் சகிக்க முடியாமல் இங்குச் சேர்ந்தேன் " இனிதாமதியாது அடியேன் உய்ந்தருளும் வழியைத் திருவாய் மலர்ந்தருள வேண்டும் என்றார்.

 

ஆகமங்களிலே கூறியபடி சிவாலயத்திலே திருவலகிடல், திருமெழுக்கு, திருவிளக்கு, திருநந்தவனம், திருபள்ளித் தாமம், திருமஞ்சனம், திருமாலை, திருக்கூத்து, பாட்டு முதலாயுள்ள தொழில்களும், திருவேடத்தாரை வழிபடுகையும், சிவபத்தருக்கு வேண்டுவன செய்கையும், திருமந்திரஞ் செபிக்கையுமாகிய தாத மார்க்கத்தையும், தேவாரத் திருவாசகங்களைப் பாராயணஞ் செய்தல், சிவனை மனம் வாக்குக் காயங்களா லொருமித்துப் போற்றுதல், முதலாகிய சற்புத்திர மார்க்கத்தையுங் கடைப் பிடித்து வருபவராயுள்ள அம்மையார் சிவபெருமானைப் போற்றி வரும் நெறியில் நின்றுந்தவறி, பரசமயக் குழியில் அறியாது வீழ்ந்து தடுமாறும் தம்பியாரே எழுந்திருமென் றருளிச் செய்தார். அம்மொழி கேட்ட தருமசேனர் சூலைநோயுடன் மயங்கி நடுங்கி யெழுந்து தமக்கையாரைத் தொழுதார். அருந்தவ சிகாமணியார் தம்பியாரை நோக்கி இது சிவபெருமானது திருவருளாகும். தம்கழடைந்த மெய்யடியார்களது பற்றினைப் போக்கியாளும் அப்பரஞ்சோதிக்கே திருத் தொண்டு செய்யு மென்றார். மருள் நீக்கியார் அக்கட்டனையைச் சிரமேற்கொண்டார். அவ்வமயம் சைவ சிகாமணியாகிய திலதவதியார் திருப்பள்ளி யெழுச்சியில் திருவலகும், திருமெழுக்கும் திருத்தோண்டியுங் கைக் கொண்டு ஆலயத்திற்குத் தன் தம்பியாரை அழைத்துச் சென்றார். அப்போது அமண் பொய்யை உலகுக் குணர்த்திய மருள் நீக்கியார் வீரட்டானேசுவரர் திருக்கோயிலைத் தொழுது வலம் வந்து திருமுன் எழுந்து வணங்கி நின்றார்.

 

அச்சமயம் வீரட்டானேசுவரர் திருவருளால் அப்பெருமானுக்குத் தமிழ் மாலைச் சாத்தும் ஞான வுணர்ச்சித் தோன்றிற்று.

 

உண்டாகவே தம்மை வருத்தும் சூலை நோய் நீங்கவும், உலகமுய்யவும் திருப்பதிகம் பாடத் தொடங்கினார்.

திலதவதியாரிந்த திருநீற்றை யுடல் முழுதுந் தெரியச் சாத்தி

பல துயரம் போக்குகின்ற பரம சிவன் பரகீர்த்திப் பாரின் மீது

நிலவிடவே பண் கொல் விதனைக் கொண்டே நிருமலனார் பாதப்போதாம்

சலசமலரிற் கூற்றாயின வென்றே தமிழ்ப்பதிகம் சாற்றுவாரால்.


திருச்சிற்றம்பலம்


கூற்றாயினவாறு விலக்க கில்லீர் கொடுமை பல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக்கே யிரவும் பகலும் பிரியாது வணங்குவ னெப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றி னகம்மடியே குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றே னடியேனதிகைக் கெடில வீரட்டானத் துறையம் மானே.

இவை நிற்க ஆன்மாக்கள் இருவினைக் கீடாக அண்டசம், சுவேதசம், உற்பிசம், சராயுசம் என்பவைகளாகிய நால்வகைத் தோற்றமும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைகளாகிய எழுவகைப் பிறப்பும், தேவர் பதினொரு இலட்சம் மனிதர் ஒன்பது இலட்சம், நாற்கால் விலங்கு பத்து இலட்சம், பறவை பத்து இலட்சம் ,நீர்வாழ்வன பத்து இலட்சம், ஊர்வன பதினைந்து இலட்சம் தாவரம் பத்தொன்பது இலட்சமாகிய எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதமும், உடையனவாய்ப் பிறந்திறந்து இளைத்துப் புண்ணிய மேலீட்டினால் மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். ஆகையால் இவ்வரிய மானிடப்பிறப்பினை யடைந்தார்,


 "அடைய வேண்டியதடைந்து மேற்றுயர மற்றின்பமள விலாதாய்க்
 கடையதாம் தருவிடங்கு பறவைகள் போல் வீணாட்கள் கழியாதாகித்
 தடையிலா மனனத்தால் வாழ்வதே யுயர்வாழ் நாள் சனனந் தீர்ந்தோர்
 உடைய பிறப்புயர்ந்த தாங்கிழவே சரிப்பிறப்பா மொழிந்த வெல்லாம்''


என்றபடி மனிதப் பிறப்பிலே அடைய வேண்டியவைகளை அடைய வேண்டுமென்பது பெறப்பட்டது.
 

இதற்காக இம்மனிதப் பிறப்பை யெடுத்தல் கடலைக் கையினாலே நீந்திக் கரை யேறுதலை யொக்கும்.

 

நாம் இப்பிறப்பை பெடுத்தது எற்றுக் கென்னில், கடவுளை மனம் வாக்குக் காயங்களினால் வழிபட்டு அளவில்லாத முத்தி இன்பத்தைப் பெற்றுய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்து மாதத்தில் பிறந்தவுடனே அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட மூப்பிலழியினுமழியும். எப்படியும் சரீரம் நிலையின்றி யழிவது உண்மை. இச்சரீரம் உள்ள போதே இதன் நிலைமையை யுணர்ந்து பெருங் கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும். இவ்வாறிருக்க உலகாயுதம் சௌத்திராந்தகம், யோகாசாரம், மாத்திகம், வைபாடிகம், நிகண்டாவாதம் ஆசீவகம், பட்டாசாரியம், பிரபாகரம், சத்தப் பிரமவாதம், மாயாவாதம், பாற்கரியம், நிரீச்சுர சாங்கியம், சிவசாங்கியம், விஷ்ணு சாங்கியம், பாஞ்சராத்திரம், தருக்கம், மீமாஞ்சை, பாசுபதம், மாவிரதம், காளாமும்,வாமம், பாடாண வாதசைவம், நிமித்த காரண பரிணாமவாதம், சைவம், சுத்த சைவம், அவிகாரவாத சைவம், ஐக்கிய வாத சைவம், சிவசமவாதசைவம், கிரீடப் பிரமவாத சைவம், முதலாகிய எல்லாச் சமயங்களினும் மேலாகிய சைவ மார்க்கத்தைக் கடைப்பிடித்த திருவதிகையிதுள்ள சிவநேசச் செல்வர்கள் மருள் நீக்கியார் "சைவ சமயமே சமயம் சமயாதீதப்பழம் பொருளைக் கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டு மிந்தக் கருத்தை விட்டுப் பொய் வந்துழலுஞ் சமய நெறி புகுத வேண்டாம்'' என்றபடி

 

இயல்பென்றுந் திரியாம லியம மாதி யெண்குணமுங் காட்டியன்பாலின்பமாகிப்
பயனருளப் பொருள்கள் பரி லாரமாகிப் பண்பறவுஞ் சௌபானபக்ஷங்காட்டி
மயலறுமந் திரஞ்சிக்ஷை சோதிடாதி மற்றங்க நூல் வணங்க மௌன மோலி
அயர்வறச் சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்ததுவை திகசைவ மழகி தந்கோ


 என்று கூறுவதினாலும்


''புன்புலால் யாக்கை புரை யுரை கனியப்
      பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
 னென்பெலா முருக்கி யெளியையை யாண்ட
      வீசனே மாசிலாமணியே
 துன்பமே பிறப்பே யிறப்பொடு மயக்காந்
      தொடர்பெலா மறுத்த நற்சோதி
 யின்பமே யுன்னைச் சிக்கெனப்பிடித்தே
      னெங்கெழுந் தருளுவ தினியே"


என்று ஸ்ரீமத் மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியபடி சைவசமயத்தில் அன்புபூண்டமையானும் சிவபெருமான் தருமசேனர் என்னும் பெயர் பூண்டுள்ள மருள் நீக்கியாரைத் தடுத்தாட் கொண்டபின் அவரது திருவருளினால் சுவாசிகளுக்குத் தமிழ்ப்பாமாலை சாத்தும் ஞானவுணர்ச்சி தோன்றிற்று. அவ்வுணர்ச்சியால் எய்தும் பேறு பிறவாமைக்கு வித்தாகிய செய்கைகளைக் காட்டக் கூடியன வென்பதை அவரது அமுதவாக்கிற் றோன்றிய ஒவ்வொரு தேவாரப் பாக்களுமே தெற்றென வுணர்த்தும். அவை வருமாறு:

 
"இரவும் பகலும் பிரியாது வணங்குவ னெப்பொழுதும்''
''என்றும் நெஞ்சம் உமக்கே யிடமாக வைத்தேன் "
''நினையாதொரு போது மிருந்தறியேன் "
"பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்'
''சலம் பூவொடு தூப மறந்தறியேன் "
''தமிழோடிசை பாடன் மறந்தறியேன் "
"நலந் தீங்கிலுமுன்னை மறந்தறியேன்''


என்ற அரும்பாக்களுட் பொதிந்த விஷயங்கள் யாவும் தற்போதங் கெட்டுப் பாடியவையேயாம். அடியார் பெருமான் இவ்வாறு பாடிப் பிரார்த்தித்துத் தோத்திரஞ் செய்தார். உடனே சூலை நோய் ஒழிந்தது. உடனே மருள் நீக்கியார் அன்புருவாய் நின்று விழுந்து புரண்டு சமணப் படுகுழியில் விழுந்து வருந்திய யான் சிவபெருமான் திருவடி யடைந்து பேரின்ப வாழ்வைப் பெறச் செய்த சூலை நோய்க்கு என்ன கைம்மாறு செய்வேலென்று தொழுதார். அப்போது பரமன் மொழிக்கு மொழி தித்திக்கும் தேவாரப் பதிகத்தைப் பாடினமையால் நாவுக்கரசு என்னும் அருமைத் திருநாமமே ஏழுலகங்களினும் வழங்குக வென்று யாவரும் வியக்கும்படி ஒரு அசரீரி ஆகாயத்தி லெழுந்தது.

 

அது கேட்ட அருளரசர் சமண சமயத்திலுழன்று தீவினை வயப்பட்டிருந்த அடியேனுக்குப் பெருவாழ்வு கிடைத்ததென்று ஆனந்தித்து அத் தன்மையாய இராவணனுக்குக் கருணை செய்த திருவருட்டிறத்தின் பெருமையையுணர்ந்து துதிப்பதனையே மேற்கொண்டு மெய்யுற வணங்கினார். இதனைக் கண்ணுற்ற அடியவர்கள் பொய்ச் சமயமாகிய சமண சமயமழியத் திருவருளுண்டாகவும் சைவ சமயம் வளரவும், தெய்வத் திருவிருள் நேர்ந்ததி னாலே இனி உலகம் உய்ந்தது உய்ந்தது என்று கூறி ஆனந்தவாரியிற்றோய்ந்தார்கள். திருநாவுக்கரசு சுவாமிகள் மனம் வாக்குக் காயத் தொண்டுகளைச் செய்யவேண்டும் என்னும் பேரவாக்கொண்டு சிவ சின்னங்களைத் தாங்கித் தியான மறாவுணர்வும் ஈறின்றியெழும் திருவாசகமும் உழவாரத் தொண்டும் உடையவரானார்.

 

சிவ புண்ணியமே ஒரு வடிவங்கொண்டு வந்தாலெனத் தோன்றும் திலதவதியார் சமண மதத்திலாழ்ந்து தடுமாறிய எம்மையும் ஒரு பொருளாக வெண்ணியாண்டருளிய சிவபெருமான் கருணைத் திறத்தை வாய்ந்தவரென்று மகிழ்ந்து அப்பிரானை வணங்கினார். பாடலிபுரத்திலுள்ள சமணர்கள் தரும் சேனர்க்கு வந்த சூலை நோயைப் பலவித மந்திர செய்கைகளாலும் நம் தெய்வ மகத்துவத்தாலும் நம்மால் நமக்கு நீக்குவதற்கு இயலாமையாலே அவர் அந்நோயை நீக்கிக் கொள்ளத் திருவதிகைக்குச் சென்று சைவமதத்தைச் சார்ந்து அதன் சார்பால் நோய் நீங்கி யுய்ந்தனர். இதனால் இனி நம் சமயம் அழியப் பெற்றது அழியப் பெற்றது என்று சொல்லி மயக்கமுற்றுப் போய் ஓரிடத்தில் ஒருங்கு சேர்ந்தார்கள். இங்ஙனம் மருண்டு கூடிய சமணர்கள் அந்தோ தரும சேனர் சைவராயதைப் பல்லவராஜன் அறிவானாகில் அவனும் சைவனாவான். அன்றியும் நமது சமய விருத்தியையும் தவிர்ப்பானென்று கலங்கி ஆலோசனை செய்து ஒரு உபாயத்தைத் தேர்ந்துகொண்டு அரசன் இவ்விடயத்தைத் தெரிந்து கொள்ளு முன்னமே அவன் முன் நாமே போய் முறையிட்டுக் கொள்வோ மென்று எழுந்திருந்து வாடிய முகத்தினராய் அரசன் அரண்மனை வாயிலைச் சார்ந்து வாயில் காப்பாளர்களை நோக்கித் தங்கள் வரவை அரசனுக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள்.

 

அவ்வாயில் காப்பாளர் அரசனுக்குப் போய் அறிவித்ததும் அரசன் அடிகண்மார்களை உள்ளே வரும்படி வாயில் காப்பாளருக்குத் தெரிவித்தான். அவர்கள் போய்ச் சொல்ல அடிகண்மாரும் அரசனை அடைந்தார்கள். அடைந்ததும் பல்லவ ராஜனைக்கண்டு நமக்கெல்லாம் ஆசிரியத்தன்மை வகித்தவரான தருமசேன ரென்பார் தமக்கையரான திலதவதியார் சைவமதத்தை யுடையரா யிருப்பதினாலே தாமும் சைவராக வேணுமென்று விரும்பித் தமக்குச் சூலைநோய் நேர்ந்ததாகப் பாவனை காட்டியும் அந்நோய் நம்மால் நீங்கவில்லையென்று பாசாங்கு செய்தும் திருவதிகை சென்று சைவராகித் தமது தெய்வத்தையும் சமயத்தையும் போற்றி நம் தெய்வத்தையும் சமயத்தையும் நிந்தனை புரிந்து வருகின்றாரென்று கற்பித்துப் புனைந்துரைத்தார்கள். அதைக் கேட்ட பல்லவராஜன் ஆற்றொணாத் துயரத்தைப் பூண்டவனாய் இங்ஙனம் நமது சமயத்துக்கெல்லாம் தாழ்வுண்டாகும்படிச் செய்த தரும சேனரை யாது செய்யலாமென்று கேட்டனன். அதற்கு அடிகண்மார் மிகவும் துன்புறுத்த வேண்டுமென்று கூறினார்கள். உடனே மன்னன் அத் தீயோர்களை நோக்கி அவ்வாறே செய்வோ மென்று விதந்து மந்திரிகளை நோக்கி அவனைப் பிடித்துக் கொண்டு வாருங்களென்று கட்டளை யிட்டனன்.

 

அமைச்சர்கள் நூலிற் கூறிய முறைமையினைக் கொண்டு வினை செய்யுந்திறங்களை அறிந்த விடத்தும் அவ்வப்போது நிகழு முலக வியற்கையை ஆராய்ந்தொழுக வேண்டுவது முறைமையாகலின் அரசன் ஆணையை மேற்கொண்ட அமைச்சர் திருநாவுக்கரசு சுவாமிகளைக் கண்டு உம்மை அழைத்து வரும்படி அரசன் எங்களை யேவினான் வரவேண்டு மென்று கூறினார்கள்.

 

திருமறு மாற்றத் திருத்தாண்டகம்


 நாமார்க்குங் குடியல்லோ நமனையஞ்சோ
      நரகத்திலிடர்ப்படோ நடலையில்லோ
 மேமாப்போ பிணியறியோம் பணிவோமல்லோ
      மின்பமே யெந்நாளுந் துன்பமில்லை
 தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான
      சங்கவெண் குழையோர் காதில்
 கோமாற்கே நாமென்று மீளா வாளாய்க்
      கொய்ம் மலர்ச் சேவடியிணையே குறுகினோமே.
 நாலார நம்பனையே பாடப் பெற்றோ நாணற்றார்
      நள்ளாமே விள்ளப் பெற்றோ
 மாவாவென் றெமையாள் வா னமரர் நாத
      னயனொடுமாற்கறிவரிய வனலாய் நீண்ட
 தேவாதி தேவன் சிவனென் சிந்தை
      சேர்ந்திருந்தான் றென்றிகைக் கோன்றானே வந்து
 கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும்
      குணமாகக் கொள்ளோமெண் குணத்துளோமே.


என்று திருவாய் மலர்ந்தருளினார். அதைக் கேட்ட அமைக்சர்கள் அவரது திருவடிகளை வணங்கி வேண்ட நாயனார் எனக்கு வரும் வினைகளுக் கெல்லாம் எம்பெருமானுளன் என்று நினைந்து மந்திரிகளோடு பல்லவராஜன் சபையைச் சேர்ந்தார். அவரைக் கண்டு அஞ்ஞானக் கடலில் மூழ்கியவரசன் அழுக்காறுடைய அடிகண்மார்களை நோக்கி இவனை யென் செய்வது சொல்லும் என்ன கொல்லா விரதங் கொண்டும் கொடுமை செய்யும் சமணர்கள் இவனை நீற்றறையிலிட வேண்டு மென்று சொன்னார்கள். உடனே உணர்வில்லர்ப் பல்லவன் அருகிருந்த வேலாளரை நோக்கி அடிகண் மார் சொல்லியபடி நீற்றறையிலிடுங்க ளென்று ஆஞ்ஞாபித்தான். அவர்கள் அப்படியே எம்பெருவாழ்வை நீற்றறையிலிட்டுக் கதவைத் தாளிட்டார்கள். திருநாவுக்கரசு சுவாமிகள் தாண்டவ மூர்த்தியின் தாள் நிழலைத் தலைக் கொண்டு ஈசனடியார்களுக்கு ஈண்டு வருந்தும் துயருளவோவென்று அவ்வீசனையே நினைந்து மாசில் வினையும் மாலை மதியமும் என்னுந் திருக்குறுந் தொகையை அருளிச் செய்தார்.

 

மாசில் வீணையும் என்ற பாடலைப் பாடி இன்புற்றிருந்தனர். பின்னர் ஏழுநாட்கள் கழிந்த பின் அனைவோர்க்கும் தெய்வம் இலைமுகப் பைம்பூணிறை யென்னும் வாக்கியத்தைக் கடைப்பிடித்து நடக்கப்பட்டவர்களைப் போல சமணர்கள் அரசன் கட்டளையின்படி நீற்றறைக் கதவைத் திறந்தார்கள். திறந்ததும் நீற்றறையிலுள்ள திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு துன்பமுமின்றி விளங்கிக் கொண்டிருந்தார். அதைக்கண்ட அவர்கள் ஆச்சரிய முற்று மன்னன்பாற் சென்று தருமசேனர் நமது சாஸ்திரங்களை யுணர்ந்தவராதலால் பிழைத்தா ரென்றார்கள். அச்சொற்கேட்ட கொடுங்கோ லரசன் இவனை இனி யென்செய்யலாங் கூறுக வென்றான். சமணர்கள் நஞ்சூட்டவேண்டு மென்றார்கள்.

 

கொல்லாமையே மேற்கொண் டொழுகுவானது வாழ்ராள் மேலுயிருண் ணுங் கூற்றுச் செல்லாதென்னும் முதுமறைப் பொருளை யறியாதா ராகிய சமணர்கள் உற்று நோக்கி இவனுக்கு விடமும் அமுதாயிற்று. இவன் இன்னும் உயிர் பெற்றிருப்பானாயின் நமக்குத் தீங்கு விளைவிப்பானென்று கருதிக் கொல்லுஞ் சூழ்ச்சிகளை யோசித்தார்கள். உடனே அவர்கள் அரசன்பாற் சென்று நாங்கள் வாழவும் நும் அரசாட்சி நிலை பெறவும் தரும சேனனைத் தாமதியாது கொலை புரிய வேண்டு மென்றார்கள். அதுகேட்ட அரசன் வேண்டிய தந்திரம் கூறுவீர்க ளென்றான். சமணரும் உமதுபட்டத்து யானையை விடுத்துக் கொலை புரிய வேண்டு மென்றார்கள். அவ்வாறே அரசன் யானையைச் சுவாமிகளுக்கு முன்னர் விடுத்தான். உடனே கோபங்கொண்டு கொலை புரிவதற்கு வந்த யானையைக் கண்ட நாயனார் சிறிதும் அஞ்சாது ஆபத்து நேர்ந்தவிடத்தில் உயிருக்கு ஒப்பற்ற ணையாயிருக்கும் சிவபெருமான் திருவடித் தாமரையைச் சிந்தித்து,

 

“சுண்ணவெண் சந்தனச் சாந்தும்” என்னும் திருப்பதிகத்தை யெடுத்து ஒவ்வொரு பாட்டினிறுதியிலும் அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்ச வருவதுமில்லை யென்று திருவாய் மலர்ந்தருளினார்.


 "திரமாயுன்ற னடிப்போதிற் செலுத்துமனத்தை யுடையார்கள்
 பரமானந்த சுகம்பெறவா மென்னும் பரிசு தனை யுணர்ந்தே
 உரமார் நாவுக்கர செனும் பேருடையாயனையே வந்தடைந்தார்
 வரமார் மாலோடயன் றுதிக்கும் மணியே யெனக்கு மருளாயே"

 

பொன்னாலியன்ற பட்டத்தை யுடைய புகரணிந்த மத்தகத்தினையும் அணுகுதற்கரிய வலிமையினையும், மணநாறும் மதத்தினையுமுடைய அந்த யானை திருநாவுக்கரசு சுவாமிகளை வலம் வந்து வணங்கிப் பயந்து அப்புறம் போயிற்று. உடனே அதன் மேலிருந்த பாகர்கள் அவ்யானையை அங்குசத்தால் குத்தித் திருப்பிச் சுவாமிகளை மாய்க்க வேண்டிய குறிப்பைக் காட்டஅது அவர்களைக் கீழே தள்ளிக் கொன்றும் பற்பல விடங்களிலுமுள்ள சமணர்களை யெல்லாம் தேடித் தேடித் துவைத்துக் கொன்றும், துன்ப முறுத்தியும் இன்னல் விளைத்தது. அன்றியும் நகரத்திலுள்ளவர்களுக் கெல்லாம் பயங்கரத்தையு முண்டாக்கிற்று.

அதுகண்ட அரசன் துயரக் கடலி லாழ்ந்தான். இங்ஙனம் வெற்றியமைந்த அரசன் துயரக் கடலில் அமிழ்ந்ததைப் பார்த்துச் சமணர்கள் அரசனை நோக்கி வேந்தே நாங்கள் புகலும் மாற்றங்களை யெல்லாம் ஆதரவோடுங் கேட்டருள வேண்டும். இதுகாறும் தருமசேனர் நமது சமய சாஸ்திரங்களில் கற்ற மந்திரத்தின் வலிமையால் நாம் விடுத்த யானையைக் கொண்டே நமக்கெல்லாம் தீங்குபுரிவித்தான். இன்னமும் இவனால் என்ன தீங்குகள் சம்பவிக்குமோவென்று புலம்பிப் புகன்றார்கள். அதுகேட்ட அரசன் நாம் யாது செய்யலாமென்று கேட்டான், சமணர்கள் அவனைக் கல்லோடு கயிற்றாற் கட்டிப் படகி லேற்றிக் கடலிலே தள்ள வேண்டு மென்றார்கள். உடனே உண்மை யறியாதவரசன் அங்கிருந்த கொலைத் தொழிலாளரைக் கூவி இவர்கள் சொல்லியபடிச் செய்யுங்களென்று கட்டளையிட்டான். அவர்கள் அப்படியே செய்தார்கள். அவ்வமயம் எல்லாம் வல்ல இறைவனைத் தம்மிருதயத்திலே யிருத்திய திருநாவுக்கரசு சுவாமிகள் எப்பரிசாயினும் ஆகுக. நான் தந்தையை யேத்துவனென்று 'சொற்றுணை வேதியன்'' என்னும் நமச் சிவாயப் பதிகம் பாடினார். உடனே கடலின் மீது கல்லானது சுவாமிகள் மேற்பக்கத்திலிருக்கத் தெப்பம் போல் மிதந்தது. பிணித்த பாசமும் அறுந்தது. தவஞ் செய்த வருணனும் கருங்கல்லே சிவிகையாகத் தமிழ்த் தெய்வத்தைத் தாங்கிக் கொண்டு திருப்பாதிரிப்புலியூ ரென்னும் திருப்பதியினருகே சேர்ந்தனன். சுவாமிகள் திருக்கோயிலுக்குச் சென்று ஈன்றாளுமா யென்னும் தமிழ்ப்பாமாலை சாற்றிச் சின்னாள் அங்கு அருந்தமிழ்ப் பதிகம் பாடிக்கொண் டிருந்தார்.

 

அருக சமயமென்னுங் கடலைக் கடந்தேறிய திருநாவுக்கரசர் திருவதிகைரட்டானே சுவரரைச் சேவிக்க வேண்டு மென்னும் பெருங்காதலினால் திருப்பாதிரிப்புலியூரை விடுத்துச் சென்று, திருமாணிக் குழியினையும், திருத்தினைநகரையும் கண்டு தொழுது, திருவதிகையைச் சார்ந்தார். அப்பதியிலுள்ள அடியவர்கள் நகரை யலங்கரித்து எதிர்கொண்டு பணிய அவர்களோடு திருக்கோயிலுச்குச் சென்று பெருமானாரை வணங்கி “வெறி விரவு கூவினர்'” என்னும் ஏழைத் திருத்தாண்டகத்தை யோதியும், சிவபெருமானெழுந் தருளிய பலதிருப்பதிகளைப் பாடியும், சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்து கொண்டு மிருந்தார். சமணர்களோடு வாய்மையைத் தெரிந்து கொள்ளாமல் பற்பல தீங்குக ளிழைத்த பல்லவ ராஜன் நாவுக்கரசு சுவாமிகளை வணங்கிச் சைவனாசிப் பாடலிபுரத்தி லிருந்த சமணர் பள்ளிகளையும், பாழிகளையுமிடித்து, அவைகளின் கற்களால் திருவதிகையிலே குணதாலீச்சர மென்னும் திருவாலயத்தைக் கட்டினான். இவை நிற்க கடவுளை யுள்ளே காண வேணு மென்றும், புறம்பே காணவேணுமென்றும் நீ விசாரித்த விடத்து, உன்னுடைய போதத்தையும் சரீரத்தையும் முன்போலவே கைவிடாமை கொண்டு இரண்டு பட்டுத் தோன்றினதொழிந்து, அந்தப் பொருளுக்குத் தனித்தனி ஓரிடமிரா தாகையால், பிண்டப் பிரமாண்டங்களையும், தத்துவங்களையும் ஆன்மபோதத்தையும், உருவதரிசன சுத்திகளாலே அருளாக்கி யொரு நீர்மையான உன்னினைவு யொழிய நிற்கில் அப்பொழுதே யுன்னிடத்திலே பரமசிவன் தன்னுடைய காருண்ணிய சத்தியுடனே கைம்மாறு கருதாமல் தோன்றி யுன்னை யொருதன்மை யாக்கிக் கொண்டு சேர்ந்து திரு ஞானமேயாய் வந்து. தானே பிரகாசியா நிர்பன். இதனைச் சிவயோகத்தின் கண்ணே நின்று ஆராய்ந்து அனுபவிக்கின்றோ மென்கிற தன்மையையுங் கைவிட்டு நிற்பாய். இந்த முறைமையன்றி, சிவனுடைய உண்மையைக் கேட்குதல், நினைக்குதல் காண்குதல், செய்த பொழுதே உன்னுடைய கருத்தை யுருக்குவதான தொரு பேரன்பு கூடுமாயின் அதலே உன்னுடைய கருத்தானது, நேராக அழிந்து சிவனுடனே ஒரு நீர்மையாய் விடுவாயென்னும் ஞான யோகங்களையும் பக்தி யோகங்களையும் கைக்கொள்ள வேண்டுமென்னுஞ் சித்தாந்த சாஸ்திரத்தின் காட்டுக்கு மேற்கோளாய்ச் வெமயமாகவே விளங்கும். திருநாவுக்கரசு சுவாமிகள் சிவத்தல யாத்திரை விரும்பித் திருவெண்ணெய் நல்லூர், திருவா மாத்தூர், திருக் கோவலூர் முதலிய திருப்பதிகளை வணங்கித் தேவாரப் பதிகம் பாடி, திருப்பெண்ணாகட மடைந்து திருத்தூங்கானை மாடமென்னும் ஆலயத்திற்குப் போய்ச் சிவபெருமானைப் பணிந்து எம்பெருமானே அடியேன் ஆகுகத சமயத்தொடக்குண்டு போந்த இவ்வுடலோடு உயிர் வாழத்தரியேன், உயிர் பெற்றிருப்பதற்குற்குத் தேவரீர் திருமுத்திரையாகிய சூலத்தையும் இடபத்தையும் என் மீது பொறித்தருளல் வேண்டுமென்று, பொன்னார் திருவடிக் கொன்று விண்ணப்பமென்னும் திருவருட்பதிகம் பாடினார். பாடினதும் சிவபெருமான் திருவருளால் ஒரு சிவபூதம் ஒருவருக்குத் தெரியாதபடிச் சுவாமிகள் திருத்தோளிடத்தே சூலக்குறியையும் இடபக் குறியையும் பொறித்தியது. வாகீசர் பரமசிவனார் திருவருளை வியந்து விழுந்து வணங்கி யெழுந்து, திருமுதுகுன்றம் முதலிய திருத்தலங்களுக்குச் சென்று சிவதரிசனஞ் செய்து கிழக்கே நிவா நதிக்கரை வழியாகக் கடந்து, சிதம்பரத் தலத்தை யடைந்தார். அடைந்ததும் என்று வந்தாயென்னுங் குறிப்போடு திருத்தாண்டவம் புரியும் நடராஜப் பெருமானைப் பணிந்து ஆனந்தமயமாய் நின்று, கருநட்ட கண்டனை யென்னும், திருவிருத்தத்தையும், பத்தனாய்ப் பாடமாட்டேன் என்னும் திருநேரிசையையும், அன்னம் பாலிக்கும் தில்லையென்னும் திருக்குறுந் தொகையையும், பாடிப்பரவினார். பின்னர் அத்தலத்தினின்றும் திருவேட்களத்துக்குப் போய்ச் சுவாமியைத் தொழுது பதிகம்பாடித் திருக்கழிப்பாலை யென்னும் சிவஸ்தலத்தை யடைந்து சிவதரிசனஞ் செய்து வன பவளவாய் திறந்து என்னும் திருப்பதிகமருளச் சின்னாள் அங்கேதங்கி யிருந்தார். பின்னர் அத்தலத்தை விடுத்து வழியிலே 'பனைக்கை மும்மத வேழ முரித்தவன் என்னும் திருக்குறுந் தொகையை யருளிச்செய்து கொண்டே தில்லையம்பதியைச் சேர்ந்து அரியானை யென்னும் பெரிய திருத்தாண்டகத்தைப் பாடிக்கொண்டு திருவம்பலமேவி சுவாமியைத் தரிசித்துத் தொழுது'' ''செஞ்சடைக்கற்றை" யென்னுந் திருநேரிசைப் பாடினார்.

 

வாகீசப் பெருந்தகையார், சிதம்பரத்திலே திருச்தொண்டுகள் செய்து கொண்டிருந்த நாளில் ஒருநாள் அவர் சீகாழியிலே அம்மையார் ஞானாமிர்தத்தை யுண்ட திருஞானசம்பத்த மூர்த்திச் சுவாமிகளது தெய்வீகச் செயல்களை அடியார்கள் சொல்லக் கேட்டு அத்திருவாளர் சேவடிகளை வணங்க வேண்டுமென்னும் பேராசையால் ஸ்ரீநடராஜப் பெருமானைத் தொழுது விடை பெற்றுத் திருவீதியிலேயே புரண்டு அங்கப் பிரதட்சணஞ் செய்து அத்திருவெல்லையை வணங்கிக் கடந்து, திருநாரையூரைப் பணிந்து பாடிச் சீகாழி யருகே வந்தார். வாகீசர் வருதலைக் கேள்வியுற்ற திருஞானசம்பந்த சுவாமிகள் அடியார்களோடு அவரை யெதிர் கொண்டார். திருநாவுக்கரசு சுவாமிகள் ஞானசம்பந்தப் பெருமானாரது திருவடிகளை வணங்கினார். கௌணியர் பெருமான் அவரது திருக்கரங்களைப் பற்றி யெடுத்து வணங்கி, அப்பரே யென்ன அருளரசர் அடியேன் என்றார்கள். அவர்களிருவரும் எல்லையில்லா ஆனந்த மெய்தி யாலயத்திற்குப் போய் அம்பிகாபதியை வணங்கினார்கள். அது காலை ஆளுடைய பிள்ளையார் அப்பர் சுவாமிகளை நோக்கி யுமது தம்பிரானைப் மாடுமென்ன ஆளுடைய வரசர்'' பார்கொண்டு மூடி” என்னும் திருப்பதி கத்தை யருளி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருமடத்திலே யெழுந் தருளி அப்பிள்ளையாருடன் பலநாளிருந்தார்.

 

இங்ஙனம் வாகீசர் திருஞான சம்பந்த சுவாமிகள் மடத்தில் இருந்து வருகின்ற காலத்தில் சோழநாட்டிலுள்ள தலங்களை யெல்லாம் வணங்கு தற்குக் காதல்கொண்டு பரசமயக் கோனரியாரோடும் திருக்கோலக்காவிற்குப் போய்ச் சிவபெருமானை வணங்கித் துதித்தார். பரசமயக் கோளரியார் சீகாழிக்குக் திரும்பினர். அப்பர் சுவாமிகள் திருக்கருப்பறியலூர், திருப்புன் கூர், திருநீடூர், திருக்குறுக்கை, திருவின்றியூர், திருநனிபள்ளி, திருச்செம் பொன்பள்ளி, திருமயிலாடுதுறை, திருத் துருத்தி, திருவேள்விக்குடி, திருவெதிர்கொள்பாடி, திருக்கோடிக்கா, திருவாவடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேச்சுரம், முதலிய சிவத்தலங்களைத் தரிசித்துப் பதிகம்பாடி, திருச்சத்தி முற்றத்தை அடைந்து, சுவாமி தரிசனஞ் செய்து முடுகியென்னும் திருப் பதிகத்தைத் கோவாய் திருவாய் மலர்ந்தருளினார். அப்பொழுது சிவபெருமான் நல்லூருக்கு வாவென்று திருவாய் மலர்ந்தருளினார். சிவபெருமான் கட்டளையின் படித் திருநாவுக்கரசு சுவாமிகள் திருநல்லூரையடைந்து சுவாமியை வணங்கி மகிழ்ந்தெழுகின்ற வமயத்தில் சிவபெருமான் உன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றுகின்றோ மென்று தமது திருவடித்தாமரைகளை அவர் திருமுடியின் மீது சூட்டியருளினார். சுவாமிகள் உடனே'' நினைந் துருகுமடியாரை கையவைத்தார்' என்னும் 'திருத்தாண்டகம் பாடினார். இன்னும் பற்பல திருப்பதிகங்களையும் அருளிச்செய்து கொண்டே திருக்கருகாவூர், திருவாவூர், திருப்பாலை முதலிய க்ஷேத்திரங்களுக்குப் போய்ச் சுவாமி தரிசனஞ் செய்து கொண்டும் நல்லூரிலேயே சிலநாளிருந்தார்.


 திருவளர் தாமரை சீர்வளர் செங்கழுநீர் கொணெய்தல்
 குருவமர் கோங்கங்குராமகிழ் செண்பகங் கொன்றைவன்னி
 மருவமர் நீள்கொடி மாடமலி மறையோர்க ணல்லூர்
 உருவமர்பாகத் துமையவள் பாகனை யுள் குதுமே.
 செல்லேர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
 வல்லேன் புகவும், மதில் சூழி கங்கையர் காவலனைக்
 கல்லார் முடியொடு தோளிறச் செற்ற கழலடியான்
 நல்லூரிருந்த பிரானல்லனோ ந நம்மையாள்பவனே என.

 

திருச்சிற்றம்பலம்.

 

அத் திருப்பதியினின்றும் திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்பழனத்திற்குப் போய்க் கடவுள் தரிசனஞ் செய்து திங்களூர் வழியாகப் போய்க் கொண்டிருந்த போது அவ்வூரிலே அப்பூதியடிகள் தமது புதல்வருக்குத் திருநாவுக்கரசு என்னும் திருப்பெயரைத் தரித்தும், தமதுஅன்னசாலை, கிணறு, குளம், தண்ணீர்ப் பந்தல் முதலியவற்றைத் திருநாவுக்காசு என்னும் பெயரால் அமைத்தும் இருத்தலைக் கேட்டும் கண்டும் அவரது திருமாளிகைக்குச் சென்றருளினார். அவ்வமயம் திருவமுது செய்யவேண்டுமென்று வேண்ட திருநாவுக்கரசு நாயனாரும் சம்மதித்தார். அப்பூதியடிகள்தம் பெரிய புதல்வராகிய திருநாவுக்கரசை வாழைக்குருத்தைக் கொய்துவரும்படி யேவினார். அப்பிள்ளை வாழைக்குருத்தைக் கொய்யும்போது அரவமொன்று தீண்டிற்று. அதை அவர் சிறிதும் கவனியாது வாழைக் குருத்தைத் தாயார் கையிற் கொடுத்து நிகழ்ந்த விஷயத்தைச் சொல்லி இறந்தார். உடனே சவத்தை மறைத்தும் திருநாவுக்கரசு சுவாமிகள் நிகழ்ந்த விஷயத்தைத் திருவருளாலுணர்ந்து பிணத்தைச் சிவாலயத்தின் முன் கொணர்வித்து ''ஒன்று கொலா'' மென்னும் முதற்குறிப்புள்ள பதிகம் பாடிப் பிள்ளையை உயிர்ப்பித்தார். பின்னர் ஆப்பூதியடிகள் நாயனார் வீட்டில் அமுது செய்து அவ்விடத்தில் சில நாள் தங்கிப் பின்னர் அவ்வூரினின்றும் நீங்கித் திருப்பழனத்தை யடைந்து “சொன்மாலை பயில் கின்ற" என்னும் முதற்குறிப்புள்ள திருப்பதிகத்தைப் பாடியருளி அதிலே அப்பூதி நாயனாரைச் சிறப்பித்து அங்கே எழுந்தருளியிருந்தார். இருந்த போது திருச்சோற்றுத்துறை முதலிய திருப்பதிகளுக்குப் போய்ச் சுவாமி தரிசனஞ் செய்து திரும்புவார்.  நெடு நாள் கழிந்த பின்னர்  தாண்டக வேந்தர் திருநல்லூருக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் பண்ணித் திருத்தொண்டு செய்து வந்தார். செய்து வந்த காலத்தில் திருவாரூரைக் கண்டு தொழுது நல்லூரை விடுத்து நீங்கி, பழயாறை, திருவலஞ்சுழி, கும்பகோணம், நாலூர், திருச்சேறை, திருக்குடலாயில், திருநாறையூர், திருவாஞ்சியம், பெருவேளூர், திருவிளமர் என்னும் திருப்பதிகளைத் தரிசித்துத் திருவாரூரை யடைந்து எதிர் கொண்ட அடியார்களோடு "குலம்பலவாய குண்டர் முன்னே'' என்னும் திருப்பதிகம் பாடிக்கொண்டே திருவீதியினுள்ளே நுழைந்து தேவாசிரிய மண்டப நுழைந்து, புற்றிடங் கொண்ட பெருவாழ்வைக் கண்டு தொழுது, " கற்றவர்கள் கனிக் துண்ணுங்கனியே போற்றி " என்னும் போற்றித் திருத்தாண்டகத்தைப் பாடினார். இன்னும் பல திருப்பதிகங்களை யோதிக் கொண்டு அவ்வூரிலேயே இருந்தார். ஒரு பதிகத்திலே நமிதந்தியடிகள் திருத்தொண்டையுஞ் சிறப்பித்தார். அத் திருவாரூரிலேயுள்ள அரனெறியென்னும் தலத்தைத் தெரிசித்துப் போற்றினார். அப்படியிருக்கு நாட்களிலே திருவலிவலம், கீழ்வேளூர், கன்றாப்பூர் முதலிய திருப்பதிகளுக்குப் போய்ச் சுவாமி தரிசனஞ் செய்து திருவாரூருக்கே திரும்பி விட்டார்.

 

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாதிரைத் திருத்தினத்திலே வீதிவிடங்கப் பெருமாளைத் திருத்தொண்டர்களோடு தரிசித்துக் திருப்புகலூரை யடைந்தார். அது காலை அவ்வூர் முஜகநாயனார் மடத்திலே எழுந்தருளியிருந்த ஆறாடை பின்ளையார் அப்பர் சுவாமிகள் வருதலைக் கேள்வியுற்றுத் திருக் கூட்டத்தோடு எதிர் கொண்டார். அப்பர் சுவாமிகள்ளுடைய பிள்ளையாரை வணங்க, பின்ளையாரும் எதிர் வணங்கி, " அப்பரே நீர் வரும் நாளிகே திருவாரூரிலே நிகழ்ந்த பெருமையை வகுத் துரையும் " என்றார். அவரும் முத்துவிதானம்' என்னும் திருப்பதிகத்தால் விளக்கினார். உடனே ஞானசம்பந்தப் பெருந்தகையார் திருவாரூருக்குச் சென்று சுவாமி தரிசனஞ் செய்து வருவேன் என்று அருளியதும் அப்பர் சுவாமிகள் திருப்புகலூரை யடைந்து சுவாமி தரிசனஞ் செய்து, செய்யர் வெண்ணூலர்' என்னும் தமிழ்ப்பாமாலைகள் சாத்தித் திரு தொண்டுகளியற்றி வந்தார். திருச்செங்காட்டங்குடி, திருநள்ளாறு, சாத்தமங்கை, திருமருகல் என்னும் தலங்களைத் தரிசித்து, திருப்புகலூருக்குத் திரும்பினார். கவுணியர் கோன் திருவாரூரைவிட்டு நீங்கித் திருப்பு ஊருக் கெழுந்தருளினார். அப்பர் சுவாமிகள் அவரை யெதிர்கொண்டழைத்து வந்தார். அந்நாளில் சிறுத்தொண்டநாயனாரும் அத்திரு மடத்தி லெழுந்தருளி யிருந்தார்கள்.

 

சின்னாள் கழிந்தபின்னர் சீகாழிவள்ளலோடு திருத்தாண்டகச் சதூர்புகலூரில் நின்றும் நீங்கி திருவம்பர், திருக்கடவூர் முதலிய க்ஷேத்திரங்களுக்குப் போய்ச் சுவாமி தரிசனஞ் செய்து திருவீழிமழலை யடைந்து பேரானையென்னுந் திருத்தாண்டகத்தை யோதி அங்கே தங்கியிருந்தார். சில நாள் சென்ற பின் அங்கு மாரி சுருங்கிய படியாலும், காவேரி வற்றியபடியாலும், பெரும் பஞ்சம் உண்டாகி உயிர்களை வருத்தியது. அதனைப் போக்குதற்குச் சிவபெருமான் திருஞான சம்பந்த சுவாமிகளுக்கும் திருநாவுக்கரசுசுவாமிகளுக்கும் முன்பாகத் தோன்றி, “கலல் நிலைமையால் நீங்கள் மனவாட்டம் அடையீர்கள். ஆயினும் உங்களை வழிபடும் தொண்டர்களுக்காக உங்களுக்குப் படிக்காசு தருகின்றோ' மென்று கூறி ஆலயத்தின் கிழக்குப்பீடத்திலும் மேற்குப் பீடத்திலும் நாடோறும் படிக்காசு வைத்தருளினார். அவ் விருவர்களும் அரனருளால் பெற்ற படிக்காசுகளால் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தார்கள். திருஞான சம்பந்தர் சிவகுமார் ஆகலானும் பாடல் தொண்டை மாத்திரம் செய்தமையாலும் வாசியிலாக் காசி பெற்று வந்தார். சிவனடியார்கள் துன்பமின்றித் திருவமுது செய்து மனமகிழ்ந்திருக்கு நாளில் பஞ்சம் நீங்கிற்று. அப்பர் சுவாமிகளும் ஆளுடையபிள்ளையாரும் திருவீழிமிழலை விடுத்துத் திருவாஞ்சிய முதலிய பதிகளைத் தரிசித்துத் திருமறைக் காட்டை யடைந்து வேதங்கள் பூசித்துச் சாத்தப்பட்ட ஆலயத்தின் கதவுகளை இருவரும் திறக்கவும் மூடவும் பாடி யாவரும் என்றும் பணிந்து வணங்கும்படிச் செய்தார்கள். பின்னர் சைவப்பெருந்தகையாளர்களாகிய அவ்விருவரும் மடத்தை யடைந்தார்கள். திருநாவுக்கரசு சுவாமிகளுக்குப் பதிகத்தின் இறுதியில் கதவு திறக்கப்பட்ட அருமையும் திருஞான சம்பந்தப் பெருமானுக்குப் பதிகத் தொடக்கத்திலேயே கதவு அடைக்கப் பட்ட எளிமையையும் கருதிக்கவன்று நித்திரை செய்தார். அவ்வமயம் சிவபெருமான் தரிசனந் தந்தருளி நாம் வாய்மூரிலிருப்போம் தொடா வாவென்று கூறி மறைந்தருளினார். திருநாவுக்கரசுசுவாமிகள் சிவபெருமான் கட்டளைப்படித் திருவாமூருக்குச் சென்றார். திருநாவுக்கரசர் திருவாய் மூருக்குச் சென்றதை யறிந்து திருஞான சம்பந்தசுவாமிகளும் வந்து சேர்ந்தார். அப்போது திருநாவுக்கரசு சுவாமியைப்பார்த்து எனக்குத் திருவுருவை மறைக்கலாம். ஒரு திருப்பாட்டாலேயே திருக்கதவை அடைப்பித்த ஞான சம்பந்தர் இவ்விடம் வந்திருக்கின்றார். அவருக்கு எங்ஙனம் மரை றைப்பது? என்றார். சிவபெருமான் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்குத் தரிசனந் தந்தார். அவர் கண்டு தொழுது அப்பர் சுவாமிகளுக்குக் காட்ட அவர் தரிசித்து ''பாடவடியார்" என்னும் திருதாண்டகத்தைப் பாடியருளினார்.

 

பின்னர் இருவர்களும் சில நாள் அங்கிருந்து வேதாரண்ணிய மடைந்தார்கள். அந்தாளில் திருஞான சம்பந்தர் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும் அனுப்பிய தூதுவர்களால் பாண்டிய நாடு முழுவதும் சமண சமயமாயிருப்பதை யறிந்து சைவ சமயமாக்கக் திருநாவுக்கரசு சுவாமிகள் தடுத்துங் கேளாதவராய்த் தமிழ் நாட்டிற்குப் புறப்பட்டார். வாகீசர் திருமறைக் காட்டில் நின்றும் நீங்கி, திருநாகைக்காரோணம், திருவீழிமிழலை முதலிய திருப்பதிகளைத் தரிசித்துத் திருவாவடுதுறை யடைந்து சுவாமி தரிசனஞ் செய்து திருப்பழையாறை யென்னுந் திருப்பதிக்குச் சென்றார். அப்பதியில் வடதளி யென்னும் சிவாலயத்திலெழுந்தருளியுள்ள சிவபெருமானைச் சமணர்கள் மறைத் திருத்தலைக் கேள்விப் பட்டுச் சிவபெருமான் திருவடிகளைத் தியானிக்கச் சிவபெருமான் அரசனுக்குத் தாமிருக்கும் இடத்தைக் குறிப்பித்துக் காட்டக் கண்டு திருநாவுக்கரசு சுவாமிகளையும் வணங்கிச் சிவபெருமானுக்கு விமானம் அமைத்தும் ஆலயத் திருப்பணிகளை யியற்றியும் வந்தனர். அப்பர் சுவாமிகள் சந்நிதியடைந்து சிவபெருமானைக் கண்டு தொழுது, "தலையெலாம்'' என்று திருப்பகம்பாடி அங்குத் திருத் தொண்டு செய்திருந்தார். பின் அப்பதியை விட்டுத் திருவானைக்கா திருவெறும்பியூர், திரிச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை என்னுந் திருத்தலங்களைத் தரிசித்துத் திருப்பைஞ்ஜீலியை நோக்கிப் பசியாலும் தாகத்தாலும் மிகவாடியும் சித்த மலையாது நடந்தார். அருட்கடலாகிய அம்பிகாபதி அடியவர் பசியைத் தீர்க்கும் பொருட்டுச் சோலையும் குளமும் உண்டாக்கி ஒரு சிவ வேதியர். கோலந்தாங்கிப் பொதி சோறு வைத்துக் கொண்டிருந்து தாண்டக வேந்தர் அருகேவந்து, “ நீர் பசித் திருக்கின்றீர்; என்னிடம் பொதி சோறிருப்பதை யுண்டு இக் குளத்தில் தண்ணீர் அருந்தி இளைப்பு நீங்கு'' மென்றார். திருநாவுக்கரசும் அவ்வாறே செய்த பின் வேதியராகிய சிவன் அப்பரை நோக்கி 'நீர் எவ்விடம் போகின்றீர்?' என்றுவினவ, நாயனார் நான் திருப்பைஞ்ஜீலிக்குப் போகின்றே னென்றார். அந்தணர் நானும் அப்பதிக்கே போகின்றேனென்று அடியவர் பெருமானுடன் சென்று திருப்பைஞ்ஜீலியைக் குறுகியதும் மறைந்தருளினார். திருநாவுக்கரசு சுவாமிகள் திருக்கருணையை வியந்து, திருகோயிலுட் சென்று, சிவதரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடித் தொண்டை மண்டலத்தையடைந்து திருவோத்தூரைத் தரிசித்துக் காஞ்சிபுரத்துக்குப் போய்த் திருவேகம்பம், திருக்கச்சி மயானம், திருமாற்பேறு, முதலிய திருத்தலங்களைப்பணிந்து பதிகம் பாடி, திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருமயிலாப்பூர் திருவொற்றியூர், திருப்பாசூர், திருவாலங்காடு, திருக்காரிக்கரை என்னுந் திருப்பதிகளைத் தரிசித்துப் பதிகம் பாடிக் கண்ணப்ப நாயனார் திருவடிக்களை வணங்கி அங்கே தங்கி யிருந்தார்.

 

பிறகு வாகீசர் கயிலை மலையில் கண்ணுதற்பிரான் பார்வதியாரோடு எழுந்தருளிய கோலத்தைப் பார்த்துப் பணிய விரும்பி திருக்காளத்தியினின்றும் நீங்கி, ஸ்ரீ. சைலத்தைத் தரிசித்துத் தமிழ் வேதம் பாடி, தெலுங்கு, கன்னடம் மாளவ முதலிய தேசங்களையும் பல நதிகளையும் நதிகளையும் வனங்களையும் கடந்து, காசியைக் கண் பணிந்து தம்முடன் வந்தவர்களை அங்கே நிறுத்திச் சமூகமூல பலங்களை உண்பதையுந் தவிர்த்து, கற்சுரத்திலே இரவும் பகலுமாய் நடந்ததால் பாதங்கள் தேய்ந்தன. தேய்ந்தும் அவ்வெப்பாலை நிலத்தில் கைகளால் தாவிச்சென்றார். கைகளும் கரைந்து சிதைந்தன. கயிலையங்கிரியைத் தரிசிக்க வேண்டுமென்னும் அளவிலாசை பொங்கி யெழப் பருக்கைக் கற்கள் நிறைந்த வழியிலே மார்பினால் நகர்ந்தார். மார்பும் நைந்து தேய எலும்புகள் முறிந்தன. பின்னர் உயிர்களுக்காகப் புரண்டு புரண்டு சென்றனர். உடலுந் தேய்ந்தது. கைபிலையைத் தரிசிக்கவேண்டுமென்று மெதுவாக நகர்ந்து செல்ல முயன்றார். முயன்றும் முடியாமல் செயலற்றவராய் வழியிலே கிடந்தார். அதுகாலை அருளையே திருமேனியாகவுடைய பிரான் திருநாவுக்கரசு சுவாமிகளை மீளவும் தமிழ் வேதம் பாடுவித்து உலகை உய்விக்கத் திருவுளங்கொண்டு நாயனார் முன்னே வந்து நீர் உறுப்புக்களெல்லாம் அழிந்திட வருந்தி அக்கினியிலும் கொடிய இவ்வெங்கானகத்தில் எதற்காக வந்தீர்'? என்றார். வாகீசர் அம்முனிவரைக் கண்டவுடன் தமக்குப் பேசு முணர்வு சிறிது தோன்ற முனிவரே கயிலையில் மலைமகளோடு மாதேவன் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் கண்டு தொழவந்தே' னென்றார். கயிலையங்கிரியை எளிதிலடைவீரோ நீர் திரும்புதல் நலம் என்ன, தாண்டக வேந்தர் கயிலையில் எழுந்தருளியுள்ள இறைவர் திருக்கோலத்தைத் தரிசியாது அழியும் இவ்வுடல் கொண்டு திரும்பேனென்று மறுத்தார். சிவபெருமான் அடியார் உறுதியை அறிந்து ஆகாயத்திலே அசரீராய் 'நாவுக்கரசனே எழுந்திரும்' என்றார்.

ஆனந்த போதினி – 1929, 1930 ௵ -

ஆகஸ்டு, அக்டோபர், நவம்பர், ஜனவரி, மே, ௴

No comments:

Post a Comment