Wednesday, September 2, 2020

 தீபாவளியின் திண்டாட்டம்

சகோதரிகளே! சகோதரர்களே! சிறுவர்களே! சிறுமிகளே!! சுதந்தர இன்பம் நீங்கி நாட்டில் அடிமைத் துன்பம் ஓங்கி யிருந்தாலும் - செல்வமும் கல்வியும் மற்ற பல்வளங்களும் மிக மிகக் குறைந்துபோய் விட்டிருந்தாலும் - உணவைப்பற்றிய கவலை சிறிதுமின்றி உல்லாஸமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்த காலம் போய், கேவலம் வயிற்றை வளர்ப்பதற்காக எத்தகைய ஈனத்தொழில்களையும் மானமின்றி மேற்கொள்ளப் பற்பலர் துணிவு கொண்டு விட்டாலும்-வாழ்க்கையில் பலருக்கும் உற்சாகம் இல்லா தொழிந்தாலும் - இன்றளவும் நமது நாட்டில் பண்டிகைகளுக்கு மட்டும் குறைவில்லை யல்லவா? ஒரு வருஷத்திற்குள் தமிழ்நாட்டு முக்கிய பண்டிகைககள் இரண்டு டஜனுக்கு குறையாமல் இருந்தாலும், தீபாவளியின் தனிப்பெருஞ் சிறப்பு எந்த பண்டிகைக்கேனும் உண்டோ? உங்களது மானதக்கடையில், ஒரு தராசை சிருஷ்டித்துக் கொள்ளுங்கள். அத் தராசின் ஒரு தட்டில் தீபாவளியையும், மற்றொரு தட்டில் மற்றெல்லாப் பண்டிகைகளையும் வைத்து நிறுத்துப் பாருங்கள். (அதாவது, சீர் தூக்கிப் பாருங்கள்.) அவற்றுள் எந்த தட்டு கனத்தின் (வீசை - மணங்கு என்ற அளவைக்கொண்டு விடாதீர்கள்; 'கனவான்' என்ற சொல்லை நினைத்துக் கொள்ளுங்கள்.) மிகுதியால், கீழே தாழும் என்று நினைக்கின்றீர்கள்? தீபாவளித் தட்டே தாழும் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

 

தீபாவளி என்ற பதார்தத்திற்கும் (கத்திரிக்காய், வாழைக்காய் என்று நினைத்து விடாதீர்கள்! பத=சொல், அர்த்தம்=பொருள் - அதாவது 'சொற்பொருள்' என்று - பிரித்துப் பொருள் செய்து கொள்ளுங்கள். இக்காலத்தில் நமது நாட்டினர் அதைக் கொண்டாடுவதற்கும் எத்தகைய சம்பந்தம் இருக்கிறது தெரியுமோ? 'அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?' அத்தகைய சம்பந்தம் தான் தீபாவளியை முன்னோர் கொண்டாடியதற்கும் இக்காலத்தினர் கொண்டாடுவதற்கும் இடையில் இருப்பது தீப=விளக்கன், ஆவளி = வரிசை - அதாவது விளக்கின் வரிசை (இன்னும் விளக்கின்) ஆண்டவனது அருட்பெருஞ் சோதியை நினை வூட்டுமாறு சுடரொளி விளக்குகளை அணிபெற (வரிசையாக - அழகாக) ஏற்றி - இறைவனைப் போற்றி -அகத்துயர் மாற்றி ஆனந்தம் அடைவதற்கு உரிய திருநாளாக ஏற்படுத்தப் பட்டதே தீபாவளிப்பண்டிகை அறிந்து கொண்டீர்களா அம்பல ரகசியத்தை! இவ்வரிய தத்துவத்தை இவ்வருஷத் தீபாவளி யன்று எவ்வளவுதூரம் கவனித்து நடந்து கொள்ளப் போகின்றீர்கள்?

 

'தீபாவளி' என்றால், புத்தம் புதிய புடவைகள் கட்டிக்கொண்டு களிக்க வேண்டிய நாள் என்பது மாதர்கள் எண்ணம். படாசுக் கட்டுகள் கொளுத்திக் குதூகலிக்க வேண்டிய தினம் என்பது சிறுவர்கள் நினைவு; தாராளமாகக் குடித்து விட்டுக் களிக்கூத்தாடுவதற்கு ஏற்ற நாள் என்பது மது பக்தர்கள் மனக் கிடக்கை; மாமியார் வீட்டு இன்பத்தை இனிது அனுபவித்தற்கு உரிய பண்டிகை என்பது புது மாப்பிள்ளைகளின் எண்ணம்! ஆனால், தீபாவளி எல்லோருக்குமே இன்பகரமாகக் கழிந்து விடுகிறதா என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

எச்சிற் கையால் காக்காய் ஒட்டவும் மனந் துணியாத மாப்பிள்ளை ஒருவர் சொந்த வீட்டில் இருந்தால், தீபாவளிக்கு முன்னும் பின்னும் எவரெவர் தம்மிடம் வந்து தொந்தரவு செய்வார்களோ என்ற அச்சத்தால், தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே மாமியார் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார். கலியாணமாகி ஐந்து வருஷ ககலமாக-ஒரே அருமை மகளின் க்ஷேமத்தை முன்னிட்டு--மாப்பிள்ளைக்கு அவ்வப்போது நோட்டுகளாகவும் ரூபாய்களாகவம் சன்மானங்களாகவும் செலுத்தி வந்த காணிக்கைகளால், பெண்ணின் தகப்பனார் 'இன்சால்வெண்ட்' மனு கொடுக்கும் நிலைமைக்கு வந்து விட்டார். அத்தகைய நிலையில், ஐந்தாவது தீபாவளி கொண்டாடுவதற்கு (!) மாப்பிள்ளை வந்து குந்திக் கொண்டார். அவருக்கு உயர்ந்த சரிகை வேட்டிகளும் சட்டைகளும் சமர்ப்பிக்க வேண்டுமே! பாவம்! ஏழை. மாமனார் என் செய்வார்? நாடோறும் நான்கு வேளைகளிலும் நாயக்கினிய நானாவித உணவுகளை உண்ணும் நேரமும்- உண்ட களைப்புத் தீர உறங்கும் நேரமும் தவிர மற்ற நேரக்தில் மாப்பிள்ளைக்கு என்ன கவலை! எவ்விதக் கவலையுமின்றி அவர் திண்ணையில் ஊர்வம்பளப்பவர்களோடு உற்சாகமாக சீட்டாடிக்கொண்டிருக்க, வீட்டிற்குள் மாமனார் கைச் செலவுகட்குப் பணம் கிடைக்காத திண்டாட்டத்தினாலே-'தீபாவளிச் செலவுகளுக்கு என்ன வழி' என்னும் ஏக்கத்தினாலே பீடிக்கப்பட்டவராய்- இருகைகளையும் தலையில் வைத்துக்கொண்டு கவலைக்கடலில் ஆழ்ந்து விடுகிறார்!

 

மாதம் முப்பது ரூபாய் சம்பளத்திலுள்ள எளிய குமாஸ்தா ஒருவர்; இரண்டு பிள்ளைகளுக்கும் மூன்று பெண்களுக்கும் தகப்பனார். குடியிருப்பதும் குடிக்கூலி வீட்டில். முப்பது ரூபாய்க்குள் குடிக்கூலியும் கொடுத்து குடும்பச் செலவையும் நடத்தி தனது சொந்தச் செலவுகளையும் அடக்கிக் கொண்டுவிட வேண்டும். வருஷம் முந்நூற்றறுபது தினங்களிலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க நேர்ந்தாலும், தீபாவளி யொரு தினத்திலாவது சந்தோஷமாகப் பொழுது போக்கவேண்டும் என்பது அவரது பேரார்வம்.
வருஷத்தில் ஒருமுறை வரும் திருநாளாகிய தீபாவளி யன்றாவது தனது கவலைகள் அனைத்தையும் கடவுளிடம் ஒப்புவித்து விட்டு, அவரை நிர்மல மனத்துடன் துதித்து ஆனந்திக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாளைய வேட்கை. ஆனால், அன்று அவர் மனையில் நடப்பதென்ன? "என்றைக்குப் பார்த்தாலும் இந்த தரித்திரம்தான்! கொண்டவள் நல்லவனாக இருக்கிறதால், அண்டை வீட்டு அபிராமி 'கோகர்ஜான் பட்டுச்சேலை' வாங்கிக் கொண்டு கும்மாளம் போடுகிறாள்! அவளெதிரில் நிற்கவே எனக்கு அவமானமாக இருக்கிறது! வருஷத்தில் ஒரு நாளாவதும் நல்லதாய் ஒரு சேலை வாங்கக்கூட கதி யில்லாத நீயும் ஒரு ஆண்பிள்ளையா? உனக்குப் பெண்டாட்டி ஒரு கேடா? பிள்ளை ஒரு கேடா? தரித்திரக் கசுமாலம்! பொழுது விடிஞ்சா, பொழுது போகிற வரைக்கும் இந்த வீட்டில், தலைவிதி யென்று கடமைக்கு, உழைக்க வேண்டியதுதான்! நித்த நித்தம் உனக்கு ஆக்கி ஆக்கிக் கொட்டி என்ன கண்டேன்?"- என்று காலையிலேயே கண்களில் நீர் பெருகி வழிய ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுகிறாள் மனைவி! கணவன், 'செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்புடையவ'னாக இருந்தால், அது வாய்ச்சண்டையுடன் முடிந்து விடும். அத்தகைய பொறுமை இல்லாதவனாக இருந்தால், தீபாவளியின் மூலகாரணமாகிய நரகாசுர- திருஷ்ண யுத்தம் அன்று அவ்வீட்டிலேயே நடிக்கப்படும்!

 

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்ட உரிமை, ஆண்சாதி-பெண்சாதி என்னும் இரு சாதியினரில் எவருக்கு அதிகம் உண்டு? மனையில் மகிழ்ச்சி ததும்பச் செய்யக் கூடியவர் எவர்? மனைவியே யன்றோ! 'மனைவி' என்னும் சொல்லே அதை வலியுறுத்துவதாக இல்லையா? அத்தகைய மனைவிக்கே அவ்வுரிமையில் முக்கால் ஏன்? - முக்காலே மூன்று வீசம் பங்கும் உரிய தல்லவா? அன்று, சத்யபாமா தேவி சிலையை எடுத்து கணையைத் தொடுத்து எதிரியின் மேல் விடுத்ததனா லன்றோ, 'தீபாவளி' பெண்தெய்வத்தின் பெரு வெற்றியைக் கொண்டாடும் திருநாளாயிற்று! அக்காலத்தில், அவ்வாறு சத்யபாமா தேவி அரக்கன் செருக்கை அடக்கி வீரமங்கையாக விளங்கியதுபோல், இக்காலத்திய மாதுசிரோமணிகள் தமது கணவர் மீது சொல்லம்புகளைப் பொழிந்து வாய்ப்போரிலாவது தாங்கள் வீரமங்கைகளாக விளங்குவதைக் காட்டிக் கொள்வதற்காக அவர்களை தூற்றுவதா? அல்லது போற்றுவதா? தீபாவளியன்று தனது கணவனது மானத்தைக்காக்க பாமாதேவி வெற்றிகுறிக்கொண்டு விற்போர் செய்ததை இன்றும் கொண்டாடுவதென்றால், இன்று மற்ற மாதர்கள் கூட்டத்தில் தன் கணவனது ‘மானத்தைக் காக்க விரும்பும்' பெண்மணி, சேலை குறிக்கொண்டு சொற்போர் செய்வதை ஏன் பழிக்க வேண்டும்? விற்போராயினும் சொற்போராயினும், ஏதேனும் ஒரு போரின் கொண்டாட்டந்தானே தீபாவளி! வில்லம்புகளைக் காட்டிலும் சொல்லம்புகள் கொடியன வன்றோ!

 

நெருங்கிய உறவினர் எவரேனும் இறந்து விட்டிருந்தால், அதன் காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கின்றி - அத்திருநாளில் சமீபத்தில் இறந்தவர்களை நினைந்து நினைந்து துயரம் மிகுந்திடும் பெண்மணிகள் சிலர் காலையிலேயே ஒப்பாரி வைத்துப் புலம்பத் தொடங்கி வழக்கம். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் மீண்டு வருவதும் உண்டேயோ? அதை அறிந்தும் அறியாதவர்களைப் போல் சில மாதர்கள், தாங்கள் பற்பல நாட்களாக கற்றுக்கொண்டு ஒப்பாரியை யெல்லாம் தாராளமாக வெளியிட்டுப் பாட்டக் கூடிய சந்தர்ப்பம் எப்பொழுது வாய்க்குமோ என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்தவர்களாதலால், அவ்வொப்பாரிக் கண்ணிகளுள் ஒன்றையும் விடாமல் வாய்விட்டுப் பாடித் தீர்ப்பதற்கு உரிய நாளாக தீபாவளியையே தேர்ந்தெடுத்துக் கொள்வதும் உண்டு. (கண்களில் மட்டும் ஒரு சொட்டு ஜலமும் வராமல், எவ்வளவ நேரமாயினும் சலிப்பின்றிப் 'புலம்பிக்' கொண்டிருக்கக்கூடிய அரிய சக்தி வாய்க்கப் பெற்றவர்களான மாதர்களும் பலர் உண்டு!) அவ்வாறு, தமது கணவர் தீபாவளியன்று எவ்வித இன்பமும் காண்பதற்கு வழியின்றி திண்டாட வைத்துவிடும் பெண்மணிகள், தமது கருமத்தில் மட்டும் கருத்து ஊன்றியிருக்கத் தவறிவிட மாட்டார்கள். தீபாவளிக்காக வாங்க வேண்டிய புதுப்புடவையை, 'இறந்தவர்களுக்குப் படைப்பதற்காக வேண்டும்' என்னும் சாக்கு வைத்துக் கொண்டு வாங்கிக்கொண்டு விடுவார்கள். பண்டிகைக் கொண்டாட்டத்தை நிறுத்தி விடுவதால், தீபாவளியன்று அம்மாதர்கள் செய்யவேண்டி வரும் விசேஷ வேலைகளின் சிரமமும் அவர்களுக்கு ஏற்படாதொழிந்து விடு மன்றோ?

 

செல்வர்கள் வீட்டில், 'தீபாவளி' என்ற சொல்லைக் கேட்கும் போதே எல்லோர்க்கும் நாக்கில் நீர் ஊறும். அன்று தயாரிக்கப்படும் பட்சணங்கள் எத்தனை தினுசுகள்! மாமூல் வழக்கத்திற்கு விரோதமாக - அதிகாலையில் சுகமான நித்திரையைத் தியாகம் செய்ய நேர்ந்துவிடுகிறதே என்ற ஒரு கவலையை யன்றி அச் செல்வர்கட்கு தீபாவளியன்று வேறு என்ன கவலை! எளியவர்கள் வீட்டிலோ, பலகாரங்க ளென்னும் பல ஆகாரங்களுக்கு வழி இல்லாவிட்டாலும், இட்லி, தோசை என்னும் சாதாரண பலகாரங்களாவது இல்லாதிராது. ஓலைக்குடிசைகளில் வசிக்கும் 'தீண்டத் தகாதவர்கள்' என்னும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அரிதில் அரிசி கிடைத்தாலும், அவர்கள் இட்டிலிப் பாத்திரத்திற்கும் தோசைக் கல்லுக்கும் எங்கே போவார்கள்? கேழ்வரகு அடையே அவர்கள் கண்ட அருமையான பலகாரம்! அத்தகைய ஏழைத் 'திருக்குலத்தார்' (எக்குலத்தாரோ என்று பிரமித்துவிட வேண்டாம்; விசிஷ்டாத்வைத சித்தாந்த பரமாசார்ய ச்ரேஷ்டரான பகவத் ராமாநுஜாசார்யரே ஆதித்திராவிடர்களுக்கு அளித்தருளிய சீரிய திருக்குலப் பெயரே அது!) தீபாவளியன்று காலையில், தங்கள் கிராமத்திலுள்ள பெரிய சம்பத்துக்காரர்கள் (மிராசுதாரர்கள்) இரண்டொருவர் வீடுகளுக்கு - அதாவது வீடுகளின் எதிரில் - சென்று நின்று "சாமீ! சாமீ!" என்று தங்களது 'ஆண்டைக' (எஜமானர்க)ளைக் கூவி நிற்பார்கள்.
புண்ணிய தினமாகிய தீபாவளியில் பஞ்சமர்களோடு பேசிவிட்டால், 'பறைத்தீட்டு' பற்றிக் கொண்டுவிடும் என்பது, உள்ளே உண்டு உடுத்துக் களித்திருக்கும் எஜமானர்களின் எண்ணம்! ஆதலால், வருஷம் முழுவதும் எவர்களது இடையறாத உழைப்பின் பயனாக பெரும் வருவாயைப் பெறுகிறார்களோ, அவர்களை வருஷத்தில் ஒரு நாளிலேனும் திருப்திப்படுத்தியருள திருவுள்ளம் கொள்ளக் கூடிய கருணை, மிராசுதாரர்கட்கு தீபாவளியன்று கூட உண்டாவதில்லை! ஏன்? "பஞ்சமர்கள் உழைப்பதற்காகவே பிறந்தவர்கள்! தாங்கள் அனுபவிப்பதற்காகவே அவதரித்தவர்கள்!"- இத்தகைய எண்ணமே அவர்களது அகத்தினின்றும் அருளை அகற்றிவிடுகிறது! முடிவில் விளைவது என்ன?

 

அவ் வெளியவர்களுக்குச் சில தோசைகளை எடுத்துக் கொண்டு போய்க் ‘கிள்ளித் தெறித்து' வருமாறு வேலைக்காரனுக்குக் கட்டளை இடப்படுகிறது! அவ் வேலைக்காரன் எடுத்துச் செல்வதோ பத்தே தோசைகள்! தெருவில் திரண்டு நிற்பவர்களோ சுமார் ஐம்பது அறுபது பேர்கள்! அவர்களுக்குள் முன்னால் நிற்பவர்கள் பலசாலிகள்! பின்னாலோ, கிழவர்களும் பெண்களும். அவர்களுக்கு ஏதேனும் கிடைக்கக்கூடுமானால், பலசாலிகள் மனங் கொண்டால் மட்டுமே கிடைக்கும்! வேலைக்காரனோ தோசைகளைப் பல துணுக்குகளாக்கி அவர்களிடையே எறிந்துவிடுகிறான்! தெரு மண்ணில் விழும் அத்துணுக்குகளை, ஒருவரை யொருவர் மிதித்துக் கொண்டும் தள்ளிக்கொண்டும் பொறுக்கிக் கொள்ளுகிறார்கள் அவ்வெளியவர்கள்! அத் திண்டாட்டம் ஒன்றே ஆதித்திராவிடாகள் காணும் தீபாவளிக் கொண்டாட்டம்!

 

துவாபரயுகத்தில் ஒரு நரகாசுரன் இருந்தால், இக்கலிகாலத்தில் தீபாவளி யன்று - ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்தாறு நரகாசுரர்கள் காட்சி யளிக்கிறார்கள்! நரகாசுரன் நரபலி கொடுத்திருக்கும் போது, தாங்கள் அஜ! (ஆட்டுப்) பலிகளாவது கொடுக்க வேண்டாமா என்று அவர்கள் கேட்கிறார்கள்! தீபாவளி யன்று, சிலர் கண்ணபிரானது திருவருளைப் பெற முயன்றால், வேறு சிலர், கடைசியிலாவது அவரது அருளுக்கு இலக்காகிய நரகாசுரனது அருளைப் பெற முயல்வதில் என்ன தவறு என்பது அவர்களது கேள்வி!
(நரகாசுரன் இறுதியில் எதனால் பகவத் கடாக்ஷத்திற்குப் பாத்திரனானான் என்பதைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை! நரகாசுரன் சண்டையில் அரக்கர் இரத்தம் ஆறாய்ப் பெருகியோடியிருப்பதை சிந்திக்கும் போது, தாங்கள் தீபாவளியன்று ஆட்டிரத்தத்தையாவது சிந்தச் செய்வதில் குற்றமில்லை என்பது அவர்கள் சித்தாந்தம்! பதறிக் கதறித் தலையறுப்புண்டு துடி துடிக்கும் ஆடுகனின் திண்டாட்டம், அவ்வேழைப் பிராணிகளைக் கொன்று குவிக்கும் (கோழைகளான அதரும) யுத்த விரர் (!) களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது! தெய்வத் தண்டனையைப் பற்றிய பயமே அவர்களது நெஞ்சில் கொஞ்சமும் இல்லாதபோது, வேறு எதற்குத்தான் அவர்கள் அஞ்சப் போகிறார்கள்?
தீபாவளியன்று உண்ணவேண்டிய உயர்ந்த பலகாரம் மாமிசமே என்பது அவர்களது
தீர்மானம்! அதுவே அவர்களையும் - அவர்களை மனத்தாலும் பேச்சாலும் செயலாலும் ஆதரித்து நடப்பவர்களையும்-'ஆடுவோமே-பள்ளுப் பாடுவோமே - ஆனந்த மாமிசம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே' - என்று பாடிக் களிக்கூத்தாடச் செய்யக்கூடிய அரும் பெரும் விருந்தாகும்.

 

நரகாசுரனுக்கு மிகவும் உகப்பான பானம் எது?!! மதுவே யன்றோ!!!! தீபாவளியன்று கண்ணபிரானது திருவருளைப் பெறுவது குறித்துச் சிறிதளவுங் கவலை கொள்ளாத நரகாசுர பக்த சிரோமணிகள், கள்ளாக்கனைக் களிக்கச் செய்வது இயல்பே யல்லவா? சாதாரண காலத்தில் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் கிராமத்துக் கள்ளுக்கடை ஒன்றில் தீபாவளித் தினத்தன்று மட்டும் குறைந்தபட்சம் இருநூறு ரூபாய்க்கு
வியாபாரம் நடக்கும்! வெற்று நாட்களில் கள் குடிக்க வெட்கப்படுவோருங்கூட, தீபாவளியன்று கள்ளை ருசி பார்க்கத் துணிந்து விடுகிறார்களென்றால்,
தினசரிக் குடியர்களது திருக்கூத்தைப்பற்றிக் கேட்பானேன்? வருஷத்தில் ஒருநாளாகிய தீபாவளிப் பண்டிகையன்று சந்தே தோஷமாக பொழுது போக்க வேண்டுமானால், கொஞ்சம் கள்ளாவது சூடித்தே தீரவேண்டுவது அத்தியாவசியம் என்பது கிராமவாசிகளுள் பெரும்பான்மையோரது எண்ணம். அன்று கள் குடிப்பது நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்து வரும் சம்பிரதாயமாம்! கையிலிருந்த பணத்தையும் பறிகொடுத்து, வெய்யிலாயினும் மழையாயினும் தெருப் புழுதியில் புரண்டு கிடக்குமாறு சுய உணர்ச்சியையும் இழந்து, வாந்தி எடுத்து, வாயில் வந்தவாறெல்லாம் பிதற்றிக்கொண்டு, ஆடியும் பாடியும் பல பாலும் பரிகசிக்கப்பட்டு, பலவகைத் திண்டாட்டங்களுக்கும் உட்படுவதே இக்காலத்துக் கிராமவாசிகள் பலரது தீபாவளிக் கொண்டாட்டம்!

 

“அரக்க நீர்மைகள் அனைத்தும் அகற்றி இரக்க மனத்தை இன்றுதொட்டு எனக்கு அருள்க”-என்று இறைவனைக் குறித்து மனம் உருகிக் கண்களில் நீர் பெருக அழுது பிரார்த்தித்து நிற்கவேண்டிய திருநாளாகிய தீபாவளியன்று, அதற்கு நேர்மாறாக - அரக்கத் தன்மையை வளர்க்கக்கூடிய இறைச்சியைத் தின்று கள்ளைக் குடித்து 'பண்டிகை கொண்டாடுவது' எவ்வளவு விபரீதமானது! எல்லோரும் தீபாவளியின் தத்துவார்த்தங்களை உணர்ந்து நடப்பதன் பயனாக மோட்ச லோகத்திற்குப் போய்விட்டால், எங்கே தனக்கு வேலையில்லாமல் போய்விடுமோ என்ற பயத்தினால் கலி புருஷன் செய்த மான சூழ்ச்சியினாலேயே தீபாவளிப் பண்டிகை மது மாமிசப் பண்டிகையாக மாறிவிட்டது போலும்! மேலும், பிறர் துன்பப்படுவதைக் கண்டு தாம் இன்புறுவதே தீயோர் இயல்பாதலால் - அத்தகைய தீயோரே கலி புருஷனது ஆட்சி இடையூறின்றி நடப்பதற்குப் பெருந்துணை செய்பவர்களாக இருப்பவர்களாதலால் - மற்றவர்களது திண்டாட்டத்தை தங்களுக்கு உரிய கொண்டாட்டமாகக் கொண்டு நடக்கக்கூடியவர்கள் பற்பலரை, ஐம்பெரும் பாவங்களையும் ஐம்பெரும் படைகளாகக் கொண்டு இந்நாட்டை ஆட்டிவைக்கும் கலி புருஷன் தயாரித்து வைத்திருக்கிறான் போலும்!


சகோதரிகளே! சகோதரிகளே!! (இங்கு சகோதரர்களைப் பற்றிய கவலையே வேண்டாம்!) தீபாவளிப் பண்டிகையை கண்ணபிரான் திரு உள்ளம் உகக்குமாறு கொண்டாடக்கூடிய உரிமையும் திறமையும் பெரிதும் உங்களுக்கே உண்டு. 'தீபாவளி' ஆண் தெய்வத்தின் வெற்றியைக் குறிப்பதன்று; பெண் தெய்வத்தின் வெற்றியையே குறிப்பதாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்! 'அரக்கன் செருக்கை அடக்கி அழித்ததோர் அற்புத வில் எவர் வில்?
கண்ணன் - பக்கத்திருந்து முனைந்தமர் செய்த நற்பாமை மணிக்கர வில்' --அல்லவோ? எண்மணய் ஸ்நாநம் செய்வது, புதுப்புடவை உடுப்பது, பலகாரங்கள் உண்பது என்ற மூன்றோடேயே தீபாவளி தீர்ந்துவிடுவதாக நினைத்துக்கொண்டு விடாதீர்கள்! அகப்புற அழுக்குகளை அகற்றிவிடுவதைக் குறிக்கவே எண்ணெய் ஸ்நாநம் ஏற்படுத்தப்பட்டது.
புனிதமான புத்துணர்ச்சி கொண்டு - உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிக்கவே புதுக்கலை உடுக்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது! தீபாவளியன்று அமரர் நிலையை யடைய முயலவேண்டிய மனிதர்கள், அரக்கர் நிலையை யடைய முன்வருவது எவ்வளவு அறியாமை! பாரதியார் கூறுமாறு, "மாற்று வையம் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமரர்களாக்கக் கூடிய " ஆற்றல், பெண் தெய்வங்களுக்கே பெரிதும் உண்டு. ஆதலால், தீபாவளியன்று அதிகாலையில் அக இருள் அகற்றும் அருட்பெருஞ் சோதியை நினைவூட்டும் சுடர் விளக்குகளை ஏற்றி, 'மூத்த பொய்மைகள் யாவும்' அழித்து "முடக் கட்டுகள் யாவுந் தகர்த்து' 'மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளுக்கு இனிதாகச் சமைக்கப்' போதிய ஆற்றலை வழங்கியருளுமாறு கண்ணபிரானை உண்மையன்போடும் உருகும் உள்ளத்தோடும் பிரார்த்திக்கக் கடவீர்க உங்களது உள்ளத்தில் தீவிர தேச பக்தியும், உடலில் தூய கதர்ப் புடவையும் ஒளிர்வனவாக. தீபாவளியன்று உங்களது வீடு ஆனந்த நிலையமாக விளங்குவதாக. அந் நன்னாள் தொட்டு புத்துணர்ச்சி கொண்டு, தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கேற்ற நற்பணிகளில் தலைப்பட்டு உழைக்க உறுதி செய்து கொள்வீர்களாக. வீரத்தாயான சத்தியபாமா தேவியின் இன்னருள் உங்களுக்கு துணை நிற்பதாக. வந்தேமாதரம்!

 

"ஐயமுந் திகைப்பும் தொலைந்தன; ஆங்கே அச்சமும் தொலைந்தது; சினமும்
பொய்யுமென்றினைய புன்மைகளெல்லாம் போயின; உறுதி நான் கண்டேன்!
வையம் இங்கனைத்தும் ஆக்கியும் சாய்த்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்ய வெண்ணிறத்தாள் தனைக் கரியவளைத் துணையெனத் தொடர்ந்து கொண்டின்றே.''

- பாரதியார்.

ஆனந்த போதினி – 1932 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment