Wednesday, September 2, 2020

 

திலகரின் தீரமொழிகள்

(டர்பன், சரஸ்வதி சபைத்தலைவர். திரு. ச. முனிஸ்வாமி பிள்ளை அவர்கள்.)

 

சுதந்தரம் எனது பிறப்புரிமை. அவ்வுணர்ச்சி என்னிடத்திலிருக்கும் வரை நான் கிழவனல்லன். எந்த ஆயுதமும் என் சுதந்தர உணர்ச்சியைச் சிதைவு படுத்தாது. எந்த நெருப்பும் அதை எரிக்காது. எந்த நீரும் அதை அவிக்காது, எந்தக் காற்றும் அதை உலர்த்தாது.

 

கடவுள் ஆணை பெரிது. மனிதனுடைய முயற்சியினால் அவன் ஆத்மா விகசிக்குமென்று அவர் திட்டம் செய்திருக்கின்றார். ஆகவே எல்லா முயற்சிகளினாலும், மனிதன் முன்னேற்றம் பெறவேண்டும். ஆகவே மனிதர்கள் பொறாமை யற்றவர்களாகவும், சுயநல மற்றவர்களாகவும் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும்.

 

நான் என் வாலிபப் பருவத்தை வீணாக்க விரும்பமாட்டேன். எனக்கு சிரேஷ்டமானது. தேசசேவைக்குச் செலவழியாத அந்த வாலிபப்பருவ மிருந்தென்ன? போயென்ன? ஆகவே வாலிபர்களே எழுந்து சேவை செய்ய முற்படுங்கள்!

 

அடிமை வாழ்வை விரும்புகிறவர்களுக்கும் சோம்பேறி வாழ்க்கையில் மூழ்கியிருப்பவர்களுக்கும், சுதந்தரவாழ்க்கை லாயக்கல்ல. அவர்களுக்குக் கடவுள் உதவி செய்யமாட்டார். எந்தச் சமூகம் நிமிர்ந்து நடந்து சுதந்தரவாழ்கையில் பிரியப்படுகின்றதோ அந்தச் சமூகம் ஒன்றே கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறும். அந்தச் சமூகம் ஒன்றே உயிர் பெற்று வாழ யோக்கியதை அதுயுடையது.

 

இந்திய சமூகத்தின் ஜீவநாடி தளர்ந்து போகாமல், பாதுகாக்க வேண்டுவது இந்தியத் தலைவர்களுடைய கடமையாகும். தலைவர்கள் விருப்பு வெறுப்பில்லாமல் தேச சேவை செய்வது அவசியம். இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாத்து வருங்கால், சந்ததியார்களை ஆண்மைத்தன முள்ளவர்களாகச் செய்வது அவர்களது முக்கிய கடமைகளாக இருக்கவேண்டும்.

 

இந்தியா சுயராஜ்ய தாகம் கொண்டிருக்கின்றது. சுயராஜ்ய தாகம் சீக்கிரம் தணிய வேண்டுமானால், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும், ஒன்றுபட்டு வாழ வேண்டும். இந்தச் சூட்சமத்தை இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது தேசீயப் பத்திரிகைகளின் முக்கிய கடமையாகும்.

 

இந்தியர்கள் சுயராஜ்யப் போராட்டத்தில், தளர்ச்சி யடைவதற்குக் காரண மென்ன? அவர்களுக்குத் தத்தம், மதப்படிப்பும், மதபோதனையும், மதவைராக்கியமும் இல்லாததேயாகும். இந்தியர்கள் அவரவர் மதங்களின் திட்டப் பிரகாரம், வாழ்க்கையை அமைத்துக் கொண்டு தேச சேவையில் ஈடுபட்டால், சுயராஜ்யப் போராட்டம் தளர்ச்சி பெறாதென்பது நிச்சயம்.

 

தைரியமும், ஊக்கமும், உண்மை பேசும் தன்மையும், உறுதியும் இல்லாதவர்கள் சுயராஜ்யப் பேராட்டத்தில் தீவிரமாக இறங்கி வேலை செய்யாமலிருப்பது உத்தமம். அக்குணங்களுக்கு மாறாக விருப்பவர்கள் சுயராஜ்யப் போராட்டத்தில் இறங்கி விட்டால் எல்லாம் கெட்டு, விடும். தேசத்திற்குக் கெட்டபேர் தான். ஆகவே தலைவர்கள் ஜாக்கிரதையாக விருக்கவேண்டும்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - அக்டோபர் ௴

 



 

 

No comments:

Post a Comment