Wednesday, September 2, 2020

 

திருவள்ளுவர் மத வாராய்ச்சி

 

      "எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு "


நலமறிமாண்பீர்!

 

சிலநாட்களுக்கு முன் இந்நகரின்கண் நடந்த ஓர் பொதுஜனக் கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அப்பொழுது தமிழ்ப்புலவர் ஒருவர் "திருவள்ளுவர்'' என்னும் விஷயத்தைப்பற்றி ஓர் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தனர். அவர், " திருவள்ளுவர் இம்மதத்தைச் சேர்ந்தவர் என்று கூற வியலாது போகின்றது. ஆனால் திருவள்ளுவருக்குச் சிலாவிக்கிரகம் ஏற்படுத்தி யிருக்குமிடமெல்லாம் அவ்விக்கிரகத்திற்கு உருத்திராக்கமும் விபூதியுமிட்டிருக்கின்றது ஆதலால் சைவசமயத்தினர் என்று கூறலாம்'' என்றனர். இது என்ன பேதமை. இதுவுங் காரணமாகுமா? அச் சொற்பொழிவு கேட்ட பொழுதிருந்தே "திருவள்ளுவர் மத வாராய்ச்சி'' என்னுமோர் சிறு வியாசம் நம்மானந்தனின் ஓர் அங்கமாகத் தோன்றவேண்டுமென்னும் ஆசை பிடர் பிடித்துந்தவும் அத்தகைய பெரிய ஆராய்ச்சியை "நிகழ்தர நிகழ்த்தவல்லை நீ கொல்! என்றெனது நெஞ்சே யெழுந்ததேனும் இச்சையும் தினம் போராடியதால் முடிவில் நாணந்தோற்றது; ஆசையே வென்றது.''
 

நேயர்காள்!

 

தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் இன்ன சமயத்தினர் என்று துணிந்துரைப்பது இயலாது போயினும் இவர் பொதுப்பட இந்து மதத்தினர் என்பதே என் துணிபு. ஆனால் நம்மிந்தியாவில் இந்து மதமென்று ஒரு மதமில்லாமை கண்டு, சைவசமயி என்பதே சாலச் சிறைப்புடைத்தாம். அதற்குச் சான்றுகள் கூடலூர் ஸ்ரீமான் கனகசபைப்பிள்ளை யவர்களியற்றிய வருணசிந்தாமணியின் கண் பரந்து கிடக்கின்றன. = அவற்றில் சிலவற்றை மீண்டு சிறிது உரைக்கின்றேன். பிள்ளை அவர்கள் கடவுள் வாழ்த்தே பரசிவவணக்கமாம் எனக் கூறுகின்றார்கள். முதற் குறளை யெடுத்தாராயுங்கால், ஆதிபகவனெனக் கடவுளைக் குறிப்பிக்கப்பட்டிருக்கின்றது. சமண நூலாகிய சூடாமணி நிகண்டில் "பகவனே யீசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்'' எனக் கூறி யிருத்தலால் பகவன் என்பதற்குப் பொருள் சிவன், விஷ்ணு, பிரமன், அருகன், புத்தன் என்று கூறப்பட்டிருக்கின்றது. இவற்றுள் முன்னர் சிவனையும், பின்னர் விஷ்ணுவையும், பின்னர் பிரமாவையும் முறையே வகுக்கப்பட்டிருக்கின்றது. இனி இச்சூடாமணி நிகண்டில் தெய்வப் பெயர் தொகுதியிலும் முன்னர்ச் சிவநாமமும் பின்னர் விஷ்ணுநாமமும் அதன்பின்னர் பிரமநாமங்களும் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதுமாத்திரமேயன்றி பிங்கல நிகண்டிலும் வானவர் வகையுளும் சிவனையே ஆதியாகக் கொண்டு பெயர் கூறப்படுகின்றது. உலகமென்பது ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட சேதனாசேதனப் பிரபஞ்சம். இப்பிரபஞ்சம் பசுபாசமெனவும், இப்பிரபஞ்சத்திற்குப் பதிப்பொருள் சிவபெருமானான ஆதிபகவானே யெனவுமமையும்.

 

கடவுள் வாழ்த்தின் இரண்டாவது செய்யுளில் வாலறிவன் அதாவது மெய்யறிவன் எனக் கூறப்பட்டிருக்கின்றது. பரிசுத்தமுடையதாய் நிர்மலமாய், நிஷ்களமாய், நிரஞ்சனமாய், அறிவுக்கறிவாய் ஆணவாதிமலங்களிற் கட்டுப்படாத பதியறிவே மெய்யறிவாம். அதனால் சிவபெருமானுக்கு திரிகாலத்தும் ஜன்னமரணமில்லாமையின் மெய்யறிவன் என்று சிந்தாந்தப்படுகின்றது.

 

மூன்றாவது செய்யுளில் கடவுளை மலர்மிசையேகினான் என்றார். ஆகமவிதியிற் கூறியபடி சிவபெருமானைப் பத்மாசனத்தில் எழுந்தருளச் செய்து சிவபூசை செய்பவர் மோக்ஷ உலகத்தில் நீடூழிகாலம் வாழ்வர் என்பது கருத்தாம். இங்ஙனமாதலின் மலர்மிசையேகினான் என்பது சிவாகம விதியால் செய்யப்படும் பூசையினிடத்துக் கமலாசனத்தில் எழுந்தருளப்படும் சிவபெருமானே யெனப் புலப்படுகின்றது.

 

நான்காவது பாட்டில் கடவுளை வேண்டுதல் வேண்டாமையிலான் என்று கூறப்பட்டுளது. "நலமிலன், நண்ணார்க்கு நண்ணினார்க்கு நல்லன் சலமிலன் பேர் சங்கரன்'' என்பது திருவருட்பயன். குளிராலும், மழையாலும் குளிரடைந்தவர் சூரியனது கிரணம் படும்படி வந்தமாத்திரத்திலேயே குளிரொழிந்து சுகமடைகிறார்கள். அவ்விதம் வந்து அடையாதார் குளிரால் வருந்துவர். ஆதலால் தன்னை வந்தடைந்தவரிடம் விருப்பும் அடையாதாரிடம் வெறுப்பும் சூரியனுக்கு இல்லாமைபோல சிவபெருமானுக்கும் தன்னை நண்ணினாரிடத்து விருப்பும் நண்ணாரிடத்து வெறுப்புமில்லையாம். ஆதலால் அவனுக்கு விருப்புமில்லை வெறுப்புமில்லை. அவன் தன்னைக் கல்லாலடித்த சாக்கிய நாயனாரையும், செறுப்பாலுதைத்த கண்ணப்பனையும் வெறுத்தும் மலரெய்திய காமனை விரும்பவும் செய்தாரல்லர். இன்னும் திருப்பாற்கடல் கடைந்த காலத்தில் அமுதம் வந்தபொழுது விரும்பவுமில்லை, விஷம் வந்த காலத்து வெறுக்கவுமில்லை. ஆதலால் சிவபெருமானே வேண்டுதல் வேண்டாமையிலான்.

 

இனி ஐந்தாவது பாட்டிலும் பத்தாவது பாட்டிலும் காட்டிய இறைவன் என்னும் சொல் சிவபெருமானுக்கே யுரியது. இதற்குச் சான்றாக புறச்சமயிகளாகிய மண்டல புருடனால் செய்யப்பட்ட பதினோராவது நிகண்டில், " இறை, சிவன், கடன், வேந்தன், கையிறை, உறுப்பிறை, சிறந்தோன்'' எனக் கூறப்பட்டுள்ளது. இன்னும் உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியர் இறைவன் என்னும் பதத்திற்கு இறு = தங்கு எனத் தாதுப்பொருள் கூறி, சடசித்துப் பிரபஞ்சமனைத்தும் தங்கும் சிவபெருமானுக்கே யுரியது இப்பெயர் எனக் கூறாநிற்கின்றனர்.

 

மற்றும் ஒன்பதாவது பாட்டில் கூறப்படு மெண்குணத்தான் என்பது சிவபெருமானுக்கே யுரியதென்பது யாவரும் மறுக்கமுடியாததோர் உண்மை. இன்னும் நம் நாயனாரே சிவபெருமானது ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசையேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இருவினையுஞ் சேராவிறைவன், பொறிவாயிலைந் தவித்தான், தனக்கு வமையில்லாதான், அறவாழியந்தணன் என்பனவாதிய எண்குணங்களையும் எட்டுப்பாட்டிலடக்கி, ஒன்பதாவது பாட்டில் அத்தகைய எண்குணத்தானையே வணங்க வேண்டுமென்றும் பத்தாவது பாட்டில் அவ்விதம் வணங்காதவர் பிறவிக் கடலைக் கடக்க முடியாதெனவும் கூறி பரசிவ வணக்கத்தை முடித்தருளினார். இன்னும் இவ்வணக்கம் பரசிவ வணக்கமேயெனக் காட்டுதற்குத் தகுந்த தாட்டாந்தங்கள் காட்டக்கூடுமெனினும், அது மிகைப்படக் கூறல் என்னும் குற்றத்தின்பால் படுமென வஞ்சி இத்துடன் நிறுத்துகின்றேன்.

 

இதைப்பற்றி விவரமாக அறிய வேண்டுமெனில் கூடலூர் கனகசபைப்
 பிள்ளையவர்களியற்றிய வருணசிந்தாமணி, வருணவிளக்கத்தைப் படித்துணரவும்.

 

இஃதன்றி பிறசமயத்தினரும் திருவள்ளுவரைத் தத்தமது மதத்தை சார்ந்தவர் என்று கூறும் கூற்றினையும் சிறிது கூறுவாம். பரிமேலழகர் தான் வைஷ்ணவரானமைபற்றி திருவள்ளுவரையும் வைஷ்ணவரென்றே கூறுகின்றார். அதற்குச் சான்றுகளாக " மடியிலா மன்னவன் எய்து மடியளந்தான் தா அயதெல்லாம் மொருங்கு " என நிலங்கடந்த நெடுமுடியண்ணலைக் குறித்தனரென்றும், " தாம் வீழ்வார் மென்றோட் டுயிலினிது கொல், தாமரைக்கண்ணாலுலகு, " எனப் பரமபதத்தைக் குறித்தனர் என்னும்'' அகாரார்த்தேவிஷ்ணு'' என்ற கருத்தை " அகரமுதல வெழுத் தெல்லாம்'' எனத் தழுவியுள்ளார் என்றும் கூறி வள்ளுவர் வைணவர் என்பதை வலியுறுத்துகின்றார். மற்றும் ஜைனர்கள், பூமேனடந்தான் என்னும் பெயரை யுட்கொண்டு மலர்மிசை யேகினான் என்று கடவுள் வாழ்த்தில் கூறியதாகவும் அதனால் வள்ளுவரைச் ஜைனரெனவும் கூறாநிற்பர். இன்னும் பௌத்தர்கள் " மலர் மிசையேகினான்'' " வேண்டுதல் வேண்டாமையிலான்'' பொறிவாயி லைந்தவித்தான் எனப் புத்ததேவனது பெயர்களை யெடுத்தோதிக் கடவுள் வாழ்த்தில் கூறினார் எனவும் கூறி வள்ளுவரைப் பெளத்தர் என்கின்றனர். இஃதெல்லாம் ஒருபால் நிற்கத் தமிழில் வல்லுனரான ஜி. யு. போப் பையர் அவர்கள் " எங்கள் யேசுநாதர் மலைமேற் செய்த ஹித உபதேசத்தின் பிரதிசப்தமாதமித் திருக்குறள்'' என்று கூறி அவரைக் கிறித்தவர் என்பார். எக்கூற்றினு மிக்கூற்று மிக்க வியக்கத்தக்கதே.

 

நலமிகு நல்லீர்!

 

மேற்கூறிய சான்றுகளெல்லாம் ஒருபால் நிற்க. நாம் காய்தல் உவத்தலின்றி யாராய்வோமாயின், எல்லா நூல்களிலும் நல்லனவெடுத்து எல்லோருக்கும் பொதுப்படக் கூறுதலிவர்க்கு இயல்பாதலாலும், எவரெவர் எத்திறத்தர் அத்திறத்தராய் நின்று அவரவர்க்கு ஆவன கூறுதலாலும் இவரைச் சர்வசமய சமரசவாதியெனச் சொல்லுதலே சாலச்சிறைப் புடைத்தாம். இந்நூலிலிருந்து எம்மதத்தினரும் திரு (செல்வம் அதாவது கல்விச் செல்வம்) அள்ளுதலாலேயே இவற்குத் திருவள்ளுவர் எனப்பெயரமைந்தது போலும்.


'எம்மதமும் சம்மதமே எனப்பேரிகை ஆர்மின்'' சுபம்.

தொ. மு. பாஸ்கரன்,

'சித்திர ஆலயம்' திருநெல்லை.

 

குறிப்பு: - நமது நண்பர் கூறியவாறு பொய்யாமொழியார் சைவசமயியேயென்று கருதுதற்குப் போதிய ஆதாரங்களுளவென்பது மறுக்கொணாததே மேலும்,



"பூவி லயனும் புரந்தரனும் பூவுலகைத்
தாவி யளந்தோனும் தாமிருக்க - நாவினா
லிழைநக்கி நூனெருடு மேழை யறிவேனோ
குழைநக்கும் பிஞ்சகன்றன் கூத்து''

 

என்று நாயனாரருளிய வெண்பாவால், அவர் உள்ளம் சதா பரமசிவத்தின் ஆனந்தத்தாண்டவத்தில் பதிந்திருந்தது என்று தெரிகிறது. ஆயினும் நாயனாரது தமிழ் மறை எச்சமயத்தவர்க்கும் உண்மையைப் போதிக்கத் தக்கதாதலினாலும்,


''விரிவிலா வறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே
எரிவினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்றதாமே "

 

என்றும், அறுவகை சமயத்தோர்க்கும் அவரவர் பொருளாய் நிற்பதும் பரமசிவமாகிய சச்சிதானந்த பரப்பிரம்ம சொரூபமே யாதலானும், அது மதாதீத மானதாதலாலும், நாயனார்க்கு "எம்மதமும் சம்மதமே'' என்று கொள்வது தகுதியே யெனலாம்.
 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1923 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment