Wednesday, September 2, 2020

 திருவிளக்குத் திருவிழா

 

“சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே!" - என்று அருட் பெருஞ் சோதியாம் ஆண்டவனைப் போற்றி நின்றார் ஒரு அன்பர். "நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் - சீரார்சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்!" என்று இறைவனை இறைஞ்சி நின்றார் சடகோபாழ்வார். இன்னருள் வடிவினனாகிய இறைவன், உயிர்களுக்கு அறிவொளி வழங்கும் சுடர்மணி விளக்காகவும் 'ஆதியும் அந்தமும் இல்லா அருளும் பெருஞ் சோதி'யாகவும் விளங்குகிறான். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று நேரும் 'திருவிளக்குத் திருவிழா', அருள்வடிவினனாகிய ஆண்டவனின் சுடரொளிபை நெஞ்சில் நினைந்து துதித்து மகிழ்வதற்காகவே முன்னோரால் ஏற்படுத்தப்பட்ட திருவிழா ஆகும். அத்திருநாளன்று, தமிழர்களின் வீடுகளி லெல்லாம் அழகிய விளக்குகள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டு ஒளிபரப்பி நிற்கும் காட்சி, உள்ளத்திற்குப் பெரு மகிழ் வூட்டுவதாகும்.

 

முற்காலத்திலே, எரி வடிவினனாகிய இறைவனது இன்னருளைப் பெறும் நன்னோக்கத்துடன் அசுர வேந்தனாகிய மாவலி செய்த வேள்வி, தேவர்களுக்குப் பரிந்து சென்ற திருமாலால் தடைப்பட்டு விட்டது. அச்சமயத்திலே, தொடங்கிய வேள்வி நிறைவேறாமற் போனதால் நேர்ந்த தோஷம் தன்னைத் தொடராமல் நீங்கிவிட அருளுமாறும், தன்னை ஆட்கொண்ட நாளாகிய கார்த்திகை மாதத்திய கார்த்திகை நட்சத்திரத்தன்று, தீயினாலும் விளக்குகளினாலும் தம்மை த்ருப்திப்படுத்தி மகிழ்விக்கச் செய்து கொண்டருளத் திருவுள்ளம் பற்றுமாறும் அவ்வசுரன் திருமாலைப் பிரார்த்தித்துக் கொண்டான். கருணைக்கடலாகிய திருமாலும், அவன் கோரிய வரங்களைக் கொடுத்தருளினார். அவ் வைபவத்தைக் குறிப்பிடுவதே, ஆண்டுக்கொருமுறை தமிழ் நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் தீபோத்ஸவம்.

 

மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக வேண்டப்படுவது எது? உடலில் உயிர் தங்கியிருப்பதற்கு உறுதுணையாக இருப்பது எது? உடல் வளர்ச்சிக்கேற்ற உணவைப் பக்குவம் செய்து கொள்வதற்கு இன்றியமையாது வேண்டப்படுவது எது? இயற்கையன்னையின் கரு கணையையும் பயங்கரத்தையும் ஏககாலத்தில் உணர்த்தி நிற்பது எது? அறிவின் சுடரொளியைக் குறிப்பிடுவது எது? ஆண்டவனின் அருட்பெருஞ் சோதியை உணர்த்துவது எது? விண்ணுலகில் வாழும் அமரர்களை, மண்ணுலகத்திற்கு எளிதில் வரவழைக்கக் கூடிய மகத்தான மந்திர சக்தி பொருந்தியது எது? மண்ணுலகில் வாழும் மறையவர்களை, மற்றெல்லோரும் புகழ்ந்து போற்றுமாறு பூதேவர்களாக உயர்விப்பது எது? தலை விரித்துத் தாண்டவமாடும் அசுரர்களையும் பேய்களையும் வெருட்டி தூரத்திவிடக்கூடிய வீரசக்தி பொருந்தியது எது? காளி தேவியின் கோரவீர தாண்டவத்தைக் குறிப்பிடுவது எது? 'ஞான மேனி உதயகன்னி நண்ணிவிட்டது' போல், 'வானை நோக்கிக் கைகள் தூக்கி வளர்வது' எது? தனது செந்நிறத்தால் செக்மேனிச் செம்மலாகிய சிவபிரானையும், கிக் கொழுந்துவிட்டு எரியும்போது ஓரத்தில் தோன்றும் இள நீலநிறத்தால் நீலமேனி வண்ணனாகிய திருமாலையும் நினைவூட்டி, தன்னிடம் அழிக்குந்தன்மையும் அளிக்குந்தன்மையும் ஒருங்கே அமைந்து விளங்குவதை உண்மை யன்பர்களுக்கு உணர்த்தி நிற்பது ஏது? அறிவின் குறியாகவும் உடலின் துணையாகவும் ஒளிர்வது எது? அதுவே, தீ தீ!! தீ!!!

 

ஆவியிலும் அறிவினிடையிலும் அன்பை வளர்ப்பவன் எவன்? மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு, விண்ணுலகில் வாழும் அமரர்களின் அருள் எளிதில் கிடைக்கச் செய்பவன் எவன்? உயிரோடு உயிர் கலந்த உண்மைக் காதலர்களின் இனிய காதலை வளர்ப்பவன் எவன்? கோர தாண்டவம் செய்யும் வீரகாளியின் சீரிய மைந்தனாக விளங்குபவன் எவன்? மனம் கொண்டு விட்டால் எதையும் எளிதில் பொசுக்கி ஒழித்துவிடக்கூடிய பயங்கர சக்தி படைத்த வீரன் எவன்? அமிர்தம் அருந்திக் களித்துச் செருக்கிக் கிடக்கும் அமரர்களையும் அவ்வமிர்த பானத்தினால் அனுபவிக்கும் ஆனந்தத்தைக்கூட பறக்கும்படி செய்வித்து, விருந்துண்ணும் ஆவலினால் மண்ணுலகத்தை நாடி வரும்படி செய்விப்பவன் எவன்? மனிதர்களின் ஆருயிர்த்தோழனாக விளங்கும் தேவன் எவன்? தீமைகள் யாவையும் அழித்து தூய்மைப் படுத்துபவன் எவன்? உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத உணவுகளை, பலவகைப்பட்ட சுவையுடையனவாகப் பண்படுத்திப் பரிவோடு அளிப்பவன் எவன்? நாட்டுக்கு நேரக்கூடிய தீமைகளைப் போக்கி, பல நலன்களையும் விளை விக்கக்கூடிய தெய்விகத்தன்மை படைத்தவன் எவன்? காலகாலனும் நீலகண்டனுமாகிய சூலபாணியின் செங்கையில் தங்கியிருந்து அவனுடன் ஆனந்தத் தாண்டவமாடும் அரும்பெரும் பேறுபெற்ற செல்வன் எவன்? 'கட்டுகள் போக்கி விடுதலை தந்திடும் கண்மணி போன்றவன்' எவன்? நம்மெல்லோரையும் இரவும் பகலும் இடைவிடாமல் பெரும் பரிவுடன் காத்து நிற்கும் கருணையாளன் எவன்? இருளடர்ந்த துன்பக்காட்டைப் பொசுக்கி ஒழிப்பவன் எவன்?

 

மனிதர் நெஞ்சில் தோன்றும் பலவகைப்பட்ட கவலைகளையும் நீக்கிக் கொடுப்பவன் எவன்? உயிர் வாழ்க்கை நீடித்திருக்கச் செய்பவன் எவன்? ஒளி மயமாக இலங்கும் உயர் பரம்பொருளின் உண்மையை, ஒவ்வொரு நிமிஷத்திலும் உயிர்களுக்கு உணர்த்தி நிற்பவன் எவன்? பலவகைப்பட்ட கவலைகளால் உற்சாகம் இழகது கலக்கம் மிகுந்து மனம் வருந்தித் தவிப்பவர்களுக்கு, அஞ்சேல்' அஞ்சேல்' என்று அபயம் அளித்து புத்துயிர் அளித்து புத்துணர்வூட்டி உற்சாகத்தைப் பெருக்கி வீர உணர்ச்சியை ஊட்டும் சீரிய வீரத்தோழன் எவன்? நம்பிக்கையின் வடிமையினாலும் வீரத் துணிவினாலும் பன் முறைகளிலும் வெற்றி வளைத்துக் கொடுப்பவன் எவன்? பயமாகிய ஈனப் பேயை உயிருடன் சுட்டுப் பொசுக்கி சாம்பலும் எஞ்சாதவாறு துடைத்துத் தூய்மைப்படுத்திவிடும் வீரநாயகன் எவன்? வீரச் செயல்களுக்குக் காரணபூதனாக விளங்குபவன் எவன்? வேறு எதனாலும் தடைப்படுத்த முடியாத மகத்தான சக்தி பொருந்தியவன் எவன்? மனிதரின் மனச் கோயிலிலே, குற்றமற்ற நல்லிச்சைகளையும் சீரிய வேட்கைகளையும் கருத்தொரு மித்த தெய்விகக் காதலையும் நல்லற விருப்பங்களையும் மேன்மேலும் வளர்க்கக்கூடிய தேவதூதன் யார்?


"வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று
மண்டி எழும் தழலைக் - கவி
வாணர்க்கு நல்லமுதை - தொழில்
வண்ணம் தெரிந்தவனை - நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
தீம்பழம் பாலினையும் - இங்கே உண்டு
தேக்கிக் களிப்பவனை --பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர்!" -                      
என்றும்,


“சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
தேவத் திருமகளிர் - இன்பம்
தேக்கிடும் தேனிசைகள்-
தேறிடு நல்லிளமை -- நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
முழுக் குடம் பற்பலவும் - இங்கே தர
முற்பட்டு நிற்பவனை- பெருந்திரள்
மொய்த்துப் பணிந்திடுவோம்!"-                          
என்றும்

 

வீர பாரதியார் புகழ்ந்து பாடநின்ற வீரதேவன் யார்? அவனே, அருளாளனும் அற வீரனுமாகிய அக்கினி தேவன்!

 

அத்தகைய அக்கினி தேவனது வழிபாடு, இந்நாட்டில் சிறந்து விளங்கிய காலத்திலே, இந்நாட்டில் எல்லா வகைப்பட்ட வளங்களும் நிறைந்திருந்தன; இந்நாட்டு மக்களெல்லோரும் குறைவொன்றுமின்றி குளிர்ந்த சிந்தையினராய்க் குதூகலமாக வாழ்ந்து வந்தனர். நாட்டு நலத்தையே, தமது நலமாகக் கொண்டு, மற்றவர்களின் க்ஷேமத்தின் பொருட்டு இறைவனை வழிபட்டு வந்தவர்களான மறையோர் - செந்தழல் வளர்க்கும் செங்கையினராய் செந்தண்மை பூண்டொழுகிவந்த அந்தணர்கள் - தமது நல்லொழுக்கத்தினாலும் ஹிருதய பூர்வமான உண்மைப் பக்தியினாலும் அக்கினி தேவனைப் பெரிதும் மகிழ்வித்து வந்த வேதியர்கள் தங்களது குல தருமங்களில் வாழ்ந்துவந்த வரையில், இந்நாட்டில் செல்வத்தின் அதி தேவதையாகிய திருமகளும் கல்வியின் அதி தேவதையாகிய கலைமகளும் கைகள் கோத்துக்களிநடம் புரிந்துகொண் டிருந்தனர். அத்தகைய அந்தணர்கள் என்று முதல் அக்கினி தேவனது வழிபாட்டை மநர்து- ஐவகைப்பட்ட வேள்விகளைத் துறந்து - தங்களது குல தருமங்களுக்குப் பொருந்தாத அடிமைத் குன்றாது தொழிலில் - ஊழியப் பிழைப்பில் கருத்தைச் செலுத்தத் தொடங்கினரோ, அன்று முதல் இந்நாட்டில் பலவகைப்பட்ட துன்பங்கள் பெருகத் தொடங்கி விட்டன. நாட்டு நலத்திற்கேற்ற நல்லற வேள்விகள், இந்நாட்டினின்றும் மறைந்தே போய்விட்டன. செந்தழலை வளர்த்துப் புகை எழுப்பும் தொழிலை மேற்கொள்ள வேண்டிய செங்கைகள், சிற்சில விடங்களில் சிகரெட் பிடிக்கும் கைகளாகவும் மாறிவிட்டன. புகை வளர்க்கும் தொழிலை மேற்கொள்ள வேண்டிய அவர்களது கைகளுக்குப் பதிலாக, சிற்சில விடங்களில் அவர்களது வாயே அத் தொழிலை மேற்கொண்டு விட்டது! என்ன செய்வது? எல்லாம் காலத்தின் கோலம்போலும்!

 

கார்த்திகை மாதத்திய கார்த்திகைத் திருசாளில் கொண்டாடப்படும்.
திருவிளக்குத் திருவிழா, தற்காலத் தமிழ் காட்டிலும் எல்லா வீடுகளிலும் எல்லாக் கோயில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அத் திருநாளன்று, தமிழ்நாட்டுக் கிராமங்களில் காணப்படும் காட்சிகள், இக்காலத்திலும் பெருமகிழ் வூட்டுவனவாகவே இருக்கின்றன. நீல வான வீதியிலே, தனது வெள்ளிக் கிரணங்களை எங்கும் வாரி இறைத்த வண்ணம் மோகன சந்திரன் உலவப் புறப்படும் அந்தி வேளையிலே, மனையை விளக்கவந்த மணிவிளக்கனைய இள மங்கைகள், குறு முறுவல் தவழும் குளிர்மதி முகத்துடன் கூடியவர்களாய், தெரு வாசலில் நீர் தெளித்துக் கோலமிட்டு சிறு சிறு அகல்
விளக்குகளில் எண்ணெயிட்டு ஏற்றி வைத்து மங்கல விளக்கின் வடிவில் விளங்கும் மலர் மகளை மனத்தில் நினைத்துக் கை குவித்துத் துதித்து தீபாலங்காரம் செய்து மகிழும் காட்சி, கண்களுக்குப் பெரு விருந்தளிக்கும் இனிய காட்சியாகும். தெருக்களில், சிறுவர்கள் தீப்பொறி பறக்கும் கார்த்திகைப் பந்தங்களை வேகமாகச் சுற்றி விளையாடும் காட்சி, காண்போர்க்குப் பெரிதும் இன்பூட்டுவதாகும். ஆனால், இன்றைய நாளில் நகரங்களில் காணப்படும் காட்சிகளோ, அவற்றிற்கு நேர்மாறாக இருக்கின்றன. நகரம்' எனப்படும் 'காக'த்தில் வசிக்கும் நவீன நாகரிகப் பெண்மணிகள் கண்களைக் கூசச்செய்யும் மின்சார விளக்குகளுடனும் மண்ணெண்ணெயால் எரியும் 'லாந்தர்க' ளுடனுமே பழகுபவர்களாதலின், லக்ஷ்மீகாமான- குளிரொளி அளிக்கும் -- அகல் விளக்குகளில் எண்ணெயிட்டு ஏற்றி வைத்து மகிழும் பாக்கியம், பெரும்பாலும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. கார்த்திகைத் திருநாளன்று, நகரத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கு சீன வெடியும் பட்டாசும் கொளுத்திக் கையைச் சுட்டுக்கொள்ளத் தெரியுமேயன்றி, கிராமத்துச் சிறுவர்களைப்போல் தீப்பொறி பறக்கும் பதங்களை உடலில் ஒரு தீப்பொறியும் படாதவாறு வேகமாகச் சுற்றி மகிழும் வீர விளையாட்டு தெரியாது.
ஆதலின், தமிழ் நாட்டுக் கிராமங்களில் திருவிளக்குத் திருவிழா' இன்றும் எவ்வளவோ குதூகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தும், அத்திருவிழா நகரங்களில் மட்டும் சந்தடி தெரியாமல் வந்து விட்டுப் போய்விடுகிறது.

 

'திருவிளக்குத் திருவிழா' எனும் தீபோத்ஸவம், பெரும்பாலும் தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும், அத் திருவிழா மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் க்ஷேத்திரங்கள், வைணவத்தில் திரு அரங்கப் பெருநகரும் சைவத்தில் திருவண்ணாமலையுமேயாம். திரு அரங்கப் பெருநகரிலே, திருக்கார்த்திகைத் திருவிழா கொண்டாடப்படும் வைபவம், மிக மிகச் சிறந்ததாகும். அன்று, பெருமான் ஸந்நிதியில் திருவிளக்கு வைக்கும் உரிமை, உத்தமநம்பி ஐயங்கார் என்பவருக்கு உரியதாகும். அன்று மாலையிலே, அந்த கைங்கர்யபரர் பெருமாளின் சகல விருதுகளுடனும் மேளதாளங்களுடனும் தமது வீட்டினின்றும் மஹா வைபவமாகப் புறப்பட்டு வந்து, கோயில் வாயிலில் யாவற்றையும் நிறுத்தி விட்டு, மடைப்பள்ளிக்குள் சென்று, அங்கு பரப்பப்பட்டுள்ள நெல்லின் மேல் எரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விளக்கை எடுத்துக்கொண்டு புறப்படுவார். அவ் விளக்கினருகில் எரிந்து கொண்டிருக்கும் மற்ற எட்டு அகல் விளக்குகளை, உத்தம நம்பி ஐயங்காரது குடும்பத்தினர் நால்வரும் வேதவ்யாஸ பட்டர் ரங்காசார்யர் அமுதனார் அழகிய மணவாளன் ஸபையார் முதலிய நால்வரும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு உள்ளே போய் பிரதட்சிணமாக சந்நிதிக்குள் செல்வார்கள். பெருமாளை ஆராதிக்கும் அர்ச்சகர், உத்தம நம்பி ஐயங்கார் கொண்டுவந்த வெள்ளி விளக்கை வாங்கி, அரவணையின்மேல் அறிதுயில் கொண்டு கிடக்கும் பெரிய பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணி, பெருமாளுக்கு எதிரிலுள்ள 'குலசேகன் படி' எனப்படும் படியின் மேல் பரப்பப்பட்டுள்ள செல்லின் மேல் வைப்பார். எட்டு விளக்குகளும் நம்பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணப்பட்டு, கர்ப்பக் கிருகத்திற்கு வெளியிலுள்ள - இருபத்து நான்கு திருத்தூண்கள் கொண்ட-'காயத்திரி மண்டபத்தில் நாற்றிசைகளிலும் திக்குக்கு இரு விளக்குகள் வீதம் வைக்கப்படும்.

 

பின்னர், செங்கழுநீர் மலர்களினாலேயே அலங்கரிக்கப் பெற்ற அற்புதப் பூந் 'திருவாசி' யிலே புறப்பட்டருளும் நம்பெருமாள், சக்கரத்தாழ்வான் சந்திநிதி வாசலை அடைந்து நிற்பார். அப்பொழுது, 'திருச்சுற்றுக்காரன்' எனும் பெயருடைய கைங்கரியபரன் பெருமாளிடம் வந்து நின்று, பெருமாளை ஸேவித்து மரியாதை' முதலியன பெற்று, தான் காண்டுவந்த பெரிய திருப்பந்தத்தை ஸ்தானீகரிடம் அளிப்பான். அவர் அதை வாங்கி, பெருமாளுக்கருகில் நிற்கும் தாஸ நம்பியின் பந்தத்தில் கொளுத்தி, பெருமாளுக்கெதிரில் மூன்று முறை சுற்றிவிட்டு அவனுடைய தலையில் வைப்பார். அவன் அதைக் கொண்டு போய், தென்னங்கால்கள் நட்டுச் சுற்றிலும் கூடுபோல் அமைத்து மூங்கிற்கழிகளில் கட்டிய பனையோலைசளால் மூடப்பட்டுள்ள 'சொக்கப் பனை' க்குள் புகுந்து, இரண்டொரு நிமிஷங்களில் மேலேறிச் சென்று உச்சியில் தீவைத்துவிட்டு, மட்டைகள் எரியத் தொடங்கும் போதே சிறிதளவும் அச்சமின்றி சரசரவென்று இரண்டொரு நிமிஷங்களில் கீழிறங்கி வந்து விடுவான். இரண்டு பனைமரங்களின் உயரமுடைய அந்த சொக்கப்பனை தீப்பற்றி எரியும் காட்சி, மிகுந்த பயங்கரமான காட்சி யாக இருக்கும்.

 

திருவண்ணாமலை, பஞ்சபூத சிவலிங்க ஸ்தலங்களுள், அக்கினி சொரூபமான தேயுலிங்கம் அமைந்து விளங்கும் ஸ்தலமாகும். கார்த்திகை மாதத்திய கார்த்திகையன்று மாலையிலே, நீல முகில்கள் தவழ்ந்து செல்லும் நீலமலையாகிய அண்ணாமலையின் உச்சியிலே, ஏராளமான நெய் ஊற்றப்பெற்றிருக்கும் மிக மிகப்பெரிய இரும்புக் கொப்பறையாகிய விளக்கு ஏற்றப்படும். அதே சமயத்திலே, அப்பேரொளி விளக்கை நோக்கியவாறே, அண்ணாமலையண்ணல் தமது தேவியாரான உண்ணாமுலை யம்மையுடன் காட்சி யளித்து நிற்பார். அவ்வேளையிலே தீபதரிசனம் செய்து நிற்கும் அன்பர்கள், பக்தி வசப்பட்டு நிற்பரென்பதைப் பகரவும் வேண்டுமோ?

 

அருள் வடிவினனாகிய ஆண்டவனது ஞானப் பேரொளியை ஆருயிர்களுக்கு நினைவூட்டுவதும் ; செந்தீ வடிவினனாககிய இறைவன்; தன்னை உண்மையன்புடன் வழிபட்டு உள்ளம் உருகி நிற்கும் உண்மையன்பர்களின் பாவ--பாசங்களை எரித்துத் தூய்மைப்படுத்தியருள்வன் என்னும் உண்மையை அன்பர்களுக்கு உணர்த்துவதும்; அக்கனி வழிபாட்டின் இன்றியமையாமையை பாரத மக்களுக்கு அறிவுறுத்துவதும், ஒவ்வொருவர் உள்ளத்திலும் கோயில் கொண்டுள்ள அருட்பெருஞ் சோதியை, தம்மில் தாமே கண்டு களிக்குமாறு எல்லோரையும் தூண்டுவதும்; மலர் மகளின் அகத்திற்கு உகந்த அகல் விளக்குகளே மனையின் சிறப்புக்கு இன்றியமையாதவை என் பதை இக்காலத்
தினருக்கு உணர்த்துவதும் ; வெறும் விளக்குகளை ஏற்றி வைத்துக் கும்பிடும் அளவில் நின்று விடாமல், மெய்யன்பாகிய துய்ய அகலிலே, குற்றமற்ற ஹிருதயபூர்வமான உண்மைய் பகவத்-- பக்தியாகிய நெய்யைச் சொரிந்து, பகவத்தியானமாகிய திரியைக் கொளுத்தி என்றும் அணையாத ஞானச் சுடர் விளக்கை ஏற்றி ஆனந்திக்க வேண்டியது, மனிதப் பிறவி தாங்கிய ஒவ்வொரு வரும் செய்ய வேண்டிய சீரிய கடமை என்னும் உன்னத தத்துவத்தை உணர்த்துவதும் 'திருவிளக்குத் திருவிழா'வே ஆகும், ஆதலின், நாமெல்லோரும் அத் திருவிழாவின் உன்னத தத்துவங்களை நன்கு உணர்ந்து, அதைச் சிறப்பாகக் கொண்டாட உறுதி செய்து கொண்டு, பின் வரும் அருள் மொழிகளின் அரும் பொருளைச் சிந்தித்துச் சிந்தித்து ஆனந்திக்கக் கடவோம்: -


"தீயினிற் சூட்டியல் சேர்தரச் செல்வியல்

ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி;

தீயினிற் பக்குவம் சேர்குணம் இயற் குணம்

ஆய் பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி''

 

''அருள் ஒளி விளங்கிட ஆணவம் எனும் ஓர்

இருள் அற என் உளத்(து) ஏற்றிய விளக்கே!

துன்புறு தத்துவத் துரிசெலாம் நீக்கி, நல்

இன்புற என் உளத்து) ஏற்றிய விளக்கே!

மயல் அற அழியா வாழ்வு மேன்மேலும்

இயல் உற என் உளத்(து) ஏற்றிய விளக்கே!

தேற்றிய வேதத் திருவடி விளங்கிட

ஏற்றிய ஞான இயல் ஒளி விளக்கே!

ஆகம முடிமேல் அருள் ஒலி விளங்கிட

வேகம் (து) அறவே விளங்(கு) ஒளி விளக்கே!

ஆரியர் வழுத்திய அருள் நிலை அனாதி

காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே!''

 

ஆன்ந்த போதினி – 1936 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment