Wednesday, September 2, 2020

 

திருத்தம் செய்வார்க்கு

(M. A. தேவராஜன்)

"......... கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தின் முன் றோன்றி மூத்தகுடி வாழ்வினால் மொய்ம்புகழ் உடையவர் முத்தமிழ் மக்கள். படைப்புக் காலந் தொட்டு உடைப் பெருஞ் செல்வராய்ச் சீருஞ் சிறப்பும் ஆரத்திக்கெட்டினும் புகழ் மிக்க செங்கோல் ஓச்சி மூவேந்தரின் காலத்தின் முன்னமே தமிழரிடம் இலக்கண இலக்கியம் நிரம்பிய நூல் பல நிறைந்திருந்தன. இயற்கையின் நுட்பமும், திட்பமும், மற்றதன் இயல்பும் இயற்கையோ டினிதுறைந்து வாழ்ந்து, அங்கை நெல்லி என எங்குங் கண்ட தமிழர், அவ் வரும் பெறல் உண்மைகளைத் தம் பேரறிவினால் உணர்ந்து, “யாம் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்'' என உலகிற்கு, நூல் வடிவில் இலக்கியங்களாக இனிது யாத்தளித்தனர். இவ்வா றியாத்த இலக்கியங்கட்கோர் செவ்வாற்றில் என்றும், யாண்டும், நின்று நிலவுமாறு, மொழி நூல் மிக வல்ல அழிவில் அகத்தியரும், ஒல்காப் புகழ்பெருந் தொல்காப்பியரும், இருபேர் இலக்கணம் இனிதுதவிப் போந்தனர் என்ப. வசைதீர நன்றாய்ந்து இசைபெறும் இனிய தமிழிலக்கணம். பின்னர்ப் பெரிதுந் திரியாத வண்ணம் முன்னோர் அதனை முடிந்த முடிபாய் யாத்துச் சென்றனர் என்க. எனவே, பின்னர்ப் போந்த பேரறிஞர்களும், பன்மொழிக் கடல் மூழ்கிய பவணந்தி போன்றாரும் பின் மொழிந்த தம் எளிய இனிய இலக்கணத்தும், பெரிதும் ''முன்னோர் நூலின் முடிபொருள் கொத்துப் பின்னாள் வேண்டு சில விகற்பமும் கிளந்து அழியா மரபின் வழி நூல்” அளித்தனர். இக் கூறிய முடிபனைத்தும் யாண்டும், எவரும் ஒப்ப முடிந்த உண்மைகளாகும்.

ஆயின், இந்நாள் “...............இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” எனப் புதுவை. புதுமைக் கவியரசர் பாரதி தாசனார் போன்றோர் சீர்திருத்தம் விழைவானேன்?
எனலாம் அன்றே? நன்று; பாரதியார், பாரதி தாசனார் போன்ற இக் காலக் கவியரசர் இனி வேண்டும் இலக்கணம், முது விலக்கணம் தம்மை முற்றும் ஒழித்துப் புதியதாய்ச் செய்யு மோர் இலக்கணம் அன்று காண். என்னை? பழந்தமிழ் இலக்கணம் பரண்மேற் றூங்க, கொழுந்தமிழ்ச் சுவை கெடக் கொழித்த புராண இடை-நூற்றாண்டில், பிறநாட் டிலக்கணத்தைப் பெரிதும் தழுவி நம் தமிழ் இலக்கணத்துள் ஜாதி கற்பித்தும், பிறர் அறியாவாறு தமிழர்க்கு முற்றிலும் முரணான பாட்டணி யியலும், பிறவும் நீட்டி, “ஒருத்தர் தயை இல்லாமல் ஊர் அறிந்த” தமிழுக்குப் பதிலாக, கற்று வல்ல கவிஞரும் தெற்றென உணராது திண்டாடும் விதமாய் கட்டிய போலி யிலக்கணமே சாலவும் நீக்கிப் பழந் தமிழ்ப் புதுநெறி யிலக்கணம் வேண்டி நிற்பவர் அவர் ஆகலான் என்க.

எனவே, இக்காலத்தில், ஏறத் தாழ மூவாயிரம் ஆண்டிற்கு முன்
னமே முற்றுப்பெற்ற தமிழ் இலக்கணத்தை முதல்வன் போலத் திருத்த
முற்படுவது முற்றும் வியப்பிற் குரியதொரு பிள்ளை விளையாட்டேயாம்.

இஃ திங்ஙனமாக, நம் மினிய “ஆனந்தபோதினி''யில் சில திங்களாக “எது தமிழ்த் தொண்டு?'' என்பது குறித்து, ஒரு சிலர், வெவ்வேறு கருத்துட்கொண்டு எழுதி வந்தமை நம் அன்பர்கள் அறிந்த ஒன்றாம். அஃதாவதிது: நம் மதிப்பிற்கு உரியவரும், அறிஞரும் ஆகிய உயர் திரு. T. K. சிதம்பரநாத முதலியா ரவர்கள் தாம் புதிதாக ஒருண்மை கண்டு
பிடித்து விட்டதாய் மனப்பாற் குடித்துக்கொண்டு, “கல்கி” எனும் ஒரு வெளியீட்டில் எழுதி வரும் இலக்கணத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு (தமிழ்) நடையைத் தகைந்து S. நாராயணனார் மறத்தெழுதலும், சீறிச் சினந்து, அவரொடு மாறுகொண்டு, மறுப்புக்கு மறுப்பாய்ப் பொறுப்பில்லாமல், “இது தான் தமிழ்த் தொண்டு!" என இரகுநாதனார் கழறியதும், அதற்குத் தகுதியான செவ்வன் இறையாக, S. பழநியப்பனார் தடை விடைகளான் ஆன்றோர் சென்ற சான்றதெறி யுண்மை காட்டி அறைந்ததும், அதற்குப் பின் இரு திங்களாய்ச் சொற்போர் ஓய்ந்திருப்பதும் அன்பர்கள் அறிந்ததே.

இவை யெல்லாம் கூர்ந்து நோக்கிய அறிஞர்கள் உண்மை எது? என்று திண்ணமாய் உணர்ந்திருப்பர். எனினும், இப்போரின் முடிபு தாம் யாதென நம் இதழாசிரியரும், T. K. சியும் ஒன்றும் உரையாது நின்றமையின், எம் போன்றோர் உள்ளத் தெழுந்த ஐயம் நீங்கிற்றில்லை. எனவே உண்மைநாடி T. K. சி. முதலியார் தமக்கே இதனை, உண்மை தெரிக்குமாறு விண்ணப்பமாய்ச் சமர்ப்பிக்கின்றேன். என்னை? T. K. சி. முதலியார், குற்றங்களையும் பெற்றியும், வழூஉக்களைத் திருத்தம் செய்யும் குழூஉக்களின் றலையானவர் என்றும் "குரு” என்பார் “நிழ லருமை வெய்யிலிலே''
என்ற கட்டுரையில் எடுத்துக் காட்டின மூலம் இனிது அறிவித்தமையின் திருத்தம் செய்வார்க்கு இச் சிறு விண்ணப்பம் செய்கின்றேன். இடையே என் எண்ணமும் எழுத நினைக்கின்றேன். வல்லுநர் உண்மையைச் சொல்வார்களாக! இனி, சற்றே இரகுநாதனாரின் வாதங்களை ஆராய்வாம்.

T. K. சி. முதலியார், ளகார, லகாரங்கட்கு முன்னால், வரும் வல்லினம் மிகும் என்ற "*புத்துண்மைப் போலிவிதி "யினால்

* புத்துண்மைப் போலி: உண்மையே போல் ஏமாந்த மாந்தரை மயக்குவது. எடுத்துக் காட்டு: - ஐ=அய்; ஒள=அவ்; எனவும், ஐ=அஇ; ஔ=அஉ; எனவும், ஒலியினால் ஒன்றுபட்டு மயக்கம் தருவது. இதனை நன்றுணரார், எழுதுங் காலையும் அவ்வை, அவுஅஇ; கலைய்; என்றெலாம் மயங்கி எழுதுவர். இவை முறையன்று, முறை யென்போர் பெரிபார் ஈ.வே.ரா. வின் வரி வடிவ ஆய்வினை எதிர்ப்பது அறிவின்மையாம். இலக்கண விளக்கத்தில் இப்போலியை விரிவாய்க் காண்க.

(1)    நற்றாமரை        எனற்பாலதை,      நல்த் தாமரை      என்றும்,

      முட்டாமரை       எனற்பாலதை,      முள்த்தாமரை      என்றும்,

(2)    நூற்கடல்          எனற்பாலதை,      நூல்கடல்          என்றும்,

      கட்குடம்          எனற்பாலதை,      கள்க்குடம்         என்றும்,

(3)    மற்போர்          எனற்பாலதை,      மல்ப்போர்         என்றும்,

      எட்புனல்          எனற்பாலதை,      எள்ப்புனல்         என்றும்,

(4)    விற்சமர்          எனற்பாலதை,      வில்ச்சமர்         என்றும்,

      முட்செடி          எனற்பாலதை,      முள்ச்செடி         என்றும்

 

எழுதும் பான்மையிற் புகழ்க் கம்பன் இராம காதையைத் திருத்துவாராயினார். இதற்கு இவர் எங்குச் கண்டாரோ புது அல்லது முது விதி? “யாழ முன்னர் கசதப” என வரூஉம் விதியைக் கண்டு, இடையின எழுத்தாறனுள், யாழ எனும் மூன்றனுக்கும் பொருந்தும் விதியை ஒரே இனமான ல, ள, வுக்கும் பொருத்தினாரோ? அற்றேல், அப் பொருத்தம் வகரத்திற்கு வாரா தொழியு மன்றே? எனவே இம்முறை சரி யன்று. மற்றொருகால், படித்தறியாத பாமரமக்கள் பலரும் இவ்விதமே மயங்கி எழுதுவதனால், பெரும்பான்மை நோக்கி இதனை ''உலகத்தோ டொட்ட ஒழுகி” த் தம்மைக் கற்றவராகவே எவரும் கருதும்படிச் செய்யத் தலைப்பட்டனரோ அறியேன், எப்படியாயினும், ஒரு புதுமுறையை உலக நடையிற் கொணரத் துணிந்த இவர், முன்னரே, தமிழ்க்கு வேந்தர்களா யின்று மிளிரும் மறைமலையடிகள், பண்டிதமணி, நா.மு.வே. நாட்டார் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் தம் முன் உசாவி ஒரு முடிபுக்கு வந்திருத்தல் வேண்டும். இன்றேல், உலகப் பொது அறிஞர் ஆதரவு பெறவாவது எல்லா வெளியீட்டிலும் ஓர் அறிக்கை விட்டிருத்தல் வேண்டும். ஆனால், இவர் மேற்குறித்த நேரிய வழியை நினையாது, அண்மையில் தோன்றிய தம் நண்பரின் 'கல்கி' வெளியீட்டில் எழுதத் துணிந்தது நன்றென நவிலேன். இதனால், "பொய்படும் ஒன்றோ-" என வரூஉம் குறட்கு இன்று இலக்கியம் கண்டேன்
என்றனர் S. நாராயணனார். இதனை நோக்குங்கால், “சந்தைக் கடைகளிலும், நாற் சந்தி தெருக்களிலும், எது கலகலெனச் செல்லுபடியாகிறதோ அதுவே தமிழ்” என்றும், “போஜனம் ஆயிற்றா?" என்பதும் 100-க்கு 75- விழுக்காடு வட சொல்லைகக் கலந்து மணிப்பிரவாள நடையிற் பேசுவதும், 'சோறு தின்றாயா’ என்பதும் ‘தமிழ்மரபு' என்றும் உண்மை யறிந்து வைத்தும் அஞ்சாது நெஞ்சழுத்தங் கொண்டு, ''விளக்கற்றம் பார்க்கும் இருளே போல், தமிழர் ஏமாறுங் காலம் என்று? என்று வஞ்சகமா யெதிர்நோக்கிக் காலங்
கிடைக்கும்போது சிறுகச் சிறுகத் தமிழ்க் கொலை செய்யும் இக்காலத் தமிழ்ப் பெருமக்கட்கும் இவர்க்கும் வேறுபாடில்லை என்றே துணிகின்றேன்!

நிற்க. முதலியார் அவர்கட்குத் துணையாக வந்த இரகுநாதனார், முற்றும் கட்சி வேற்றுமைக் கருத்துட்கொண்டே வாதிக்க முற்பட்டார் என்பேன். ஏனெனனிற் கூறுவேன்:

தொல்காப்பியத்திலும், நன்னூலிலும், இலக்கண விளக்கத்திலும், “ல, ள, வேற்றுமையில் ற, டவும், அல்வழி அவற்றோடு உறழ்வும், வலி வரின் ஆம்" என்றும், “ன, ல, முன் ற, ன வும், ன, எ முன் ட, ண வும் ஆகும். த, நக்கள் ஆயுங்காலே”
 என்றுமே முடிபொருக்கு ஒத்து உரையா நிற்கவும், ஒல்காப் புகழ்பெறு தொல்காப்பியர் முதல் - ஏன்? குமரம் உண்டாய கால முதல் - இன்று சிறு பள்ளியில் சென்று பயில் தமிழ்
மாணவர் வரைக்கும் யாவரும் இம்முறை யுண்மையாய் ஏற்றுக்கொண்டு போற்றதக்கதென் றுட்கொண்டு பயிலாநிற்கவும், இவற்றையும் நோக்காது "முன்னோர் மொழி பொருளேயன்றி யவர் மொழியும் பொன்னே போல் போற்றாது; ஒலி, மொழி, தமிழ் இலக்கணமும், அவற்றியல்பும் உணராதார் போன்று எழுதி யதனைத் தகுதியுடையதெனக் கூற முன் வந்ததும், அன்றி, தக்க சான் றொன்றும்,-" ஆட்சியில், ஆவணத்தில், அன்றி
மற் றயலார் தங்கட் காட்சியில்'' ஒன்றும் காட்டாது, பொது விதியும், சிறப்பு விதியும் பொலிந்து கிடக்கவும் அவற்றைக் கொள்ளாது, இயல், அதிகாரம் என்பனவற்றின் புற நடைகளையும் ஏற்காமற் றள்ளிவிட்டு, எல்லா நூற்கும் ஏற்குமா றமைத்த நூற் புறநடை விதியை புணரியலுக்கு ஏற்புடைத்தாக் கொண்டு, வேறுவழி யின்மை பின் குருடனுக் கோர் கோல் கிடைத்தால் எனக் கிடைத்த அவ் விதியைப் போற்றுகின்றனர். எனவே, இவர் கூற்று, வேறு எதிர்ப்பார் இலானும் தானே விழுந்த துணர்க.

அன்றியும், இவர் கூறிய புற நடையையே, வழுக்கி விழுந்தொறும் கொண்டமைவோ மாயின், தமிழ், தமிழர், தமிழ் நாடு எவ்வா றிழிவறும் என்று யான் இனியம் இயம்ப வேண்டுமோ? மற்றும், அப் புறநடைதானும், ஈண்டுத் தவறுடைத்து அவர் காட்டிய நெறியில் என்க. என்னை? பொதுவியற் புற நடை விதியாகிய,

“எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அவ்வாறு செப்புதல் மரபு”

 

விதியால், மரபுக்கு மாறாகப் புணர்வது மரபு வழுவாம் என்று மறுக்க இவர் வாதம் இடர் தந்தமையின் என்க.

மேலும், “பழையன கழிதலும், புதியன புததலும் வழுவல கால வகையினானே'' என்றே புமநடை யோதினர்; ஆதலின், பழைய முறை தாம், தாமே வழக்கு மிகுதியின்மையின் அருகிக் கழிய, அவ்விடத்தே கால வேறுபாட்டால் புதிய முறையும் வழக்கு மிகுதியினால் புகுதலே வழுவல் என்றனரன்றிப் பழையன கழித்தலும்,
புதியன புதத்தலும் வழுவல என்றோதினாரில்லை. மற்று, அவ்வாறு செவ்வாற்றுக் கெதிரிடையாக, பழையன கழித்தும், புதியன புகுத்தியும் எழுதியும் பேசியும் வருவது ஒரு
பெரும் பிழையென உய்த்துணர வைத்தார். தன் வினை வாய்பாடு தந்தமையால் என்க.
எனவே, இரகுநாதனார் காட்டிய விதி ஈண்டுப் பொருத்தமின்றி வெற்றெனத் தொடுத்த குற்றமாயிற்றென ஒதுக்குக;

மற்றும், இவர் ''ஓதி யுணர்ந்தும், பிறர்க் குரைத்தும் தாமடங்கா” து, இவர் தம் இலக்கணாசிரியர் ஆகிய T.K.சி.ஐப் போல, வேண்டுழி மட்டும் திருத்தியும் வேண்டாவிடத்து ஒதுக்கியும் எழுதவும் பழகாமல், தாம் நிலை நாட்ட வந்த விதியைத் தம் கட்டுரையிலும் எடுத்தாண்டு நம்மனோர்க்கு வழி காட்டவும் இல்லை. என்னை? அஃதவர்க்கு இதுவரையும் பழக்கம் இன்மையின் என்க, எனவே, தாம் கூறிய விதியே தாம் பயிலாமை, இவர் கூற்று, குற்றமுடைத்தெனத் தெற்றென விளக்கி, இவர் உரை வாய்ச் சொல்லில் வீரர் உரையாகவே நின்று பயனின்றிக் கழிந்ததது என்று மறுத்திடுக.

மேலும், எழுத்துக்களைப் புணர்ச்சிவழிக் கூட்டி எழுதினால், பொருண் மயக்கம் உண்டாகிறது என, ஒரு எடுத்துக் காட்டால் விளக்கினர். உண்மை.

ஆங்கிலத்தில், உச்சரிப்பிலும், எழுத்து கூட்டுவதிலும், சிறு பிழை நேரினும், இலக்கணத்தில்,

He writes என்பதை He write என்றும்,

They are writing என்பதை They is writing என்றும்,

You are writing என்பதை You is writing என்றும்,

I am writing என்பதை I is (are) writing என்றும்

 

மறந் தெழுதினாலும், எழுதினோன் இளைஞனாய் இருப்பினும் அவனை வெகுளிச் சிரிப்பினொடு எள்ளி நகையாடும் மானமிலாத் தமிழறிஞர் ஒரு சிலர், தம் தாய் மொழியாம் தமிழிலக்கணத்தை - இயற்கையொடு பொருந்திய இலக்கணத்தை - ஒரு சிறிதும் அறியாது, தமிழ் நூல்களை மதியாது தருக்குடன் அவற்றைப் படித்தால் பொருள் விளங்காது எனப் பொய் யுரைப்பதும், இலக்கணம் என்றால் இருகாதம் பறப்பதும், தமிழாசிரியரைக்
கண்டால் “நையாண்டி” செய்வதும், ஆக இருந்தால் அது யாருடைய குற்றம்? “அறுசுவை யுண்டி யமர்ந் தில்லா ளூட்ட மறுசிகை நீக்கி யுண்ண” த் தகும் பெருஞ்செல்வன், தன் வாழ்க்கை யின்பத் துன்பங்களைச் சமமாய்ப் பங்கிட்டுத் துய்த்துத் துணை செய்யக் காத்திருக்கும் கற்பின் நல்லாளைக் கண்னெடுத்துப் பாராது, வேசையர் ஆசையால் வீழ்ச்சி
யுற்றுப் பின் அலமரும் வீணன் போலவும், வாலுகம் கிடந்த பூஞ்சோலை கிடப்பவும், வெம்பாலையிற் சென்று ஓலம் இடும் அறிவிலான் போலவும், தமிழினை நன்கு கல்லாது கட்டிய வீட்டுக்கு எட்டுக் குற்றம் கூறி வருபவர் அறிஞர் ஆவரோ? எனவே, இவர் வாதம் தர்க்க முறைப்படி யில்லையென் றொழித்துச் செல்க.

மேலும், முட்டாட் டாமரை என்றால், பொருள் தெரியவில்லை எனின் முள் தாமரை என்று இயல்பாக மொழிவதே முறையாகும். அங்ஙனமின்றி, முள்த் தாமரை எனல் எங்கனம் பொருந்தும்? புணர்ச்சி விதியாற் பொருள் விளங்கவில்லையென்று கூறுபவர், மீண்டும் தாம் ஒரு புணர்ச்சிவிதி கூறுவது “குருடும் குருடும் குருட்டாட்ட மாடிக் குருடும்
குருடும் குழிவிழி மாறே” ஒக்கும் என்பேன்.

அன்றியும் T.K.சி. சொல்வதை அப்படியே ஒப்புக்கொண்டால், பெரியார் தமிழ் வரி வடிவ ஆராய்ச்சி முடிபுகளையும் ஏற்கத்தான் வேண்டும். ஆனால், ஈ.வே.ரா. ஆராய்ச்சியால் ஒரு சில நன்மைகள் எய்தும் நிலை இருந்தும், அன்று அவரைக் கண்டித்தவர் எத்துணைப் பேர்? இன்றும், அவர் காட்டிய வழியை, ச. ம. தமிழர்த் தவிர்த்து வேறியார் பின்பற்றுகின்றனர்? அவ்வாறிருக்க ஒரு நன்மைக்கும் உதவா இப் புது முறைப் புணர்ச்சியைக் கண்டித்தது எவ்வாறு குற்றமாகும்? இக் கூறிய மாற்றங்களால் இரகுநாதனார் வாதம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பது வெள்ளிடை மலை என்க.

நிற்க. திருவாரூர். வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்க மூலமும் உரையும் அண்மையில் யான் பயின்று வருங்கால், ஒரு புதிய புணர்ச்சிமுறை அதனுட் போதால் கண்டேன். அம்முறையும் அறிஞர் தம் ஆய்வுக் குரியதாகையின் ஈண்டு வெளியிடுகின்றேன். இலக்கணம் வல்லாரும், T. K. சி. முதலியாரும் ஏனையறிஞர்களும் உண்மை கண்டு தெரிக்க வேண்டுகின்றேன்.

இவ் விலக்கணம், அழியக் கிடந்த பல இனிய தமிழ் நூல்களை வெளியிட்ட பெருமைக் குரிய யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளை யவர்களால் அச்சிற் புலவர்கள் மெச்சுமாறு பதிப்பிக்கப்பெற்றது. இவ்விலக்கண விதிக்கு மாறாக முன்னுரை தொடங்கிப் பல்லிடங்களிலும் கீழ்க் கண்டவாறு: -

"பொருள் தரத்தக்கதாகலாற் தொகையார் பொருள்''

                                                (பதிப்புரை. பக்கம் 13. வரி 3)

“'மனத்தாற் துணிவு தோன்ற"     -                 (எழுத்து. பக்கம். 10. வரி, 4.)

*தலையாற் திணிவு தோன்ற"     -                 (எழுத்து. பக்கம். 10. வரி, 5.)

"அவற்றுட் திரிந்ததன் றிரிபு"      -                 (எழுத்து. பக்கம். 11. வரி, 7.)

"இது மேற் தொகையான் ஒன்றாக -                (எழுத்து. பக்கம். 29. வரி, 4.)

                                          -      (எழுத்து. பக்கம். 12. வரி, 10.)

"பகுதியுங் கூட்ட விரியாற் றமிழ் எழுத்து -         (எழுத்து. பக்கம். 12. வரி, 24.)

“பின்ன ரொருவாற்றாற் தழுவுதலானும் -           (எழுத்து. பக்கம். 12. வரி, 31.)

“மொழிமுதற்கட் தனித்துவரிற் சுட்டு -              (எழுத்து. பக்கம். 14. வரி, 17.)

“நெறிப்பட என்றதனாற் தம்மிற் சேர்ந்து” -          (எழுத்து. பக்கம். 16. வரி, 32.)

மேற் போந்தவாறு சில பல இடங்களில் உள. இவைபோலின்றி வேறு சில விடங்களில் சேரிய முறைபிலும் வwது பயின்றுள,

“ஆய்த மென்றற் றொடக்கத்து''   -                 (எழுத்து. பக்கம். 15. வரி, 8.)

“தனிநிலை என்றற் றொடக்கத்து  -                 (எழுத்து. பக்கம். 15. வரி, 9.)

''னடத்தறானே"-"நடத்தமுனே” -                     (எழுத்து. பக்கம். 16.24 & 30.)

"பகவன் முதற்றே உலகு” -                        (எழுத்து. பக்கம். 17. வரி, 29.)

“அம்மொழியிற் றீர்ந்து” -                          (எழுத்து. பக்கம். 23. வரி, 30.)

      ஈண்டுக் காட்டிய எடுத்துக் காட்டினால் உண்மை யாதென உணம் முடியாமற் றவிக்க நேர்கிறோம். முன்னர்க் காட்டப்பெற்றவை பின்னர்க் காட்டப்பெற்ற நேரிய வழிக்கும் மாறாகவும், T. K. சி. முதலியார் எழுதுர புது வழிக்கும் மாறாகவும் இருத்தல் காண்க. இவை, ஒருகால், அச்சுப் பிழையோ எனின். பிற் சேர்க்கையான திருத்தப்பட்டியிலும் திருத்தம் பெறவில்லை. எனவே இவற்றின் உண்மையை அறிஞர்கள்
“ஆனந்த போதினி" வாயிலாக உணர்த்துமாறு வேண்டுகிறேன்.

      இனி, “எது தமிழ்? எது தமிழ் மரபு? எது தமிழ்த் தொண்டு?'' என்ற கடாக்கட் குரிய விடைகளை (தமிழ் நாட்டில், தமிழராய்ப் பிறந்தும், தமிழே பயின்றும், தமிழராய் வாய்ந்தும் மேற் குறித்த வினாக்களும் இன்றெழக் காரணராயும், நாம் நம்மையே
அறிந்து கொள்ளாதவராயும் இருக்கும் நிலை, மிக்க நகையாடற் கிடனாம் எனினும், கரவாடும் வன்னெஞ்சர் உறவாடிக் கெடுப்பதை நன்கு அறிய விரும்புவோர்,
'தமிழ்ப் பொழில்" எனும் திங்கள் வெளியீட்டின் சென்ற யாண்டுத் தொகுதியில்
விரிவாய்க் காண்க. மற்றும், தமிழ்ப் புணர்ச்சிவிதி யறிய உணர்ச்சி
யுடையோர் அதனை இலக்கணாசிரியர் வாய் இனிது கேட்டுத் தெளிக.

      இதுவரை கூறியவற்றால், தமிழர் தம் தொன்னெறி யிலக்கணமே நனிமிகச் சிறந்தது, என்பதும், அவ் விலக்கணத்துக்கு மாசுண்டாக்கும் பிறமொழி இலக்கணச் சேர்ப்பை நீக்கிப் பழத்தமிழ்ப் புதுநெறி இலக்கணத்தைப் புதுப்பித்து மறுமலர்ச்சியுறச் செய்தல் வேண்டும் என்பதும். குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்டவர்போல் திருத்தப்போய், ஒலி, மொழி இயல்புக்கு முற்றும் மாறானவற்றைக் கண்ட T. K. சி. உரைநடை ஏற்றுக் கோடற்பாற் றன்று என்பதும், அம் முறைக்கு மறுப்பெழுதிய S. நாராயணனார், S. பழநியப்பனார் வாதங்கள் ஏற்புடையன என்பதும், மறுப்புக்கு மறுப்பு எழுதிய இரகுநாதனாரின் வாதம் தவறானது என்பதும், ஒரு சிலர் புதுப் புது வழிகண்டு மதிப்புற விழைந்து பல வேறு போலிகள் கிளப்பினும், ஆன்றவிந் தடங்கிய சான்றோர் அவற்றைக் கண்டித்து உண்மையைத் தெள்ளிதின் உலகிற்குக் காட்டி நிலை நாட்ட வேண்டும் என்பது முறையே சொல்லப்பட்டன என்க. வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

ஆனந்த போதினி – 1942 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment