Wednesday, September 2, 2020

திருமுருகாற்றுப்படை

 

பத்துப் பாட்டுக்கள்

 

பழந்தமிழ் நூல்களான பஞ்சகாவியங்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியவை தமிழகத்துக்கே உரிய ஒழுக்க முதலியவற்றை இனிது எடுத்துப் புலப்படுத்தும் சிறப்பினையுடையவை. அவற்றுள் பத்துப் பாட்டுக்கள் மலை, நாடு, நகர் முதலியவற்றை அழகுபெறக் கூறியும், பண்டைக்காலத் திருந்த சில தமிழ் நாட்டரசர்களின் வரலாறுகளையும், அக்காலத்து மக்களுடைய நாகரிகத்தையும் வெளிப்படுத்தியும் விளங்குகின்றன. பிற்காலத்து ஆசிரியர் பலரும் இந்நூல்களின் பொருளை யன்றிச் சொற்றொடர்களையும் தத்தம் புத்தகங்களில் எடுத்தான்டுள்ளனர். இத்தகைய பண்பு வாய்ந்த பத்துப்பாட்டு நூல்கள்,


'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து'


என்னும் பழைய பாட்டின் கட் கண்டவாறு திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற அருந்தமிழ்ப் பாட்டுக்கள் பத்தாகும். இவை,


 ‘நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே,
 யேறிய வடியி னீரைம் பாட்டுத்
 தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே. அதுவே
 அகவலில் வருமென வறைகுநர் புலவர்’


என்று பன்னிரு பாட்டியலில் கண்டவாறு இலக்கண முடையன.

 

ஆற்றுப்படை

 

பத்துப் பாட்டுக்களில் முதன் நான்கு நூல்களும், மலைபடுகடாமும் ஆற்றுப்படை யென்ற முறையில் ஆக்கப்பட் டிருக்கின்றன. ஆற்றுப்படையென்பது,

'புரவலன் பரிசுகொண்டு மீண்ட
விரவலன் வெயிறெறு மிருங்கா னத்திடை
வறுமையுடன் வரூஉம் புலவர் பாணர்
பொருநர் விறலியர் கூத்தர்க் கந்தப்
புரவல னா டூர் பெயர் கொடை பராஅ
யாங்குநீ செல்கென விடுப்பது'                     - பன்னிரு பாட்டியல்


அதாவது, உதவியை நாடும் ஒரு புலவனைக் கொடையிற் சிறந்தவனும், பிறர் துயரைத் தன் துயரென எண்ணி - நீக்கும் பெருந்தகையாளனுமான ஒரு மன்னனிடம் ஆற்றுப் படுத்தும் கவிஞர் ஒருவர், நடுவில் காணும் நாடு, நகரச் சிறப்புக்களைப் புகழ்ச்சியாகப் பேசி, அந்நாட்டை யாளும் அரசனுடைய ஆற்றலனைத்தையும் எடுத்துரைக்கும் வகையில் எழுதப்படுவ தாகும். பொதுவாக ஆற்றுப்படையானது வள்ளன்மை வாய்ந்த அரசனிட மிருந்து பரிசுகள்பல பெற்று வந்த ஒரு கவி, அத்தகைய மன்னனைத் தேடும் மற்றொரு புலவருக்கு அவ்வேந்தனது அரிய தரும குணங்களை எடுத்துக் கூறுவது போல இயற்றப்படுவது. முக்கியமாய் பத்துப் பாட்டிலுள்ள ஆற்றுப்படை நூல்கஎனைத்தும் மேற்கண்ட விவரத்தையே கொண்டு எழுதப் பட்டிருக்கின்றன. ஆனால் போர்க் கடவுளான முருகனைப் பற்றிப் புகழ்ந்து பேசும் திருமுருகாற்றுப்படை எனும் பத்துப்பாட்டின் முதனூல் அவ்வாறு அருளப்படவில்லை.


 
திருமுருகாற்றுப் படையின் பெருமை

 

மற்ற ஆற்றுப்படை நூல்களெல்லாம் மக்களிடத்து ஆற்றுப்படுப்பன. திருமுருகாற்றுப்படை கடவுள்பால் ஆற்றுப்படுவது'' வீடுபெறுதற்குச் சமைந்த ஓர் இரவலனை வீடுபெற்றா னொருவன் முருகக் கடவுளிடத்தே ஆற்றுப்படுத்தியதாக உள்ளது. ஏனைய ஆற்றுப்படை யெல்லாம் பரிசில் பெறற்குரியாரைக் கிளந்தெடுத்து பொருநராற்றுப்படை' முதலிய பெயரானே வழங்குகின்றன. திருமுரு காற்றுப்படை பரிசி லளித்தற் குரியார் பெயர்கூறி 'முருகாற்றுப்படை' என ஏழாம் வேற்றுமை யாகவும், 'திரு' என்னும் அடை புணர்ந்தும் வழங்குகின்றது. பிற ஆற்றுப்படை கட்குப் பொருளாயினார் ஓரொருகாலத்தே விளங்கி மறைந்தா ராகலின், அப்பாட்டுக்களின் முக்கியப் பொருளொடு ஏனைய காலத் திரவலர்க்குச் சிறிதும் இயைபில்லை. திருமுருகாற்றுப்படைக்குப் பொருளாயினார், நித்த ராகலின் இதன் முக்கியப் பொருளொடு எக்காலத்தும் எவ்வெவர்க்கும் தொடர் புண்டு. 'இன்னோரன்ன பலசிறப்புக்கள் நோக்கியே திருமுருகாற்றுப்படை பத்துப் பாட்டுக்களில் முன்னதாக வைத்துப் பொன்னே போல் போற்றப்படுகின்றது. பதினோராந் திருமுறைத் தொகுப்பிலும் சேர்ந்துளது.


நூல் வந்தவாறு

 

திருமுருகாற்றுப்படை ஆண்டவன் முருக பிரானுடைய அருங்குணாதிசயங்களையும், வீர பராக்கிரமங்களையும், அருள் விசேடங்களையும், அவரிருத்தற்குரிய திருத் தலங்களையும் எடுத் துரைக்கின்றது. சாதாரணமாக ஜனங்களுக்கு, தமிழர்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கும் அரியநூலும், ஆதிபாராயண நூலாக அமையப் பெற்றிருப்பதும் திருமுருகாற்றுப்படையே யாகும். இச் சிறந்த பனுவலைச் செய்தவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பார். நல்லிசைப் புலவர் நக்கீரர், அங்கயற்கண்ணி பங்கரான சோமசுந்தரக் கடவுள் அறுபத்து நான்கு திருவிளையாடல் செய்த திருக்கூடல் என்னும் மதுரையம் பதியில், கடைச்சங்கம் இருந்தகாலத்து அச்சங்கத் தலைவராய்ப் புலவர்கட்குத் தலைமையுற்றுப் புகழ்பெற்று இருந்தவர். ஆலவாய் அவிர்சடைக் கடவுள் தம்மடியவர் தருமிக்காக அருளிய 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற அரிய பாசுரத்திற்குக் குற்றங்கூறிய பெரியவர். இப்புலவர் பெருந்தகை திருமுருகாற்றுப்படையைத் திருவாய்மலர்ந்ததற்குக் காரணமாய், பூதமொன்று ஆயிரம் பேர்களை ஒரே சமயத்தில் அருந்த வேண்டுமென்னும் ஆசை யுடையதாய் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்பதின்மரைச் சேர்த்து ஒருவருக்காகக் காத்திருந்த காலத்தில், ஆங்கு நக்கீரர் தற்செயலாய் வரக்கண்ட பூதம், அவரையும் பிடித்து சிறையிலிட்டுத் தன் நித்திய கடன்களை முடித்து வந்து ஆவலையகற்றிக் கொள்ளலாமென்று வெளியே சென்றதாகவும், அதுசமயம் பேராபத்தி லகப்பட்ட நக்கீரர் இந்நூலைப் பாடி முருகப்பெருமானை வேண்ட, அந்நொடியே வடிவேல் தரித்த வரதன் ஆண்டு தோன்றி அக்கொடியபூதத்தைக் கொன்று நக்கீர ருள்ளிட்ட ஆயிரவரையும் விடுவித்ததாகவும் ஒரு விநோதக் கதை வழங்குகின்றது. இவ்வரலாற்றின் விரிவு சீகாளத்தி புராணத்துள்ள நக்கீரச் சருக்கத்தால் விளங்கும். ஆனால் இச்சரிதம் திருப்பரங்கிரிப் புராணம், நக்கீரச் சருக்கத்தில் சில வேறு பாடுகளுடன் காணப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் நக்கீரர் தமக்கு மகத்தான ஆபத்துதிகழ்ந்த பொழுது இதனைப்பாடி அவ் விபத்திலிருந்து விடுபட்டாரென வெளிப்படுவதால் திருமுருகாற்றுப்படை யென்னும் தெய்வப் பனுவலை அனுதினமும் அன்போடு பாராயணம் பண்ணுவோர்க்கு ஆண்டவன் ஆறுமுகப் பெருமான் திருவருள் புரிவா னென்பது ஆன்றோர் துணிபு. இதனை,


‘நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற்றுப் படையை
தக்கோலம் நாள் தோறும் சாற்றினால் முக்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளி
தானினைத்த வெல்லாம் தரும்’


என்ற திருவாக்கான் உணர்க.

 

இத்தகைய அருமைகளனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற திருமுருகாற்றுப்படை முந்நூற்றுப் பதினேழு அடிகளையுடையது; ஆறு பிரிவினதாக அமைந்துள்ளது.


திருப்பரங்குன்றம்

 

முதற் பிரிவின் ஆரம்பத்தில், மக்களை நோக்கி'நீங்கள் இவ்வுலக இன்பங்களை வெறுத்து, எக்காலும் ஆண்டவன் திருவடியிலே கலந்து இருக்க விரும்பினால் சிறந்த வேலாயுதத்தை யுடையவரும், என்றும் இளமைப்பருவம் வாய்ந்தவருமான ஸ்ரீ முருகக்கடவுளை வழிபடுக. அவர் திருவுள் மகிழ்ந்து, எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் இவை'யென எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது. முதன் முதலாகத் திருப்பரங்குன்றத்தைப் பற்றிக் கூறப்பட்டுளது. இக்குன்று தற்கால மதுரைக்குத் தென் மேற்கி லிருக்கிறது. ஆனால் திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. முதலில் மதுரையைப் பற்றிக்கூறப் புகுந்து, அதன் பண்டையச் சிறப்பைப் போருக்கு வருகின்றவரைவரலாம் என்று கூவி யழைக்கும் குறிப்பைக் காட்டா நிற்கும் கொடிகளின் பக்கத்தில் கட்டிய பந்தும் பாவையும் தொங்கிக் கொண்டிருத்தலால், போர் செய்வார் இல்லையென்று விளங்கும் கோயில் வாயில்களையும், இலக்குமி வீற்றிருந்த - குற்றம் தீர்ந்த கடை வீதிகளையும், மாட மாளிகைகளும், கூடகோபுரங்களுமுள்ள தெருக்களையுமுடைய மதுரைமா நகர்' என அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இதிலிருந்து அக்காலத்து அரசர்கள் பகைவரைமகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற் குறிப்பாகத் தம் கொடிக்கருகே பந்தும் பாவையும் தூங்க விடுதலாகிய வழக்கங் கொண்டிருந்தனர் என்பது அறியக் கிடக்கின்றது. இன்னும் இப்பாகத்தில் வரை யுறையும் சூரரமகளிர் விளையாட்டும், பேய்மகள் துணங்கை யாடலும் வருணிக்கப்பட்டுள்ளன.

 

திருச்சீரலைவாய்

 

இரண்டாவதாகக் கூறியுள்ள க்ஷேத்திரம் திருச்சீரலைவாய். இப்பொழுது திருச்செந்தூர் யென வழங்குவது. இது திருநெல்வேலிக்கு 37 மைலில் உள்ள கடற்கரை ஸ்தலம். இங்கு முருகப்பெருமான் ஆறுமுகங்களும் பன்னிரண்டு கைகளுமுடையவராய் விளங்குவது கூறப்பட்டுள்ளது. மேலும் ஆண்டவனின் ஆறு திருமுகங்களும் தனித்தனி புரியும் தொழில்களும், அவற்றுள் ஒவ்வொரு முகத்திற்கும் இவ்விரண்டு கைகள் இனமாகப் பன்னிரண்டு திருக்கரங்களும் அருளும் கருமங்களும் இதிற் கூறி யிருப்பது கற்றுணர்ந்து இன்புறத்தக்கது.


திரு ஆவினன் குடி

 

மூன்றாவதெனச் சொல்லப்பட்டது திரு ஆவினன் குடி (திரு - இலக்குமி, ஆ - காமதேனு, இனன் - சூரியன், கு - பூமி, டி - இந்திரன் இவர்கள் பூசித்த பழநி யடிவாரம்) என்ற திருத்தலம். பழநிமலை யென அழைக்கப்படுவது இதுதான். சித்தன் வாழ்வு என்றும் இதற்கொரு பெயருண்டு. திண்டுக்கல்லுக்கப்பால் மேற்கில் 36 மைலில் இருக்கின்றது. நான்முகனை முன்போல் சிருட்டித் தொழிலில் நிலை நிறுத்த நினைத்து, 'திருமாலும், சிவனும், நான் முகனும், தேவர் முப்பத்து மூவரும், திசைக்காப்பாளர் எண்மரும், எனை அமரரும், அவணரும் 'ஒருங்கு வந்து தெய்வயானை யம்மையோடு வீற்றிருக்கும் முருகப் பெருமானைக் கண்டதாகக் கூறப்பட்டிருக்கின்றது. முனிவரியல்பும் இப்பகுதியில் அழகாக விவரிக்கப் பட்டுளது.


திருவேரகம்

 

அடுத்த ஸ்தலம் திருவேரகம். 'ஏரகம் - மலை நாட்டகத் தொரு திருப்பதி' என்பர் நச்சினார்க்கினியர். ஆனால் பிற்காலத்துப் பெரியார் பலரும் கும்பகோணத்திற் கடுத்த சுவாமி மலையை ஏரகம் என்று பாடியுள்ளனர்! திருவேரகத்தில் சிறந்த அடியார்கள் இருந்ததாகத் தெரிகின்றது. இப்பாகத்தில் இரு பிறப்பாளர்க்குரிய கற்றல், கேட்டல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறுகடன்களையும், காருகபத்தியம், ஆகவனீயம், தென்றிசையங்கி என்ற முத்தீயினையும் விளக்கி, அவர்கள் செய்யவேண்டிய நித்திய கருமங்களையும் விவரித்திருக்கின்றது. அவர்கள் நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங் காத்த விவரமும் கூறப்பட்டிருக்கின்றது.


குன்று தோறாடல்.

 

ஐந்தாவது குன்று தோறாடல் என்பது. குன்று தோறாடல் என்பது நிலவரமாக ஒரு இடத்தைக் குறிப்பதல்ல. மலைதோறுஞ் சென்று விளையாடல் என்பதே அதற்குப் பொருள். நச்சினார்க்கினியரும் இப்பொருளே வரைகின்றார். தணிகை, விராலிமலை, வள்ளிமலை, கழுகுமலை, குன்றாக்குடி முதலிய குன்றுகளை உடன் எண்ணவேண்டி 'குன்று தோறாடல்' என்று கூறியிருக்கலாம். இதில் குறிஞ்சி நிலமக்களின் நடை, யுடை, பாவனை முதலியவை குறிக்கப்படுகின்றன.


பழமுதிர் சோலை

 

பழமுதிர் சோலை யென்னும் ஸ்தலம் தான் திருமுருகாற்றுப்படையில் கடைசியாக எடுத்தாளப்பட்டிருப்பது. இந்த ஸ்தலம் மதுரைக்கு வடகிழக்கில் 12 - வது மைலில் இருக்கின்றது. இப்பிரிவில் இக்காலத்தும் மறையாத சில பழக்க வழக்கங்கள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அடியாரதுமனப் பாங்குக்குத் தகுந்த வண்ணம் அவரவரது தெய்வத் தன்மையோடு முருகன், திருவுரு காட்டுவாரென்றும், அவ்வாறு அழகன் தோன்று மிடங்கள் நாற்சந்தி, முச்சந்தி, பெரிய மரத்தடி, சபை கூடும் அம்பலம், ஆத்தீண்டுகுற்றியை யுடைய இடம் முதலியன வென்றும் கூறப்பட்டுளது. பண்டையில் மக்கள் குமரக் கடவுளை வழிபட்ட விதமும், அவர்களளித்த கைவேதனம் முதலிய விவரமும், அவர்கள் பிரார்த்தனை வரலாறும் இதனால் தெளிவாகத் தெரிகின்றது. இன்னும் இதன் கண் அருவி வீழ்ச்சி கூறியுள்ளது இயற்கை நவிற்சியாக மகிழ்ச்சி அளிப்பதாகும். இப்பாட்டின் புறத்தே சிலவெண்பாக்கள் உள்ளன. அவை பழைய ஏட்டுப் பிரதிகளில் இல்லை என்பர்.

 

இனி, இத்தகைய இயற்கை அழகும், இனிய தமிழும் பழைய தமிழர் பழக்க வழக்கங்களும் அறிவதற்குக் கருவியாக உள்ளத் திரு முருகாற்றுப்படையைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் வாங்கி வாசித்துணர வேண்டுவது இன்றி யமையாததென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment