Wednesday, September 2, 2020

 

திருவாசகமென்னுந் தேன்

நமது தெய்வத்தமிழ்நாடு பண்டைக்காலத்தில் சிறப்பாக மூன்று பொருள்களால் பிரசித்தி பெற்றிருந்தது. அவையாவன: முத்து, சந்தனக்கட்டை, மயில்கள். இவைகளுடன், அதாவது ஒருவித மணி, ஒருவித மரம், ஒருவித ஜந்து அல்லது பறவையுடன், இன்னும் இருவிதமான உருவ மற்ற பொருள்களாலும் சிறப்புற்றிருந்தது. அவை குளிர்ந்ததென்றலும், அமுதை ஒத்த தமிழ் மொழியும் ஆம். தற்போது இங்கு வேறெப்பொருள் குறைபட்டிருப்பினும், நல்ல வேளையாகத் தமிழ் மறையாமலிருக்கிறது. முற்கூறிய உருவப் பொருள், அருவப்பொருள், ண்ணப்பொருள் என்ற மூன்றினுள், மூன்றாம் விதமான எண்ணப் பொருள்களில் அதாவது கலை, காவியம், இலக்கியம் போன்ற பொருள்களில் தமிழ்நாடு தவப்பயனாக அருமையாகப் பெற்ற ஒரு பொருள் ஒன்றுண்டு. அது அரிய ண்ணங்களால் ஆக்கப்பட்டது. தமிழ் மகன் எத்துணைக்காலம் உயரிய எண்ணங்கள் கொண்டு திகழ்கிறானோ அத்துணைக்காலம் அது அறியாமலிருப்பது. அது தமிழ்நாட்டில் தோன்றிய கால் அமுதுறத்தமிழில் வார்க்கப்பட்டது. அது தனித் தமிழ்ப்பொருள். எனினும், அது தென்னாட்டிலுண்டானாலும் எந்நாட்டவர்க்கும் பொதுவாயிலங்குவதுடன் ருசிப்பவர்க்கினிப்பபது, ருசி - அதாவது இனிப்பு, கசப்பு என்றெல்லாம் தெரிவது நம்மன நெகிழ்ச்சியாலாம். மனதிற்கு இன்பந் தருவதை இனிப்பென்பது வழக்கு. ஆகவே, நான் முற்கூறிய பொருளும் மனதிற்கு மிக மிக இன்பந்தருவ தொன்றாகையாலும், மணமும், தெளிவும் கொண்டு இயற்கையாக உண்டாகும் தேன் போன்றதாலும், அதற்குத் தேன் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. அது தான் ‘திருவாசகமென்னுந்தேன்.'

 

நாம் நம் கண்ணால் தேனைப்பார்க்கலாம். ஆனால், அதன் ருசியை அறிய வேண்டுமானால், நாக்கும், அதனால் ருசியறியும் உணர்வு மிருந்தால் தான் தேனின் சுவையை அறியலாம். தாகமுள்ளவர்களுக்குத் தேன் மிகுந்து இனிக்கும். நோடள்ளவர்கள் உட்கொண்டால் தேன் நோயை நீக்கும். நாள் தோறும் ஏற்ற அளவில் அதைச் சிறிது பருகினால் நம் உடலானது நலம் பெறும். அதுபோல மேற் சொன்ன 'திருவாசக மென்னுந்தேனை முத்து முத்தாயுள்ள தமிழில் பார்க்கலாம். ஆனால் தமிழறிவு ஆகிய நாக்கும் தமிழ்ப் பயிற்சியாகிய சக்தியுமிருந்தால் தான் அதன் இனிமையை நன்கனுபவிக்கலாம். உடலில் தாகம் போன்று, உள்ளத்தில் பக்தி அல்லது ஆண்டவனிடத்து அன்பிருந்தால் அது மிக்க மகிழ்ச்சி தரும். மேலும், பிறப்பு இறப்பு என்ற பிணியை உடைய நமக்கு அது அருமருந்தாகி அல்லற் பிறவியை அழித்து, ஆனந்தமாகிய ஆரோக்கியந் தருவதாகும். நாடோறும், உள்ள உணர்ச்சியுடன் 'திரு வாசகத்தேனைச், சிறிதேனும் அனுபவித் துணர்ந்தால் நம் ஸ்தூல) உடல் மும், வளமும், உரமும் பெறும்.

 

இத் 'திருவாசகத்தேன்' எந்நாட்டினர்க்கும், எந்நிலையிலிருப்பவர்க்கும், எவ்வயதுற்றவர்க்கும் உவப்பிலாத ஆனந்தம் தருவது. இதைத் தமிழ் மக்கள் முற்காலம் சாலப்பருகினார்கள், ஆர அனுபவித்தார்கள், நிரம்ப நுனித்தார்கள். அப்போது, அவர்கள் இயற்கை வாழ்வில் ஈடுபட்டு, நெறிசார்ந்த நிலையில் விளங்கி, திருவாசகத்தேனை அதுபவித்ததால், அவர்களின் உடல்கள் கட்டழகில் திகழ்ந்தன, உள்ளங்கள் உணர்ச்சிமிக்க உவகையில் மூழ்கின, உயிர்கள் இறுதியில் ஆனந்தத்தில் அழுந்தின. ஆயிரக்கணக்கான மைல்களுக்கட்பாலிருந்து வந்த ஆங்கிலேயர் (ரெவரண்டு போப் போன்றவர்) சிலர் கூட அதை அறிந்தானந்த முற்றனர். ஆனால், இக்கோதில் செந்தேனை - அதாவது குற்ற மற்ற செந்தமிழ்க் கோமளவாசகத்தைப் பிற்காலத்தில் மறந்து, புறக்கணித்து, ருசியற்ற பிறகாட்டுப் பொருள்களின் கவர்ச்சியி லீடுபட்டுத் தமிழ்மக்கள் பலர்
மதி கெட்டதால், அவர்கள் வாழ்க்கை நிலை தவறியது, நெறிமறைந்தது, அவர்களைத் துன்பஞ் சூழ்ந்து விட்டது, அஞ்ஞான இருள் கம்மியது.

 

'தெள்ளுற்ற தமிழின் சுவைகண்டார்
இங்கு அமரர் சிறப்புக் கண்டார்'

 

என்று சுப்பிரமணிய பாரதியார் பாடியிருப்பது போலத் தமிழின் சுவைக்கு உலகில் ஈடில்லாதிருந்தும், தாமரை மலரின் கீழே உள்ள தன் நீரிலிருக்கும் தவளைகளைப் போல தமிழர் பலர் திருவாதவூரரின் திருவாய்க் கமலத்தி லுண்டான திருவாசகத் தீந்தேனைப் பருகாமலிருப்பது மிகவும் பரிதாபம். என்ன சாபமோ, அல்லது பாவமோ, தமிழ் மக்கள் பலர் இப்பொருளை அறியாது 'ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடாகளாய்' வாழ்ந்திருந்து வருகிறார்கள். அவர்கள் நிலையை நினைக்கவே வருத்தத்தால் நெஞ்சு நெகிழ்கிறது. பாரதியார் பாடிய

 

'நெஞ்சுபொறுக்கு தில்லையே இந்த நிலைகெட்ட

மனிதரை நினைந்து விட்டால்''

 

என்ற பாட்டு ஞாபகத்திற்கு வருகிறது. கேட்கவும், படிக்கவும், சிந்திக்கவும் ஏற்ற இத்தெய்வ நூலிருக்க, தமிழ்மக்கள் - அதிலும் சைவர்களில் பலர் - திருவாசகத்தை அனுபவிக்காது 'பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மைகெட்டு, நாமமது தமிழரென வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!' இனியேனும் அற்ப ஆயுளை வெறும் அலைச்சலில் வீணாக்கி விடாமல் தெய்வத் திருவாசகத்தைப் பாடியாடி உள்ளுருகிப் பெருகி, நெக்காடி யாடி, அருள் கலந்து ஆனந்த மதுவே ஆவதுதான் சிறப்பாகும். நிற்க,

 

இத்திருவாசகமாகிய 'தீந்தேனை 'நமக்கருளி ஈந்தது யார் என்றால் ஞானக்கதிர் வீசும், மாணிக்கமாகிய மணிவாசகப் பெருமான். அவர் புனித வாய்ப் புஷ்பத்தினின்று பொழிந்த செஞ்சொல் தேனை யார் சேகரித்தது? அதன் முருகை அல்லது தெய்வமணத்தை அச்சிவானந்தத் தேனைக் கொண்டு உலகுய்ய வேண்டுமென்று திருவுள்ளங் கொண்டு, நித்தமணாளனும் நிரம்ப வழகியனுமான சிவபெருமானே தன் உருயாறிப் பரிந்துவந்து, மணிவாசகப் பெருமானின் குமுதவாய்க் கோமள மலரினின்று சொட்டச் சொட்ட அதனைத் திருவேடுகளில் சேகரித்துத் திருச்சிற்றப்பலப் படிகளில் வைத்து விட்டு மறைந்தார். இதனால் அச்சீரிய வாசகத்தின் பெருமையை எவ்வாறுரைப்பது!

திருவாதவூர்ப் பெருமான் அந்த ஞானத்தேனை எங்குக் கண்டார் என்றால், அழகிலும், மணத்திலும் இணையற்ற தெய்வ மலர்களாகிய சிவபெருமானின் செங்கமலப் பொற்பாதங்களில் கண்டு உண்டார். தம் கண்ணினை அத்திருப்பாதப் போதுக்காக்கி, வந்தனைபை அம்மலர்க்கே யாக்கினாச, சிந்தனையைச் செந்தாமரைக்காடனைய சிவத் திருமேனிக் காக்கினார். அப்படி யாக்கியதும், அவர் ஊனுருக, அவர் உள்ளொளி பெருக அவரிதய மலர் மலர்ந்து சிவானந்தத்தேன் பிலிற்றியது. அப்போது, அவருடைய திருவுடலில் அமுத தாரைகள் எலும்புத்துளைகள் தோறும் ஏறின, ஊனையும், உயிரையும் கலந்தன. சிவபெருமானின் அருளும் கருணை வான் தேனும் கலக்கப் பராவமுதாய் விட்டார் மணிவாசகனார்.

 

இனி, தனக்கென வேண்டாத பிறர்க்குரியாளனாக அவரிலங்கவும், ஞாலம் விளங்கவந்த நாயகனாகத் திகழவும், அவரினின்று திருவாசகம் எழுந்தது. அவர் காலத்துலகும், நாமும் நமக்குப் பின் வருவோரும் குருமொழிக்கிணையான பெருமொழிகள் மிக்க அத்திருவாசகத்தால் உய்ய வேண்டுமென்று, கருணைகூர்ந்து 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய' சிவபெருமான் இன்பப் பெருக்காகிய இம்மணிவாசகத்தைச் சேகரித்துத் தமிழர்க்குத் தந்தார். அப்படித்தந்த தேனை நாம் நம் சிந்தை மகிழவும், முந்தை வினை முழுதும் ஓயவும் 'பாடிப் பருகி மகிழ்ந்து, எண்ணுதற் கெட்டாத எழில் மிக்க கழலைக்கண்டு, கண்ணுதலான் கருணைக்குப் பாத்திரராக வேண்டும், 'திருவாசகமன்றி ஒரு வாசகமில்லை' என்றும், 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்றும் சிறப்பித்துக் கூறிய திருவாசகத்தைத் தேனுக் கொப்பிட்டுத் திருவாசகமென்னுந் தேன்' என்று பாடி மகிழ்க்தார் ஒரு பெரியார். அதாவது.


''தொல்லை இரும்பிறவிச் சூழுந்தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன்
திருவாசக மென்னுந்தேன்''


திருவாசகத்தைச் செந்தேனுக் கொப்பிடுவதே சாலப் பொருந்து மெனத் தெரிகிறது. எப்படியெனில், எப்படியெனில், சூரிய வெளிச்சத்தால் மலர்ந்த மலர்களே தேன் சொட்டும், அதைப் போல் இறைவனருட் கதிர்களால் ஞான மலர்ச்சி பெற்ற உள்ளமாகிய கமலம் பிலிற்றியதே திருவாசகத்தேன். சிவந்த செந்தேனே அழகாயிருப்பது போல், இம்மணிவாசகமும் செந்தமிழில் அமைந்திருக்
கிறது. மணம் மிக்க செந்தேனைப் போல் திருவாசகத்திலும் சிவமணம் நிறைந்து வீசுகிறது. ருசிப்பதற்குத் தேன் இனிப்பது போல் படிப்பதற்குத் திருவாசகம் மிக இன்பமா யிருக்கிறது. பருகினால் தேன் உடலுக்கு வளம் தருவதைப் போல், நாடோறும் கருத்தூன்றிப் படித்தால் திருவாசகம் நம் எண்ண உடலைத் தூய்மையாக்கும். அதனால் நம் சித்தங் களிகூரும், தெளிவாகும், சிவமாகும், நாம் செய்யும் கருமம் தவமாகும்! நோயுள்ளவர்களுக்குத் தேன் ஒரு மருந்தாவது போல், திருவாசகமும் மேலே பாட்டில் கூறியது போல, துன்பந் தரும்படியான பிறவி நோயை நீக்கும் பேரௌஷதமாகிய ஞான மருந்தாகும்.

கருணைக் கடலாகிய சிவானந்த சாகரத்தினின் றெழுந்த மணிவாசகப் பெருமானாகிய கொண்டல் அருளால் பொழிந்த இன்பஞான மழையே திருவாசகமென்பது. 'சந்தனமெல்வாசம் கமழும் குளிர்ந்த தென்றல்' போன்ற இலக்கிய இன்பம் மிக்க செந்தமிழ்ச் சோலையில், சிவக்கதிராகிய சூரிய ஒளியில் திகழு வதே திருவாசகமாகிய ஞான மலர். அஞ்ஞான மாகிய இருளில் வினைகளாகிய பள்ளங்களில் தவறி விழுந்து இடர்ப்படும் உயிர்கள் நன்னெறியாம் நல்வழியடைந்து மேற்சென்று சிவபுரமாம் இன்ப ஊரை அடைய வேண்டுமெனத் திருவாதவூரெனும் ஞானச்சூரியன் மெய்ஞ்ஞான மாகிய மிளிர்சுடராகி ஒளிபரப்ப, அஞ்ஞானமாகிய இருளகலத் தோன்றிய பொற்கதிரே திருவாசகம். பேரின்ப உலகமாகிய சிவபுரத்தினின்று தென்னாட்டில் இறங்கித் தமிழாகிய சோலையில் சஞ்சரித்துப் பாடி மகிழ்ந்த மாணிக்கவாசகர் என்ற பூங்குயிலின் பேரின்பப்பாட்டே திருவாசகம். உயிர்களைத் துன்புறுத்தும் வினைகளாகிய மாயைச் சிற்றினங்கள் மறைந்தோடி அழியுமாறு மாணிக்கவாசகரெனும் ஞானச்சிங்கம் முழக்கிய கர்ஜனையே திருவாசகம். பலவகையான இலக்கிய நூல்களாகிய நவரத்தினங்களால் சித்திரிக்கப்பட்ட தமிழ் என்னும் உயர்மொழிப் பதக்கத்தில், உள்ளங்கவரும் ஞானக்கதிர் வீசும் ஒப்பில்லாதமாணிக்க வயிரமே திருவாசகம். காணவே கண்ணில் அமுதூறித் தித்திப்பதென்ன இன்பமூட்டும் உயர்ந்த ஓவியங்களுள்ள சித்திரகூடமாகிய தமிழில், ‘ஓவியத்தெழுத வொண்ணாத உருவத்தாளுகிய சிவபெருமானை' மாணிக்கவாசகரென்னும் சித்திரக்காரன் படம் பிடித்து வரைந்த அரிய பெரிய ஓவியமே திருவாசகம். ஆனந்த மெழுப்டம் நன்னூல்களென்னும் சிலைகள் விளங்கும் தமிழென்னும் சிற்பமண்டபத்தில், மாணிக்கவாசகரென்ற தெய்வச்சிற்பி செதுக்கி நாட்டிய சிவச்சிலையே திருவாசகம்.

 

இப்பேர்ப்பட்ட பெருமை வாய்ந்த திருவாசகமாம் ஞானமணிப் பெட்டகத்திலுள்ள அருமையான பொருளை அநுபவியாது அவமாகக் காலத்தைக் கழிக்கிறார்கள் பலப்பல தமிழர்கள். இரண்டணாவில் பதிப்பித்துங்கூட ஆயிரக்கணக்கான திருவாசகப் பிரதிகள் வாங்குவாரின்றி மீதங்கிடந்து விட்டன வென்றால் என்னென்று வருந்துவது. இனியேனும், தமிழர்கள் இல்லங்கள் தோறும் திருவாசகமென்னும் திருவிளக்கை ஏற்ற வேண்டும். அங்குச் சிவமணம் வீசும் அதன் பரிமளம் நிறைய வேண்டும். திருவாசகநாதம் நம் மில்லங்களில் தொனிக்க வேண்டும். திருவாசகம் என்னும் அமுது நம் ஊனிலும், எலும்பிலும், உள்ளத்திலும், உயிரிலும் கலக்க வேண்டும். உணர் வெல்லாம், பாடும் வாயெல்லாம் அதனாலே தித்திக்க வேண்டும். நாம் அதை அதுபவித்தாலே மேல் நாட்டார் முதலிய பிறநாட்டார் அதை, நாடுவார்கள். அழியும் வெறும் பொருள்களைக் கொள்ளையிட்டுச் செல்வதை விட்டு, அவர்கள் தமக்கும் பிறர்க்கும் நன்மை விளைவிக்கும் திருவாசகம் போன்ற ஞானப் பொருள்களை அனுபவிப்பார்கள். திருவாசகத்தை மொழி பெயர்த்த ரெவரண்டு போப் போன்ற உலக சஞ்சாரியன்றோ ஒப்பற்ற உலக சஞ்சாரி.
அவரைப் போல் மேனாட்டார் பலரும் திருவாசக ருசியை அனுபவிக்க விரும்புவார்கள். ஆனால், அதன் ருசியை முன்னே நாம் அனுபவித்தால், பிறர்க்கும் அது விளங்கும். மேனாட்டார் அதன் பெருமையைக் கண்டுவிட்டால் போதும். பிறகு அதில் ஆராய்ச்சி என்னும் உணர்வு செலுத்தி விதவிதமானபுது நூல்களெனும் புதுப்பொருள்க ளுண்டாக்கி உலகுக் குதவுவார்கள். மேலும், தமிழர்கள் 'சேமமுற வேண்டுமெனில் தமிழோசை உலகமெலாம் செழிக்கச் செய்யவேண்டும். ஆகவே, தமிழர்கள் - அவர்களிலும் சைவர்கள் சிவபக்தியெனும் சுடர் கொழுந்து விட்டெரியத் தமிழ்ப் பற்றெனும் நெய்யூற்றி உலக இன்பமென்னும் ஓமம் வளர்ப்பார்களாக.

 

திருவாசகத்தைப் பற்றித் திருவருட் பிரகாச வள்ளலார் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்களை நாம் ஆராய்ந்தறிந்தால் திருவாசகத்தின் மகிமை விளங்கும். அவை யாவன:

 

 சேமமிகுந் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
 மாமணியே! நீ உரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
 காமமிகு காதலன் தன் கலவிதனைக் கருதுகின்ற
 ஏமமுறு கற்புடையாள் இன்பினும் இன்பெய்துவதே.
                 (1)


 வான்கலந்த மாணிக்கவாசக! நின்வாசகத்தை
 நான் கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ் சாற்றினிலே
 தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
 ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.                
(2)


 வருமொழிசெய் மாணிக்கவாசக, நின் வாசகத்தில்
 ஒரு மொழியே என்னையும் என்னுடையனையு மொன்றுவித்துத்
 தருமொழியா மென்னில் இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
 குருமொழியை விரும்பியியல் கூடுவதேன் கூறு தியே.
              (3)

 

 வாட்டமிலா மாணிக்கவாசக! நின்வாசகத்தைக்
 கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
 வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
 நாட்டமுறு மென்னில் இங்கு நானடைதல் வியப்பன்றே.             
(4)

 

ஆனந்த போதினி – 1931 ௵ - டிசம்பர் ௴

 

 

No comments:

Post a Comment