Wednesday, September 2, 2020

 

திருவள்ளுவர்

 

இவ்வுலகின்கண் ஒவ்வொருவருக்கும் கதியாவார் உளர். குழக்தைக்கு கதி காய் தந்தையர், குலமகட்கு கதி கொழுநனே, குடிகட்குக் காவலனே கதியாவான், யாவர்க்கும் எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, யாவு முணர்ந்த, இறையே கதி. அதைப் போன்றே, அமிழ்தினு மினிய நந்தமிழ் மொழிக்குக் கதியாவார் இருவர். 'கதி' என்ற பதத்தின் ககரத்தைக் கம்பருக்கும், திகரத்தைத் திருவள்ளுவருக்கும் தரின் சாலப் பொருந்தும். ஆதலின் கம்பரும் திருவள்ளுவரும் தமிழணங்கின் இரு கண் களாய் அமைந்தனர்.

 

கம்பரின் பெருமையைக் குறித்துப் பிறிதொரு நாள் கருதுவோம்; இன்று திருவள்ளுவரின் திறத்தைச் சிறிது ஆராய்வாம்.

 

எண்ணுதற்கும் ஆக்குதற்கும் அரிய அவரது திருக்குறள் என்ற நூலின் அருமை பெருமைகளைப் பெரிதும் பாராட்டி வரைந்துள்ளனர் கற்றறிந்த பெரியாரிற் பலர். முப்பானூலென்றும், தெய்வ நூல் எனவும், பொய்யா மொழி யென்றும், தமிழ்மறை யெனவும், பொதுமறை என்றும் பெயர்களால் விவரிக்கப்பட்டு விளங்கும் அவரது நூல் இற்றைக்கு சுமார் 2,000 ஆண்டுகட்கு முன்னர் இயற்றப் பெற்றதாம்.


 “நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
 ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியொடு...”

 

என்றபடி நான்கு புருஷார்த்தங்களையும் படைத்து, பத்துக் குற்றங்களையசற்றி, பத்து அழகுகளைப் பெற்று, அதுவரை மாந்தராற் கேட்கப்படாது, மனத்தை ரஞ்சித்துப் பரவசமாக்கும் மாண்போடு, கேட்டார் சென்னி வந்திக்கவும், வாய் வாழ்த்தவும், நெஞ்சம் சிந்திக்கவும், செவி பருகவும், அத்துணைப் பெருமை வாய்ந்த தெய்வப் புலவரின் நூலினை அக்காலத்துக் கல்விக் கழகத்தார் எளிதில் ஏற்றனரா? எக்கல்லூரியிற் கல்வி பயின்றாரென்றும், எவ்வாசானிடம் பாடங் கேட்டாரென்றும் உணராத அன்னார் அவர் நூலைக் கண்டு துண்ணென்றார் என்பதும், அதன் பெருமையைத் தெய்வச் செயலால் தெரிந்த பின்னர் யாவரும் ஏத்தி உச்சிமேல் வைத்து மெச்சத்வக்கின ரென்பதும் பிரசித்தம்.

 

அக்காலத்தில் தென்னிந்தியா நீர்வளம், நிலவளம், கல்விவளம், செல்வ வளம் முதலிய பல்வளம் மலிந்து ஓங்கி வளர்ந்து சிறந்து பொலிவுற்றிருந்தது. செந்சாப் போதார் எச்சமயத்தைச் சேர்ந்தாரென்பதும், அவரது சரித்திரத்தின் முழுப்பாகமும் தெரியவில்லை. ஆனால் அவர் கடவுளன்பு மிக்க மகாஞானி என்பதுமட்டும், மழுமானேந்திய மங்கைபங்கன் மன்றத்து மறைச் சிலம்படிகள் மாறியாடியதின் இரகசியத்தைத் தேவர்கட்கு வெளி யாக்கிய தினின்றும் புலப்படா நிற்கின்றது. சென்னையில் தற்போது சட்ட நிபுணர்கள் தக்க இனிய இல்லங்கள் அமைத்துக் கொண்டு வாழும் மைலாப்பூரில் அவர் வாழ்ந்து வந்தனரென்பது தெரிகின்றது. இன்றும் அங்கு நின்று விளங்கும் அவரது சிறிய கோயிலொன்றே அவரை மக்கள் எங்ஙனம் மதிக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றது.

 

பண்டைக்கால ஏனைய புலவர்களைப் போன்றே நமது நாயனாரும் மக்களின் சுதந்தரத்தைக் காட்டினும் கடமைகளையே முதன் முதல் எடுத்துக் கூறுகின்றார். எய்தற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற மக்கள் கடவுள் மாட்டும், தம் குடும்பத்தார் பாலும் பிறரிடத்தும் செய்யக் கிடக்கும் கடமைகளைச் செவ்வையாய்ச் செப்புகின்றனர். தமது முதல் அதிகாரத்திலேயே,

 

‘அகரமுதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு'


என்ற அழகிய மங்கலச் செய்யுளைச் சொல்லி, பிறகு வாலறிவன் 'மலர்மிசை யேகினான்'' வேண்டுதல் வேண்டாமையிலான்,'' தனக்குவமை யில்லாதான் 'அறவாழி அந்தணன்', எண்குணத்தான்', இறைவன்' என்ற உயரிய பதங்களைப் பெய்து ஒப்புயர்வில்லா அப்பரம்பொருளை வழுத்தி, அல்லும் பகலும் அனவரதமும் அன்னானை உள்ளம் உரை செயல்களார வாழ்த்தி ஏத்தினல்லால் இப்பிறவிப் பெருங்கடல் நீந்தி உய்தலரிதென்பதைத் தெற்றெனப் புலப்படுத்தி யிருக்கின்றனர்.

 

பிறகு சொற்சுவையும் பொருட்சுவையும், அழகும் இனிமையும் வாய்ந்து உள்ளத்தையும், உணர்ச்சியையும் பரவசமாக்கும் குறட்பாக்களால் இல்வாழ்க்கையின் பெருமையும், இன்பமும் சொல்லப்படுகின்றன. பிரமசரியம் கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற நான்கு ஆஸ்ரமங்களில் இல்லறமே எவ்வாற்றானும் சிறந்தது என்பது ஆசிரியர் துணிபு. வென்றுளே புலன்களைந்து மெய்யுணர் உள்ளம் படைத்த துறவிகளின் மாண்பைப் பெரிதும் பாராட்டிப் போற்றினும், நமது புலவர் இல்லறத்தான் வாழ்க்கைக்கு இணை எதுவுமின்றென இயம்பா நிற்கின்றனர். ஏனெனின் இல்வாழ்வான் ஏனைய மூன்று நிலை நின்றார்க்கும் நற்றுணைவன். அனாதைகட்கும், சரித்திரர்கட்கும், இறந்தார்க்கும் அவன் ஓர் பெருங்களைகண். தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், உறவினர் இவர்கட்கும் இன்றியமையா ஆதரவு. வாழ்வாங்குவாழின் இல்வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான். இல்லறத்தில் இருக்க வேண்டிய முறையில் இருப்பின், பிறவழிகளிற் போய்ப் பெறக்கிடக்கும் பயன் பிறிதொன்றுமிலையாம்.

 

இவ்வாறு இல்லறத்தை இனிதே இயற்ற இணையில்லாத் துணைவி இல்லாள். நம் தேசத்தின் நாகரிகத்தின் உயர்வையும், நூற்களின் நுட்பத்தையும், கல்விப் பயிற்சியின் இயல்பையும் திறத்தையும், பெரியாரின் பெருமையையும், தலத்திற் சிறந்தாரின் தன்மையையும், இறைவர்களின் மாட்சியையும், கடுகளவேனும் கண்டறியா இக்காலத்தில் ஆங்கிலங்கற்றவர்களிற் சிலர் நம்தேசத்துப் பெண்களை ஆடவர் அடிமைகளைப் போன்றே நடத்தினரெனப்பிதற்றுவது எத்துணைப் பேதமையைத் தெரிவிக்கின்றது! இல்லற தருமத்தை இடை யூறின்றி நடத்தப் போதிய நற்குண நற்செய்கை வாய்ந்த துணைவியன்றோ இல்லாள். தங்கள் ஒழுக்கத்தாலும், கணவனைப்பேணி அவன் தருமங்களைச் செவ்வனே செய்ய உதவுதலாலும், தாங்களும் தங்கள் கணவர்களும் புகழெய்திப் புண்ணிய மெய்திப் பொலியச் செய்ய வல்லா ரன்றோ வனிதையர்? காதன் மனையாளும் காதலனும் மாறின்றி யல்லவா தீதில் ஒரு கருமத்தைச் செயல் வேண்டும். தங்கள் மனைவிகளைக் கணவர்கள் கண்ணே போன்றும், கண்ணிற் கருமணியே போலவும், மணியாடு பாவயைப் போன்று மன்றேகாதலித்துக் காத்து வந்தனர்! அழகும் ஆனர் தமும் அமைந்த இல்வாழ்க்கையின் உண்மை இன்பத்தை மக்களிற் சிலரே அறிந்து அனுபவிக்க வல்லார் என்பதை குறள் நன்கு விளக்கும்,


'மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படுவர்'                     
என்ற


இத்தகை இல்வாழ்க்கையிற் பெறக்கிடக்கும் பேறுகளில், மக்கட்பேறே மிகச் சிறந்ததாம். எத்துணை நயத்துடனும் திறமையுடனும் உளமகிழ, உடல் புளகிக்க, மனம் நெகிழ, சிறிய, இனிய, அழகிய சொற்களால் மக்கட் பேற்றின் மாண்பை அமைத்துளாரென அறைதலரிதாம். இயம்பரும் இன்பமும், இசைப்பரும் ஓசையும், சொல்லருஞ் சுவையும் பொருந்திய,


 குழலினி தியாழினி தென்பர்தம் மக்கள்
 மழலைச் சொற் கேளா தவர்


என்ற செவ்விய செய்யுளொன்றே சாலும் புதல்வரின் அருமையை விளக்க பிறகு,


 தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
 முந்தி யிருப்பச் செயல்


என்றதால் தந்தையின் கடமையையும்,

 

மகன் தந்தைக் காற்றுமுதவி யிவன்றத்தை

என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்


என்றதால் கடமையையும் குறித்துள்ளது கவனிக்கற் பாற்று.

 
பெற்றோ ரெல்லாம் பிள்ளைகளு மல்லர் என்ற வுண்மையை,

 

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோ னெனக்கேட்ட தாய்

 

என்ற பாடலின் கண் பண்புற வமைத்துச் சற்புத்திரரைப் பெறலே சிறந்த தென வுய்த்துணரவைத் துள்ளதும் பாராட்டற் குரித்து. இதன் பின்னர் விருந்தோம்பலைப் பற்றிப் பொய்யா மொழிப்புலவர் புகல்கின்றனர். விருந்தோம்பற் பொருட்டே இல்வாழ்வது. கிரகஸ்தன் பாடுபட்டுத் தேடும் பொருள் முற்றும் வறுமையானர்க்குத் தந்துதவும் பொருட்டு. நம் பசியை யடக்கிப் பொறுத்துக் கொள்ளுந் திறத்திலும் பிறர் பசியை யகற்றும் ஆற்றலே சாலச் சிறந்தது. விருந்தினரை நகை முகம் காட்டி நல்வரவேற்று இன்மொழி பகன்று உபசரித்தலே இல்லறத்தான் தலைமையான கடன். அன்றியும் விருந்தோம்பல் அவனுக்கே உரிய அரும் சுதந்தரமாகின்றது. விருந்தினர் பால் எங்ஙனம் நடந்து கொள்ளல் வேண்டு மென்பதை தெய்வப் புலவர்,


 மோப்பக் குழையு மனிச்ச முகந் திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து


என்ற குறளால் வெகு நயம்பட நவின்றுளது மெச்சற் பாலது. செல்வமும் அன்பினால் வரையாது வழங்கும் உதார குணமும் செவிலித்தாயும் குழவியும் போல் அவ்வளவு நெருங்கிய தொடர்பு வாய்ந்தன என்ற கருத்தை,

 

அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு


என அழகுறக் கூறியுள்ளார்.

 

மற்றும், இல்லறத்தான், துறவி, அரசன், குடி, எவராயினும் அறத்தைச் சிரமேற்றாங்கி ஆற்றலே அவர் கடன். நற்குணத்தை நாடி நல்லணியாய்ப்பூணலே பெரிது. ஒழுக்கமே மானிடர்க்கு விழுப்பந் தருவது; ஆதலின் அஃது உயிரினும் ஓம்பப் படுவது. வாய்மையே வாய்க்கு அமைந்தது. மனத்துக்கண் மாசிலனாதலே மாண்புடைத்து. கொல்லாமையினும் விரதம் குவலயத்தில் வேறில்லை. தன்னெஞ்சறிவதைப் பொய்த்தலின் இழிகுண மின்று.

 

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; உய்வில்லைசெய்ந்

நன்றி கொன்ற மகற்கு'

 

இம்மாதிரி இன்னம் இங்கு எழுதவும் விளக்கவும் இயலாத அத்துணைப் பெரிய அரிய அறங்களை விளங்கவைத்து, தோட்டி. முதல் தொண்டமான்வரை யாவர் வாழ்க்கைக்கும், தொழிலிற்கும், பொருந்திய தருமங்களில் செந்நாப் போதாரால் கூறப்படாத தொன்றில்லை.

 

மேற்சொன்ன அறங்கள் அனைத்தையும் ஆற்றற்கு அருந்துணையும் பெருங்கருவியும் ஆவது அன்பு. அன்பின்றேல் ஒன்றுமாவதில்லை. அன்பிலாவாழ்க்கை அவலமாய் விடும்.


அன்பகத்தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற் கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று

என்பதும்,

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை யரம்

என்பதும் வாழ்க்கைக்கும் அதன் பயனை யெய்தற்கும் அன்பு எவ்வளவு அவஸ்ய மென்பதைத் தெரிவித்து நிற்கின்றன.


 அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார்
 என்புமுரியர் பிறர்க்கு


என்ற அற்புதச் செய்யுளில் அன்புடையார்க்கும் அன்பிலார்க்கு முள்ள பேதத்தை யாவரும் வியப்புற விளக்கியிருத்தலைக் காண்க. இவ்வன் பேபிறரிழைத்த துன்பத்தைப் பொறுக்கவும், துன்பமிழைத்தாரை மன்னிக்கவும், அவர் நாண அவர்க்கு நன்னயஞ் செய்யவும் காரணமாய் அமைந்தது. மேலும்,


 அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
 இகழ்வார்ப் பொறுத்த றலை


என் மற்படி புவிப் பொறையை வகிக்கவும்,


 இன்னா செய்தார்க்கு மினியவே செய்யாக்கால்
 என்ன பயத்ததோ சால்பு


 என்றபடி பகைவர் மாட்டும் என்றும் நல்லதே செய்யும் சான்றாண்மையைக்கைக் கொள்ளவும் அளவில் அன்பன்றே காரணம். மேலும்,


 வலியார்முற் றன்னை நினைக்கத்தான் றன்னின்
 மெலியார்மேற் செல்லு மிடத்து


என்றதை எப்பொழுதும் ஒவ்வொருவரும் மனத்தகத்து இருத்தி நடப்பின் இவ்வுக்கு உயரிய நிலையையம், உன்னதவாழ்வையும், அரிய அமைதியையும், இன்பத்தையும் படைத்து இலங்கு மென்பதிற் சந்தேகம் எட்டுணையுமுண்டேயோ? உண்மைப் பெருமையுடையார் என்றும் பணிந்தே நடப்பர்; சிறுமை படைத்தாரே தம்மைப் புகழ்ந்து செருக்கித் திரிவர்.

 

எந்நிலையில் நின்றார்க்கும் எத்தொழிலைப் பூண்டார்க்கும், ஊக்கம், விடாமுயற்சி, தன் நம்பிக்கை, உடலுழைத்து உண்டல் ஆகிய இவை இணையில்லாக் குணங்களாம். நெற்றி வியர்வை சொட்டப் பாடுபட்டு ஈட்டிய பொருள் கொண்டு குடிக்கும் கூழ் அமரர் அருந்தும் அவ்வமிழ்தினும் இனிது. முயற்சியுடையார் என்றும் இகழ்ச்சி யடையார். கடவுளை நம்பி நங்கடமைதனைச் செய்பின் நாம் கருதாத பலன்கள் கிட்டும். முயற்சியின்றி உறங்கிக்கிடந்து, பொருளில்லே மென்று சொல்லித் திரியும் மாந்தரைக் கண்டு பூதேவி நகைக்கின்றாள் என்ற கருத்தமைத்து,


இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நில

மென்னு நல்லா ணகும்.

 

என்ற பாடலைப் பயந்தருளிய பெரியாரின் பெருமையை என்னென்பது? நன்மையைக் கடைப்பிடித்து ஓயாது ஒழியாது பாடுபட்டு வருபவர் விதியையும் வெல்ல வல்லுநர் என்ற கருத்துடன்,

 

ஊழையு முப்பக்கங் காண்ப ரூலைவின்றித்

தாழா துஞற்று பவர்

என்ற அரும் வாக்கை மலர்ந்தருளியதை மனத்தில் மறவாது வைத்தல் மிக அடுக்கடுக்காய் இடுக்கண் வரினும் அஞ்சாது அசையாது அவரவர் அறந்தன்னை ஆற்றலே ஆண்மையாம். அகிலத்துதித்த அனைவரும் அல்லல்களுக்கு ஆளாகி அலைந்து வாடல் இயற்கையே யென்ற பேருண்மையையுணர்ந்து அகங்குன்றாது இருத்தலே சிறந்தது என்று மாந்தர்க்குப் புகட்டும்கருணையுடன் நமது திருவள்ளுவ நாயனார்,


 இடுக்கண் வருங்கா னகுக வதனை
 அடுத் தூர்வ தஃதொப்ப தில்


என்று மனோதிடத்தை யளிக்கும் மொழியைத் தந்தனர். இவ்விடத்து மக்களிற் சிறந்தாரின் குணத்தையும், கீழ்மக்களின் குறிகளையும் நினைவிற்குக் கொண்டு வராமல் விடுவதற்கு மனமில்லை. அவை,


 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
 பேணாமை பேதை தொழில்


என்பதும்,


 அஞ்சாமை யீகை யறிவூக்க மிர்நான் கும்
 எஞ்சாமை வேந்தற் கியல்பு


என்பதுமே.

 

ஈண்டு புலவர்களிற் சிறந்த நமது நாயனார் தம் நூலின் பெருமை முற்றும் இச் சிறு கட்டுரையின் கண் எடுத்துக் காட்டல் மிகவரிது. தள்ளரிய பெருத்தித் தனியாறு புகமண்டும் பள்ளமெனத் தகைய அவர்தம் அரிய அழகிய உயரிய நூலின் கண் சொல்லி யிருப்பன முற்றும் முக்காலத்தும், எக்காலத்தும், எச்சமயத்தார்க்கும் சம்மதமாயிருப்பன என்பதை நன்கு கவனிக்கத்தக்கது. இஃது இத்தரணி உள்ளளவும் நிலவி நின்று நவிலரும் நன்மை பயந்து மன்பதையரை உய்யச் செய்யு மென்பதிற் சிறிதளவும் ஐயப்பாடின்று. சுபம்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment